புதிய 52 வாரக் குறைவு உத்தி

புதிய 52 வாரக் குறைவு உத்தி

New 52 week low strategy 


52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளில் முதலீடு செய்யலாமா?


52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகள், பெரும்பாலான சமயங்களில், நியாயமான காரணங்களுக்காக அவ்விதம் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். இத்தகைய நிறுவனங்கள் அடிக்கடி சந்தைக்கு வந்து நிதியைத் திரட்டி அவற்றின் பங்கு முதலை (equity capital) நீர்த்துப்போகும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். இவற்றின் கடன்-முதல் விகிதம் (debt-equity ratio) கட்டுக்கடங்காமல் இருக்கும். இவை ஒருபோதும் வளர்ச்சியின் மீதான வளர்ச்சியை எட்டாது. இவற்றுக்கு எந்த அகழியும் (moat) இருக்காது. இவற்றில் நிறுவனர் பங்கு ஒரு சதவீதமாகவும் சிறு முதலீட்டாளர்கள் பங்கு 99 சதவீதமாகவும் இருக்கும். அறம் என்பது அறவே இருக்காது. ஆனால் இந்த 52 வாரக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளின் வரிசையில் புதிய நிறுவனம் ஒன்று இடம் பெற்றால் (new 52 week low) அது கவனத்திற்குரிய ஒன்றாகிறது. 


சமீபத்தில் Natco Pharma பங்கு, புதிய 52 வாரக் குறைவு வரிசையில் இடம் பெற்றது. இந்த மாதிரி பங்குகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவை தற்காலிகமாக இந்த வரிசையில் இடம் பெற்றிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் அவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.


நிறுவனம் ஒன்று தற்காலிகமான அதே சமயம் தீர்க்கப்படக்கூடிய பிரச்னை ஒன்றில் சிக்கித் தவிக்கையில் முதலீட்டாளர்களின் அச்ச உணர்வின் காரணமாக அதன் விலை மதிப்பை நோக்கி ஏன் அதற்கும் கீழாக நகரும். பஃபெட், நிறுவனங்கள் அறுவை சிகிச்சை அரங்கில் இருக்கும் போது நான் அவற்றில் முதலீட்டை மேற்கொள்வேன் என்று கூறுவது இத்தகைய சூழ்நிலைகளைத் தான்.


பஃபெட்டின் குறிப்பிடத்தக்க அறுவை சிகிச்சை அரங்கு முதலீடாக அவருடைய GEICO நிறுவன முதலீட்டைக் கூறலாம். Govt Employees Insurance Company என்பதன் சுருக்கமே GEICO. 1930 களில் பொருளாதார மந்தநிலை அதன் உச்சத்தில் இருந்த போது GEICO நிறுவனம் தொடங்கப்பெற்றது. பெடரல் ஊழியர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் அது வாகனக் காப்பீடுகளை முதலில் வழங்கியது. பின்னர் பெயருக்கு ஏற்றார்ப் போல பிற அரசாங்க ஊழியர்களுக்கும் அது வாகனக் காப்பீட்டை வழங்கத் தொடங்கியது. பொதுவாக அரசாங்க ஊழியர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள். அவர்களின் வாகனத்தையும் பொறுப்புடன் ஓட்டுவார்கள். இவர்களுக்கு வாகனக் காப்பீடுகளை வழங்கினால் உரிமை விகிதம் (claim rate) குறைவாக இருக்கும் என்பது தெளிவு. இது போக GEICO நிறுவனம், காப்பீடுகளை முகவர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக விற்றது. இந்த வகையிலும் அது செலவுகளைக் குறைத்துக் கொண்டது. மேலும் காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை காப்பீடுகளுக்கான முனைமத்தொகையை (premium) அவை முன்னரே பெற்றுக்கொள்ளும். வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருந்தால் முனைமத்தொகை முழுவதும் நிறுவனத்தைச் சார்ந்தது. விபத்திற்குள்ளான வாகனங்களுக்கு அவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையை நிறுவனம் வழங்கினால் மட்டும் போதுமானது. இது போக நிறுவனத்திற்கான நிர்வாகச்செலவுகள் தனி. முன்னரே குறிப்பிட்ட படி காப்பீடுகளைப் பொறுப்பாக வழங்கி விட்டால் இழப்பீடுகளைக் குறைவாக, சமயங்களில் பூஜ்ய அளவில் கொடுத்தால் போதும். காப்பீடு முகவர்களுக்கான செலவும் பூஜ்யம். இது போக எஞ்சியிருக்கும் முனைமத்தொகையை, நிறுவனம், பங்குகளிலும் பத்திரங்களிலும் இலாபகரமாக முதலீடு செய்தது. எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 1970 களில் அமெரிக்காவில் பணவீக்கம் அதன் உச்ச அளவை எட்டியது. வாகனங்களின் விலையும் அவற்றின் உதிரி பாகங்களின் விலையும் விண்ணை முட்டியது. அரசாங்கம் பணவீக்கத்தைக் குறைக்கும் பொருட்டு காப்பீட்டு நிறுவனங்களின் முனைமத்தொகைக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது. இது போக, நிறுவனத்தின் காப்பீடுகளை வழங்கும் ஒழுக்கத்திலும் (underwriting discipline) ஒரு தொய்வு ஏற்பட்டது. அதன் பங்குகளின் விலை தரையைத் தட்டியது. அப்போது ஆபத்பாந்தவன் அனாதரட்சகனாக பஃபெட், GEICO நிறுவனப்பங்குகளை வாங்கத் தொடங்குகிறார். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது நிறுவனத்தின் அகழியில் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்பதைத் தான். மற்ற பிரச்னைகள் யாவையும் தற்காலிகமானவையும் தீர்க்கப்படக்கூடியவையுமாகும்.


ரஷ்யாவில் கம்யூனிசம் வீழ்ந்து அந்த நாடு திக்குத் தெரியாத திசையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு தங்களுடைய கட்டமைப்பை வடிவமைத்துக் கொண்ட பொருள் வர்த்தக நிறுவனங்களுக்கு (Commodity trading companies) ஆரம்ப அனுகூலம் கிடைக்கப்பெற்றமை இங்கு கவனம் பெறுகிறது. மூடுபனியில் தான் மதிப்பை வாங்க முடியும். பனி மறைந்ததும் மதிப்பும் மறைந்து விடும்.


ITC பங்குகளை அதன் IPO வில் வாங்கியவர்களின் மனநிலையைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம். ITC நிறுவன முதல் பொது வெளியீடு 1976 ஆம் ஆண்டு வெளி வந்தது. இப்போது மாதிரி demat எல்லாம் அப்போது கிடையாது. பங்குகளைப் பத்திர வடிவில் மட்டுமே வாங்க முடியும். அதுவும் lot என்ற கணக்கில் பங்குகளின் விலைக்கேற்ப 50 மற்றும் 100 என்ற எண்ணிக்கையில் மட்டுமே. பங்குகளை இரண்டாம் நிலைச்சந்தையில் (secondary market) வாங்குவது இன்னும் கடினமான ஒன்று. நீங்கள் யாரிடமிருந்தாவது பங்குகளை வாங்க முனைகையில் ஒருவேளை அவர் கையெழுத்து கொஞ்சம் மாறியிருந்தால் நீங்கள் அவர் பின்னே மறு கையெழுத்துக்கு அலைய வேண்டும். இப்போது மாதிரி இணையம் இல்லாததால் பங்குகளின் விலையும் மறைபொருளாக இருந்தது. தற்போது மாதிரி நிறுவன ஆண்டு முடிவுகள் உடனுக்குடன் கிடைக்கப்பெறாது. வருமான வரி அப்போது தான் 66 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு எந்தப் பக்கம் பார்த்தாலும் பனிமூட்டமாக இருந்தது. இந்தப் பனிமூட்டம் தான் மதிப்பின் மூலாதாரம்.


Nestle India பங்கு அதன் Maggi noodles பிரச்னையின் போதும் ICICI வங்கி அதன் CEO ஊழலின் போதும் மதிப்பு வளையத்திற்குள் வந்தன. Balkrishna Industries பங்கு அதன் விரிவாக்க நடவடிக்கையின் காரணமாக, தற்காலிகமாக இலாபம் குறைந்த ஒரு தருணத்தில் இந்த நிலையை எட்டியது.


மீமிகைக் கரடிச்சந்தையின் போது மொத்தச் சந்தையே இந்த நிலையை எட்டும். ஆனால் கரடிச்சந்தையில் உங்கள் பங்குத்தொகுப்பு பங்கமான நிலையில் எதிர்நீச்சல் போட்டு இத்தகைய பங்குகளை நீங்கள் வாங்க வேண்டும்.


மீமிகைக் கரடிச்சந்தை வாய்ப்புகள் எப்போதாவது தான் வரும். ஆனால் 52 வாரக் குறைவு வாய்ப்புகள் அவ்வப்போது வந்த வண்ணமாகவே இருக்கும்.


இவ்வாறு இந்தப் புதிய 52 வாரக் குறைவு உத்தி, மதிப்பு முதலீட்டின் ஒரு முக்கிய அங்கமாகச் செயல்படுகிறது.


Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14