கட்டமைப்பு விளைவு

கட்டமைப்பு விளைவு

Framing Effect 


பரஸ்பர நிதி ஒன்றின் விளம்பர வாசகம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது. 


70 சதவீதம் மிகை வருமானத்தைக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு ...


இன்னொரு நிதியின் விளம்பரம் கீழ்க்கண்டவாறு உள்ளது.


30 சதவீதம் குறை வருமானத்தைக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு ...


எந்த நிதியில் நீங்கள் முதலீடு செய்வீர்கள்?


பெரும்பாலோனோர் முதல் நிதியில் முதலீட்டை மேற்கொள்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 


இரண்டு நிதிகளும் ஒரே தகவலைத் தான் தெரிவிக்கின்றன. 


ஆனால் அவை வார்த்தைகளை அமைக்கும் கட்டமைப்பு மாறுகிறது.


முதல் நிதி இலாபத்தை முன்னிறுத்துகிறது.


இரண்டாவது நிதி இழப்பை முன்னிறுத்துகிறது.


100 சதவீதம் இலாபம் அடையப் பெறுவதும் 100 சதவீதம் நஷ்டம் அடையப் பெறுவதும் ஒன்றல்ல. இது நஷ்டம் உவர்ப்பு சாய்வு (Loss aversion bias) என்பதாக அழைக்கப்படும்.


எனவே இழப்பை மட்டுமல்ல, இழப்பை முன்னிறுத்தும் நிதியில் கூட நாம் முதலீடு செய்யத் துணிவதில்லை. 


இலாபத்தையே நாம் எப்போதும் விரும்புகிறோம்.


இவ்வாறு அடிப்படையான உண்மைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட வார்த்தைகளைக் கவனமாகக் கட்டமைப்பதன் மூலமாக மாந்தர்கள் அதனை உணரும் விதம் மற்றும் அவர்கள் முடிவெடுக்கும் முறையில் சாதகமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் கட்டமைப்பு விளைவு (Framing Effect) என்று அழைக்கப்படுகிறது. 


வார்த்தைகளை அமைப்பதில் மட்டுமல்ல, எண்கள் மூலமாக விவரங்களைத் தெரிவிப்பதும், கட்டமைப்பு விளைவில் கவனம் பெறுகிறது. TV ஒன்றின் விலை 50000 ரூபாய் என்று கொள்ளலாம். அதற்கான தள்ளுபடி விளம்பரம் ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.


50000 ரூபாய் TVக்கு 10000 ரூபாய் தள்ளுபடி.


இன்னொரு விளம்பரம் பின்வருமாறு உள்ளது.


50000 ரூபாய் TV க்கு 20 சதவீதம் தள்ளுபடி.


இரண்டு விளம்பரங்களும் ஒரே விஷயத்தைத் தான் கூறுகின்றன. 


ஆனால் முதல் விளம்பரம் TV ன் விற்பனைக்குப் பெருமளவில் உதவுகிறது.


பெரிய எண்! பெரிய தள்ளுபடி!?


சூதாட்ட செயலிகளில் 100 ரூபாய் பணம் கட்டி 80 ரூபாய் பெற்றால், நீங்கள் 80 ரூபாய் வெற்றி பெற்றுள்ளதாக அவை காட்டும். ஆனால் உண்மையில் நீங்கள் 20 ரூபாயை இழந்திருக்கிறீர்கள்.


வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனம் 1964 லிருந்து 2024 வரை 5502284 சதவீத வருமானம் கொடுத்திருக்கிறது. இது காலத்தைக் கணக்கில் கொள்ளாத முழுமையான வருமானம் (absolute return) இதற்கான காலத்தைக் கணக்கில் கொண்ட ஆண்டாண்டு வருமானம் (annualised return) 20 சதவீதம் வருகிறது. ஆண்டாண்டுக் கணக்கீடு வாரனின் வருமானத்தைக் குறை வெளிச்சத்தில் காட்டுகிறது. ஆனால் ஆண்டாண்டுக் கணக்கு மட்டுமே சரியான கணக்கு.


எங்கள் பாட்டனார் 1966 ல் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிய நிலத்தின் இன்றைய மதிப்பு ஒரு கோடி என்று யாராவது சொன்னால் அதற்கு மேற்குறிப்பிட்ட CAGR கணக்கைப் போட்டுப் பாருங்கள் (12.2%)


அதே மாதிரி தங்கத்தின் விலை இன்று நாளும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. ஆனால் நீண்ட கால அளவில் அதன் CAGR பணவீக்கத்தை ஒட்டியதாகவே இருக்கும்.


காப்பீட்டு உதாரணம் ஒன்றையும் பார்த்து விடுவோம்.


முதல் வகைக் காப்பீடு term insurance, அதாவது வரையறுக்கப்பட்ட காப்பீடு வகையைச் சார்ந்தது. இந்த வகையான காப்பீடுகளை எடுத்துக்கொண்டு நீங்கள் இறந்தால் காப்பீட்டுப் பணம் உங்கள் வாரிசுதாரருக்குக் கிடைக்கும். உயிரோடிருந்தால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது.


இரண்டாவது வகை endowment, அதாவது மேலதிக காப்பீடு வகையைச் சார்ந்தது. இந்த வகையான காப்பீடுகளை எடுத்துக்கொண்டு நீங்கள் இறந்தால் காப்பீட்டுப் பணம் உங்கள் வாரிசுதாரருக்குக் கிடைக்கும். உயிரோடிருந்தால் நீங்கள் காப்பீடாக எடுத்துக்கொண்ட பணத்துடன் நிறுவனம் அளிக்கும் bonus பணமும் சேர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.


இந்த இரண்டு வகையான காப்பீடுகளில் எந்த வகையான காப்பீட்டை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள்?


பெரும்பாலோனோர் இரண்டாவது வகை காப்பீடுகளை எடுத்துக் கொள்வர் என்பது தெளிவு.


முதல் வகைக் காப்பீடு, இழப்பை முன்னிறுத்துகிறது. உயிரோடிருந்தால் அதில் ஒன்றும் கிடைக்காது.


இரண்டாம் வகைக் காப்பீடு இழப்புடன் ஒரு அளிப்பையும் முன்னிறுத்துகிறது. 


எனில், இரண்டாம் வகைக் காப்பீடு தானே சிறந்தது?


அது அவ்வாறு தானா?


காப்பீட்டின் பொருட்டு மட்டுமே காப்பீடுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலீட்டின் பொருட்டுக் காப்பீடுகளை எடுக்கக்கூடாது. முதலீட்டின் பொருட்டுக் காப்பீடுகளை எடுத்துக் கொண்டால் அதன் மூலமான வருமானம் குறைவாகவே கிடைக்கும்.


வரையறுக்கப்பட்ட காப்பீடுகளில் bonus பணம் எதுவும் வழங்கப்படாமையால் அதற்கான முனைமத்தொகை (premium) குறைவாகவேயிருக்கும். 


மேலதிக (endowment) காப்பீடுகளில், bonus வழங்கப்படுவதால் முனைமத்தொகை அதிகமாக இருக்கும்.


காப்பீடுகளைப் பொறுத்தவரை under insurance என்பதை ஒரு இடர்ப்பாடு (risk) என்ற வகையில் பார்க்கலாம். Human life value என்று சொல்லப்படும் மனித வாழ்க்கை மதிப்பை சரியாகக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு காப்பீடுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் வரையறுக்கப்பட்ட காப்பீடுகளுக்கான முனைமத்தொகை குறைவாக இருப்பதால் தேவையான அளவில் காப்பீட்டை எடுத்துக்கொள்ள ஏதுவாகும்.


மேலும், காப்பீடு என்ற வார்த்தையே இறப்பு என்ற ஒரு இழப்பை முன்னிறுத்துவதால் நிறையப்பேர் அது குறித்த சிந்தனையைத் தவிர்க்கவே முனைவார்கள். காப்பீடுகளை யாரும் வாங்குவதில்லை. காப்பீடுகள் விற்க மட்டுமே படுகின்றன. 


காப்பீடு குறித்த சிந்தனையும் எந்தக் காப்பீட்டை எடுப்பது என்ற புரிதலும் அவசியமான ஒரு தேவையாகும். இன்னும் சொல்லப்போனால் முதலீடுகளுக்கு முன்பு காப்பீடுகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


சமீபத்தில் ஒரு நிறுவனம் 7000 சதவீதம் பங்காதாயம் (dividend) என்று அறிவித்ததைச் சமூக ஊடகங்கள் கொண்டாடிய வண்ணமாக இருந்தன. இந்த 7000 சதவீதம் என்பது அதன் பங்குகளை முக மதிப்பில் வாங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது இதன் பங்குகளை வாங்குபவர்களுக்கு 1.23 சதவீத பங்காதாயம் மட்டுமே கிடைக்கும்.


அதே மாதிரி பங்குகளின் விலை என்ற கட்டமைப்பைக் கொண்டு நாம் எந்த முதலீட்டு முடிவையும் எடுக்க முடியாது. Price earning multiple என்று சொல்லப்படும் அதன் விலை வருவாய் விகிதத்தைக் கொண்டு மட்டுமே ஒரு பங்கில் முதலீடு செய்யும் முடிவை எடுக்க முடியும். அந்த வகையில் பத்தாயிரம் என்ற விலையில் ஒரு பங்கின் விலை மலிவாகவும் பத்து ரூபாய் என்ற விலையில் ஒரு பங்கின் விலை அதிகமாகவும் இருக்கலாம்.


இவ்வாறு கட்டமைப்பு விளைவில் கவனம் கொள்ளுங்கள். அது முதலீட்டு வாழ்க்கையில் உங்களைப் பல படிகள் முன்னிறுத்துவதாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14