இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி?
இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி?
நாட்கள் என்னும் பூக்கள் கொண்டு தான் ஆண்டுகள் என்னும் மாலைகள் கட்டப்படுகின்றன. ஆனால் நாட்கள் பார்க்காததையெல்லாம் ஆண்டுகள் பார்க்கின்றன.
ஒரு மலையை அதன் அருகிலிருந்து பார்க்க முடியாது.
காலம் என்பது தூரத்தின் மறு வடிவம்.
* * *
எந்தெந்த நிறுவனங்கள் இலவசப்பங்குகளை வெளியிடும் என்று ஊகிக்க ஒரு வழி இருக்கிறது. பொதுவாக நிறுவனங்கள் தத்தமது வெள்ளி விழா ஆண்டு (25) பொன் விழா ஆண்டு (50) வைர விழா ஆண்டு (60) மற்றும் நூற்றாண்டில் இலவசப்பங்குகளை வெளியிடும். 2026 ல் எந்தெந்த நிறுவனங்கள் இத்தகைய ஆண்டுகளைக் கடக்கின்றன என்ற பட்டியலைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவற்றை அடிப்படைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவை மதிப்பு முதலீடாக வர்த்தகமாகிறதா என்று சரி பார்க்கவும். பின்னர் இத்தகைய பங்குகளைக் காலப் பன்மயமாக்கம் என்ற வகையில் வாங்கலாம். இதன் இன்னொரு அனுகூலம் என்னவென்றால் இந்த நிறுவனங்கள் இலவசப்பங்குகளை வெளியிடவில்லையென்றாலும் இவைகளைத் தொடர்ந்து கைவசம் வைத்துக் கொள்ளலாம். இத்தகைய தரமான நிறுவனங்கள் தொடர்ந்த வாக்கில் வளர்ந்து வரும். இந்த நிறுவனங்களின் வருமானத்தை அடியொற்றிச் செல்லும் விலை-வருவாய் விகிதமும் (PE Multiple) பெருக்கத்திற்கு உள்ளாகும். இதன் விளைவாகப் பங்கின் விலைகள் விண்ணை முட்டும். ஒரு கட்டத்தில், நிறுவனம், சிறு முதலீட்டாளர்கள் வாங்கத்தக்க விலையில் பங்கின் விலைகளைத் தாங்கத்தக்கதாக மாற்றும் பொருட்டு இலவசப்பங்கு வெளியீட்டையோ அல்லது பங்குப் பிரிப்பையோ மேற்கொள்ளும்.
முக மதிப்பு பத்து ரூபாய் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்தால் அவற்றின் ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஒரு ரூபாய் என்றவாக்கிலான பங்குப்பிரிப்பு பயணத்தில் நாம் பங்கு பெறலாம். சில நிறுவனங்கள் இந்தப் பங்குப் பிரிப்புக்கு இடையிடையே இலவசப் பங்களிப்பை மேற்கொள்ளும். அவற்றின் நிதி விகிதங்கள் தரமாக இருக்கும் பட்சத்தில் உபரி மற்றும் இருப்புப்பணம் உயர்ந்து கொண்டே இருக்கும். இத்தகைய நிறுவனங்கள் இலவசங்களைத் தொடர்ந்து வழங்கிய வண்ணமாக இருக்கும்.
இந்த வெள்ளி விழா, பொன் விழா தவிர்த்து நிறுவனங்கள் எதற்காக எப்போது இலவசப்பங்குகளை அளிக்கும் என்று யாராலும் தீர்மானமாகக் கூறவியலாது. நிறுவனரின் நூறாண்டு நிறைவுக்கு அவை இலவசப்பங்குகளை வழங்கலாம். சில நிறுவனங்கள் குறிப்பிட்ட விற்றுமுதலை (turnover) எட்டினால் அதைக் கொண்டாடும் விதமாக இலவசப்பங்குகளை வெளியிடும். மற்றும் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட நிகர இலாப மைல் கல்லை எட்டினால் அதன் பொருட்டு இலவசப்பங்களிப்பை மேற்கொள்ளும்.
சில நிறுவனங்கள் நிறுவிய ஆண்டுக்கணக்கை மட்டுமின்றி அவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஆண்டுகளையும் சிறப்பிக்கும் வகையில் பட்டியல் ஆண்டின் வெள்ளி விழா, பொன் விழாவில் இலவசப்பங்குகளை வழங்கும். நிறுவனங்களின் நிறுவிய ஆண்டு மைல் கற்களை மட்டுமின்றி அவற்றின் பட்டியல் ஆண்டுக் கொண்டாட்டங்களையும் இவ்விதமாக நீங்கள் பணமாக்கம் செய்யலாம். பிரார்த்தனை செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன என்பது மாதிரி கொண்டாட்டங்களுக்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும்.
முக மதிப்பு ஒரு ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகும் நிறுவனங்கள், உயர்ந்து வரும் அவற்றின் பங்கு விலைகளை ஒரு ரூபாய்க்கும் கீழாகக் குறைக்க இயலாததால் இலவசப்பங்கு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். இலவசப்பங்குகளைக் கைப்பற்ற இத்தகைய ஒரு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட நிறுவனங்களிலும் கவனம் செலுத்தலாம். இவை இருப்பு மற்றும் உபரிப் பணம் சேரச் சேர இலவசப் பங்களிப்புகளை மேற்கொள்ளும் .
சில நிறுவனங்கள் அவைகளின் முக மதிப்பைப் பிரிக்கவே செய்யாது. BPCL, Eclerx Services, HPCL, IOC, Reliance Industries, Sundaram Finance போன்ற நிறுவனங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். MRF போன்ற சில நிறுவனங்கள் இலவசப் பங்களிப்பு மற்றும் பங்குப் பிரிப்பு போன்ற செயல்பாடுகளை நீண்ட காலமாக மேற்கொள்ளவில்லை. அந்த வகையில் ஒவ்வொரு நிறுவனத்தைக் குறித்தான உங்கள் புரிதலைக் கட்டமைக்க வேண்டும்.
சிலர் இலவசப்பங்கு இலவசமாகக் கிடைக்கிறது என்று அதனை விற்று வைக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள். இது ஆகப்பெரிய தவறு. நிறுவனங்கள் வழங்கும் முதலாவது ஒன்றுக்கொன்று இலவசப்பங்களிப்பும் அதன் ஐந்தாவது ஒன்றுக்கொன்று இலவசப்பங்களிப்பும் ஒன்றல்ல. நிறுவனம் ஒன்றின் 100 பங்குகளை நீங்கள் வைத்திருப்பதாகக் கொள்ளுங்கள். அதன் முதல் ஒன்றுக்கொன்று இலவசப் பங்களிப்பு 100 பங்குகளை வழங்குவதாக இருக்கும். அதன் ஐந்தாவது ஒன்றுக்கொன்று இலவசப் பங்களிப்பு 1600 பங்குகளை வழங்கும்.
அடிக்கடி இலவசப்பங்குகளை அதுவும் இருப்பு மற்றும் உபரிப்பணம் சேராமல் வழங்கும் நிறுவனங்களிடம் எச்சரிக்கை கொள்ளவும். ஒரு கட்டத்தில் இவற்றின் முதல், வீக்கம் அடைந்து இருப்பு சுருங்கி விடும். மேலும் இவற்றால் பங்காதாயங்களைத் தொடர்ந்து வழங்கவியலாது. ஒரு உத்தியை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தினால் அது நமக்கெதிராகத் திரும்பி விடும். அந்த வகையில் தொடர்ந்தவாக்கில் இலவசப்பங்குகளை வழங்குவது கயிற்றின் மேல் நடப்பது மாதிரி. உபரி சேரச்சேர இலவசப்பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும். இந்த அதிகரித்து வரும் முதலுக்கும் சேர்த்துப் பங்காதாயங்களை வழங்க வேண்டும். நிறுவனம் ஒன்று ஒன்றுக்கொன்று இலவசப்பங்கு வழங்கிய பின்னர் அதன் இலவசப்பங்களிப்புக்கு முன்னதான பங்காதாயத்தைத் தொடர்ந்து வழங்குமானால் அதன் பங்காதாயம் இரட்டிப்பாகி விடும். Anuh Pharma போன்ற நிறுவனங்கள் இந்தக் கயிற்றின் மேல் நடக்கும் கலையில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றன.
இந்த மாதிரி இலவசப் பங்களிப்பு மற்றும் பங்குப்பிரிப்பை வழங்கும் நிறுவனப்பங்குகளைத் தொடர்ந்து வைத்திருந்தால் உங்களுக்கான அவற்றின் பங்கு சராசரி விலை குறைந்து கொண்டே வரும். V Guard நிறுவனப் பங்குகளுக்கான அதன் இலவசப்பங்களிப்பு மற்றும் பங்குப்பிரிப்பைக் கணக்கில் கொண்டதான எனது கொள்முதல் விலை மூன்று ரூபாய். நாளை V Guard நிறுவனம் மற்றுமொரு ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தினாலான இலவசப் பங்களிப்பை மேற்கொண்டால் எனக்கான அதன் சராசரி கொள்முதல் விலை ஒன்றரை ரூபாயாகக் குறைந்து விடும். இலவசப்பங்குகளை ஒரு நிறுவனம் தொடர்ந்தவாக்கில் வழங்கும் போது அதன் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருப்பவருக்கான கொள்முதல் விலை குறைந்து கொண்டே வரும் பாங்கைக் கவனியுங்கள். பங்குகள் தின அளவில் ஏறியிறங்கும் போது இந்தக் குறைவான கொள்முதல் விலை உளவியல்ரீதியாக உங்களுக்கு ஒரு ஆகப்பெரிய அனுகூலத்தைக் கொடுக்கும். இலவசப்பங்குகளைத் தொடர்ந்து விற்று வைப்பவர்களுக்கு இந்த அனுகூலம் கிடைக்கப்பெறாது. இலவசப்பங்குகளின் மிகப்பெரிய நன்மையாக இந்தக் குறைந்து வரும் கொள்முதல் விலையையே நான் பார்க்கிறேன். கரடிச்சந்தையில் இந்தப் பங்குகளை அச்ச விற்பனை செய்யாமல் காக்கும் அரணாக இந்தக் கொள்முதல் விலை செயல்படும். V Guard நிறுவனப்பங்கின் தற்போதைய விலை 307 ரூபாய். அதன் வாழ்நாள் அதிக விலை 458 ரூபாய். அது 458 ரூபாயிலிருந்து குறைந்து 307 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது. ஆனால் எனக்கான அதன் தற்போதைய அடக்க விலை வெறும் மூன்று ரூபாய் என்பதால் இந்த விலை இறக்கம் என்னைப் பாதிக்கவில்லை.
நீண்ட நெடுங்கால அளவில் இந்தக் கருத்தாக்கம் செயல்படும் விதத்தை ITC நிறுவனப்பங்குகள் மூலம் இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
Year-Corporate action-Price per share
1976 - IPO - 100 shares - Rs.15
1978 - 1:5 bonus - 120 - 12.5
1980 - 1:5 bonus - 144 - 10.42
1989 - 1:1 bonus - 288 - 5.21
1991 - 3:5 bonus - 459 - 3.27
1994 - 1:1 bonus - 918 - 1.63
2005 - 1:2 bonus - 1377 - 1.09
2005 - 10:1 split - 13770 - 0.11
2010 - 1:1 bonus - 27540 - 0.05
2016 - 1:2 bonus - 41310 - 0.03
2025 - 1:10 demerger - ITC Hotels - 4131 - 0.36
1976 ஆம் ஆண்டு ITC நிறுவனப்பங்குகளை அதன் IPO வில் வாங்கி நாளது தேதி வரை வைத்திருக்கும் முதலீட்டாளருக்கான ITC பங்குகளின் அடக்க விலை வெறும் மூன்று பைசா மட்டுமே. சில நாட்களுக்கு முன் ITC நிறுவனப்பங்குகள் அரசாங்க வரி உயர்வு காரணமாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. 400 ரூபாய்க்கு வர்த்தகமான அதன் பங்குகள் திடுதிப்பென்று 350 ரூபாய்க்கு இறக்கம் பெற்றன. ஆனால் IPO முதலீட்டாளருக்கான ITC பங்குகளின் அடக்க விலை மூன்று பைசா என்ற அளவில் இருப்பதால் அவரால் இந்த விலை இறக்கத்தை ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட புறக்கணிப்பு (benign neglect) என்ற பார்வையில் பார்க்க முடியும்.
ITC நிறுவனம், சமீபத்தில், அதன் விருந்தோம்பல் துறையை நிறுவனப்பிரிப்பு என்ற வகையில் தனி நிறுவனமாகப் பிரித்தளித்தது. ITC நிறுவன IPO முதலீட்டாளருக்கான அதன் அடக்க விலை 36 காசுகள் என்பதும் இங்கு கவனம் பெறுகிறது. இவையனைத்தும் காலத்தால் கூடியது.
ITC Hotels நிறுவனப்பங்கின் பட்டியல் விலை (listing price) 188 ரூபாய். ITC நிறுவன IPO முதலீட்டாளருக்கான விலையைக் கொண்டு கணக்கிடும் போது அதன் பட்டியல் விலையே பன்மடங்காளர் கணக்கில் (188 ÷ 0.36 = 522 bagger) வருகிறது.
பொதுவாக சிறு முதலீட்டாளர்கள் venture capital என்று சொல்லப்படும் துணிகர முதலீடுகளில் முதலீட்டை மேற்கொள்ள முடியாது. ஆனால், இத்தகைய நிறுவனப் பிரிப்புகள் வழி முதல் பொது வெளியீட்டிற்கு முன்னதாக அவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம். ஆனால் நிறுவனப்பிரிப்பு முதலான இத்தகைய செயல்பாடுகள் பல்லாண்டுகளின் கூடுகையில் மட்டுமே நடைபெறும்.
இந்த வருடம், ITC நிறுவனத்தின் IPO மூலமான செல்வ உருவாக்கப் பயணத்தின் பொன்விழா ஆண்டு. நிறுவனம், மீண்டும் ஒரு இலவசப் பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
முன்னரே குறிப்பிட்டது மாதிரி margin of safety யுடன் இலவசப்பங்குகளை வழங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்ல ஒரு உத்தியாக இருக்கும். அந்த வகையில் Samvardhana Motherson International நிறுவனம் இங்கே கவனம் பெறுகிறது. அது நாளது தேதி வரை ஒன்றல்ல இரண்டல்ல பதினோரு முறை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இலவசப்பங்குகளை வாரி வழங்கியிருக்கிறது. இது போக பங்குப்பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பையும் மேற்கொண்டிருக்கிறது. முதல் பொது வெளியீட்டிலிருந்து அது 28.44 சதவீதக் கூட்டுப்பெருக்கத்தைக் கொடுத்திருக்கிறது. நிறுவனம் வழங்கிய பங்காதாயம் மற்றும் Motherson Sumi Wiring India நிறுவனப்பிரிப்பின் மூலமான செல்வ உருவாக்கக் கணக்கு இதில் சேர்க்கப்படவில்லை.
இலவசப்பங்குகளை வழங்கவிருக்கும் நிறுவனங்களை எவ்வளவு தான் முன் கணித்து நீங்கள் முதலீடு செய்தாலும் அவை எப்போது அவற்றை வழங்கும் என்பதை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. தரமான நிறுவனங்கள் அனைத்தும் காலங்களின் கூடுகையில் பன்மடங்காளர் ஆவது மாதிரி அவை இலவசப்பங்குகளை வழங்குவதாகவும் மாறும். பொறுமையே இலவசப்பங்குகளை விடுவிக்கும் சாவியாக இங்கே செயல்படுகிறது. எனது பங்குத்தொகுப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்று மாற்றி ஒன்று என்ற கணக்கில் ஏதாவது ஒரு நிறுவனம் இலவசப்பங்களிப்பையோ அல்லது பங்குப்பிரிப்பையோ தொடர்ந்தவாக்கில் வழங்கியவாறே இருக்கும். இந்த நிலையை அடைய கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு ஆனது என்ற கணக்கும் இங்கே கவனம் பெறுகிறது.
நிறுவனங்கள் அரிதாக மேற்கொள்ளும் Capital reduction என்று சொல்லப்படும் ஒரு வழிமுறை குறித்தும் பார்த்து விடலாம். நிறுவனப்பங்கு ஒன்றின் முக மதிப்பு பத்து ரூபாய். Equity Capital என்று சொல்லப்படும் அதன் பங்கு முதல், பத்து கோடி. வேறு மாதிரி சொல்வதானால், நிறுவனம், பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட ஒரு கோடி பங்குகளைப் பங்கு முதலாகக் கொண்டிருக்கிறது. Reserves and surplus என்று சொல்லப்படும் அதன் இருப்பு மற்றும் உபரி நூறு கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. அதாவது நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரி, அதன் பங்கு முதலின் பத்து மடங்காக உள்ளது (100÷10=10) நிறுவனம், பற்பல இலவசப் பங்களிப்புகளை மேற்கொண்ட பின்னர் அதன் பங்கு முதல் மற்றும் இருப்பு & உபரி இவ்வாறு உள்ளது. நிறுவனம் முதல் செறிவாக (capital intensive) இல்லை. அதற்கு இவ்வளவு முதல் தேவையில்லை. நிறுவனம், பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட அதன் பங்குகளை ஒரு ரூபாய் என்ற அளவில் குறைத்து மீதமிருக்கும் ஒன்பது ரூபாயை முதலீட்டாளர்களுக்குப் பிரித்தளிக்கிறது. இந்த முதல் நீக்கத்தின் பின்னர் அதன் இருப்பு மற்றும் உபரி நூறு மடங்காகி விடும் (100÷1=100) நிறுவனம் மீண்டும் இலவசப் பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான தகுதியைப் பெறும். நிறுவனங்கள் முதல் நீக்கத்தை மேற்கொள்ள அதன் முக மதிப்பு பத்து ரூபாய் என்ற உயர் அளவுகளில் இருக்க வேண்டியது அவசியம் என்பது தெளிவு. மேலும் இந்த முதல் நீக்கம் ஒருமுறை மட்டுமே செய்யக்கூடிய ஒன்று என்பதும் தெளிவு. Colgate நிறுவனம் இந்த முதல் நீக்க முறையில் பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட அதன் பங்குகளை ஒரு ரூபாய் என்ற அளவில் குறைத்துக் கொண்டது.
இலவசப் பங்களிப்பு மற்றும் பங்குப்பிரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கும் தரமான நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகமாக இருக்கும். இந்த அதிக விலையின் காரணமாக liquidity என்று சொல்லப்படும் அவற்றின் நீர்மை நிறையும் குறைவாக இருக்கும். மேலும், இத்தகைய பங்குகளைக் குறைவான மதிப்பில் பணமாக்கம் செய்ய முடியாது. ஒரு பங்கு ஒரு இலட்சம் என்ற விலையில் வர்த்தகமாவதாகக் கொள்ளலாம். உங்களுக்குத் தேவை பத்தாயிரம் ரூபாய் என்றும் கொள்ளலாம். இந்தப் பத்தாயிரம் ரூபாயை எப்படி நீங்கள் பணமாக்கம் செய்ய முடியும்?
இலவசப்பங்களிப்பு மற்றும் பங்குப்பிரிப்பு போன்றவை வெறுமனே book entry மட்டுமே, அவற்றால் எந்த மதிப்பும் உருவாக்கப்படுவதில்லை என்பதான ஒரு கருத்து இருக்கிறது. அது உண்மையும் கூட. ஆனால் அடக்க விலை சார்ந்த உளவியல் மற்றும் நீர்மை நிறை கொண்டு இத்தகைய நன்மைகளும் இருக்கின்றன.
பங்குப் பிரிப்புக்கு ஒரு எல்லை இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் முக மதிப்பு ஒரு ரூபாய் என்ற அளவில் அது உள்ளது. இலவசப் பங்களிப்பிற்கு எல்லைகள் என்பதாக ஏதுமில்லை.
ஒன்றுக்கு ஒன்று இலவசப் பங்களிப்பின் பின்னர் பங்கின் விலை பாதி குறைந்து அதன் விலை தாங்கத்தக்கதாக வாங்கத்தக்கதாக மாறி விடும். இத்தகைய பங்குகளை இவ்வாறு தொடர்ந்து வாங்குவது அதன் மூலமான செல்வ உருவாக்கப் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
பெரிய கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தரமான பங்குகளை மதிப்பு முதலீடாக காலப் பன்மயமாக்க வழிமுறையில் வாங்கி ஆண்டாண்டு பேணிப் பாதுகாத்து வந்தால் அதன் இலவசப் பங்களிப்பு, பங்குப்பிரிப்பு மற்றும் நிறுவனப்பிரிப்புகளில் பங்கு பெற்று அதன் செல்வ உருவாக்கப் பயணத்தில் இலகுவாகப் பறந்து செல்லலாம்.
Comments
Post a Comment