அனுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும்- 2
அனுமானக் கேள்விகளும் அதற்கான பதில்களும்- 2
கேள்வி: சராசரியை நோக்கிய பின்னடைவு (Reversion to the mean) இல்லாவிட்டால் என்னவாகும்?
பதில்: சந்தை என்பது ஒரு இடத்தால் ஆகப் பெற்றதல்ல. அது மாந்தர்களால் ஆகப்பெற்றது. அவர்கள் உணர்வுகளால் நெய்யப்பெற்றது. இந்த உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு சொத்தின் மதிப்பு அதி விலையில் வர்த்தகமாவதும் பின்னர் சராசரியை நோக்கிய பின்னடைவு என்ற அடிப்படையில் அது இறங்கி வருவதும் இயல்பானது. இந்த இறக்கம் அதன் சராசரிக்கும் கீழாக இறங்குவதும் இயல்பானது. பின்னர் சராசரியை நோக்கிய முன்னடைவு செயல்படத் தொடங்கும். வேறு மாதிரி சொல்வதானால் கடிகார ஊசல் மாதிரி ஒரு சொத்து அதன் உள்ளார்ந்த மதிப்பை விட அதிகமாகவும் (காளைச்சந்தை) குறைவாகவும் (கரடிச்சந்தை) வர்த்தகமாகும். சராசரியை நோக்கிய பின்னடைவும் முன்னடைவும் இல்லாவிட்டால் பங்குச்சந்தையும் அதன் மூலமான முதலீட்டு வாய்ப்புகளும் இல்லை என்றே சொல்லலாம். தனிப்பட்ட ஒரு பங்கைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கால அளவில் அது ஒரு விலைப்பட்டையில் (price band) முன்னும் பின்னுமாக சராசரியை நோக்கிய முன்னடைவிற்கும் பின்னடைவிற்கும் உள்ளாகும். பின்னர் அதிகரிக்கும் நிறுவன வருமானத்திற்குத் தக்கபடி அது உயர் தளத்தில் மறுபடி அதனது முன் பின்னான பயணத்தைத் தொடங்கும். தனிப்பட்ட பங்குகளுக்கு மட்டுமின்றி சந்தைக் குறியீடுகளுக்கும் இது பொருந்தும். சந்தையில் தின மற்றும் குறுகிய கால அளவில் பணம் ஈட்ட முனைபவர்களுக்கும் சந்தை இவ்வாறு பற்பல வாய்ப்புகளை வழங்குகிறது. நீண்ட கால முதலீட்டாளர்களும் படிநிலைகளின் இந்த உயர் நிலைகளால் இலாபம் ஈட்டுவர். பெரிய கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இறக்கத்திற்கு ஒரு ஏற்றம் தேவைப்படுகிறது. ஏற்றத்திற்கு ஒரு இறக்கம் தேவைப்படுகிறது. அதனினும் முக்கியமாக சந்தையின் இந்த ஏறி இறங்கும் தளங்கள் ஒப்பீட்டான கால அளவில் உயர் அளவில் நிலைபெற்ற வண்ணம் உள்ளது. முன்பு அது 8000 என்ற உயரத்தில் இருந்தது. இப்போது 80000 என்ற உயரத்தில் இருக்கிறது.
கேள்வி: பங்குத்தரகர் இல்லாமல் நாமே நேரடியாகப் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியாதா?
பதில்: இந்தியாவில் இப்போது இரண்டு பங்குச்சந்தைகள் இயங்குகின்றன. தேசிய பங்குச்சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தை (BSE) இந்தச் சந்தைகளுடன் பங்குத் தரகர்கள் கணினி வழி இணைந்து பங்குகளை வாங்கவும் விற்கவும் துணை புரிகிறார்கள். ஒரு பேச்சுக்கு பங்குச்சந்தை மற்றும் பங்குத்தரகர் என்ற அமைப்பில்லாமல் நாமே நேரடியாகப் பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்வதான ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பார்க்கலாம். இந்த உலகத்தில் ஒவ்வொரு ஊரிலும் பங்குச்சந்தை ஒன்று இயங்குகிறது. முதலீட்டாளர்கள் தினமும் பங்குகளை வாங்கவும் விற்கவும் சந்தையில் கூடுகிறார்கள். ஒருவர் ITC ன் பங்குகளை விற்க முனைகிறார். ஆனால் அன்றைய தினம் ITC பங்குகளை வாங்குவார் யாருமில்லை. HUL ன் பங்குகளுக்கான தேவைப்பாடு இருக்கிறது. ஆனால் அதன் பங்குகளை விற்பார் யாருமில்லை. ஒரு நிறுவனத்தின் 100 பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. ஆனால் அதன் 10 பங்குகளுக்கு மட்டும் தேவை இருக்கிறது. இன்னொரு நிறுவனத்தின் 10 பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. ஆனால் 100 பங்குகள் தேவை. ஒரு சில பங்குகள் விலை ஒத்து வராததால் வர்த்தகம் கூடி வரவில்லை. பெரிய கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான போதுமான நீர்மை நிறை (liquidity) இல்லை. அதுவே இந்தியா முழுவதற்குமாக இரண்டே இரண்டு பங்குச்சந்தைகள் என்றால் அங்கே நீர்மை நிறை இருக்கும். அது எந்த நிறுவனப்பங்காக இருந்தாலும் சரி, எத்தனை எண்ணிக்கை என்றாலும் சரி, என்ன விலை என்றாலும் சரி அதனை வாங்குவதற்கும் விற்பதற்கும் யாராவது தயார்நிலையில் எப்போதும் இருப்பார்கள். இவ்வாறு வாங்குபவருக்கும் விற்பவருக்குமான இணைப்புப் பாலமாகத் தரகர்கள் செயல்படுகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் Ola மற்றும் Uber இல்லாத வாகனப் போக்குவரத்துச் சந்தையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பயணர்கள் வாகனத்திற்காவும், வாகன ஓட்டிகள் பயணர்களுக்காகவும் காத்திருக்க வேண்டி வரும். சந்தை திறமையாக இயங்க தரகர்கள் தேவை.
கேள்வி: பங்குகளைப் பத்திர வடிவில் ஏன் கொடுக்கக்கூடாது?
பதில்: பத்திர வடிவில் நீங்கள் வாங்கும் பங்கு உண்மையிலேயே பத்திரமானது தானா என்று எப்படி இனங்காண முடியும்? குறுகிய கால அளவில் ஒருவர் பங்குகளை வாங்கியும் விற்றும் இலாபம் பெற முற்படுகையில் ஒவ்வொரு முறையும் அவர் பங்குப் பத்திரங்களை நிறுவனத்திற்கு அனுப்பி அதன் ஒப்புதலைப் பெற வேண்டும். இதில் கையெழுத்து கொஞ்சம் மாறினாலும் நீங்கள் தான் நீங்கள் என்று நிரூபணம் செய்வது உங்களைச் சார்ந்தது. பங்குப் பத்திரங்கள் தபாலில் தவறினால் கதை முடிந்தது. பத்திரங்கள் நீரில் நனைந்தாலும் நெருப்பில் புகைந்தாலும் பிரச்னை தான். நீங்கள் நீண்ட கால முதலீட்டாளராக இருந்தாலும் நிறுவனங்கள், இலவசப்பங்குகளை வழங்கும் போதும் பங்குப்பிரிப்பை மேற்கொள்ளும் போதும் நிறுவனப்பிரிப்பை மேற்கொள்ளும் போதும் புதிய பங்குப் பத்திரங்களை வழங்க வேண்டியது வரும். பங்குகளின் மின்னணு வடிவம் இந்த அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறது.
கேள்வி: பணச்சந்தை (currency market) மாதிரி பங்குச்சந்தையும் 24/7 என்று ஏன் செயல்படக்கூடாது?
பதில்: பங்குச்சந்தைக்கு வார விடுமுறை மற்றும் பிற விடுமுறைகள் இருந்தாலும் அது 24/7 என்ற வகையில் தான் செயல்படுகிறது. இல்லாவிட்டால் சமயங்களில் வார விடுமுறைக்குப் பின்னதான பங்குகளின் உயர்விலைத் திறப்பு (gap up opening) மற்றும் தாழ்விலைத் திறப்பு (gap down opening) களுக்கு வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒரு பேச்சுக்குப் பங்குச்சந்தையை ஒரு மாதம், ஏன், ஒரு வருடம் மூடி விட்டுத் திறந்தாலும் பங்குகள், நிறுவனத்தின் செயல்பாட்டை ஒட்டி உயர் விலையிலும் குறை விலையிலும் உடனே தங்களைத் தகவமைத்துக் கொள்ளும். எனவே பங்குச்சந்தை 24/7 என்ற வகையில் செயல்படாவிட்டாலும் 24/7 என்ற வகையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: எல்லோரும் நீண்ட கால மதிப்பு முதலீட்டாளராக இருந்தால் என்னவாகும் ?
பதில்: எல்லோரும் நீண்ட கால மதிப்பு முதலீட்டாளராக இருந்தால் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் மங்கி மறைந்து விடும். தின மற்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள், வளர்ச்சி (growth) முதலீட்டாளர்கள், வேக (momentum) முதலீட்டாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகளால் பங்கின் விலைகள் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை விட அதிக விலையில் வர்த்தகமாகின்றன. பின்னர் அக மற்றும் புறச் சூழ்நிலைகளால் சந்தை தன்னிலை உணரும் போது பங்குகளின் விலைகள் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பை நோக்கி நகர்கையில் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் உருவாகின்றன. எல்லோரும் மதிப்பு முதலீட்டாளர்கள் என்றால் இந்த உயர்வும் அதன் மூலமான தாழ்வும் கிடைக்கப்பெறாது. இவ்வாறாக இறக்கத்திற்கு ஒரு ஏற்றம் தேவைப்படுகிறது.
Comments
Post a Comment