மதிப்பு முதலீடு

மதிப்பு முதலீடு

Value Investing

மதிப்பு முதலீடு என்பதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு ரூபாய் மதிப்பு உள்ள பொருளை ஐம்பது காசுக்கு வாங்குவது என்பதாகச் சொல்லலாம் .

நாம் அனைவரும் பங்குச்சந்தையில் (மதிப்பு) முதலீட்டை மேற்கொள்கிறோமோ இல்லையோ அன்றாடம் மதிப்பு முதலீட்டு அடிப்படையில் நிறையப் பொருட்களை வாங்கிக்கொண்டு தான் இருக்கிறோம் . ஆடித் தள்ளுபடி என்றால் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது . ஒன்றுக்கொன்று இலவசத்தை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன?

பங்குச்சந்தையில்  அவ்வப்போது மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் முகிழ்த்தெழும் போது ஏற்கெனவே முதலீட்டை மேற்கொண்டிருப்பவர்கள் பங்குச்சந்தையை விட்டு ஓடுவதும் புதிதாக முதலீடு செய்ய வருபவர்கள் வாசலிலேயே தயங்கி நிற்பதும் ஒரு புரியாத புதிர் .

பங்குச்சந்தை பற்றிய சரியான ஒரு புரிதல் இருந்தால் அடிக்கடி வரும் ஆடித் தள்ளுபடியை நீங்கள் வரவேற்க ஆரம்பித்து விடுவீர்கள் .

ஆடித் தள்ளுபடிக்கும் மீமிகை கரடிச்சந்தை தள்ளுபடிக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. ஜவுளிச்சந்தையில் ஆடித் தள்ளுபடியில் 2000 ரூபாய் மதிப்புள்ள சட்டையை 1000 ரூபாய்க்கு வாங்குவதாகக் கொள்ளலாம் . அந்த சட்டையை அணிந்து மகிழ்கிறோம் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நுகர்கிறோம் . நாம் வாங்கிய பின்னர் அந்த பீட்டர் இங்லேண்ட் சட்டையின் விலை கூடியிருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்று நாம் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை . தெரிந்து கொள்ளவும் முடியாது . எந்த நாளிதழிலும் இந்த மாதிரி பீட்டர் இங்லேண்ட் சட்டையின் இன்றைய விலை , நேற்றைய விலை , 52 வார உயர்ந்த பட்ச மற்றும் குறைந்த பட்ச விலை விவரங்கள் வெளியாகாது . மதிப்பு முதலீடாக வாங்கினோம் , அணிந்தோம் , அண்டை அயலாரின் பொறாமையைத் தூண்டினோம் ,  மகிழ்ச்சி . கதை முடிந்தது . சுபம் .

பங்குச்சந்தைக்கு வருவோம் . பங்குச் (கரடிச்) சந்தையில் மதிப்பு முதலீடாக பீட்டர் இங்லேண்ட் நிறுவனப் பங்கை வாங்குவதாகக் கொள்ளலாம் . பிரச்னை எங்கு தொடங்குகிறது என்றால் பீட்டர் இங்லேண்ட் நிறுவனப் பங்கின் விலையை நீங்கள் நொடிக்கு நொடி தெரிந்து கொள்ளலாம் . பீட்டர் இங்லேண்ட் நிறுவனப் பங்கு திடுதிப்பென்று ஒரு நாள் காரணகாரியம் எதுவுமின்றி 5 சதவீதம் இறங்கி விடும் . பல்லாண்டுகளுக்கு முன்னர் அந்தப் பங்கை வாங்கிய ஒருவர் ஏதாவது பணத்தேவையின் பொருட்டோ அல்லது அவரது பங்குத் தொகுப்பை சமன் செய்யும் பொருட்டோ (portfolio rebalancing)  இலாபத்தில் கூட அந்தப் பங்கை விற்றிருக்கலாம் . அவர் விற்பனை செய்யும் அந்தக் கணத்தில் அந்தப் பங்கை யாரும் ஆர்வமாக வாங்காதது கூட விலை குறைவிற்கு ஒரு காரணமாக இருக்கலாம் . பிரார்த்தனை செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன என்று ஒரு விளம்பர வாசகம் சொல்வது மாதிரி பங்குகளின் விலை குறைவிற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும் . மனித உணர்ச்சிகள் இருக்கும் வரை பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தே தீரும் . பீட்டர் இங்லேண்ட் நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic value) குறித்து நமக்கு ஒரு புரிதல் கட்டாயம் இருக்க வேண்டும் . ஏறியிறங்கும் பங்கு விலையில் நமது கவனத்தைக் குவிக்காமல் பங்காதாயம், இலவசப்பங்கு, பங்குப்பிரிப்பு மற்றும் நிறுவனப்பிரிப்பு முதலான நிறுவன நடவடிக்கைகளில் கவனம் செலுத்தலாம் . நடுநடுவே பங்கின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதிகரித்து வரும் பங்காதாயம் அதிகரிக்கும் பங்கு விலைக்கு இட்டுச்செல்லும் என்பது ஒரு எழுதப்படாத விதி . இடையிடையே ஏற்படும் இந்த தற்காலிக மதிப்பிழப்பை நாம் தவிர்க்க முடியாது . அவ்வாறான சமயங்களில் நாம் குறை மதிப்பில் வர்த்தகமாகும் அந்நிறுவனப்பங்குகளை மதிப்பு முதலீடாக வாங்கலாம் .

மேலும் சந்தை ஒரே சீராக 45 டிகிரி என்ற பாகையில் செல்லாமல் இறங்கி பின் ஏறினால், மேலும் நீங்கள் இந்த இறக்க ஏற்றத்தை மதிப்பு முதலீடாக எண்ணி தொடர்ந்து முதலீடு செய்தால் உங்கள் பங்குத்தொகுப்பிலிருந்து இன்னும் அதிக வருமானம் கிடைக்க ஏதுவாகும் .

ஒரு சிலர் இவ்வாறு கரடிச்சந்தையில் குறை மதிப்பில் பங்குகளை வாங்குவதும் பின்னர் காளைச்சந்தையில் மிகை மதிப்பில் விற்பதுவுமாக இருப்பார்கள் . நிறுவனம் நன்கு செயல்படும் வரை விற்காமல் இருப்பது தான் இன்னும் ஒரு அறிவார்ந்த செயலாக இருக்க முடியும் .  Bajaj Auto நிறுவனப்பங்கு அதன் IPO முதலீட்டாளர்களுக்கு 41460 சதவீதம் பங்காதாயத்தை வாரி வழங்கும் வள்ளலாக இருக்கிறது. இன்றைய தேதியில் வருடத்திற்கு 41460 சதவீதம் வருமானம் தரும் ஒரு முதலீட்டை எங்கே தேடிக் கண்டுபிடிக்க முடியும் ? வாரன் பஃபெட் my holding period is forever என்று சொல்வதற்கு , அவர் வெகு காலத்திற்கு முன்னர் வாங்கிய பங்குகளிலிருந்து பங்கு ஈட்டு விகிதம் மூலமாகவே பெருமளவிலான வருமானம் கிடைத்து விடுவது ஒரு முதன்மையான காரணம் .

Capitalism ன் ஒரு முக்கியமான பிரச்னை creative destruction என்று சொல்லப்படும் ஆக்க அழிவு . ஐ போன் வந்ததும் பிளாக்பெர்ரி காணாமல் போய் விட்டது . சென்செக்ஸ் முதலான பங்குச்சந்தை குறியீடுகள் என்றென்றும் இளமைத் துள்ளலுடன் இருப்பதற்கு பழைய நிறுவனங்கள் கழிதலும் புதிய நிறுவனங்கள் புகுதலுமாக இருப்பது மட்டுமே காரணம் . உலகம் முழுவதுமான பங்குச்சந்தை குறியீடுகளில் ஒரு நிறுவனம் இடம்பெறும் சராசரியான காலம் வெகு வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது . நாம் புதிய துறைகளை , அதன் புதிய நிறுவனங்களை இனங்கண்டு முதலீடு செய்ய வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம் .

இது ஒரு பக்கம் இருந்தாலும் பஜாஜ் ஆட்டோ முதலான நிறுவனங்கள் புதிய துறைகளான காப்பீடு (Bajaj Finserv) போன்றவற்றில் கால் பதிக்கும் போது மேலும் அந்நிறுவனம் வழங்கும் 41460 சதவீதம் பங்காதாயத்தையும் கணக்கில் கொண்டால் நாம் அந்நிறுவனத்தை என்றென்றும் வைத்திருப்பது தான் சிறப்பு .

பங்குச்சந்தை வாயிலான பணத்தேடலுக்கு நிறுவனம் வழங்கும் பங்காதாயத்தை வழி காட்டும் துருவ நட்சத்திரமாகக் கொள்ளுங்கள் . அடுத்த ஆடித் தள்ளுபடியில் உங்கள் பங்குத் தொகுப்பின் மதிப்பு மிகத் தற்காலிகமாக மதிப்பிழப்பிற்கு உள்ளானதைப் புறக்கணித்து பை நிறையப் பங்குகளை மதிப்பு முதலீடாக வாங்க வேண்டுகிறேன் .

ஒரு முதலீட்டின் மீதான வருமானம் விற்கும் போது தீர்மானிக்கப் படுவதில்லை . மாறாக எவ்வளவு குறைமதிப்பில் வாங்குகிறீர்கள் என்னும் புள்ளியில் தீர்மானிக்கப்படுகிறது .

இந்த மதிப்பு முதலீட்டு இரகசியங்களை நீங்கள் யாவரிடமும் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம் . பொதுவாகப் பங்குச்சந்தையில் ஒரு உத்தி அனைவருக்கும் தெரிந்து அதை அனைவரும் பின்பற்றத் தொடங்கினால் புயல் கரையைக் கடந்து வலுவிழப்பது மாதிரி அந்த உத்தியின் பலாபலன்கள் மங்கி மறைந்து விடும் . ஆனால் மதிப்பு முதலீட்டு உத்தி அனைவருக்கும் தெரிந்த ஊரறிந்த இரகசியம் . ஆனால் அதைப் பின்பற்றும் பொறுமை மற்றும் தாமதமான தன்னிறைவு இந்த அவசர யுகத்தில் அரிதினும் அரிதாகி வருகிறது.

வாரன் பஃபெட் கூறுவது மாதிரி மதிப்பு முதலீட்டின் மீது நீங்கள் கண்டதும் காதல் கொள்ள வேண்டும் . ஒரு சிலர் கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பு முதலீட்டு உத்தியை நான் தழுவிக் கொள்கிறேன் , இப்போதைக்கு வளர்ச்சி முதலீட்டை (Growth Investing) மேற்கொள்கிறேன் என்று கதை விட்டுக் கொண்டிருப்பார்கள். விலை வருவாய் விகிதம் மிகை அளவீடுகளில் வர்த்தகமாகும் பங்குகளை மீமிகை அளவில் விற்கலாம் என்று நினைத்து வாங்குவது வளர்ச்சி முதலீடு . இன்னும் சிலர் மதிப்பு முதலீட்டிற்கு ஒரு மின்னணுக் கணக்கு (Demat Account) வளர்ச்சி முதலீட்டிற்கு ஒரு மின்னணுக் கணக்கு என்பதாக ஜல்லியடித்துக் கொண்டிருப்பார்கள்.

பங்குச்சந்தையில் வெற்றி பெற மதிப்பு முதலீடு என்கிற ஒரேயொரு சரியான வழி மட்டுமே இருக்கிறது. மாறி வரும் பங்குச்சந்தை உத்திகளில் மாறாததும் மதிப்பு மிக்கதுமான ஒரே உத்தி மதிப்பு முதலீடு மட்டுமே .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14