ஆத்மாவின் ராகங்கள்
ஆத்மாவின் ராகங்கள்
ஒரு அந்தரங்கமான நண்பன். அவனிடம் நம் ஆசைகள், ஏக்கங்கள், இலக்குகள், கேள்விகள், சந்தேகங்கள் என எல்லாவற்றையும் கேட்கலாம். பகிர்ந்து கொள்ளலாம். நம் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் கொடுக்கும். தவறாகக் கை தவறி கேள்வி கேட்டால் கூட தாங்கள் கேட்டது இது தானே என்று யூகித்துப் பதில் தரும். அன்றன்றைய செய்திகளைச் சுடச்சுடத் தரும். சொடக்குப் போடும் நேரத்தில் கணக்குப் போடும். மொழி பெயர்க்கும். பயணம் செய்கையில் வழித்துணைவனாக வரும். உலகின் எந்த மூலைக்கும் செய்திகளை உடனுக்குடன் அனுப்பும். முகம் சுளிக்காமல் செய்யும் இத்தனை சேவைக்கும் உங்களிடம் ஒரு பைசா கூடக் கேட்காது. நம் உயிருடனும், உணர்வுடனும் இரண்டறக் கலந்து நம் ஆத்மாவின் ராகங்களை (அப்பாடா ! தலைப்பை நியாயப்படுத்தியாகி விட்டது) மீட்டிக் கொண்டிருக்கும் கூகுள் தேடுபொறியின் கதையைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் Larry Page மற்றும் Sergey Brin ன் கல்லூரி ஆராய்ச்சிப்பாடம் தான் கூகுள் தேடுபொறியாகப் பரிணமித்தது. 1995 வாக்கில் இணையத்தில் பத்து மில்லியன் பக்கங்கள் இருந்தன. இதனை ஒழுங்குபடுத்தும் விதமாகத்தான் கூகுள் இரட்டையர்களின் ஆராய்ச்சிப் படிப்பு தொடங்கப்பெற்றது. இணையத்தை ஒரு வரைபடமாகக் (graph) கற்பனை செய்து கொள்ளுங்கள். இணையத்தளங்கள் அதன் புள்ளிகள். ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் முன்னோக்கிய மற்றும் பின்னோக்கிய இணைப்புகள் (forward and backward links) உண்டு. என்னை ஒரு இணையத்தளமாக உருவகம் செய்து கொண்டால் எனக்கு யாரையெல்லாம் தெரியும் என்பது முன்னோக்கிய இணைப்பு. என்னை யாருக்கெல்லாம் தெரியும் என்பது பின்னோக்கிய இணைப்பு. என் முக்கியத்துவத்தைத் தீர்மானிப்பது பின்னோக்கிய இணைப்புகள். நான் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டுமென்றால் பின்னோக்கிய சங்கிலிகள் - அதாவது என்னைத் தெரிந்தவர்கள் - நிறையப் பேர் இருக்கவேண்டும். இந்தப் பின்னோக்கிய இணைப்புகளைக் கூகுள் தரவரிசைப் படுத்துகிறது. உதாரணமாக சூரிய சக்தி குறித்து இணையத்தில் சிறப்பான ஒரு கட்டுரை வெளியாகியிருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அந்தக் கட்டுரைக்குப் பின்னோக்கிய இணைப்புகள் நிறைய இருக்கும். அதாவது, நிறையப் பேர் தங்கள் கட்டுரைக்கு அந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டியிருப்பார்கள். BBC ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறதென்றால் தரவரிசையில் அதற்கு முதலிடம். Scientific American க்கு இரண்டாம் இடம் ... இப்படியே அனைத்து பின்னோக்கிய இணைப்புகளையும் கூகுள் தரவரிசைக்கு உட்படுத்துகிறது. இங்கு தரவரிசை குறித்து எளிமையாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால், கூகுள் நூற்றுக்கும் மேற்பட்ட அளவுருக்களில் ( parameters ) இந்தத் தரவரிசையை மேற்கோள்கிறது. இந்தச் செயல்முறை முடிந்ததும் 'சூரிய சக்தி' என்று கூகுளில் உள்ளீடு செய்தால் மேற்சொன்ன கட்டுரை முதலாவதாக வந்து விடும்.
இந்த இடத்தில் ஒன்றை நன்றாகக் கவனியுங்கள். கூகுள் நிறுவனர்கள் தேடுபொறியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தங்கள் ஆராய்ச்சிப்படிப்பைத் தொடங்கவில்லை. Stumbled என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அவர்கள் தரவரிசைப்படுத்தியது ஒரு இனிய விபத்தாகத் தேடுபொறியில் முடிகிறது.
முன்பே குறிப்பிட்டது மாதிரி அப்போது இணையத்தில் பத்து மில்லியன் பக்கங்கள் இருந்தன. அவ்வளவு பக்கங்களையும் அவர்களுடைய வழங்கியில் (server) தரவிறக்கம் (download) செய்து தரவரிசைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், அன்றன்றைக்கு இணையத்தில் இணையும் பக்கங்கள் எல்லாவற்றையும் தினசரி தரவிறக்கம் செய்து தரவரிசைக்கு உட்படுத்துவதும் முக்கியம். அப்போது தான் தேடுதல் நாளது தேதி வரையானதாக ( up to date ) இருக்கும். தரவிறக்கம் செய்வதற்கு ஏராளமான வழங்கிகள் தேவைப்பட்டன. கூகுள் நிறுவனர்கள் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள உபரியான வழங்கிகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். அப்போதும் வழங்கிகளுக்கான தேவைப்பாடு தீரவில்லை. அவர்கள் பயன்படுத்திய வழங்கிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் கூகுள் மென்பொருள் நிறுவனம் என்று சொல்வதை விட வன்பொருள் நிறுவனம் என்று சொல்வதே சாலப் பொருந்தும். அது ஒரு பிரம்மாண்டமான வேலை. அந்த வேலையின் பிரம்மாண்டம் அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் அதில் அவர்கள் இறங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. வாய்ப்பு என்ற நல் அதிர்ஷ்டம் வேலை என்ற முக்காடைப் போட்டுக் கொண்டு வருவதால் நிறையப் பேர் அதனைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். கூகுள் நிறுவனர்களுக்கு அந்த வேலையின் மீது அவர்கள் கொண்ட தீராக்காதல் (passion) மட்டுமே அவர்களைச் செலுத்தும் உந்து விசையாக இருந்தது. மேலும் A healthy disregard for the impossible என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, முடியாமை என்பதைப் புறந்தள்ளும் ஒரு ஆரோக்கியமான மனப்பான்மையும் அவர்களுக்கு உதவியது.
ஆயிற்று, தேடுபொறியைக் கண்டடைந்தாகி விட்டது. அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆராய்ச்சிப் படிப்பை முடித்துக் கொடுத்து விட்டுப் பின்பு பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். கூகுள் தேடுபொறியை யாரிடமாவது விற்று விடலாம் என்று தோன்றியது. அப்போது Altavista, Excite போன்ற தேடுபொறிகள் புழக்கத்தில் இருந்தன. அவர்களுடைய செயல்முறை, வார்த்தைகளை (keyword search) அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக `குதிரை' என்று அந்தத் தேடுபொறியில் உள்ளீடு செய்தால் குதிரை சம்பந்தமான எல்லாத் தகவல்களையும் உங்கள் தலையில் கொண்டு வந்து கொட்டும். அதில் எந்த ஒழுங்கும் இருக்காது. நீங்கள் தேடிய தகவல் கிடைக்கப்பெறுவது உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. அந்தத் தேடுபொறிகளின் வருமானம் விளம்பரங்களைச் (banner advertisement) சார்ந்திருந்தது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அந்த விளம்பரங்கள் உங்கள் தேடுதலை ஒட்டியிராது. மேலும் அந்த விளம்பரங்களைக் க்ளிக் செய்து சம்பந்தப்பட்ட நிறுவன இணையதளத்திற்குச் செல்லும் வசதியும் அப்போது வந்திருக்கவில்லை. அந்த விளம்பரங்களைப் பார்வையிட மட்டுமே முடியும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தால் அவ்வப்போது விளம்பரங்களைப் பார்வையிடுவீர்கள். எனவே தகவல்களைத் தாமதமாகத் தருவது அவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. ஆனால் கூகுள் அதற்கு நேரெதிர். உங்களுக்கு வேண்டிய தகவல்களைச் சரியாகவும் விரைவாகவும் கொண்டு வந்து கூகுள் கொடுப்பது அவர்களின் வியாபார அடிப்படையையே அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. தகவல்களைத் தேடித் தேடுபொறிக்கு வரும் பயனாளர்கள், தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொண்டு கிளம்பி விடுவது அவர்களுக்கு ஒவ்வாததாக இருந்தது. பின்னர் கோடி கோடி டாலர்களாகக் கொட்டிக் கொடுக்கப் போகும் கூகுள் என்ற தங்கச் சுரங்கத்தை ஒரு மில்லியன் டாலர் கொடுத்து வாங்க அவர்கள் தயாராக இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. கூகுள் நிறுவனர்களுக்கே தாங்கள் ஒரு தங்கச் சுரங்கத்தின் மேல் அமர்ந்திருப்பது அப்போது அவ்வளவு தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. மேலும் அப்போது கூகிளுக்கு வருமான நோக்கம் எதுவும் இருக்கவில்லை. உலகத்தின் தகவல்களை ஒழுங்குபடுத்தி உலகளாவிய அளவில் அதை அனைவரும் பெறவும் பயன்படுத்தவும் செய்வதே அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது. எனவே வேறு வழியில்லாமல் கூகிளை மேலும் செழுமைப்படுத்தும் விதமாக அவர்கள் தங்கள் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்த வண்ணம் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் புதிதாக வழங்கிகள் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பணத்திற்கு என்ன செய்வது? அப்போது தான் ஆபத்பாந்தவன் அனாதரட்சகனாக Cisco நிறுவனத்தின் Vice President , Andy Bechtolsheim கூகுள் நிறுவனத்தில் ஒரு இலட்சம் டாலர்கள் முதலீடு செய்கிறார். அவர் தான் கூகிளின் முதல் தேவதை முதலீட்டாளர் (Angel Investor) உண்மையிலேயே அவருடைய தீர்க்க தரிசனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. கூகுள் அப்போது பணம் எதுவும் சம்பாதிக்கவில்லை. பின்னர் இந்தத் தேடுபொறியை வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அந்தப் பனிமூட்டமான ஒரு சூழ்நிலையில் ஒரு இலட்சம் டாலர்களை அவர் முதலீடு செய்தது ஒரு சரியான முடிவு தானா? ஆம், அந்தத் தெளிவற்ற ஒரு சூழ்நிலையில் தான் சொத்தின் மதிப்புகள் குறைவாக இருக்கும். நன்றாக வெயில் அடித்து எல்லாம் துலாம்பரமாகத் தெரியும் போது சொத்தின் மதிப்புகள் கூடி விடும். பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இது ஒரு முக்கியமான பால பாடம். மீமிகை (extreme) கரடிச்சந்தையில் உங்கள் பங்குத் தொகுப்பின் (portfolio) மதிப்பு சின்னாபின்னமான நிலையில் எதிர்நீச்சல் போட்டுப் பங்குகளை வாங்கும் இரும்பு இதயத்தை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் Moore's Law பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கணினி உள்ளிட்ட சாதனங்களின் சக்தி இரட்டிப்பாகும். அவைகளின் விலை பாதியாகக் குறையும். இது நியூட்டனின் விதி மாதிரி அல்ல. கணினி மற்றும் உதிரிப்பாகங்களின் சக்தி மற்றும் விலையின் போக்கைக் குறிக்கும் பொதுவான ஒரு விதி. இது கூகிளுக்குச் சாதகமாக அமைந்து விட்டது.
கூகுள் தேடுபொறியை பணமாக்கம் ( monetise) செய்வது ரொம்பவும் பின்னால் தான் வருகிறது. பிரதானமாக கூகுள் இரண்டு வழிகளில் பணம் சம்பாதிக்கிறது. முதலாவதாக ADS. இரண்டாவதாக ADSENSE.
1. Ads: உங்கள் தேடுதலை ஒட்டி கூகிளில் விளம்பரங்கள் வரும். முன்னதாக கூகுள் பிரதானமான வார்த்தைகளை ( keywords) ஏலத்தில் விடுகிறது. Real estate என்று நீங்கள் கூகிளில் உள்ளீடு செய்தால் real estate தகவல்களுடன் real estate விளம்பரங்களும், விளம்பரதாரர்கள் ஏலம் எடுத்த அடிப்படையில் வரும். நீங்கள் விளம்பரங்களைக் க்ளிக் செய்வதன் அடிப்படையில் விளம்பரதாரர்கள் பணம் கட்டுவார்கள். ஒரு நாளிதழில் ஒரு நிறுவன விளம்பரம் வந்தால் அதை எத்தனை பேர் படித்தார்கள் என்பது அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம். கூகிளில் எத்தனை க்ளிக்குகள் என்று துல்லியமாகக் கணக்கிட்டு விடலாம். மேலும், இப்போது கூகுள் விளம்பரங்களையும் தர வரிசைப்படுத்தி அதற்கேற்றவாறு பிரதான வார்த்தைகளை ஏலத்தில் விடுகிறது. நிறையப் பேர் க்ளிக் செய்த விளம்பரம் முதலில் வரும் ( ஏல விலை+ தர மதிப்பெண் = தர வரிசை)
2. Adsense :
உங்கள் இணையதளத்தில் அதன் பொருளடக்கத்திற்குத் தகுந்தாற்போல் கூகுள், விளம்பரங்களை அமைத்துக் கொடுக்கும். இந்த வலைப்பூவிற்கு பங்குச்சந்தை குறித்த விளம்பரங்களை கூகுள் அமைத்துக் கொடுக்கும்.
Long Tail என்று ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. அதை முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்ட நிறுவனங்களில் கூகுள் தலையாயது. Long Tail பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன். காலணி தயாரிக்கும் நிறுவனங்களை எடுத்துக் கொள்ளலாம். உலகளாவிய நிறுவனங்கள் என்று Nike, Adidas, Reebok... என்று ஒரு வரிசை. இந்திய நிறுவனங்கள் Bata, Relaxo, VKC... என்று ஒரு வரிசை. அப்புறம் உள்ளூர் நிறுவனங்கள் என்று ஒரு வரிசை. இந்த நிறுவனங்களை L வடிவிலான ஒரு நீண்ண்ண்ட வால் என்பதாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். Nike என்பது அந்த வாலின் தலையில் உள்ளது. அதற்கும் கீழே Adidas, பின்னர் Reebok...Bata...Relaxo...VKC... இப்படியே நீண்ட வரிசையாக நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் multibrand காலணியகங்கள் ... இப்போது வாலின் வால் பகுதிக்கு வாருங்கள். 2bigfeet.com என்று ஒரு நிறுவனம். சில பேருக்குப் பெரிய பெரிய கால்களாக இருக்கும். வழக்கமான காலணியகங்களில் அவர்களுக்குப் பொருத்தமான காலணிகள் கிடைக்காது. 2bigfeet.com நிறுவனத்தில் காலணி அளவு 13 ல் ஆரம்பித்து 14, 15... என்று எல்லா அளவுகளிலும் கிடைக்கப்பெறும். Nikeல் தொடங்கி 2bigfeet.com வரை எல்லா நிறுவனங்களும் கூகிளில் விளம்பரங்கள் தரும். 2bigfeet.com மாதிரியான தனித்தேவை (niche) நிறுவனங்களுக்கு கூகிளில் விளம்பரங்கள் தருவது தான் பொருளாதார ரீதியிலும் சரி, வாடிக்கையாளர்களைச் சென்று சேர்வதிலும் சரி ஒரு உகந்த வழியாக இருக்கும். இவ்விதமாக கூகுள் நிறுவனங்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் உலகளாவிய ஒரு பாலமாகச் செயல்படுகிறது. மிகவும் முக்கியமாக மேலிருந்து கீழாக அந்தப் பாலத்தை முழுமையாகப் பணமாக்கம் செய்கிறது.
கூகுளின் கதையிலிருந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சில பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
முதலாவதும் முக்கியமானதும் என்னவென்றால் பணம் சம்பாதிக்கவென்று பங்குச்சந்தைக்கு வர வேண்டாம். தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். கூகுள் அதன் ஆரம்ப காலத்தில் பணம் சம்பாதிக்க அவசரப் படவில்லை. தேடுதல் வழிமுறைகளை இன்னமும் செழுமைப்படுத்துவதில் தான் அது முனைப்பாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பணமாக்கம் செய்வதை மென்மேலும் தாமதப்படுத்துவதாகக் கூகிளின் மேல் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. கூகுள் நினைத்திருந்தால் நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு தேடுதலில் திருத்தங்கள் செய்திருக்க முடியும். அவ்வாறான மலிவான செயல்களில் அது ஒரு நாளும் ஈடுபடாது. இணையத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த இணையப் பக்கம் எது தெரியுமா? கூகிளின் முகப்புப் பக்கம் (home page)தான். அந்த முகப்புப் பக்க விளம்பரத்திற்கு நிறுவனங்கள் கோடிக்கணக்கான டாலரைக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தும் கூகுள் அந்தப் பணத்தை இழக்கும் அளவுக்கு பணத்திலும் மனத்திலும் வளமையாக இருக்கிறது. Google is rich enough to forego the abvertising dollars. ஆகவே, பங்குச் சந்தையிலும் வழிமுறைகளில் கவனம் செலுத்துங்கள். வளமை தானாக வரும்.
இரண்டாவது பாடம் கூகுள் தன்னைத் தானே மலிவாக விற்க முயன்றது மாதிரி, கரடிச்சந்தையில் உங்கள் வசம் உள்ள பங்குகளை மலிவான விலைக்கு விற்று விட வேண்டாம். யார் கண்டது? உங்கள் பங்குத் தொகுப்பிலும் ( portfolio) கூகுள் மாதிரி பன்மடங்காகக் கூடிய பங்குகள் இருக்கப் பெறலாம்.
மூன்றாவது பாடம், தொடங்கல்கள் ( startup) ஆரம்பிக்கிறேன் பேர்வழி என்று யாரும் எதையும் தொடங்க முடியாது. அப்படி எந்தத் தொடங்கலும் தொடங்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. கூகுள் நிறுவனர்கள் தேடுபொறியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இணையப் பக்கங்களை ஆராயவில்லை. இணையப் பக்கங்களை ஒழுங்குபடுத்தும் போது ஒரு இனிய திருப்பமாகத் தேடுபொறியைக் கண்டடைந்தார்கள். பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் எல்லாம் இந்த மாதிரி ஒரு இனிய விபத்து என்ற அடிப்படையில் தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் serendipity என்று சொல்லப்படும் இதனைப் பற்றி ஒரு தனிப்பட்ட பதிவு எழுத உத்தேசம். நீங்களும் பங்குச்சந்தையில் ஒரு தொடங்கல் மனநிலையிலேயே இருங்கள். புதுப்புது உத்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
கூகுள் பணியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் தங்களுக்குப் பிடித்தமான ஆராய்ச்சியில் ஈடுபடலாம். Google Maps, Gmail போன்ற சேவைகள் இந்த மாதிரியான முறையில் தான் தொடங்கப்பெற்றன. இவ்விதமாக கூகுள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு இன்னமும் ஒரு தொடங்கல் மனநிலையிலேயே இருக்கிறது. அது தான் அதன் வெற்றியின் சூட்சுமம்.
கூகிளின் தற்போதைய பங்குச்சந்தை மதிப்பு 1668 பில்லியன் டாலர்கள். ஒரு காலத்தில் ஒரு மில்லியன் டாலர்களுக்கு யாரும் வாங்காத அதே நிறுவனம் இன்று 1668000 மடங்கு அதிகமாக விற்பனையாகிறது.
கூகுள் நிறுவனர்கள் இன்னமும் தங்கள் பட்டப் படிப்பை முடிக்கவில்லை. ஆனால் கூகுள் ஒரு நிறுவனமாக அழியாப் புகழ் பெற்று விட்டது.
குறிப்புதவிய நூல்கள்:
1. Google It - Anna Crowley Redding
2. The Search - John Battelle
3. The Google Story - David A vise
Comments
Post a Comment