ஒரு கேள்வி ஒரு பதில் -1
ஒரு கேள்வி ஒரு பதில் - 1
தற்போதைய சூழலில் (சென்செக்ஸ் 61000) நேரடியாகப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ளலாமா அல்லது பரஸ்பர நிதி வாயிலாக முதலீட்டை மேற்கொள்ளலாமா ?
சென்செக்ஸ் தற்போது 61000 என்ற அளவுகளில் ஊசலாடிய வண்ணம் உள்ளது . சென்செக்ஸ் PE அதாவது விலை - வருவாய் விகிதம் 30 என்ற வாக்கில் உள்ளது . 16 என்பதை சென்செக்ஸ் சராசரி PE என்று கொண்டால் தற்போதைய PE உயர் அளவீட்டில் உள்ளது . இனி சந்தையின் போக்கு மூன்று வழிகளில் செல்வதாக இருக்கலாம் . ஒன்று சென்செக்ஸ் நிறுவனங்களின் வருவாய் (E) அதிகரித்து PE குறையலாம் . இரண்டாவது சென்செக்ஸ் சராசரி PE உயர் அளவீடுகளில் தொடர்ந்து நிலை பெறலாம் . மூன்றாவதாக முதலீட்டாளர்கள் நிதானத்திற்கு வந்து சென்செக்ஸ் தனது நீண்ட கால சராசரியான 16 என்ற அளவீட்டிற்கு இறங்கலாம் . இந்த மூன்றும் காலத்தின் கையில் உள்ளது .
இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்த வாக்கிலான முதலீட்டை எங்ஙனம் கொண்டு செல்லலாம் ?
கடந்த காலத்தைக் கணக்கில் கொண்டால் நேரடியான பங்கு முதலீடுகள் நீண்ட கால நோக்கில் சராசரியாக 25 சதவீத CAGR என்ற அளவிலும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் 20 சதவீத CAGR என்ற அளவிலும் வருமானத்தைத் தரவல்லவையாக இருக்கின்றன . இந்த 5 சதவீத வித்தியாசத்தைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் . நீண்ட கால அளவில் 0.5 சதவீத வருமான வித்தியாசம் கூட மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி விடும் . இதன் காரணமாகவே அது நேரடி பங்கு முதலீடுகளாக இருந்தாலும் சரி அல்லது பரஸ்பர நிதி முதலீடுகளாக இருந்தாலும் சரி உராய்வுச் செலவுகளைக் குறைப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது . பங்கு முதலீடுகளையும் , பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடுகளையும் இலாபத்தைப் பிடிக்கிறேன் என்று விற்று வைக்காமல் நீண்ட காலம் பேணிப் பாதுகாப்பதன் மூலமாக இந்த உராய்வுச் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ளலாம் .
பரஸ்பர நிதிகளில் மேலாண்மைச் செலவுகள் குறைவாக உள்ள நிதிகள் ஒரு சாதகமான கட்டமைப்பைக் கொடுக்கின்றன . குறியீட்டு பரஸ்பர நிதிகளின் பிதாமகன் John Bogle சொன்னது மாதிரி நிதி செயல்பாடுகள் வரும் போகும் ஆனால் நிதி செலவுகள் வந்தால் போகாது . அதே மாதிரி பத்து ரூபாய் யூனிட் பத்து ரூபாய்க்கே கிடைக்கிறது என்று புதிதாக
மேலும் படிக்க : பரஸ்பர நிதி மாயைகள்
வெளியிடப்படும் ஒவ்வொரு பரஸ்பர நிதிகளிலும் முதலீட்டை மேற்கொள்ளாமல் ஒரேயொரு பங்கு சார்ந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது சிறப்பு . எளிமையே எப்போதும் வெல்லும் . அந்த வகையில் எனது விருப்ப பரஸ்பர நிதி Parag Parikh Flexi Cap Fund . கூடுதலாக Small Cap நிதிகளிலும் முதலீட்டை மேற்கொள்ளலாம் . Small Cap பங்குகளில் எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று யாராலும் உத்தரவாதமாகச் சொல்ல முடியாது . அந்த அடிப்படையில் பரஸ்பர நிதி முதலீடுகள் பாதுகாப்பானவை. அவைகளிலும் SIP வகை முதலீடுகள் இன்னும் உத்தமம் . SIP முதலீடுகளாக இருந்தாலும் சரி அல்லது ஒரு முறை முதலீடாக இருந்தாலும் சரி , பொறுமை மிகவும் முக்கியம் . 26 வருடங்களில் Nippon India Growth Fund (Reliance Growth Fund) 200 bagger . வெறும் 5000 ரூபாய் முதலீடு இன்று 10 இலட்சம் ஆகியிருக்கிறது .
பங்கு முதலீடுகளைப் பொறுத்தவரை இந்தக் காளைச் சந்தையிலும் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் அவ்வப்போது எழுந்த வண்ணமே உள்ளன . மறுபக்கம் 52 வார அதிக பட்ச விலையில் வர்த்தகமாகும் பங்குகள் தொடர்ந்து 52 வார அதிக பட்ச விலையிலேயே வர்த்தகமாகும் வாய்ப்புகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் .
பங்குகள் பற்றித் தெரிந்து தெளிந்து முதலீடு செய்தால் பரஸ்பர நிதி முதலீடுகளை விட பங்கு முதலீடுகள் தான் சாலச் சிறந்தது . மேலும் நேரடி பங்கு முதலீடுகளில் மேலாண்மைச் செலவுகள் என்று ஏதுமில்லை .
Nick Murray சொல்வது போல பண சராசரியே (Rupee cost averaging) இந்த உலகின் ஆகப்பெரிய பங்குத் தொகுப்பு மேலாளர் . எனவே காளையோ கரடியோ தொடர்ந்த வாக்கில் இந்த முதலீட்டுப் பயணத்தை மேற்கொள்ளுங்கள் . நாம்
மேலும் படிக்க : காலப் பன்மயமாக்கம்
செய்யக் கூடியதும் நம்மால் கட்டுப்படுத்தக்கூடியதும் அது ஒன்று மட்டுமே .
எக்காரணம் கொண்டும் காலப் பன்மயமாக்கத்தைக் காலக் கணிப்புக்கு உட்படுத்தாதீர்கள் . கரடிச்சந்தையில் SIP முதலான முதலீடுகளை நிறுத்தி வைப்பது எவ்வளவு தவறோ அதற்குச் சற்றும் குறையாதது காளைச்சந்தையில் அவைகளை நிறுத்தி வைப்பதும் . அதே மாதிரி ஒரு முறை முதலீடுகளை விட தொடர்ந்த வாக்கிலான முதலீடுகளின் வீச்சு வேறு அளவுகளில் இருக்கும் .
ஒரு முறை முதலீடு ரூ.5000/-
காலம் 25 ஆண்டுகள்
வட்டி விகிதம் 15 % - ரூ.1,64,594
வட்டி விகிதம் 20 % - 4,76,981
வட்டி விகிதம் 25 % - 13,23,488
வட்டி விகிதம் 30 % - 35,28,205
தொடர்ச்சியான முதலீடு மாதம் ரூ.5000/-
காலம் 25 ஆண்டுகள்
வட்டி விகிதம் 15 % - ரூ.1,29,32,175
வட்டி விகிதம் 20 % - 2,87,95,846
வட்டி விகிதம் 25 % - 6,46,10,960
வட்டி விகிதம் 30 % - 14,44,56,405
பங்குச்சந்தை குறியீடு 15 சதவீத CAGR , பரஸ்பர நிதிகள் சராசரியாக 20 சதவீதம் , நேரடி பங்கு முதலீடுகள் 25 சதவீதம் என்று பார்த்தோம் . அது என்ன 30 சதவீத முதலீடு ? HDFC வங்கி மாதிரியான பங்கு முதலீடுகள் . HDFC வங்கிப் பங்கு , பங்காதாயம் நீங்கலாக 1995 ஆம் ஆண்டு முதல் பொது வெளியீட்டிலிருந்து நாளது தேதி வரை 33 சதவீத CAGR கொடுத்திருக்கிறது . வெறும் 5000 ரூபாய் ஒரு முறை முதலீட்டின் இன்றைய மதிப்பு 83 இலட்சம் ரூபாய் . இந்த இடைப்பட்ட 26 ஆண்டுகளில் மாதா மாதம் 5000 ரூபாய் HDFC வங்கிப் பங்கில் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா ? 31 கோடி ! வெறும் 3 சதவீத வருமான வித்தியாசம் 26 வருடங்களில் இரண்டு மடங்கிற்கும் மேலாகப் பெருகியிருக்கும் பாங்கைக் கவனிக்கவும் .
மீண்டும் சந்திப்போம் .
Comments
Post a Comment