அளவைகள் பலவிதம்

அளவைகள் பலவிதம்

உங்களிடம் உள்ள சொத்துக்களை உங்களால் துல்லியமாகக் கணக்கிட முடிந்தால் நீங்கள் செல்வந்தர் அல்ல என்று ஒரு உலகச் செல்வந்தர் கூறியிருக்கிறார். செல்வந்தர்கள் மட்டுமல்ல, சாதாரணர்களின் செல்வத்தைக் கணக்கீடு செய்வதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. இந்த செல்வக் கணக்கீடு குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம். 


முதலில் bouncing capital என்பதாக அழைக்கப்படும் பங்குகளை எடுத்துக் கொள்ளலாம். பங்கு வர்த்தகம் நடைபெறும் காலங்களில் முதலீட்டாளர் செயலி(Investor App)யைத் திறந்தால் உங்கள் முதலீடு துள்ளிக் குதிப்பதைக் கண்கூடாகக் காணலாம். பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றதும் அன்றைய உங்கள் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்பதைச் செயலி காட்டும். செயலி தெரிவிப்பது பங்கின் விலைகளை மட்டுமே. மதிப்பை அல்ல. பங்கின் விலை வேறு அவற்றின் மதிப்பு வேறு என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எந்தச் செயலியும் பங்குகளின் மதிப்பைத் தெரிவிக்காது. அவைகளால் தெரிவிக்கவும் முடியாது. மேலும், இந்தப் பங்குகளின் மதிப்பு என்பது ஆளாளுக்கு மாறுபடும். பங்குகளின் மதிப்பு பார்க்கிறவர்களின் பார்வையில் இருக்கிறது. சில சமயங்களில் இந்த வேறுபாடு வெளிப்படையாகத் தெரிய வரும். Butterfly Gandhimathy Appliances பங்கு வெகு நாட்களாக உறங்கிக் கொண்டிருந்தது. Crompton Greaves நிறுவனம் அதனைக் கையகப்படுத்துவதாக அறிவித்ததும் அதன் பங்கின் விலை எழுச்சி பெற்றதைக் குறிப்பாகச் சொல்லலாம். அதன் உண்மையான மதிப்பு எவ்வளவு? 400 ரூபாயா அல்லது 1100 ரூபாயா?


சமயங்களில் இது தலைகீழாகவும் நடைபெறும். சத்யம் கம்ப்யூட்டர் கற்பனைக் கணக்கு ஊழலின் போது ஐந்து நிமிடங்களில் பங்கின் விலை 400 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கு இறங்கி விட்டது.


பங்கு ஈட்டு விகிதப் பங்குகள் (dividend yield stocks) அவற்றை வாங்கிய விலைக்கு சற்று மேலாக மட்டுமே வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய பங்குகள் கொடுத்த வருமானத்தைக் கணக்கிடும் போது அவை வழங்கிய பங்காதாயங்களையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும். இத்தகைய பங்காதாயங்களை நீங்கள் மறு முதலீடு செய்திருந்தால் இந்தக் கணக்கு இன்னும் மாறுபடும்.


மேலும் பங்குச் செயலிகள் CAGR கணக்கீட்டை மேற்கொள்வதில்லை. அவை மொத்த வருமானத்தையே காட்டுவதாக இருக்கின்றன. உதாரணமாக ICICI வங்கிப் பங்கு 10000 சதவீதம் வருமானம் கொடுத்திருப்பதாகச் செயலி காட்டுகிறது. CAGR கணக்கைப் போட்டுப் பார்த்தால் நான் வாங்கிய நாளிலிருந்து கிட்டத்தட்ட 20 சதவீதம் மட்டுமே வருகிறது.


நான் முதலீடு செய்த பணம் இவ்வளவு அதன் இன்றைய மதிப்பு (விலை) இவ்வளவு என்பதாக செயலி தெரிவிக்கிறது. நான் சமீப காலமாக புதிதாக பணம் எதுவும் சந்தையில் இடவில்லை. பங்காதாயங்களை மட்டுமே மறு முதலீடு செய்திருக்கிறேன். இதெல்லாம் செயலிக்குத் தெரியாது.


கரடிச்சந்தையில் சீந்துவார் அற்றுக் கிடக்கும் பங்குகள் காளையின் கால் பட்டதும் அகலிகை மாதிரி சாப விமோசனம் பெற்று விடும். கரடி மதிப்பு உண்மையா அல்லது காளை மதிப்பு உண்மையா? 


பங்குப் பிரிப்பு, நிறுவனப் பிரிப்பு, இலவசப் பங்கு வெளியீடு போன்ற சமயங்களில் பங்கின் விலை கூடுவது ஒரு பக்கம். நிறுவனம் தேவையில்லாத வர்த்தகப் பிரிவை விற்கும் போதும், புத்தக மதிப்பில் (book value) விலை குறைவாக இருக்கும் நிலத்தை சந்தை விலையில் (market value) விற்பனை செய்யும் போதும் 'ஒரு முறை பங்காதாயம்' போன்ற பணப் பலன்களை எதிர் நோக்கி பங்கின் விலை கூடும். சமயங்களில் மற்ற நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள் நிறுவனத்தின் அடிப்படையையே அசைத்துப் பார்ப்பதாக இருக்கும். கணினி ஒளிப்படவியல் (Digital photography) வந்ததும் Kotak நிறுவனம் தேய்ந்து மறைந்தது ஞாபகத்திற்கு வருகிறது. Nokia நிறுவனத்திற்கு ஆபத்து Apple வடிவில் வந்தது. 


அவ்வப்போது நிறுவனங்கள் மேற்கொள்ளும் buyback (பங்குகளைத் திரும்பப் பெறுதல்) மூலமாகவும் ஒரு பணப்பாய்ச்சல் கிடைக்கப்பெறும்.


நிலையான வருமான முதலீடுகளும் நிலையானவை அல்ல. பட்டியலிடப்படும் பத்திர முதலீடுகள் வட்டி விகிதத்திற்குத் தகுந்தாற்போல் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும். வட்டி விகிதம் கூடினால் பத்திரங்களின் விலை குறையும். வட்டி விகிதம் குறைந்தால் பத்திரங்களின் விலை கூடும். பத்திர முதலீட்டுக் கால முதிர்வில் நீங்கள் முதலீடு செய்த பணம் முழுமையாகக் கிடைக்கும் என்றாலும் அது முழுமையானது அல்ல. காரணம், பணவீக்கம். 


ஆயுள் காப்பீடுகளின் உண்மையான மதிப்பை முதிர்வுக்காலம் தவிர்த்த இடைப்பட்ட காலங்களில் எவ்விதம் கணக்கிடுவது? Paid up value கணக்கீடுகள் சரியாக இருக்குமா? அல்லது surrender value கணக்கீடு சரியான ஒன்றாக இருக்குமா?


நில முதலீடுகளின் மதிப்பையும் தோராயமாகத் தான் கணக்கிட முடியும். பங்கு மற்றும்  பத்திர முதலீடுகளுடன் ஒப்பிடும் போது இவற்றின் உராய்வுச் செலவுகள் அதிகம்.


தங்கம் மற்றும் வெள்ளி முதலான முதலீடுகள் நகை வடிவில் இருக்கும் போது இவற்றுக்கான bid ask spread (வாங்கும் போது விலை அதிகம். விற்கும் போது விலை குறைவு) பங்குகளை விட பன்மடங்கு அதிகம். 


முன்னரே குறிப்பிட்டது மாதிரி அனைத்து முதலீடுகளையும் பணவீக்கம் பாதிக்கவல்லது. உங்கள் செல்வ மதிப்பைக் கணக்கிடும் போது பணவீக்கத்தைக் கழித்த கணக்கீடுகள் மட்டுமே சரியான ஒன்றாக இருக்கும். 


மேலும் , இந்தப் பணவீக்கமும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி பாதிக்கும். உதாரணத்திற்கு ஒருவர் சாப்பாட்டுப் பிரியராக இருந்தால் உணவுப் பணவீக்கம் (food inflation) அவரைப் பெருவாரியாகப் பாதிக்கும். 


அப்புறம் வரிகள். நீண்ட நெடுங்காலமாக நீங்கள் முதலீடு செய்த பணத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக எடுக்கும் போது வரி வகைகளைக் கழித்த கணக்குகள் முக்கியத்துவம் பெறுகிறது.


கண்ணிற்குத் தெரியும் இந்த இலாபங்களைத் தவிர்த்து கட்புலனாகாத சில அனுகூலங்களையும் கணக்கில் கொண்டாக வேண்டும். இவை மென் சொத்துக்கள் என்பதாக அழைக்கப்படும். பொறுமை, தாமதமான மனநிறைவு, நீடிப்புத் திறன், வாசிக்கும் பழக்கம் ...


படித்ததைப் பகிர்வது, பகிர்வதற்காகப் படிப்பது என்பதான ஒரு நேர் பின்னூட்ட சுழற்சியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பணத்தின் கூட்டுப் பெருக்கத்திற்கு அறிவின் கூட்டுப் பெருக்கமே ஆதாரம். அறிவின் கூட்டுப் பெருக்கத்திற்கு தொடர்ச்சியான படிப்பே ஆதாரம்.


ஒரு கருத்தாக்கம் சரிவர புரிபடாவிட்டால் அதனை எழுதிப் பாருங்கள் என்பதுடன் எனக்கு முழு சம்மதம். இந்த வலைப்பூவின் பல பதிவுகள் அவ்விதம் எழுதப்பட்டவையே.


இவ்விதமாக துல்லியமாக ஏதொன்றையும் அளக்க முடிகிறதோ இல்லையோ எதனை அளவைக்கு உட்படுத்துகிறீர்களோ அது முன்னேற்றமடைகிறது.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14