இருப்பு சாய்வு

இருப்பு சாய்வு

Availability Bias 


சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் போது உடனடியாக மனதிற்கு வரும் தகவல்களை வைத்து முடிவெடுப்பதான மாந்தர்களின் மனச்சாய்வு இருப்பு சாய்வு (Availability bias) என்பதாக அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் மனம் காட்டும் இந்த உடனடித் தகவல்கள் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நம்மை இட்டுச் செல்லும். 


இருப்பு சாய்வு என்பதை பிரச்னை ஒன்றுக்கான தீர்வைக் கண்டடைவதற்கு மனம் பயன்படுத்தும் குறுக்கு வழி என்பதாகச் சொல்லலாம்.


சமீப கால சாய்வின் (Recency Bias) ஒரு அங்கமாக இந்த இருப்பு சாய்வைப் பார்க்க முடியும் என்றாலும் அதற்கும் இதற்கும் நுட்பமான சில வேறுபாடுகள் இருக்கின்றன. சமீப கால சாய்வு என்பது சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில் கவனம் கொள்வது. இருப்பு சாய்வு என்பது எப்போதோ நடந்த நிகழ்வாக இருந்தாலும் பசு மரத்தாணி போல் மனதில் பதிந்த நிகழ்வுகளில் கவனம் கொள்வது.


Jaws திரைப்படம் 1975 ஆம் ஆண்டு வெளி வந்தது. Stephen Spielberg ன் காலத்தை வென்ற திரைக்காவியம் அது. Jaws படம் எடுக்கும் போது தொழில்நுட்பம் அவ்வளவு முன்னேறியிருக்கவில்லை. சுறா ஒன்றின் பொம்மையைக் கொண்டு அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. பெரும்பாலான சமயங்களில் கடல் நீரை விர்ரென்று பிளந்து செல்லும் சுறாவின் வால் மட்டும் காட்டப்பட்டிருக்கும். அவ்வப்போது மட்டும் சுறா அதன் தலையைக் காட்டும். மற்றபடி சுறா எப்போது வரும் என்ற ஒரு எதிர்பார்ப்பையும் ஒரு அச்ச உணர்வையும் கொண்டு மட்டும் படம் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் Spielberg திட்டமிட்டு இவ்வாறு செய்யவில்லை. படத்தின் முக்கியமான கட்டங்களில் அந்தப் பொம்மை அவர்கள் எதிர்பார்த்த வகையில் இயங்கவில்லை. எனவே சுறாவைக் காட்டி அச்ச உணர்வை எழுப்பாமல் அதன் மீதான எதிர்பார்ப்பைக் கொண்டு கதை நகரும். சுருக்கமாகச் சொன்னால் சுறா காட்டாமல் காட்டப்பட்டிருக்கும். விளைவாக ஹிட்ச்காக் மர்மக்கதை போன்று ஒரு திரைக்காவியம் கிடைக்கப்பெற்றது. இந்தப் படம் மக்கள் மனதில் பசு மரத்தாணி போல் பதிந்து விட்டது. படம் வெளிவந்து பல்லாண்டுகள் கடந்த பின்னரும் சுறாவைக் குறித்த பயம் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை. ஆனால் சுறா தாக்கி ஒருவர் இறப்பதற்கான வாய்ப்பு 3.75 மில்லியனில் ஒன்று மட்டுமே. மின்னல் தாக்கி ஒருவர் இறப்பதற்கான வாய்ப்பை விட இது குறைந்த ஒரு வாய்ப்பு மட்டுமே. ஆனால் Jaws படம் வெளியான பின்னர் அதன் இருப்பு சாய்வின் காரணமாக இந்த சுறா தாக்குவதான அச்சம் பன்மடங்கு அதிகரிக்கப்பெற்றது.


காசு சுண்டுதலின் போது ஒருமுறை தொடர்ச்சியாக 27 முறை தலை விழப்பெற்றது. இது அரிதினும் அரிதான ஒரு நிகழ்வாகும். இவ்வாறு அரிதினும் அரிதான ஒரு நிகழ்வாக இருப்பதால் மட்டுமே இது இன்னும் நினைவு கூரப்படுகிறது. சூதாட்ட நிலையங்கள், சூதாட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இத்தகைய தகவல்களை ஊதிப் பெரிதாக்கி அந்த நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்ளும். இதனை அடிப்படையாகக் கொண்டு சூதாட்ட நிலையங்களில் தலை தொடர்ச்சியாக விழும் என்று பந்தயம் கட்டுவது இருப்பு சாய்வின் பாற்பட்டது.


Google முதலான Startup வெற்றிக்கதைகளைப் படித்தவர்களுக்கு நாமும் Startup ஒன்றைத் தொடங்கலாம் என்பதான எண்ணப்போக்கு இருக்கும். என் நண்பர் ஒருவர் நாம் Startup ஒன்றைத் தொடங்கினால் என்ன என்று கேட்டது ஞாபகத்தில் இருக்கிறது. Startup ஒன்றைத் தொடங்கவேண்டும் என்று Google நிறுவனர்கள் அதனைத் தொடங்கவில்லை. தின அளவில் மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகும் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்த முனைகையில் இனிய விபத்தாக Serendipity என்ற அடிப்படையில் கூகுள் தேடுபொறி கண்டறியப்பட்டது. மேலும் கூகுள் போன்ற ஒரு Startup வெற்றிக்கதைக்கு ஈடாக ஓராயிரம் Startup தோல்விக்கதைகள் இருக்கும். நமது விப்ரோ மற்றும் இன்போசிஸ் முதலான வெற்றிக்கதைகளுக்கு ஈடாக ஓராயிரம் தோல்விகளின் காயங்கள் உள்ளன. அத்தகைய நிறுவனங்கள் குறித்து யாரும் பேசப் போவதில்லை. அவை இருப்புக்கு வராது. 


லாட்டரியில் கோடிக்கணக்கில் வென்றவர்கள் குறித்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடும். கோடிக்கணக்கானவர்கள் லாட்டரியில் தோற்பது செய்தியாக வராது. லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள் நாளடைவில் தோற்பதும் செய்தியாக வராது. 


பங்குச்சந்தையைப் பொறுத்தவரை சில துறைகள் அவ்வப்போது முதலீட்டு வெளிச்சத்தில் இருக்கும். அதே மாதிரி அப்போதைக்கப்போது சில பங்குகள் தகவல் வெள்ளத்தில் மிதக்கும். இந்தப் பங்குச்சந்தை மாயப் பித்தில் கவனத்தைச் சிதற விடாது நீண்ட கால அளவில் எத்தகைய பங்குகள் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன போன்ற தகவல்களை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இத்தகைய தகவல்கள் உடனடி இருப்பில் இருக்காது. அதனை நீங்கள் தான் தனிப்பட்ட முறையில் தேடித் தெளிய வேண்டும்.


இவ்வாறு சந்தையில் ஏற்கெனவே செல்வ வளம் எவ்விதம் உருவாகியிருக்கிறது, அதற்கான நிகழ்தகவு எவ்வளவு, அதற்கான கால வரம்பு எவ்வளவு, அந்தப் பயணத்தின் இடர்ப்பாடுகள் என்ன போன்ற தரவுகளை ஆராய்வது நாளைய செல்வ உருவாக்கத்திற்கான பயணத்திற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.


எவ்வளவுக்கு எவ்வளவு பின்னால் பார்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு முன்னால் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14