கட்டற்ற தோட்டம்
கட்டற்ற தோட்டம்
" நூற்றுக்கணக்கான நிறுவனப்பங்குகளை வாங்கி வைத்திருப்பதான உத்தி சிறந்த ஒன்று தானா? முதலில் இத்தனை பங்குகளையும் அடித்தொடர (tracking) வேண்டும். ஒவ்வொரு பங்கும் பங்குத்தொகுப்பில் சிறிய இடத்தை வகித்தால் மொத்த வருமானத்தில் அதன் தாக்கம் குறைவாக மட்டும் தானே இருக்கும்? மேலும், ஒரு பங்கு, பங்குத்தொகுப்பின் மொத்த மதிப்பில் 5 சதவீதத்திற்கும் அதிகமானால் அத்தகைய பங்குகளை விற்று அதனை மீண்டும் 5 சதவீதம் என்ற அளவிற்குக் கொண்டு வர வேண்டாமா? "
இந்தக் கேள்விக்குப் பதிலாக உங்களுக்கு இரண்டு கதைகள் சொல்ல விரும்புகிறேன்.
ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர். மனைவி, முதலீட்டு ஆலோசகர் ஒருவரின் வழிகாட்டுதலில் முதலீட்டை மேற்கொண்டார். ஆலோசகர் அவ்வப்போது இந்தப் பங்குகளை வாங்குங்கள் என்றால் மனைவியின் கணக்கில் கணவர் அந்தப் பங்குகளை வாங்குவார். இந்தப் பங்குகளை விற்று விடுங்கள் என்று ஆலோசகர் சொன்னால் அந்தப் பங்குகளை விற்று விடுவார். இவ்வாறு காலச்சக்கரம் உருண்டோடியது. ஒரு நாள் துரதிருஷ்டவசமாகக் கணவர் இறந்து விடுகிறார். இறந்து போன கணவர் தனிப்பட்ட முறையில் பங்குகளில் முதலீடு செய்து வந்தது மனைவிக்குத் தெரிய வருகிறது. மனைவி தனது முதலீட்டு ஆலோசகரிடம் கணவரின் பங்குத்தொகுப்பைக் கொடுத்து அதனை என்ன செய்யலாம் என்பதாகக் கேட்கிறார். அந்தப் பங்குத்தொகுப்பைப் பார்த்த முதலீட்டு ஆலோசகருக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! அவருடைய பங்குத்தொகுப்பில் இருந்த பங்குகள் அனைத்தும் அவருடைய மனைவிக்கு ஆலோசகர் அவ்வப்போது பரிந்துரைத்த பங்குகள் மட்டுமே. ஆனால், அவருடைய பங்குத்தொகுப்பின் வருமானம் மனைவியின் வருமானத்தின் மடங்குகளில் இருந்தது. இது எங்ஙனம் சாத்தியம்? நிதி ஆலோசகர் அந்தப் பங்குத்தொகுப்பை நுட்பமாக ஆராயும் போது அவருக்கு அந்த உண்மை தெரிய வருகிறது. அவர், மனைவிக்குப் பரிந்துரைத்த பங்குகளைக் கணவர் அவருடைய கணக்கிலும் வாங்கி வைத்திருக்கிறார். வாங்கி வைத்திருக்கிறார் என்றால் உண்மையிலேயே வாங்கி மட்டும் வைத்திருக்கிறார். ஒருபோதும் அந்தப் பங்குகளை அவர் விற்கவில்லை. மனைவியின் பங்குத்தொகுப்பில், முதலீட்டு ஆலோசகரின் அறிவுறுத்தலின் படி அவ்வப்போது பணமாக்கம் (monetization) பங்குத்தொகுப்பின் மறு சமன் (rebalance) பங்குகளின் மிகைச் செயலாக்கம் (overperformance) அவற்றின் குறைச் செயலாக்கம் (underperformance) வரிக்கழிவு (tax rebate) இன்னபிற காரணங்களால் விற்பனை செய்யப்பட்ட இத்தகைய பங்குகள் கணவரின் பங்குத்தொகுப்பில் ஒருபோதும் விற்கப்படவில்லை. குறைச் செயலாக்கப் பங்குகள் விற்கப்படாததால் அவற்றில் முதலீடு செய்யப்பட்ட பணம் காற்றில் கரைந்து போனதென்னவோ உண்மை தான். ஆனால், சில பங்குகள் சந்தை வருமானத்தைச் சமன் செய்திருந்தன. சில பங்குகள் பன்மடங்காளர் ஆகியிருந்தன. Haloid என்ற நிறுவனப்பங்கு காட்டு மரம் கணக்காக வளர்ந்து பங்குத்தொகுப்பின் பெரும்பான்மையை ஆக்கிரமித்திருந்தது. Haloid என்பது Xerox நிறுவனத்தின் பூர்வாசிரமப் பெயர். வருமானத்தைக் கணக்கிடுகையில் மனைவியின் பங்குத்தொகுப்பை விடக் கணவரின் பங்குத்தொகுப்பு பன்மடங்கு வாரி வழங்கியிருந்தது. நிதி ஆலோசகர் கொஞ்சம் ஙே என்பதாக உணர்ந்தார். அந்த நிதி ஆலோசகர் Robert Kirby. பின்னாட்களில் பங்குகளை வாங்கி பல்லாண்டுகள் பேணிப் பாதுகாத்து வைப்பதான இந்த உத்தி coffee can investing என்பதாகப் பேரும் புகழும் பெற்றது.
இன்னொரு கதையையும் பார்த்து விடுவோம். அவர் ஒரு மதிப்பு முதலீட்டாளர். அவருடைய வாழ்நாளில் பல்வேறு வகையான பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார். அதன் மூலமாக இலாபமும் அடையப் பெற்றிருக்கிறார். ஆனால், அவர் ஒரு பங்கில் மேற்கொண்ட முதலீடு மீமிகை வருமானத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. மீமிகை என்றால் எவ்வளவு மிகை? தராசின் ஒரு தட்டில் மற்ற பங்குகளின் இலாபத்தை வைத்து மறு தட்டில் மீமிகை வருமானப்பங்கின் இலாபத்தை வைத்து நிறுத்தால் மீமிகை வருமானப்பங்கின் இலாபம் அதிகம். அந்த முதலீட்டாளர் Benjamin Graham. அந்தப் பங்கு GEICO. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கிரகாம் எத்தனை பங்குகளை வாங்கியிருப்பார்? எத்தனை பங்குகளை விற்றிருப்பார்? அத்தனை உழைப்பையும் GEICO அனாயாசமாக முந்தி விட்டது.
இந்த இடத்தில் நிலைப்பாடு அளவீடு, ஆங்கிலத்தில் position sizing என்று சொல்லப்படுவதான ஒரு கருத்தாக்கம் குறித்துக் கொஞ்சம் பார்த்து விடலாம். உங்கள் பங்குத் தொகுப்பில் ஒரு பங்கு 100 மடங்கு முதலீட்டுப் பெருக்கம் அடைவதாகக் கொள்ளலாம். எனில் அத்தகைய பங்குகளை நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாங்கி வைத்திருந்தால் மட்டுமே இந்த 100 மடங்கு பெருக்கம் உங்கள் பங்குத் தொகுப்பில் ஆகப்பெரிய நேர்ம விளைவை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆக, மதிப்பு முதலீடாக தரமான பங்குகளைக் குறை விலையில் வாங்குவதோடு மட்டுமின்றி அவற்றை அதிக அளவில் வாங்குவதும் முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய பங்குகளை அதிக அளவில் வாங்கா விட்டாலும் அதிக காலம் வைத்திருந்தால் அது பன்மடங்காளராகி உங்கள் பங்குத் தொகுப்பின் வருமானத்திற்கு ஆதாரமாகும். வேறு மாதிரி சொல்வதானால் position sizing செய்யாமலேயே நீங்கள் அதன் பலனைப் பெறலாம். இவ்வாறு செய்வதில் இன்னொரு அனுகூலமும் இருக்கிறது. ஒரு பங்கை என்ன தான் மதிப்பு முதலீடாக வாங்கினாலும், நிறுவன செயல்பாடுகள் காரணமாக, அது நீங்கள் எதிர்பார்த்த மாதிரியில்லாமல் குறைச் செயலாக்கம் அல்லது பூஜ்ய செயலாக்கம் அல்லது எதிர் செயலாக்கம் புரியக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இம்மாதிரி வெவ்வேறு நிறுவனப்பங்குகளை வாங்கி அவற்றை அதன் போக்கில் இயற்கையாக வளர விட்டால் அவற்றில் சில பங்குகள் மீமிகைச் செயலாக்கம் புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆக, அடிப்படைப்பகுப்பாய்வை மேற்கொண்டு மதிப்பு முதலீடாக (value investing) காலப்பன்மயமாக்கம் (time diversification) என்ற முறையில் பங்குகளை வாங்குங்கள். இலாபத்தைப் பிடிக்க வேண்டும் என்று பங்குகளை விற்காதீர்கள். அவ்வப்போது தேவைப்படும் பணத்தேவைகளுக்குப் பங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் பங்காதாயமே (dividend) போதுமானது. அதனை மீறிப் பணம் தேவைப்பட்டால் குறைச் செயலாக்கம் மற்றும் பட்டுப் போன பங்குகளை விற்றுப் பணமாக்கம் செய்து கொள்ளுங்கள். பங்குத்தொகுப்பை மறு சமன் செய்யும் பொருட்டுப் பங்குகளை விற்க வேண்டாம். சற்றே யோசித்துப் பாருங்கள். Xerox நிறுவனப்பங்கு, கணவரின் பங்குத்தொகுப்பில் பெரும்பான்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று அதனை அவர் அவ்வப்போது அவரது பங்குத்தொகுப்பின் ஐந்து சதவீத அளவிற்குக் குறைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? எந்தத் தரமான நிறுவனப்பங்கும் அவ்வப்போது மிகைச் செயலாக்கம் புரிவதும் குறைச் செயலாக்கம் புரிவதும் இயல்பான ஒன்று தான். இதற்காகப் பங்கை விற்று வைத்தால் என்ன ஆகியிருக்கும்? அல்லது இலாப நோக்கம் கருதி அவ்வப்போது இத்தகைய பங்குகளைப் பணமாக்கம் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அல்லது வரி சேமிப்பின் பொருட்டு பங்குகளை விற்று வைத்திருந்தால்?
அடித் தொடர்தல் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். தரமான நாட்பட்ட நிறுவனங்களை அடித்தொடரத் தேவையில்லை. புதிய பங்குகளை அடித் தொடரலாம். அதற்காக அவற்றின் ஒவ்வொரு காலாண்டு இலாப நஷ்டத்தையும் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவ்வப்போது நிறுவனங்கள் இலாபமீட்டுவதும் இலாபம் குறைவதும் அவை நஷ்டத்திற்கு உள்ளாவதும் இயல்பான ஒன்று தான். நாம் நிறுவனத்தின் நீண்ட கால செயல்பாட்டில் மட்டும் கவனம் கொள்ள வேண்டும். மற்றபடி benign neglect ஆக ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும். தரமான நிறுவனம், தற்காலிகமாக, அதே சமயம் தீர்க்கப்படக்கூடிய பிரச்னை ஒன்றில் சிக்கித் தவிப்பதாகக் கொள்ளலாம். அப்போது அதன் பங்கு விலைகள் குறைந்து விடும். அது அத்தகைய பங்குகளை வாங்குவதற்கான உகந்த ஒரு தருணமாகும். வாரன் பஃபெட், நிறுவனங்கள் அறுவை சிகிச்சை அரங்கில் இருக்கும் போது அதன் பங்குகளை வாங்குங்கள் என்று கூறுவதன் அர்த்தம் இது தான்.
துணிகர முதலீட்டு நிறுவனங்களின் (Venture capital) அடிப்படையும் செயல்முனைவுள்ள ஏராளமான நிறுவனங்களை இனங்கண்டு, அவற்றில் ஆரம்ப கால முதலீட்டை மேற்கொண்டு, அதன் மூலமாக சில பன்மடங்காளர்களை அடைவதும் அவற்றை முதல் பொது வெளியீடு (IPO) வழி பணமாக்கம் செய்வதும் தான்.
உங்கள் பங்குத்தொகுப்பில் பன்மடங்காளர்கள் பல்வேறு எண்ணிக்கையிலும் பல்வேறு அளவுகளிலும் இருந்தால் நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அர்த்தம். யார் கண்டது? உங்கள் பங்குத்தொகுப்பிலும் Xerox மற்றும் GEICO மாதிரியான பங்குகள் இருக்கப் பெறலாம். மனிதனால் பராமரிக்கப்பட்ட தோட்டத்தை விட இயற்கையால் பராமரிக்கப்பட்ட காடு செழிப்பாகக் காணப்படுகிறது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
Comments
Post a Comment