விதம் விதமான பங்குகள்

விதம் விதமான பங்குகள்

ஒரு பங்கின் முக மதிப்பு 1 ரூபாய் . பங்கு 1 ரூபாய் என்ற முக மதிப்பிற்கே வெளியிடப்படுகிறது . பங்கு வெளியிடப்பட்டதிலிருந்து 90 பைசா , 80 , 70 ... என்றவாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக விலை குறைந்த வண்ணம் இருக்கிறது . மேலும் பங்காதாயம் என்று ஒரு பைசா கூட வழங்கவில்லை . கடைசியாக அதன் மதிப்பு ஒரு பைசா என்ற அளவில் பைசா பங்கு (Paisa Stock) ஆகி விட்டது . ஆனாலும் ஒரு சிலர் இன்னமும் 'பணம்' என்று அழைக்கப்படும் இந்தப் பங்கில் முதலீடு செய்தவண்ணம் இருக்கிறார்கள் . ரூபாய் பங்கை நான்கு தட்டுகள் கொண்ட அலமாரி முழுவதும் ஒருவர் அடுக்கி வைத்திருக்கிறார் என்று கொள்ளலாம் . அதிலிருந்து அவர் ஒரு பைசா கூட எடுத்துச் செலவழிக்கவில்லை என்பதாகவும் கொள்ளலாம் . காலப்போக்கில் அந்த அலமாரி முழுவதுமான அவரது பங்கு ஒரு தட்டின் மேலே ஹிண்டு பேப்பரை விரித்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு மட்டுமே இருக்கும் .

இன்னொரு பங்கைப் பார்க்கலாம் . முன்னதற்கு இது கொஞ்சம் பரவாயில்லை . பங்காதாயம் என்று வருடத்திற்கு 2.75 சதவீதம் மட்டும் வழங்குகிறது . இதற்கு வருமான வரியும் உண்டு . பங்கின் விலை 100 , 90 , 80 ... என்று குறைந்த வண்ணமாகவே இருக்கிறது . இது வங்கி சேமிப்புக் கணக்கு . காலப்போக்கில் இது அலமாரியின் இரண்டு தட்டாகச் சுருங்கி விடும் .

அடுத்த பங்கு . இது இன்னும் கொஞ்சம் பரவாயில்லை இரகம் . வருடத்திற்கு 6 சதவீதம் பங்காதாயம் தருகிறது . இந்த 6 சதவீத பங்காதாயத்திற்கு வருமான வரி கட்ட வேண்டும் . பங்கின் விலையும் குறைந்த வண்ணமே உள்ளது . இது வங்கி நிரந்தர வைப்பு முதலீட்டுக் கணக்கு . இது கால வெள்ளத்தில் அலமாரியின் மூன்று தட்டு என்ற அளவில் இருக்கும் .

மற்றுமொரு பங்கை தங்கமான பங்கு என்பதாகச் சொல்கிறார்கள் . இது பணவீக்கத்தை ஒட்டியே வருமானத்தை அளிக்கும் . வருமானத்தைப் பங்காதாய வடிவில் அளிக்காது . மாறாக இந்தத் தங்கமான பங்கை விற்றுத் தான் நீங்கள் அதன் மதிப்பைக் கைப்பற்ற முடியும் . மேலும் இந்தப் பங்கு தீவிரவாதத் தாக்குதல் மற்றும் கிருமித் தாக்குதல் போன்ற சமயங்களில் மட்டும் கூடிய வண்ணமாக இருக்கும் .
நீங்கள் இந்தப் பங்கை அணிந்து மகிழலாம் . இது அலமாரி அளவிலேயே இருக்கும் .

பிறிதொரு பங்கு இருக்கிறது . இந்தப் பங்கை நீங்கள் இலட்சங்களில் தான் வாங்க முடியும் . இதுவும் பங்காதாயம் என்று எதனையும் வழங்காது . மேலும் இதன் விலையும் மறைபொருளாக இருக்கும் . ஒரே மாதிரி பங்குகள் கூட ஒரே நேரத்தில் வெவ்வேறு விலையில் வர்த்தகமாகும் . தரகுக் கட்டணமும் ஆளாளுக்கு மாறுபடும் . இந்தப் பங்கு நல்ல படியாக இருக்கிறதா என்று நீங்கள் அடிக்கடி நேரில் சென்று பார்த்துக் கொள்ள வேண்டும் . சில சமயங்களில் நீங்கள் இந்தப் பங்கை வேலியிட்டும் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை வரும் . தங்கமான பங்கு மாதிரி இந்தப் பங்கையும் விற்றுத் தான் இலாபம் ஈட்ட முடியும் . தங்கமான பங்கையாவது சிறிய சிறிய அளவுகளில் விற்கலாம் . இந்தப் பங்கை நீங்கள் மொத்தமாகத் தான் விற்க முடியும் . விற்கும் போது வரி கட்ட வேண்டும் . இந்தப் பங்கில் நீங்கள் உட்காரலாம் . காலாற நடக்கலாம் . ஓடியாடி விளையாடலாம் . இது நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தை விட ஒன்றிரண்டு சதவீதம் கூடுதலான வருமானம் கொடுக்க வல்லது . அலமாரியின் ஒரு தட்டைத் தூக்கினால்  இரகசிய அறை ஒன்று இருக்கிறது பாருங்கள் , அந்த அளவில் இந்தப் பங்கு வளர்ந்திருக்கும் .

கடைசியாக நிறுவனப் பங்குகள் . இந்தப் பங்குகள் பணவீக்கத்தைப் பன்மடங்கு விஞ்சும் வகையில் வருமானத்தைக் கொடுக்கவல்லவை . வருமானம் பங்காதாய வடிவிலும் மற்றும் முதலீட்டுப் பெருக்கத்தின் மூலமாகவும் கிடைக்கப்பெறும் . விலையில் ஒளிவு மறைவற்ற தன்மை , குறைந்த தரகு , உடனடி நீர்மை நிறைத் தன்மை (liquidity) என்று இவைகளின் அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம் . இந்தப் பங்குகளை நீங்கள் இலட்சங்களில் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை . குறைந்த பணத்தை முதலீடு செய்தாலே போதுமானது . மேலும் சிறிய அளவு பணத்தைத் தொடர்ச்சியாக முதலீடு செய்வது ஒரு கேந்திரமான முதலீட்டு உத்தியாகப் பார்க்கப்படுகிறது . நீங்கள் பங்குகளை விற்றுத் தான் முதலீட்டு வருமானத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை . பங்காதாய வடிவில் பணப்பாய்ச்சல் நிகழ்ந்த வண்ணமாக இருக்கும் . பங்காதாயம் வருடாவருடம் அதிகரித்த வண்ணமாக இருக்கும் . இந்த உயர்ந்து வரும் பங்காதாயத்தைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் விலையும் உயர்ந்த வண்ணமாகவே இருக்கும் . மற்ற முதலீடுகளை விட நிறுவனப் பங்குகள் அதிகமான வருமானத்தைக் கொடுப்பதற்கான ஒரு முக்கியமான காரணம் மற்ற முதலீடுகளில் நீங்கள் loaner . அதாவது கடன் கொடுப்பவர் . கடனுக்கான வட்டி வருமானத்தை மட்டுமே நீங்கள் பெற முடியும் . பங்குகளில் நீங்கள் Owner . கடன் பெறுபவர் என்பதாக அர்த்தம் . கடனுக்கான வட்டியைச் செலுத்தி விட்டால் மீதி வருமானம் முழுவதும் உங்களுடையது . பங்கு சார் முதலுக்கு (Equity Capital) நீங்கள் வட்டி கட்ட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை . உடனடி பணத்தேவை என்றால் தேவையான பங்குகளை மட்டும் விற்றுப் பணம் பெறலாம் . தேவையில்லையென்றால் அப்படியே விட்டு வைக்கலாம் . மேலும் பங்காதாயத்தை மறு முதலீடு செய்யலாம் . இந்த மறு முதலீட்டுப் பங்குகளும் பங்காதாயத்தை வழங்கிய வண்ணமாக இருக்கும் . அவைகளை மீண்டும் மறு முதலீடு ... உங்களுக்கு இந்தக் கணக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் .

மனித வாழ்க்கை ஒரு அளவுக்கு உட்பட்டது . நிறுவனங்களுக்கு அவ்விதமான காலக்கெடு எதுவும் கிடையாது . ITC, Britannia போன்றவை 100 வருட இளமையான நிறுவனங்கள் (100 year young) நீங்கள் ஒரு இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு இந்த முதலீடுகளைக் கொண்டு சென்றால் அதன் மதிப்புப் பெருக்க சாத்தியக்கூறுகளைச் சற்றே யோசித்துப் பாருங்கள் . அவை உங்கள் தலைமுறையில் எத்தகைய மாற்றங்களை நிகழ்த்தும் ? எவ்வளவு உயரங்களுக்கு அவர்களைக் கொண்டு செல்லும் ?

அலமாரிக் கணக்கை மறந்து விட்டோம் ? சராசரியான நிறுவனப் பங்குகள் என்றால் இரண்டு அலமாரி , HDFC வங்கி மாதிரியான பங்குகள் என்றால் நான்கு அலமாரிகளுக்கும் மேல் .

ஆனால் இந்தப் பங்கு முதலீட்டில் ஒரேயொரு சின்னப்பிரச்னை உள்ளது . நான்கு அலமாரி திடுதிப்பென்று இரண்டு அலமாரியாகி விடும் . COVID 19 காலங்களில் திடுதிப்பென்று இரண்டு தட்டாகக் கூடச் சுருங்கி விடும் . உண்மையிலேயே எத்தனை அலமாரி (Intrinsic Value) என்பதை மனக் கண்ணின் மூலமாக மட்டுமே காண முடியும் . குறுகிய கால அளவில் அலமாரிகள் கூடிக் குறைந்த வண்ணம் இருந்தாலும் நாளடைவில் உண்மையான அலமாரியின் அளவு கட்புலனாகும் .

பணம் , வங்கி சேமிப்புக் கணக்கு , நிரந்தர வைப்பு நிதி , தங்கம் மற்றும் நிலம் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என்று சொல்ல வரவில்லை . ஓரளவு பணத்தைக்  கையிருப்பாகவும் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கிலும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் . உங்கள் சேமிப்புத் தொகுப்பில் வங்கி நிரந்தர முதலீடுகள் மற்றும் தங்கத்திற்குமாக ஒரு நிரந்தர இடம் உண்டு . Home is where the heart is என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது மாதிரி எங்கு இல்லம் இருக்கிறதோ அங்கு தான் நம் இதயமும் இருக்கும் . ஆனால் நம் அனைத்து முதலீடுகளையும் இவைகளில் மட்டும் முதலீடு செய்வது அறிவுடைமையாகாது . பங்குகள் குறித்து புரிந்து தெளிந்து முதலீடு செய்யுங்கள் . உங்கள் நிதி விடுதலைக்கான சாவி பங்குகளில் மட்டுமே உள்ளது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்