Keynes- மணி மொழிகள்- ஒரு எளிய விளக்கம்
Keynes- மணி மொழிகள்- ஒரு எளிய விளக்கம்
1. Successful investing is anticipating the anticipation of others.
வெற்றிகரமான முதலீடு என்பது மற்றவர்களின் முன் உணர்வை முன் உணர்வது.
முன் உணர்வு என்பது புரிகிறது. அதென்ன முன் உணர்வின் முன் உணர்வு? Keynes இதனைப் பின்வருமாறு விளக்குகிறார்: அழகிப் போட்டி ஒன்று நடைபெறுகிறது. நடுவர்களாக நாலைந்து பேர் இருக்கிறார்கள். அந்தப் போட்டியில் யார் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்பதை உங்கள் பார்வையில் கணிப்பது முன் உணர்வு. மற்ற நடுவர்களின் பார்வையில் யார் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது, இதில் பெரும்பான்மை வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என்று கணிப்பது முன் உணர்வின் முன் உணர்வு. பங்குச்சந்தையைப் பொறுத்தவரை இந்த முன் உணர்வின் முன் உணர்வு தான் முக்கியமானது. பங்குகளுக்கான அழகிப்போட்டியில் எந்தப் பங்குகள் வெற்றி பெறும் என்பதான முன் உணர்தல் அது.
2. Markets can remain irrational longer than you can remain solvent.
நீங்கள் திவால் நிலையை அடையும் காலத்தை விட அதிக காலம் சந்தை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கும்.
நிறுவனப்பங்கு ஒன்று மிகை விலை-வருவாய் விகிதத்தில் வர்த்தகமாகிறது. விரைவில் அதன் விலை குறையும் என்று சரியாக அனுமானித்து, நீங்கள் அதன் பங்குகளில் PUT நிலைப்பாடு ஒன்றை எடுக்கிறீர்கள். ஆனால் உங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக அதன் பங்குகளின் விலை மீமிகை விலை-வருவாய் விகிதங்களைத் தொடுகிறது. PUT நிலைப்பாடு எடுத்தால் பங்குகளின் விலை கூடக்கூட நீங்கள் விளிம்புப் பணம் (margin money) கட்ட வேண்டியதாக இருக்கும். சமயங்களில் margin கட்ட உங்கள் கையில் பணம் இல்லாத நிலையைக் கூட நீங்கள் அடைய வேண்டி வந்து விடும். அது வரை சந்தை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுவதாக இருக்கும். Put நிலைப்பாடு எடுத்து அதில் இறுதியில் வென்றாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் விளிம்புப் பணம் கட்டவியலாமல் இவ்வாறு சந்தையை விட்டு வெளியேற்றப்படுவது F & O நிலைப்பாடுகளின் ஆகப்பெரிய அபாயமாகும்.
3. The markets are moved by animal spirits and not by reason.
சந்தை என்பது விலங்குணர்வால் ஆனது, காரண காரியங்களால் ஆகப் பெற்றதல்ல.
பெரும்பாலான சமயங்களில் பங்குகளின் விலை உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரண காரியங்கள் என்பதாக எதுவும் இருக்காது. சந்தையின் மந்தை மனப்பான்மை காரணமாக ஊசலின் இரண்டு பக்கங்களிலும் அது சுழன்றாடிய வண்ணமாக இருக்கும். இதனைத் தான் Keynes விலங்குணர்வு என்று குறிப்பிடுகிறார். சந்தையின் இரண்டு முக்கியமான விலங்குணர்வுகளாக பேராசை மற்றும் அச்சம் ஆகியவற்றைக் கூறலாம்.
4. It is better to be roughly right than precisely wrong.
உத்தேசமான சரி என்பது நிச்சயமான தவறு என்பதை விட மேலானது.
பங்குச்சந்தையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் உத்தேசமான சரி என்பது நிச்சயமான தவறு என்பதை விட உயர்வானது. நிச்சயமான தவறு என்பது முடிந்து போன ஒரு ஒற்றையடிப் பாதை. உத்தேசமான சரி என்பதற்கு இரண்டு பாதைகள் உள்ளன. ஒருவேளை அது தவறான ஒன்றாக இருக்கலாம் அல்லது சரியான ஒன்றாகவும் இருக்கலாம்.
5. It is better for reputation to fail conventionally, than succeed unconventionally.
உங்கள் நன்மதிப்பு வழக்கமான முறையில் தோற்றால் பரவாயில்லை, வழக்கத்திற்கு மாறாக அது வெற்றி பெறக்கூடாது.
Infosys நிறுவனப்பங்கை வாங்கி நீங்கள் நஷ்டத்திற்கு உள்ளானால் யாரும் உங்களைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் பெயர் தெரியாத பங்கினை வாங்கி அது தோல்வியில் முடிந்தால் அதனை நியாயப்படுத்தும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது.
6. When my information changes, I alter my conclusions. What do you do, sir?
தகவல்கள் மாறினால் என் முடிவுகளை நான் மாற்றிக் கொள்வேன். நீங்கள் எப்படி?
பார்த்துப் பார்த்து நிறுவனப்பங்கு ஒன்றில் முதலீடு செய்கிறீர்கள். நிறுவனம் நிரந்தரமான, தீர்க்கப்படவியலாத பிரச்னை ஒன்றில் சிக்கிக் கொள்கிறது. அப்போது அதன் பங்குகளை விற்று விடுதலையாகி விட வேண்டும். தகவல்கள் மாறினால் உங்கள் முடிவும் மாற வேண்டும். இது எதிர்மறையாகவும் செயல்படும். தீர்க்கவியலாத பிரச்னையில் சிக்கி தன் மதிப்பை நிரந்தரமாக இழக்கும் என்று நீங்கள் நினைத்த நிறுவனம் அதன் பிரச்னையிலிருந்து விடுபட்டு விட்டால் அதில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.
7. The difficulty lies not in developing new ideas as in escaping from old ones.
கடினம் என்பது புதிய எண்ணக் கருக்களை உருவாக்குவதில் இல்லை. மாறாக அது பழைய எண்ணங்களின் சிறையிலிருந்து விடுபடுவதில் இருக்கிறது.
வாரன் பஃபெட், அவருடைய குருவான பெஞ்சமின் கிரகாமின் மதிப்பு முதலீட்டு எண்ணச்சிறையில் வெகு காலம் சிறைப் பட்டிருந்தார். பஃபெட்டின் ஆத்ம நண்பர் சார்லி முஞ்சர் அவரை இந்தச் சிறையிலிருந்து விடுவித்ததும் அப்புறம் நடந்ததும் வரலாறு.
8. If you can't forecast well, forecast often.
உங்களால் சிறப்பாக முன் கணிக்க முடியவில்லையென்றால் அடிக்கடி முன் கணியுங்கள்.
முன் கணிப்பு என்பது முடியாது என்பதற்கு அடுத்தது.
9. Ideas shape the course of history.
எண்ணக் கருக்களே வரலாற்றை வடிவமைக்கின்றன.
Henry Ford ன் assembly line உத்தியைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். Assembly line உத்தியினால் கார் தயாரிப்பதற்கான செலவு கணிசமாகக் குறைந்தது. கார் தயாரிக்கும் சாதாரண தொழிலாளர்கள் காரை வாங்கக்கூடிய நுகர்வோர்களாக ஏற்றம் பெற்றனர். இதனால் நகரத்தின் எல்லைகள் விரிவடைந்தன. சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு Ford ன் எண்ணக்கரு வரலாற்றை வடிவமைத்தது.
10. When the capital development of a country becomes a by-product of the activities of a casino, the job is likely to be ill done.
ஒரு நாட்டின் முதலீட்டு வளர்ச்சி சூதாட்ட நிலையத்தின் துணை விளைபொருளாக இருந்தால் அந்தக் காரியம் தவறாகச் செய்யப்பட்டதாகப் பொருள்.
பங்கு முதலீடு என்பது வளர்ந்து வரும் பங்காதாயம் மற்றும் அதன் மூலமான முதலீட்டுப் பெருக்கம் ஆகியவற்றால் ஆகப்பெற்றது. பங்குகளில் முதலீடு செய்தால் நீங்கள் அதன் பகுதி முதலாளி. பங்குகள் தின அளவில் துள்ளிக் குதிக்கும் காகிதங்கள் அல்ல, அவை இரத்தமும் சதையும் ஆன்மாவும் கொண்ட நிறுவனங்களின் சின்னஞ்சிறு பகுதி. இந்த மாதிரியான எண்ணப்போக்குகளை நீங்கள் கொண்டிருந்தால் உங்களை முதலீட்டாளர் என்ற வகையில் சேர்க்கலாம். மற்றபடி பங்குகளைக் காலையில் வாங்கி மாலையில் விற்பது, இல்லாத பங்குகளை விற்று பின்னர் வாங்குவது, பங்குகளை வாங்காமல் அவை கூடும் குறையும் என்று பந்தயம் கட்டி விளையாடுவது போன்ற காரியங்களில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் உங்களை ஊக வணிகர் என்ற வகையில் சேர்க்கலாம். ஒரு நாட்டின் உண்மையான முதலீட்டு வளர்ச்சி அதன் முதலீட்டாளர்களைச் சார்ந்திருக்கிறது.
Comments
Post a Comment