பாதுகாப்பு வரம்பு

பாதுகாப்பு வரம்பு

Margin of safety 


பத்து டன் எடையைத் தாங்கும் பாலத்தில் ஐந்து டன் எடையை மட்டும் கொண்டு செல்வது பாதுகாப்பு வரம்பு (margin of safety) என்று அழைக்கப்படுகிறது.


இரயில் எட்டு மணிக்குப் புறப்படும் என்றால் ஏழரை மணிக்கே இரயில் நிலையம் சென்றடைந்து விடுவது பாதுகாப்பு வரம்பு. 


பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க இது ஒரு முக்கியமான கல்யாண குணமாகப் பார்க்கப்படுகிறது. 


நூறு ரூபாய் உள்ளார்ந்த மதிப்பு (intrinsic value) உள்ள பங்கை ஐம்பது ரூபாய்க்கு வாங்குவது பாதுகாப்பு வரம்பு.


ஆக, பாதுகாப்பு வரம்பு என்பதைப் பின்வருமாறு வரையறுக்கலாம்.

பாதுகாப்பு வரம்பு = உள்ளார்ந்த மதிப்பு - சந்தை விலை

பங்குச்சந்தையில் மனித உணர்ச்சிகளும் முட்டி மோதிக் கொள்வதால் பங்குகள் குறுகிய கால அளவில் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை விடவும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வர்த்தகமாகும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. 


பங்குகளின் 52 வாரக் குறைந்த விலைக்கும் அவற்றின் 52 வார அதிக விலைக்கும் ஆகப்பெரிய இடைவெளி இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கான முழுமுதற்காரணம் முதலீட்டாளர்களின் உணர்ச்சிப்பெருக்கே அன்றி வேறென்ன?


நீண்ட கால அளவில் பங்குகள் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை அடியொற்றிச் செல்லும் என்றாலும் குறுகிய கால அளவில் எதுவும் நடக்கலாம். எனவே எப்போதும் பாதுகாப்பு வரம்புடன் இருப்பது மிக மிக முக்கியம். 


வாரன் பஃபெட்டின் குரு, பெஞ்சமின் கிரகாம் பிரபலப்படுத்திய உத்தி இது.


நன்கு வாங்கப்பட்டது பாதி விற்கப்பட்டது (Well bought is half sold) என்ற பங்கு மொழியின் மேல் இந்த மன மாதிரி (mental model) கட்டப்பட்டுள்ளது.


நிறுவனப்பங்கு ஒன்றின் உள்ளார்ந்த மதிப்பு 100 ரூபாய் என்று கொள்ளலாம். அது சந்தையில் 150 ரூபாய்க்கு வரத்தகமாகிறது. அதனை வாங்காமல் விட்டு விடுவது உத்தமம்.


சிலபல காரணங்களால் மேற்சொன்ன பங்கின் விலை 100 ரூபாய்க்கு வரப்பெறுகிறது. அதன் உள்ளார்ந்த மதிப்புக் கணக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் பொறுமை காக்கவும்.


சந்தையில் திடுதிப்பென்று பொருளாதாரக் குண்டு ஒன்று வெடிக்கிறது. பங்கின் விலை 75 ரூபாய்க்கு வருகிறது.


இது தற்காலிகமான ஒரு பின்னடைவு என்பதான நிச்சயம் உங்களுக்கு இருக்குமென்றால் நீங்கள் அந்தப் பங்கைத் தற்போது வாங்கலாம்.


நான்கே நான்கு பத்திகளில் பங்கின் விலை பாதுகாப்பு வரம்புக்குள் வந்து விட்டது. 


வலைப்பூ பதிவு என்பது வேறு. முதலீட்டு வாழ்க்கை என்பது வேறு. 


முதலீட்டு வாழ்க்கையில் எந்தப் பங்கும் உடனடியாக பாதுகாப்பு வரம்புக்குள் இந்த மாதிரியாக வரப்பெறாது.


வாரன் பஃபெட் ஒரு பங்கின் பாதுகாப்பு வரம்புக்காக ஓராண்டு ஈராண்டு அல்ல முப்பதாண்டுகள் காத்திருந்தார்.


தசாப்தங்களில் காத்திருக்க நாமெல்லாம் வாரன் பஃபெட் அல்ல. 


எனில் என்ன செய்யலாம்?


வெயிலோ மழையோ, காளையோ கரடியோ, தொடர்ந்தவாக்கில், குறிப்பிட்ட இடைவெளியில் தரமான பங்குகளை இனங்கண்டு வாங்குங்கள்.


இவ்வாறு வாங்கும் போது rupee cost averaging என்று சொல்லப்படும் 'விலை சராசரி' பின்புலத்தில் இயங்குகிறது.


இந்த முறையில் பங்குகளின் விலை கூடுதலாக இருக்கும் போது குறைவான எண்ணிக்கையிலான பங்குகளையும், பங்குகளின் விலை குறைவாக இருக்கும் போது கூடுதல் எண்ணிக்கையிலான பங்குகளையும் நம்மால் வாங்க முடியும்.


தரமான நிறுவனங்களைப் பொறுத்தவரை அவற்றின் உள்ளார்ந்த மதிப்பு ஆண்டாண்டுகளின் கணக்கில் கூடிச் செல்வதாகவே இருக்கும். ஆக, அவற்றைச் சற்று அதிக விலையில் வாங்குவதில் தவறேதும் இல்லை. 


தரமான நிறுவனங்களின் நிகர இலாப வரம்பு (net profit margin) உயர் அளவீடுகளில் இருக்கும். இது ஒரு வலுவான பாதுகாப்பு வரம்பாகச் செயல்படும். பொருளாதாரம் எவ்வாறு  செயல்பட்டாலும் நிறுவனங்கள் அதற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு இலாபமீட்டவும், போட்டி நிறுவனங்களை எட்டத்தில் நிறுத்தவும் இந்த நிகர இலாப வரம்பு உதவுகிறது.


தனிப்பட்ட பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளைப் பொறுத்தவரை இவற்றுக்கான உராய்வுச் செலவுகளைக் குறைப்பது ஒரு பாதுகாப்பு வரம்பாகச் செயல்படுகிறது. 


நீண்ட கால அளவில் ஒரு சதவீத நிதி மேலாண்மை செலவு கூட எதிர்மைப் பெருக்கத்திற்கு (negative compounding) உள்ளாகி உங்கள் பங்குத்தொகுப்பின் வருமானத்தைப் பதம் பார்த்து விடும். அதனினும் முக்கியமாக இந்த செலவினங்கள் காளைச்சந்தையிலும் கரடிச்சந்தையிலும் செயலாக இருக்கும்.


ஒரு குறிப்பிட்ட கால அளவில் சந்தை 15 சதவீத CAGR என்ற வருமானத்தைக் கொடுத்திருப்பதாகக் கொள்ளலாம். இதே கால கட்டத்தில் கடன் பத்திர முதலீடுகள் 8 சதவீத CAGR கொடுத்திருப்பதாகவும் கொள்ளலாம். இந்தக் கால அளவில் பணவீக்கம் 7 சதவீதம் என்றால் பங்குகளில் உங்கள் பாதுகாப்பு வரம்பு 8 சதவீதமாக உள்ளது. கடன் பத்திரங்களில் உங்கள் பாதுகாப்பு வரம்பு ஒரு சதவீதமாகக் குறைந்து விடுகிறது. பங்குகளில் செய்யும் முதலீடு உங்கள் பாதுகாப்பு வரம்பைக் கட்டிக் காக்கிறது.


இது மட்டுமின்றி SIP என்று அழைக்கப்படும் மேற்குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டத்தில் உளவியல் ரீதியான வேறு சில நன்மைகளும் உள்ளன.


பங்குச்சந்தையின் ஆதாரமான குணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமன்றால் அது ஏறி இறங்கும் தன்மை கொண்டது என்று சொல்லலாம். நீங்கள் பங்குச்சந்தையில் காலப் பன்மயமாக்கம் (Time diversification) என்ற வகையில் தொடர்ந்து முதலீடு செய்யும் போது பங்குச்சந்தையின் இந்த ஏறி இறங்கும் தன்மைக்கு மறைமுகமாக உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கிறீர்கள். சந்தை திடுதிப்பென்று இறங்குகையில் விலை வேறு, மதிப்பு வேறு என்ற எண்ணப் போக்குடன் நீங்கள் நடந்து கொள்வீர்கள். பங்குகளின் விலைக் குறைப்பைப் புறந்தள்ளி அவற்றை மதிப்பாக வாங்க முனைவீர்கள். இந்த செயல்முறைகளால் பலனும் அடையப் பெறுவீர்கள்.


இந்தத் தொடர்ச்சியான முதலீட்டு முறைகளால் நிறுவன அளவில் நடைபெறும் சில செயல்பாடுகளும் உங்களுக்குச் சாதகமாக அமையும். நிறுவனங்கள், அவற்றின் இருப்பு மற்றும் உபரி (Reserves & Surplus) பணம் அதிகரிக்கையில் இலவசப்பங்களிப்புகளை வழங்கத் துவங்கும். சில நிறுவனங்கள் பங்குப் பிரிப்பை மேற்கொள்ளும். இன்னும் சில நிறுவனங்கள், நிறுவனத்தின் ஒரு பகுதியைத் தனியே பிரித்து அதனைப் பட்டியலிடும். Samvardhana Motherson International நிறுவனம் மேற்சொன்ன மூன்று செயல்பாடுகளையும் மேற்கொண்டது. அது ஒரு பன்மடங்காளர் பங்காக மாறியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.


இதனினும் முக்கியமாக நீண்ட கால அளவில் நீங்கள் மேற்கொள்ளும் எந்தத் திட்டத்திற்கும் அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பு கிடைத்தே தீரும். எப்படி பெஞ்சமின் கிரகாமுக்கு GEICO நிறுவனப்பங்கு கிடைத்ததோ அதே மாதிரி ...


ஆக, முறையான முதலீட்டுத் திட்டம் மூலமான காலப் பன்மயமாக்க உத்திகள் வழி உங்களுக்கான பாதுகாப்பு வரம்பைக் கட்டமைத்துக் கொள்ளுங்கள். 


பட்டினத்தார் பாடியது மாதிரி பங்குச்சந்தையில் செயல்படாமல் செயல்படுங்கள்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

இலவசப் பங்களிப்புகளை இனங்காண்பது எப்படி?