அருமைப்பாடு சாய்வு
அருமைப்பாடு சாய்வு
Scarcity Bias
சாதாரண பொருட்களுக்கு அசாதாரணமான காலங்களில் ஏற்படும் செயற்கையான தட்டுப்பாடு அருமைப்பாடு சாய்வு (Scarcity Bias) என்பதாக அழைக்கப்படுகிறது .
கோவிட் 19 நோய்த் தொற்றின் போது முகக் கவசத்திற்கான தேவைப்பாடு (demand) மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளானது . ஆனால் அளிப்பு (supply) குறைவாக இருந்தது . விளைவாக அதன் விலை நாளும் அதிகரித்த வண்ணம் இருந்தது . இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது முகக்கவசம் கிடைத்தற்கரிய பொருள் ஒன்றும் அல்ல . அந்தக் காலகட்டத்தில் அதற்கான தேவை அதிகமாக இருந்தது . Panic buying என்ற அடிப்படையில் மக்களும் முகக் கவசத்தினைப் போட்டி போட்டு வாங்கி அதற்கான அருமைப்பாட்டை உயர்த்திய வண்ணம் இருந்தனர் .
சில பருவங்களில் சில காய்கனிகள் விளையாது . அல்லது வரத்து குறைவாக இருக்கும் . அப்போது அவற்றின் விலைகள் அருமைப்பாடு சாய்வுக்கு உள்ளாகும் . உழவர் சந்தையில் ஒரேயொருவரிடம் தான் முருங்கைக்காய் இருக்கிறதென்றால் அவர் வைத்தது தான் விலை .
நிறுவனங்கள் செயற்கையாக ஒரு பொருளுக்கு அல்லது சேவைக்கான அருமைப்பாட்டை உயர்த்தும் செயல்களில் ஈடுபடும் . இன்றே கடைசி , முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை , குறைந்த கால சலுகை என்று அறிவித்தால் , அருமைப்பாடு சாய்வை அவை கையில் எடுத்திருப்பதாக அர்த்தம் .
பங்குச்சந்தையில் இந்த அருமைப்பாடு சாய்வின் தாக்கம் எத்தகையதாக இருக்கும் ?
இந்தியாவில் இரண்டு பங்குச்சந்தைகள் மட்டுமே இயங்குகின்றன . ஒன்று மும்பை பங்குச்சந்தை . இன்னொன்று தேசிய பங்குச்சந்தை . இதில் மும்பை பங்குச்சந்தை மட்டும் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது . இருமை முற்றுரிமை (Duopoly) என்ற அடிப்படையில் இரண்டு பங்குச்சந்தைகள் மட்டுமே எப்போதும் நம் நாட்டில் செயல்படும் . இந்த இரண்டிலும் தேசிய பங்குச்சந்தை சந்தையில் இன்னும் பட்டியலிடப்படவில்லை . ஆக , மும்பை பங்குச்சந்தை அருமைப்பாடு உயர் மதிப்பு (Scarcity Premium) என்ற கணக்கில் அதி மதிப்பில் வர்த்தகமாகிறது . அதே மாதிரி பங்கு வைப்பகம் மற்றும் காப்பக நிறுவனமான CDSL ம் அருமைப்பாடாக வர்த்தகமாகிறது . இந்தியாவின் ஒரே பொருள் சந்தையான MCX ம் இந்த வகையில் வருகிறது .
இயற்கை மற்றும் செயற்கை வைரங்களைத் தர மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் , உலகளவில் , மூன்றே மூன்று மட்டும் உள்ளன . இந்த மூன்று நிறுவனங்களில் International Gemological Institute மட்டும் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது . இந்த மாதிரி வைரங்களில் முதலீட்டை மேற்கொள்வது அருமைப்பாடு உயர் மதிப்பு முதலீடு (Scarcity Premium Investing) என்பதாக அழைக்கப்படுகிறது . இது அகழி முதலீட்டின் (Moat Investing) அரிய ஒரு வகையாகும் .
இம்மாதிரி அசாதாரணமான நிறுவனங்களுக்கு இயற்கையாக ஏற்படும் தட்டுப்பாட்டை ஒரு முதலீட்டு உத்தியாகவும் பயன்படுத்தலாம் .
மற்றபடி பொருள் வகைகளை வாங்க இன்றே கடைசி என்று யாராவது உங்களை விரைவுபடுத்தினால் நிதானம் காக்க வேண்டுகிறேன் .
Comments
Post a Comment