ஒரு அதிர்ஷ்டக் கதை
ஒரு அதிர்ஷ்டக் கதை
Charles Darrow ஜெர்மனியின் பென்சில்வேனியா நகரில் வசித்து வந்த 42 வயது heating engineer . 1930 களின் ஆகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் (Great Depression) போது நிலையான வேலையில்லாமல் அவருடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது .
Charles Darrow அவ்வப்போது பங்குச்சந்தையில் ஊக வணிகம் செய்து பணம் சம்பாதிக்க முயல்வது வழக்கம் . அந்தப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வறுமையின் கோரப்பிடியில் இருந்த Darrow விற்கு பங்குச்சந்தை ஊக வணிகங்களில் இதை இவ்விதம் செய்திருந்தால் எவ்விதம் இருந்திருக்கும் அதை அவ்விதம் செய்திருந்தால் எவ்விதம் இருந்திருக்கும் என்ற கற்பனைகளில் திளைப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக இருந்தது . உதாரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனப்பங்குகள் 40 டாலர் என்ற அளவுக்குத் தரையைத் தட்டும் வரை காத்திராமல் 1000 டாலர் என்ற அளவில் விற்று விட்டு வெளியேறியிருந்தால் எப்படி இருந்திருக்கும் ? அந்தப் பணத்தை நிலத்தில் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கப் பெற்றிருக்கும் என்பதான ஒருபோதும் முடிவு பெறாத ஆகாயக் கோட்டைகள் ...
அந்தப் பொருளாதார நெருக்கடி நிலையிலும் ரியல் எஸ்டேட் துறை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது . Darrow தனது மனைவியுடன் இந்தக் கற்பனை விளையாட்டை விளையாடுவது வழக்கம் .
Darrow விற்கு ஒருநாள் பொறி ஒன்று தட்டியது . இந்தப் பொருளாதார நெருக்கடி நிலையில் Darrow தனது மனைவியுடன் விளையாடும் இந்த விளையாட்டு மற்றவர்களுக்கும் உவப்பானதாக இருக்கும் என்று தோன்றியது . யார் கையிலும் பணமில்லை . எங்கும் பஞ்சம் . ஆனால் கற்பனைக்கு ஏது பஞ்சம் ?
Darrow ஒரு அட்டையில் இந்த விளையாட்டை வடிவமைக்கிறார் . பகடைக்காயின் ஒரு சுண்டில் நீங்கள் கற்பனைப் பணத்தைக் கொண்டு நிலபுலன்களை வாங்கலாம் . இன்னொரு சுண்டில் பங்குச்சந்தையின் பன்மடங்காளர் பங்கு ஒன்றைக் கைப்பற்றலாம் . இன்னொன்றில் ரூபாய் பங்கு , மற்றொன்றில் வருமான வரி , பிரிதொன்றில் வர்த்தக திவால் என்று இந்த விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெறுகிறது .
Darrow இந்த விளையாட்டு உபகரணங்களை ஒரு டாலருக்கு , ஒரு நாளைக்கு இரண்டு என்ற அளவில் தயாரித்து விற்கிறார் . Monopoly என்ற இந்த விளையாட்டை வாங்கிய ஒருவர் இன்னொருவரிடம் சொல்ல அந்த இன்னொருவர் பிறிதொருவரிடம் சொல்ல ஒரு கட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு உபகரணங்களை விற்று அதன் மூலமாக சிறிதளவு இலாபம் கிடைக்கப்பெறும் ஒரு சூழ்நிலை உருவாகிறது .
தற்செயலாக ஒரு அச்சக உரிமையாளர் இந்த Monopoly விளையாட்டு உபகரணங்களை அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் பார்க்க நேரிடுகிறது . இந்த விளையாட்டில் கவரப்பட்டவராக அவர் Darrow வுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார் . Monopoly விளையாட்டு அட்டை , விளையாட்டுப் பணம் மற்ற பிற உபகரணங்களை அவருடைய அச்சகத்தில் அச்சிட்டு விற்பனை நடைபெறுகிறது . பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவருக்கு இந்த விளையாட்டு பிடித்துப்போய் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் என்று அதன் தேவைப்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கிறது . விளையாட்டாகத் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டு அவர்களையே விழுங்கும் வண்ணம் நேர் பின்னூட்ட வளையம் (positive feedback loop) ஒன்று சுழலத் தொடங்குகிறது . தேவைப்பாடு மிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகிறது . இதிலிருந்து விடுபட ஒரேயொரு வழி தான் எஞ்சியுள்ளது . Darrow , பார்க்கர் பிரதர்ஸ் என்ற விளையாட்டுப் பொருட்களை மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்கிறார் . இந்த விளையாட்டு விற்பனைக்கான உரிமையை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு புனைவுரிமைத் தொகை (royalty) என்ற அடிப்படையில் பணம் பெறுவது அவர் எண்ணம் .
பார்க்கர் பிரதர்ஸ் நிறுவனம் ஒரு விளையாட்டை சந்தைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கென்று சில தனிப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன . உதாரணமாக அந்த விளையாட்டு எளிமையாக இருக்க வேண்டும் . 45 நிமிடங்களுக்குள் முற்றுப்பெற வேண்டும் இத்யாதி ... இத்யாதி ... அந்த வகையில் Monopoly விளையாட்டில் 52 அடிப்படைப் பிழைகள் இருப்பதாகச் சொல்லி நிறுவனம் அதனை நிராகரித்து விட்டது .
இதற்கிடையில் Monopoly விளையாட்டிற்கான தேவைப்பாடு மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகி பார்க்கர் பிரதர்ஸ் அதனது முடிவை மறு பரீசீலனைக்கு உட்படுத்துகிறது . இப்போது 52 அடிப்படைப் பிழைகள் அவ்வளவு பெரிய பிழைகளாகத் தோன்றவில்லை . Darrow வுடன் பார்க்கர் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக் கொள்கிறது . நிறுவனத்தின் ஒப்பந்தம் மிகச் சரியான ஒன்று என்பதைக் காலம் பின்னர் நிரூபிக்கிறது .
Darrow வின் வயது அப்போது 40 . அவருக்குக் கிடைக்கப்பெற்ற அதிர்ஷ்டத்தின் அளவு கணக்கில் அடங்காதது . பார்க்கர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் Charles Darrow க்கு இந்த விளையாட்டின் மூலமாக எவ்வளவு பணம் புனைவுரிமைத் தொகையாகக் கிடைக்கப் பெற்றிருக்கும் என்று கேட்ட போது அது வர்த்தக இரகசியம் என்பதாகப் பதில் சொல்லப்பட்டது . ஆனால் நிறுவனம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டது . இந்த Monopoly விளையாட்டு தான் பார்க்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மிக வெற்றிகரமான விளையாட்டு ஒப்பந்தம் . 15 வெவ்வேறு மொழிகளில் இந்த விளையாட்டு வெளியிடப்பட்டிருக்கிறது . இதுவரை ஏழரைக் கோடி உபகரணங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன . அதன் மதிப்பு 1,000,000,000,000 டாலர்கள் . அதாவது ஒரு இலட்சம் கோடி டாலர்கள் . Darrow க்கு இதில் 10 சதவீதம் கிடைப்பதாக ஒரு குறைந்த பட்ச மதிப்பைக் கொண்டு கணக்கிட்டாலும் 10000 கோடி டாலர்கள் வருகிறது . இந்தப் புள்ளி விவரங்கள் கடந்த காலத்திற்கானவை . Monopoly விளையாட்டு இன்னமும் விற்பனையில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும் .
Darrow வின் அதிர்ஷ்டக் கதையிலிருந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய சில பாடங்களைப் பார்க்கலாம் .
ஒரு ஐடியா உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமே என்பதான ஒரு விளம்பர வாசகத்தைப் பார்த்திருப்பீர்கள் . தன் வாழ்க்கையை மாற்றிப் போட வல்லதான அந்த நெருப்பை அணைந்து விடாமல் பாதுகாத்து அதனை சரியான இடத்தில் கொண்டு சேர்த்து அதன் மூலமாக ஒரு பணப்பாய்ச்சலை (Cash flow) உருவாக்கிக் கொண்டதில் Darrow வின் மேதைமை வெளிப்படுகிறது . தொழில் முனைதல் ( Entrepreneurship) கனவுகள் உங்களுக்குள் இருக்கலாம் . எல்லோராலும் அந்தக் கனவுகளை நனவாக்க முடியாது . பங்குச்சந்தை அந்தக் கனவுகளை நனவாக்க ஒரு நல்வாய்ப்பை வழங்குவதாக இருக்கிறது . ஆயிரம் ரூபாய்க்கு நிறுவனப் பங்கு ஒன்றை வாங்கினால் அந்த ஆயிரம் ரூபாயில் நீங்கள் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி அதன் இலாப நஷ்டங்களில் பங்கு பெறுவதாக அர்த்தம் . கரடிச்சந்தையில் இன்னமும் குறைந்த விலையில் நீங்கள் இந்த வியாபாரத்தில் பங்கு பெறலாம் . இவ்வாறாக பங்குச்சந்தையிலும் உங்களுக்கான உத்திகளைக் கருவாக்கி அதனைத் 'திரு'வாக்குங்கள் .
பொருளாதார நெருக்கடியின் போது பங்குச்சந்தை தரையைத் தட்டும் என்பது தெளிவு . அந்தத் தரைமட்டத்தில் தான் செல்வ வளங்களுக்கான கோட்டைகள் எழுகின்றன . பெரும்பாலான பன்மடங்காளர் பங்குகளின் (Multibaggers) தொடக்கப்புள்ளி கரடிச்சந்தை தான் . அந்த வகையில் பன்மடங்காளர் பங்குகள் ஒவ்வொரு கரடிச்சந்தையிலும் மறுபடி மறுபடி பிறக்கின்றன . உண்மையான முதலீட்டாளர்களுக்கு கரடிச்சந்தையில் தான் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் ஏராளமாகக் கிடைக்கும் . அதனால் உண்மையான முதலீட்டாளர்களால் கரடிச்சந்தையை உணர முடியாது. அவர்களைப் பொறுத்தவரை கரடிச்சந்தை தான் காளைச்சந்தை .
Darrow வின் அதிர்ஷ்டக்கதையில் என்னைக் கவர்ந்த அம்சம் , நீங்கள் ஒரு முறை ஒரு செயலைச் செய்ய வேண்டும் , அதன் மூலமாக வாழ்நாள் முழுமைக்குமாக பலன் பெற வேண்டும் . Darrow எப்படி ஒரு முறை ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்து அதன் மூலமாக வாழ்நாள் முழுமைக்கும் ஏன் , அதன் பிறகுமான வருமானத்தைக் கட்டமைத்துக் கொண்டாரோ அதே மாதிரி ஒரு நிறுவனப் பங்கை இனங்கண்டு வாங்கி அதனை வாழ்நாள் முழுவதுமாக வைத்திருக்கும் போது தான் ஆண்டாண்டு காலமாக அதிகரித்து வரும் பங்காதாய வடிவிலும் , இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்க வல்ல பங்குகளின் முதலீட்டுப் பெருக்க வாயிலாகவும் சொத்து உருவாக்கம் (Wealth Creation) என்பது நிகழ்கிறது . Darrow விற்கு ஒரு உத்தி தான் கிடைத்தது . பங்குச்சந்தையில் உங்களுக்கு ஓராயிரம் உத்திகள் கிடைக்கும் . ஆனால் அந்த உத்திகளைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்வது தான் கடினமான காரியமாகும் .
குறிப்புதவிய நூல் : How To Get Lucky by Max Gunther
Comments
Post a Comment