இலாபத்தை இடைவெட்டல்
இலாபத்தை இடைவெட்டல்
Run Cutting
ஒரு கணவன்-மனைவிக்குப் பிதுரார்ஜித வடிவில் ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கப்பெறுகிறது. அதனை அவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அது பாதி ஆவியாகி 50000 ரூபாய் என்ற அளவிற்கு வந்த புள்ளியில் இந்தக் கதை தொடங்குகிறது.
தம்பதியருக்கு நிறுவனம் ஒன்றைக் குறித்த இரகசியத் தகவல் ஒன்று கிடைக்கப்பெறுகிறது. அந்த நிறுவனப்பங்குகள் 'ரூபாய் பங்கு' என்ற வகையில் 25 காசுக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனத்தைக் குறித்த அந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் பங்குகள் காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணை முட்டும்.
இருந்தாலும் தம்பதியர் ஏற்கெனவே சந்தையில் சூடுபட்டதால் மதில் மேல் பூனையாக இருக்கின்றனர்.
பங்கின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இரண்டு ரூபாயைத் தொடுகிறது.
தம்பதி, தரகரின் எச்சரிக்கையை மீறி 50000 ரூபாய்க்கு அந்த ரூபாய் பங்கை பங்கு ஒன்று ரூபாய் இரண்டு என்ற விலையில் வாங்குகின்றனர்.
ஒரே வருடத்தில் அதன் பங்குகளின் விலை எட்டு ரூபாயைத் தொடுகிறது. பன்மடங்காளர் கணக்கில் சொல்வதானால் அது 4 bagger.
தரகர், அதன் பங்குகளை விற்று விட வலியுறுத்துகிறார். நிறுவனத்தின் அடிப்படைகள் (fundamentals) அதன் விலைக்கு ஆதரவாக இல்லை.
இது அதிர்ஷ்டத்தின் ஒரு அலை. இந்த அலை தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதிர்ஷ்ட அலையின் முகடு வரை பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடாது. Run Cutting செய்தே ஆக வேண்டும். இலாபத்தை இடைவெட்டியே ஆக வேண்டும்.
தம்பதியின் எண்ணப்போக்கு வேறாக இருந்தது. நிறுவனப் பங்குகள் ஒருவேளை 100 மடங்காளரானால் வருத்தப்பட வேண்டியிருக்கும். அரிதினும் அரிதாக ஒரு அதிர்ஷ்ட அலையில் பயணிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எதற்கு இடைநிறுத்த வேண்டும்?
அடுத்த வருடத்தில் பங்குகளின் விலை நான்கு ரூபாயைத் தொடுகிறது. தம்பதியருக்கு அப்போதும் அதன் பங்குகளை விற்க மனமில்லை. நிறுவனத்தின் அடிப்படை முன்னேற்றம் கண்டால் அதன் விலை மீண்டும் எட்டு ரூபாயைத் தொடலாம்.
கடைசியில் அவர்கள் அதனை 75 காசு என்ற விலையில் விற்கிறார்கள்.
நிகழ்தகவு விதிகளின் படி அதிர்ஷ்டத்தின் அலை பெரும்பாலும் சிறியதாகவே இருக்கும். எப்போதாவது தான் அது பெரிய அலையாக மாறும்.
காசு சுண்டும் ஒரு நிகழ்வை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 1024 முறை காசு சுண்டும் போது தொடர்ந்தவாக்கில் ஒன்பது முறை தலை வருவதற்கான நிகழ்தகவு ஒன்று மட்டுமே. அதே சமயம் தொடர்ந்தவாக்கில் நான்கு முறை தலை வருவதற்கான நிகழ்தகவு 32 முறை. ஆக, நான்கு முறை தலை வருகையில் அதற்குத் தலை வணங்கி ஆட்டத்தை நிறுத்திக் கொள்வது தான் முறையான ஒன்றாக இருக்கும்.
அபூர்வமாக, சில சமயங்களில் மட்டுமே ஒன்பது முறை தலை வருவதற்கான வாய்ப்பு இருக்கும் போது இலாபத்தை இடை வெட்டல் மட்டுமே சரியாக இருக்கும்.
நாம் இலாபத்தைப் பிடித்து ஆட்டத்தை நிறுத்திய பிறகும் சில முறை தலை தொடர்ந்து வரக்கூடிய நிகழ்வுகளையும் மறுப்பதற்கில்லை.
ஒருமுறை சூதாட்ட நிலையம் ஒன்றில் 28 முறை தலை தொடர்ந்து வந்தது. நிகழ்தகவு விதிகளின் படி இவ்வாறு 28 முறை தலை வருவதற்கான வாய்ப்பு 268 மில்லியனில் ஒன்று மட்டுமே. அவ்வளவு நீண்ட ஆட்டத்தை ஆடுவதற்கு நம் கையில் பணமும் இருக்காது. ஆயுளும் இருக்காது.
சூதாட்ட நிலையங்கள் இந்த மாதிரி அரிதினும் அரிதான நிகழ்வுகளை விளம்பரப்படுத்தும் செயல்களில் ஈடுபடும். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக ஆடுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் ஜெயிக்க முடியும்.
நீங்கள் பத்து ரூபாயைப் பந்தயம் கட்டி அது 28 முறை இரட்டிப்பானால் சூதாட்ட நிலையம் உங்களுக்கு 1.5 பில்லியன் ரூபாய் தர வேண்டியிருக்கும். எந்த சூதாட்ட நிலையத்தின் நிகர சொத்து மதிப்பும் அந்த அளவுக்கு இருக்காது. மேலும், சூதாட்ட நிலையங்கள் வெற்றிப் பணத்திற்கு உச்சபட்ச மதிப்பைக் கட்டமைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
இந்த விதிமுறை பங்குகளைக் குறுகிய கால அளவில் வாங்கி விற்று வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். அடிப்படைப் பகுப்பாய்வை மேற்கொண்டு மதிப்பு முதலீடாக காலப் பன்மயமாக்க முறையில் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பகுதி முதலாளியாக தன்னை உணர்பவர்களுக்கு இந்த விதிமுறை செல்லாது.
(Inspiration from the book, How to get lucky by Max Gunther)
Comments
Post a Comment