தங்கத்தில் முதலீடு
தங்கத்தில் முதலீடு
அண்மையில் தங்கத்தின் விலை திடுதிப்பென்று அதிகரித்த போது வழக்கம் போல் தங்க ETF ( Exchange Traded Fund) கொள்முதல் (purchase) அதிகரித்ததாகத் தகவல். தங்கத்தின் விலை குறைந்ததும் மறு கொள்முதல் (repurchase) அதிகரிக்கும். இது buy low sell high என்ற தாரக மந்திரத்திற்கு எதிரானது. இவ்வாறாக தங்கத்தில் தவறான முறையில் முதலீடு செய்வது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கும் முதலாக தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு விவேகமான முடிவு தானா?
தங்கத்தை ஒரு store of value என்ற அடிப்படையில் தான் அணுக வேண்டும். தமிழில் சொல்வதென்றால் தங்கம், மதிப்பைத் தக்க வைக்கும் தன்மை படைத்தது. ஆனால் மதிப்புப் பெருக்கம் அடையாது. நீண்ட கால நோக்கில் தங்கம் பணவீக்கத்தை சமன் செய்ய வல்லது. மற்றபடி பணவீக்கத்தை விஞ்சிய வருமானம் கொடுக்காது.
மதிப்புப் பெருக்கம் மற்றும் வருமானத்திற்கு நிறுவனப் பங்குகளைத் தான் நாம் சார்ந்திருக்க வேண்டும். பங்குகள் மாதிரி தங்கம் பங்காதாயம் வழங்காது. நாம் தங்கத்தை விற்றுத் தான் வருமானத்தைப் பெற முடியும். ஒரு நல்ல முதலீட்டின் கல்யாண குணம் என்னவென்றால் நீங்கள் உங்கள் சுட்டு விரலைக் கூட அசைக்காமல் வருமானத்தைப் பெற வேண்டும். ஒரு முதலீட்டை முழுவதுமாக விற்றுத் தான் நீங்கள் வருமானம் ஈட்ட முடியும் என்றால் அது ஒரு சிறந்த முதலீடு அல்ல.
மற்றபடி தங்கத்திற்கு என்று சில தனிப்பட்ட குணநலன்கள் இருக்கின்றன. தங்கம் துருப்பிடிக்காது. குறைந்த அளவில் மிகுந்த மதிப்பைத் தக்க வைக்கும் வல்லமை பெற்றது. நெகிழ்மைத் தன்மை உடையதாக இருப்பதால் தேவைக்கேற்ற வடிவில் அடித்துக் கொள்ளலாம். தங்கம் ஆக்ஸிஜனேற்றம் அடையாது. அதனால் தான் அது உன்னத உலோகம் (noble metal) என்று அழைக்கப்படுகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக தங்கத்திற்கு என்று ஒரு அழகியல் மதிப்பு (aesthetic value) இருக்கிறது. உலகின் எல்லா மொழிகளிலும் தங்கம் என்பது ஒரு உயரிய சொல்லாக மதிக்கப்படுகிறது. குழந்தைகளை நாம் 'தங்கமே' என்று தானே கொஞ்சுகிறோம்? கச்சா எண்ணெய் கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. பருத்தி, வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது.
மதிப்பு முதலீட்டு குரு வாரன் பஃபெட்டின் தங்கம் குறித்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. தங்கம் ஏதோ ஒரு சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்டு உருக்கப்படுகிறது. பின்னர் ஏதோ ஒரு மத்திய வங்கியின் நிலவறையில் பத்திரப்படுத்தப்பட்டு பாதுகாவலர்களால் பாதுகாக்கப்படுகிறது. தங்கத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் எந்தப் பயன்பாடும் இல்லை. செவ்வாய்க் கிரகத்திலிருந்து யாராவது வந்து நாம் இவ்வாறு செய்வதைப் பார்த்தால் கட்டாயம் தலையைப் பிராண்டிக் கொள்வார்கள் . உலகம் முழுவதும் நாளது தேதி வரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 170000 மெட்ரிக் டன்கள். ஒரு அவுன்ஸ் தங்கம் 1750 டாலர் என்பதாகக் கொண்டால் அதன் மதிப்பு 9.6 டிரில்லியன் டாலர்கள். இந்த 9.6 டிரில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவில் 400 மில்லியன் ஏக்கர் நஞ்சை நிலம் வாங்கலாம். அந்த நிலத்தின் வருட வருமானம் 200 பில்லியன் டாலர்கள். இது போக பதினாறு Exxon Mobil நிறுவனப்பங்குகளை வாங்கலாம். Exxon Mobil நிறுவனம் உலகில் அதிகபட்சமாக இலாபம் ஈட்டக்கூடிய நிறுவனம். அதன் வருட வருமானம் 40 பில்லியன் டாலர்கள். இவையெல்லாம் வாங்கியது போக கையில் ஒரு டிரில்லியன் டாலர்கள் மிச்சமிருக்கும். ஆனால் இந்த 9.6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் என்ன செய்யும் என்று சற்றே யோசித்துப் பாருங்கள். நீங்கள் அதனை உற்றுப்பார்த்தால் அது உங்களைத் திரும்பிக் கூடப் பார்க்காது.
1964 ஆம் வருடத்தில் 24 காரட் தங்கத்தின் 10 கிராம் மதிப்பு 63 ரூபாய் . 2021 ஆம் வருடம் அதன் மதிப்பு 48530 ரூபாய். இந்த இடைப்பட்ட காலத்திற்கான CAGR 12 சதவீதம். நீண்ட கால அடிப்படையில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 18 சதவீத CAGR கொடுத்திருக்கிறது. வித்தியாசம் வெறும் 6 சதவீதமாக இருந்தாலும் முடிவு மதிப்பைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டுகிறேன்.
தங்கத்திற்கு இரத்தம் தோய்ந்த ஒரு வரலாறு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? A.Anikin எழுதிய The Yellow Devil என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். தமிழ் மொழிபெயர்ப்பு 'மஞ்சள் பிசாசு' என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்திருக்கிறது.
Comments
Post a Comment