பிட் காயின் கேள்வி பதில்
பிட் காயின் கேள்வி பதில்
1 . பிட் காயின் என்றால் என்ன ?
பிட் காயின் என்பது மென் நாணயம் . ரூபாய் என்பது வன் நாணயம் .
2 . பிட் காயின் என்பதன் அடிப்படை என்ன ?
தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றைக் கொண்டு புரிந்து கொள்ளலாம் . அந்த வகையில் நாணயத்தின் அடிப்படையைக் கொஞ்சம் பார்க்கலாம் . ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு நாணயம் இருக்கிறது . அமெரிக்க டாலர் , ஜப்பானிய யென் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . இந்திய நாணயம் ரூபாய் . இந்த மாதிரி நாணயங்கள் பரிமாற்ற இடைப்பொருள் (medium of exchange) என்ற அளவீட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இத்தகைய நாணயங்களை அச்சடித்துத் தள்ளிய வண்ணம் இருக்கின்றன . அதனால் இந்த நாணயங்களின் மதிப்பு நாளும் குறைந்த வண்ணம் இருக்கிறது . விளைவாகப் பணவீக்கம் அதிகரிக்கிறது . மென் நாணயங்களை சுட்டியின் ஒரு சொடுக்கில் உருவாக்க முடியாது . கணிதப் புதிர்களை விடுவித்தால் மட்டுமே இந்த மென் நாணயங்களை உருவாக்க முடியும் . முதலில் எளிமையாக இருக்கும் இந்தப் புதிர்கள் புதிய மென் நாணயங்களை உருவாக்க உருவாக்க மென்மேலும் கடினமாகும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் . எளிமையாக மென் நாணயங்களை உருவாக்க முடிந்தால் வன் பணத்திற்கு நேர்ந்த கதி தான் இந்த மென் பணத்திற்கும் நேரும் . மேலும் இத்தகைய நாணயங்களின் உச்ச பட்ச எண்ணிக்கைக்கு ஒரு வரையறை இருக்கிறது . அந்த எண்ணிக்கைக்கு மேல் இவற்றை உருவாக்க முடியாது . சுருக்கமாகச் சொன்னால் மென் நாணயங்கள் அவற்றின் மதிப்பைத் தக்க வைக்கும் வண்ணம் உள்ளன . ரூபாய் உள்ளிட்ட வன் நாணயங்கள் அவ்வாறு இல்லை .
3 . பிட் காயின் வேறு எந்த வகையில் வன் நாணயத்திலிருந்து வேறுபடுகிறது ?
மற்ற நாணயங்களை உருவாக்க மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய மைய வங்கி மாதிரி எந்த அமைப்பும் பிட் காயினில் கிடையாது . மற்ற நாணயங்கள் மாதிரி அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பரிமாற்ற இடைப்பொருள் என்ற வகையில் பிட் காயினைப் பயன்படுத்த முடியாது . இப்போதைக்கு பிட் காயின் தனது மதிப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது . மேலும் பிட் காயின் ஊக வணிகம் தழைத்தோங்குவதால் அதன் மதிப்பு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளது . அழகு என்பது பார்ப்பவர்களின் பார்வையில் இருக்கிறது . அது மாதிரி பிட் காயின் மதிப்பு ஊக வணிக உணர்வில் கட்டப்பட்டுள்ளது . உணர்வுகள் மாறக்கூடியவை . மற்றபடி பிட் காயின் உள்ளிட்ட மென் பணங்கள் மற்றும் வன் பணங்களுக்கு உள்ளார்ந்த மதிப்பு என்று எதுவும் கிடையாது .
4 . பிட் காயின் மாதிரி எத்தனை மென் பணங்கள் (crypto currencies) இருக்கின்றன ?
பிட் காயின் தவிர 10000 வகையான மென் பணங்கள் இருக்கின்றன . Litecoin , Ethereum , Ripple , Dogecoin ... என்று சில மென் பணங்கள் மட்டுமே பிரதானமாகத் தெரியும் வகையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன . பிட் காயின் பொறுத்த வரையில் இதனையும் ஒரு அபாயமாகச் சேர்த்துக் கொள்ளலாம் . பிட் காயின் உச்ச பட்ச எண்ணிக்கைக்கு ஒரு வரையறை இருந்தாலும் (21 மில்லியன்) பிட் காயின் மாதிரி வேறு மென் பணங்களை உருவாக்குவதற்கு வரையறை ஏதுமில்லை . நீங்கள் கூட பிட் காயின் மாதிரி ஒரு மென் பணத்தை உருவாக்கி உலவ விட முடியும் .
5 . பங்குகள் கூட மின்னணு வடிவில் மட்டுமே கிடைக்கின்றன . பிட் காயின் முதலீடுகளும் அதே மாதிரி தானே ?
அது அவ்வாறு அல்ல . உதாரணமாக என்னிடம் இருக்கும் IEX நிறுவனப் பங்குகளின் எண்ணிக்கையை மின்னணுக் கணக்கில் சரி பார்த்துக் கொள்ள முடியும் . மேலும் CDSL நிறுவனம் மாதா மாதம் அனுப்பும் பங்கு வைப்பு ஆவணங்களிலிருந்து (Holding Statement) அது வேறுபடுகிறதா என்று ஆராய முடியும் . IEX அளிக்கும் பங்காதாயங்கள் என்னுடைய வங்கிக் கணக்கில் ஏற்றம் பெறுகிறதா , அது அளிக்கும் இலவசப் பங்குகள் மின்னணுக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா , அன்றன்றைய பங்கின் விலைகள் என்ன என்று வெவ்வேறு மூலங்களிலிருந்து (source) தகவல்களைப் பெற முடியும் . பங்காதாயங்களுக்கு வரி கட்டுதல் , அவ்வப்போது விற்கும் பங்குகளுக்கான இலாப நஷ்டங்களைச் சமன் செய்தல் , நீண்ட கால மூலதன ஆதாய வரி போன்றவை ஒருவர் இந்தப் பங்குகளின் உரிமையாளர் என்பதற்கான மறைமுகமான ஆதாரங்களாகும் . IEX மின்சார சம்பந்தமான ஒரு மென்பொருள் நிறுவனம் . தின அளவில் அதன் நடவடிக்கைகளை நம்மால் நேரடியாக உணர முடியாது . TTK Prestige நிறுவனத்தின் குக்கரை என்னால் தொட்டு உணர முடிகிறது . பிட் காயின் குறித்து இவ்வாறு சொல்ல முடியுமா ? ஒழுங்குமுறை ஆணையம் இன்மை என்பது பிட் காயின் என்ற கருத்தாக்கத்தின் வரமாகும் . அதன் சாபமும் அதுவே ஆகும் .
6 . பிட் காயின் , முதலீட்டுத் தொகுப்பில் தங்கத்திற்கு மாற்றாகப் பயன்படாதா ?
பயன்படாது . பங்குகள் விலை குறையும் போது தங்கம் கூடும் . இது negative correlation , தமிழில் சொல்வதானால் எதிர்ம ஒத்திசைவு என்று அழைக்கப்படும் . இது முதலீட்டுத் தொகுப்பின் சமநிலைக்கு ஏதுவாகும் . ஆனால் பங்குகள் விலை குறையும் போது பிட் காயின் விலையும் குறைகிறது . இது positive correlation . நேர்ம ஒத்திசைவு . இது முதலீட்டுத் தொகுப்பின் சமநிலைக்கு உதவாது .
7 . பிட் காயின் போன்ற மென் பணங்களால் ஏற்படும் புவி வெப்பம் குறித்து ?
பிட் காயின் உருவாக்கத்திற்காக (mining) அதிக சக்தி வாய்ந்த கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன . இதனால் ஏகப்பட்ட மின்சாரம் வீணடிக்கப்படுகிறது . இந்த மின்சாரத்திற்காக நிலக்கரியை எரிப்பதால் புவி வெப்பம் கூடுகிறது . இதன் காரணமாக சீனா பிட் காயினைத் தடை செய்திருக்கிறது .
8 . பிட் காயினில் முதலீடு செய்யலாமா ?
கேள்வியே தவறு . பிட் காயின் என்பது ஒரு நாணயம் . ரூபாய் என்பதும் ஒரு நாணயம் . நீங்கள் கேட்பது ரூபாயில் முதலீடு செய்யலாமா என்று கேட்கிற மாதிரி இருக்கிறது . ரூபாயை நிறுவனப்பங்குகளில் முதலீடு செய்யலாம் . நிறுவனங்களின் கடன் பத்திரங்களை வாங்கலாம் . தங்கத்தில் முதலீடு செய்யலாம் . ரூபாயில் முதலீடு செய்வது எப்படி சரியாக இருக்க முடியும் ? ரூபாய் என்பது பிற முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஒரு பரிமாற்ற இடைப்பொருள் மட்டுமே . பிட் காயினை இன்றைய தேதியில் பரிமாற்ற இடைப்பொருள் என்று கூடச் சொல்ல முடியாது .
9 . பிட் காயின் குறித்து எவ்வளவு படித்தாலும் அது புரியாத புதிராகவே உள்ளது ?
சிக்கலான ஒரு விஷயத்தை எளிமையாக விளக்க முடியாது . வாரன் பஃபெட் மாதிரி புரியாதவற்றில் முதலீட்டை மேற்கொள்ளாமல் இருப்பது சாலச் சிறந்தது . பிட் காயின் என்பது செறிவூட்டப்பட்ட எலிப் பாஷாணம் என்ற வாரனின் கருத்து இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . பிட் காயின் போன்ற மென் பணங்கள் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளின் ஊற்றுக்கண் என்ற சார்லி மஞ்சரின் கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது .
10 . எங்கு பார்த்தாலும் பிட் காயின் என்ற பேச்சாகவே இருக்கிறதே ?
கையில் சுத்தியல் இருந்தால் எதைப் பார்த்தாலும் ஆணியாக மட்டுமே தெரியும் . மேலும் பெரும்பாலான சமயங்களில் நாம் நம்ப விரும்புவதை மட்டுமே நாம் நம்புகிறோம் . அவைகள் குருடாக இருக்க வேண்டும் என்று மனது நினைத்து விட்டால் கண்கள் பார்ப்பதில்லை .
Comments
Post a Comment