பங்கு அகழ்வாய்வு
பங்கு அகழ்வாய்வு
கீழடி அகழ்வாய்வு மாதிரி தனிப்பட்ட பங்குகள் குறித்த ஆழமான அகழ்வாய்வுகள் எதுவும் வந்த மாதிரி தெரியவில்லை. பத்து வருட காலத்தில் ஒரு பங்கு என்ன வருமானம் கொடுத்திருக்கிறது என்பதான உண்மையான கணக்கை Moneylife மாதமிருமுறை இதழ் ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. ஆனால் ஒரு நிறுவனம் முதன்முதலாக பொதுப் பங்கு வெளியிட்டதில் தொடங்கி நாளது தேதி வரை நடந்தது என்ன என்பதற்கான புள்ளி விவரங்கள் எங்கும் காணக் கிடைக்கவில்லை. தரகு நிறுவன இணையத்தளங்களில் மிகவும் அதிகபட்சமாக பத்து வருடத்திற்கான விவரங்கள் இருக்கின்றன.
moneycontrol.com இணையத்தளம் இந்த விவரங்கள் கொடுப்பதில் முதலிடம் பெறுகிறது. ஆனால் நிறுவனப் பிரிப்பு முதலான விவரங்களை நாம் தான் மெனக்கெட்டுத் தேடவேண்டும். நிறுவனங்கள் தத்தம் ஆண்டறிக்கையில் பொதுப் பங்கு வெளியீட்டில் இருந்து நாளது தேதி வரை ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பங்காதாயம் கொடுத்திருக்கிறது, இலவசப்பங்கு , பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பு விவரங்கள் முதலியவற்றைத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கலாம்.
விதிவிலக்காக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டில் தொடங்கி அனைத்து விவரங்களையும் தனது இணையத்தளத்தில் கொடுத்திருக்கிறது. அது குறித்த ஒரு அகழ்வாய்வு...
அகழ்வாய்வைத் தொடங்குவதற்கு முன் ஒரு சின்ன கேள்வி. பஜாஜ் ஆட்டோ என்றால் சட்டென்று உங்கள் நினைவிற்கு வருவது எது? நிறையப் பேருக்கு ஒரு காலத்தில் மிகவும் விற்பனையான அதன் M80 மாடல் நினைவிற்கு வரும். பங்குச்சந்தையில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு அதைத் தாண்டி எதுவும் தெரியாது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் என்று தெரியும். என்னை மாதிரி இன்னும் சிலருக்கு அது பன்மடங்கான ஒரு பங்கு என்று தெரியும். பன்மடங்கு என்றால் எத்தனை மடங்கு? பங்குச்சந்தையில் வெற்றி பெறுவதற்கு இந்த மாதிரியான துல்லியமான தகவல்களே உயிர்நாடி. வெறுமனே தகவல் தெரிந்தால் மட்டும் போதாது. அந்தத் தகவலை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் என்பதும் மிக முக்கியம். அந்த வகையில் இந்தப் பதிவை எழுதும் வரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இவ்வளவு பெரிய மல்டிபேக்கர் என்பது எனக்கும் தெரியாது.
1960 ல் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டிருக்கிறது. பங்கின் முக மதிப்பு 100 ரூபாய். 1960 களில் 1000 ரூபாய் ஆகப்பெரிய தொகை என்பதைக் கொஞ்சம் மறந்து விட்டு, ஒருவர் 10 பங்குகளை 1000 ரூபாய்க்கு வாங்கி நாளது தேதி வரை வைத்திருப்பதாகக் கொண்டு அகழ்வாய்வைத் தொடரலாம்.
1960- 10 பங்குகள்
1967- 1:5 இலவசப்பங்கு - 12
1971- 1:2 இலவசப்பங்கு - 18
1973- 1:2 இலவசப்பங்கு - 27
1977- 1:1 இலவசப்பங்கு - 54
1984- 1:1 இலவசப்பங்கு - 108
1988- 1:1 இலவசப்பங்கு - 216
1987- 10:1 பங்குப் பிரிப்பு - 2160
1991- 1:1 இலவசப்பங்கு - 4320
1994- 1:1 இலவசப்பங்கு - 8640
1997- 1:2 இலவசப்பங்கு - 12960
2007 ஆம் ஆண்டு நிறுவனம் மூன்று பகுதிகளாகப் பிரிகிறது. 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பஜாஜ் ஆட்டோ பங்கு, 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பஜாஜ் ஹோல்டிங்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் 5 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பஜாஜ் ஃபின் ஸெர்வ்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2010 ஆம் ஆண்டு 1:1 என்ற விகிதத்தில் இலவசப்பங்கு வழங்கியதையும் சேர்த்தால் மொத்தம் 25920 பஜாஜ் நிறுவனப்பங்குகள். அதாவது 10 பங்குகள் 25920 பங்குகளாக வளர்ந்திருக்கிறது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நன்றாகக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். அந்த ஒருவர் ஆரம்பத்தில் முதலீடு செய்த 1000 ரூபாயைத் தவிர மற்றபடி சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை. பஜாஜ் நிறுவனம் தற்போது 4187 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அவரது ஆரம்ப முதலீடான 1000 ரூபாயின் தற்போதைய மதிப்பு கிட்டத்தட்ட 10.85 கோடி. 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் மட்டும் 36.28 இலட்சம்.
இது மட்டுமல்ல. பஜாஜ் ஹோல்டிங்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் 3588 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அதன் 12960 பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட 4.78 கோடி. அதன் மூலமான 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் கிட்டத்தட்ட 5.18 இலட்சம்.
பஜாஜ் ஃபின் செர்வ் நிறுவனம் ரூபாய் 11670 க்கு வர்த்தமாகிறது. அதன் 12960 பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட 15.12 கோடி. அதன் 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் ரூபாய் 38880/-
1000 ரூபாய்க்கான 2021 ஆம் ஆண்டு பங்கு ஈட்டு விகிதம் இந்த மூன்று நிறுவனங்களுக்குமாக 414600 சதவீதம் (பதிவுப்பிழை அல்ல) வருகிறது. வங்கி நிரந்தர வைப்பின் 8 சதவீத வட்டியுடன் இதனை ஒப்பிட வேண்டுகிறேன். இந்த நான்கு இலட்சம் சதவீதம் பங்கு ஈட்டு விகிதம் கொடுக்கக்கூடிய பங்குகளின் விலையும் கூடியே தீர வேண்டும். 1960 களின் ரூபாய் ஆயிரம், கிட்டத்தட்ட 30 கோடிகள் ஆகியிருக்கிறது. 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கம் ஆகிய பங்குகள் 100 மடங்காளர் (100 bagger) என்று அழைக்கப்படும். பஜாஜ் ஆட்டோ பங்கு 300000 மடங்காளர். 1960 களில் 1000 ரூபாய் முதலீடு செய்ய என்னால் இயலாது என்பவர்களுக்காக ஒரு கணக்கு. 1960 களில் உங்களால் ஒரே ஒரு ரூபாய் முதலீடு செய்ய முடியும் அல்லவா? அந்த ஒரே ஒரு ரூபாயை பஜாஜ் நிறுவனப்பங்கில் முதலீடு செய்து நாளது தேதி வரை வைத்திருந்தால் அந்த ஒரு ரூபாயின் இன்றைய மதிப்பு ரூபாய் மூன்று இலட்சம் . அந்த ஒரே ஒரு ரூபாய்க்கான, இந்த மூன்று நிறுவனங்களின் மூலமான 2021 ஆம் வருடத்திற்கான பங்காதாயம் மட்டும் 4146 ரூபாய்.
அந்த ஒரு ரூபாயைக் கையில் வைத்திருந்தால் அதன் இன்றைய மதிப்பைச் சற்றே யோசித்துப் பாருங்கள். ஒரு ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தே மறைந்து விட்டது. ஒரு ரூபாய் நாணயம் இப்பவோ அப்பவோ என்று இருக்கிறது.
1960 களில் 1000 ரூபாயை கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தால் அது வெறும் 110000 (8% CAGR) ரூபாயாக மட்டுமே வளர்ந்திருக்கும். பங்கு சார்ந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்திருந்தால் 50 இலட்சம் ரூபாய் (15% CAGR) கிடைத்திருக்கும். பஜாஜ் பங்கு 24.25 % CAGR கொடுத்திருக்கிறது. நீண்ட கால நோக்கில் 0.1 சதவீத இலாப வேறுபாடுகள் கூட மிகப்பெரிய விளைவை ஏற்படுத்த வல்லது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்தக் கணக்கீட்டில் பங்காதாயம் சேர்க்கப் படவில்லை.
பஜாஜ் நிறுவனத்தின் ஐந்து வருட இடைவெளியிலான பங்காதாய விபரப்பட்டியல்...
1960 - ரூபாய் 200
1965 - 100
1970 - 180
1975 - 324
1980 - 1080
1985 - 3249
1990 - 23769
1995 - 69120
2000 - 129600
2005 - 324000
இனி வரும் பங்காதாயங்கள் மூன்று நிறுவனங்களுக்குமானவை.
2010 - 933120
2015-1749600
2021-4146000
பங்குகளை சம்பாதிக்கும் ஒரு நபராகப் பாவியுங்கள் என்று சொல்லப்படுவது மிகவும் பொருத்தமானது என்பதாகத் தோன்றுகிறது. 2021 ஆம் வருடத்திற்கான பங்காதாயத்தை 12ஆல் வகுத்தால் மாதம் ரூபாய் 345500 வருகிறது.
பஜாஜ் நிறுவனம் பொதுப் பங்கு வெளியிட்டதில் இருந்து நாளது தேதி வரை பங்காதாயமாக மட்டும் இரண்டு கோடிக்கு மேல் கொடுத்திருக்கிறது. இந்தப் பங்காதாயங்களை பஜாஜ் பங்குகளில் மறு முதலீடு செய்திருந்தால் இன்னும் பன்மடங்கு வருமானம் கிடைத்திருக்கும்.
10 கிராம் தங்கத்தின் விலை 1960 களில் 112 ரூபாய். தற்போதைய விலை 39315 ரூபாய். CAGR 10.48 சதவீதம் மட்டுமே. இந்த 10 கிராமை விற்றால் மட்டுமே உங்களால் தங்கத்தைப் பணமாக்கம் செய்ய முடியும். பங்கு முதலீட்டில் பங்காதாய வடிவில் பணப்பாய்ச்சல் (cash flow) இருக்கும். பங்குகளை விற்க வேண்டும் என்று அவசியமில்லை. முன்பே சொன்னது மாதிரி நீங்கள் சுண்டு விரலைக் கூட அசைக்க வேண்டாம்.
பஜாஜ் நிறுவனப் பங்காதாயம் 1965 ஆம் ஆண்டு பாதியாகக் குறைந்து விட்டதும் ஒருவர் பங்குகளை விற்று விட்டு வெளியேறினால் என்னவாகியிருக்கும் என்று சற்றே யோசித்துப் பாருங்கள். அதே மாதிரி நிறுவனப்பிரிப்பின் போதும் பஜாஜ் பங்கு வன்மையாக ஏறி இறங்கியது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பங்கு நன்றாக வளர்ந்து வரும் போது ஒட்டிக் கொள்வதும் பிரச்னை என்றால் வெட்டிக் கொள்வதும் கதைக்கு ஆகாது. இதில் ஏதோ ஒரு இயற்கை நீதி இருப்பதாகத் தோன்றுகிறது.
நிறுவனப்பங்கு ஒன்றின் உண்மையான வருமானத்தைக் கணக்கிட , அந்த நிறுவனப் பங்கை மட்டும் தனிப்பட்டுப் பார்க்காமல் , அதிலிருந்து நிறுவனப் பிரிப்பு என்ற வகையில் பிரிக்கப்பட்ட நிறுவனப் பங்குகளின் வருமானத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது . இந்த மாதிரிக் கணக்குகளை நாம் தான் தனிப்பட்ட முறையில் தேடித் தெளிய வேண்டும் . இவை எந்த இணையத் தளத்திலும் வெளி வராது . எந்தச் சலிப்பானும் (Screener) இதனைச் சொல்லாது .
பஜாஜ் நிறுவனப்பங்கு ஒன்றின் விலை ரூபாய் 4185 க்கு வர்த்தமாகிறது என்றால் நாம் பார்ப்பது பஜாஜ் நிறுவனம் என்ற ஆலமரத்தின் ஒரு இலையை மட்டுமே. ஒவ்வொரு பங்கையும் நூற்றுக்கணக்காக வேர் விட்ட ஒரு ஆலமரமாகப் பாருங்கள். அவ்விதமான ஒரு பார்வையைக் கைக்கொண்டால் பங்குச்சந்தை தேர்வில் பாதி தேர்ச்சி பெற்று விட்டதாக அர்த்தம்.
இப்போது பஜாஜ் நிறுவனப் பங்குகளை வாங்கலாமா? இந்தப் பதிவு பஜாஜ் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கான பரிந்துரை அல்ல. நான் உங்களிடம் பகிர விரும்புவது இன்னும் ஆழமான ஒரு விஷயம். உங்கள் நிதி விடுதலைக்கான தீர்வு பங்கு முதலீடுகளில் மட்டுமே இருக்கிறது. பங்குகளை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து, மதிப்பு முதலீடு மேற்கொண்டு, தலைமுறைகளைக் கடந்து வைத்திருந்தால் உங்கள் பங்குத் தொகுப்பில் ஒரு பஜாஜ் பங்கு மட்டுமல்ல, ஒரு நூறு பஜாஜ் பங்குகள் இருக்கும்.
Comments
Post a Comment