பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி?

பன்மடங்காளர்களைப் பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி?

பன்மடங்காளர்களை (Multibaggers) பல்லாண்டுகள் வைத்திருப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன் பன்மடங்காளர்கள் என்பதை முதலில் வரையறுத்து விடலாம்.


பன்மடங்காளர் என்பது இரண்டு மடங்கு கூடிய பங்கு என்பதான ஒரு எண்ணப்போக்கு நிலவுகிறது. பன்மடங்காளர் என்று ஒரு பங்கைக் குறிப்பிட வேண்டுமென்றால் அவை குறைந்தபட்சம் நீங்கள் வாங்கிய விலையிலிருந்து 100 மடங்கு கூட வேண்டும்.


100 மடங்கு என்பது எட்டாத ஒரு உயரம் போல் தோன்றினாலும் 100 மடங்காளர் என்பது தொடர்ந்தவாக்கிலான இரண்டு 10 மடங்காளர் மட்டுமே. 10 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் அது 100 ரூபாய் ஆகி விடும். இந்த 100 ரூபாய் பங்கு 10 மடங்கு கூடினால் 1000 ரூபாய் ஆகி விடும். 


100 மடங்கு கூடும் வரை ஒரு பங்கை வைத்திருப்பது மட்டும் தான் இந்தப் பன்மடங்காளர் பயணத்தின் கடினமான ஒரு பகுதி. 100 மடங்காளர் ஆகி விட்டால் பின்னர் தன்னளவில் அது வேகமெடுக்கத் தொடங்கி விடும். மேலும் இந்தப் பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) இந்தப் பங்குகளை விற்காமல் உங்களைக் காக்கும் அரணாக இருக்கும். 


நிறுவனப்பங்கு 20 சதவீத CAGR என்ற அளவில் வளர்ந்து வருவதாகக் கொண்டால் அது 100 மடங்காளர் ஆக 25 ஆண்டுகள் ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில் அது 240 மடங்காளர் ஆகி விடும். ஆக பங்குகளை இனங்கண்டு முதலீடு செய்வது ஒன்று. பொறுமை காத்தல் மற்றொன்று.


Infosys பங்கு இன்றைய தேதியில் அதன் IPO விலிருந்து 14260 மடங்காளர். அதன் பங்குகள் 14260 மடங்கு கூட 33 நீண்ட நெடிய ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 14260 மடங்கு கூடினால் அவை தரும் பங்கு ஈட்டு விகிதமும் பன்மடங்காளர் ஆகி விடும். IPO வில் வாங்கப்பட்ட Infosys நிறுவனப் பங்குகளின் தற்போதைய பங்கு ஈட்டு விகிதம் 46349 சதவீதம். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பங்கு ஈட்டு விகிதங்களின் இந்தக் கூடுதல் தான் பங்குகளின் விலையேற்றத்திற்கான அடிப்படையான ஒரு காரணமாகும். 


பன்மடங்காளர் என்பதை பங்குகளின் விலையைக் கொண்டு கணக்கிடுகிறோம். உதாரணமாக 100 Infosys பங்குகளின் விலை 33 ஆண்டுகளின் முன்னர் 9500 ரூபாய். இந்த 100 பங்குகள் அதன் இலவசப் பங்களிப்பு மற்றும் பங்குப் பிரிப்பின் பின்னர் 102400 பங்குகளாக வளர்ந்திருக்கும். இந்தப் பங்குகளின் தற்போதைய விலை 13,54,75,200 ரூபாய். இதனை 9500 ரூபாயால் வகுத்தால் 14260 வருகிறது. ஆக Infosys பங்கு 14260 மடங்காளர். இதனைப் பங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டும் கணக்கிடலாம். 1993 ஆம் ஆண்டின் 100 பங்குகள் தற்போது 102400 பங்குகள் ஆகியிருக்கிறது. பங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு சொல்வதானால் Infosys பங்கு 1024 மடங்காளர்.


இது ஒரு பழைமைவாத (conservative) கணக்கீட்டு முறையாகத் தோன்றினாலும் இதில் சில அனுகூலங்கள் இருக்கின்றன. விலையைக் கொண்டு கணக்கிட்டால் நாம் 14260 மடங்கு என்கிற ஒரு இமாலய இலக்கை எட்டி விட்டது போல் தோன்றுகிறது. ஆனால் பங்குகளின் எண்ணிக்கையிலான கணக்கீடு அதனை 14 மடங்கு குறைவான வெளிச்சத்தில் காட்டுகிறது. இவ்வாறான பார்வை அத்தகைய பங்குகளை இன்னும் நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதற்கான மனப்பாங்கிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதாக இருக்கும். 


Asian Paints பங்கு அதன் முதல் பொது வெளியீட்டிலிருந்து இன்றைய தேதி வரையிலான கணக்கீட்டின் படி 19216 மடங்காளர். பங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு அது 184 மடங்காளர்.


ITC பங்கு அதன் முதல் பொது வெளியீட்டிலிருந்து இன்றைய தேதி வரையிலான கணக்கீட்டின் படி 8702 மடங்காளர். பங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு அது 413 மடங்காளர்.


Infosys கதையெல்லாம் இருக்கட்டும், உங்கள் கதை என்ன என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ICICI Bank எனது 202 மடங்காளர். பங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு அது 5 மடங்காளர். V Guard எனது 107 மடங்காளர். பங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு அது 14 மடங்காளர்.


Infosys பங்கை இன்றைய தேதியில் ரூபாய் 1323 க்கு ஒருவர் வாங்குவதாகக் கொள்ளலாம். இந்தப் பங்கு ரூபாய் 2646 ஐ எட்டினால் அவருக்கு அது ஒரு மடங்காளர். ஒரு மடங்காளர் ஆக அது 1323 ரூபாய் கூட வேண்டும். Infosys பங்கை அதன் IPO விலிருந்து வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு வெறும் பத்து காசு கூடினால் அது ஒரு மடங்காளர் ஆகி விடும். பத்து காசு கூட இல்லை, இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அது 0.092 காசுகள் (பங்குகளின் அடக்க விலைக்கான இந்த சமன்பாடு IPO price÷ No of shares) ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் Infosys பங்கு அதன் இன்றைய விலையான 1323 ரூபாயிலிருந்து 2646 ரூபாய் ஆகி விட்டதாகக் கொள்ளலாம். IPO முதலீட்டாளரின் 14260 மடங்காளர் இப்போது 28520 மடங்காளர் ஆகி விடும். Compound interest is back loaded. கூட்டு வட்டி பின்னாட்களில் தான் பலன் தரும் என்பதற்கான சிகர உதாரணம். 


இவ்வாறாக, பன்மடங்காளர்களை நூறு மடங்கு கூடக்கூடிய பங்குகளாக வரையறுத்தல், ஆண்டாண்டு அதிகரித்து வரும் அவற்றின் பங்கு ஈட்டு விகிதத்திலும் ஆண்டாண்டு குறைந்து வரும் அவற்றின் அடக்க விலையிலும் கவனத்தைக் குவித்தல், பங்குகளின் விலையில் அல்லாது அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு பன்மடங்காளர்களைக் கணக்கிடுதல் போன்றவை முதலீட்டாளர்களின் பன்மடங்காளர் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும்.


அடுத்த முறை YouTube ல் பன்மடங்காளர் என்பது இரண்டு மடங்காளர் என்று யாராவது சொன்னால் லேசாக புன்னகைக்க வேண்டுகிறேன்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14