மந்தை மனப்பான்மை

மந்தை மனப்பான்மை

Herd Mentality 


மனிதர்கள் தனிப்பட்டு சிந்திக்காமல் மந்தை மனப்பான்மையில் முடிவுகளை எடுப்பது மந்தை மனப்பான்மை (Herd Mentality) என்பதாக அழைக்கப்படுகிறது. 


நம் மூதாதையர்கள் முன்பொரு காலத்தில் கூட்டம் கூட்டமாகக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் எந்த முடிவுகளையும் கூட்டமாகச் சேர்ந்து தான் எடுப்பார்கள். எந்த இடத்திற்கு வேட்டையாடச் செல்வது என்பதில் தொடங்கி அவர்களது கூட்டத்தில் புதிதாக ஒருவரை இணைத்துக் கொள்வது வரை அனைத்து முடிவுகளும் கூட்டு அளவில் மட்டுமே எடுக்கப்படும். 


இப்போது நாம் அந்தக் கற்காலத்திலிருந்து பயணித்து எவ்வளவோ தூரம் வந்து விட்டோம். இப்போது நாம் வேட்டையாடச் செல்வதில்லை. பல்வேறு நாடுகளுக்கு அவற்றின் பற்பல இடங்களுக்குச் சுற்றுலா செல்கிறோம். சமூக ஊடகங்களில் யாரை நமது நண்பர்களாகச் சேர்த்துக் கொள்வது என்பது இப்போது நம் கையில் (விரலில்) உள்ளது. இருந்தாலும் சில இடங்களில் நாம் இன்னமும் அந்தக் கற்கால மனிதன் போலவே நடந்து கொள்கிறோம். அவற்றில் மிக முக்கியமான ஒரு இடமாகப் பங்குச்சந்தையைக் குறிப்பிடலாம். 


பங்குச்சந்தையில் அவ்வப்போது குமிழிகள் தோன்றி வளர்ந்து வெடித்துச் சிதறுவதற்கு அடிப்படையான காரணம் முதலீட்டாளர்களின் மந்தை மனப்பான்மையே. தனிப்பட்ட பங்குகளின் திடீர் உயர்வு தாழ்வுக்கும் இதுவே காரணமாக அமைகிறது.


இந்த மந்தை மனப்பான்மையை ஊதிப் பெரிதாக்கும் வேலையைச் சமூக ஊடகங்கள் செவ்வனே செய்கின்றன. நிறுவனம் ஒன்றைக் குறித்து நீங்கள் நேர்மமாக கூகுள் தேடுபொறியில் தேடினால் அது சம்பந்தமான தகவல்கள் மட்டுமே உங்களுக்குக் காட்டப்படும். நிறுவனத்தின் நேர்மமான தகவல்களுடன் அதன் எதிர்மமான தகவல்களையும் சேர்த்து நீங்கள் தேடுவது ஒரு சிறந்த உத்தியாக இருக்கும்.  


Dunbar number என்பதாக ஒரு எண் இருக்கிறது. நாம் ஆதி மனிதனாகக் காட்டில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருந்த போது ஒரு கூட்டத்தில் அதிக பட்சமாக 150 பேர் மட்டும் தான் இருப்பார்கள். இந்த எண்ணிக்கைக்கு மேல் சமூக உறவுகளை நிலையாகப் பேண முடியாது. 


இன்றைய சமூக ஊடகங்களிலும் நண்பர்களைப் பேணுவதில் இந்த எண்ணின் மேல் ஒரு கண் இருக்கட்டும்.


மந்தை மனப்பான்மையில் நன்மையே இல்லையா? 


Wisdom of crowds என்பதாக ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. தமிழில் கூட்டத்தின் ஞானம் என்பதாகச் சொல்லப்படும் இது செயல்படுவதற்குக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தனிப்பட்டு எடுக்கப்பட வேண்டும். கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தனிப்பட்டு சிந்தித்து பின் அவற்றின் சராசரி என்ற கணக்கில் முடிவுகளை எட்ட வேண்டும். இதற்கான சிகர உதாரணமாகக் கூறப்படும் எருது ஒன்றின் எடையைக் கணக்கிடும் போட்டி குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம்.


ஒரு முறை சந்தை ஒன்றில் எருது ஒன்றின் எடையைக் கணக்கிடும் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் எருதின் எடையை யூகித்து அது என்னவாக இருக்கும் என்று ஒரு காகிதத்தில் எழுதிப் பெட்டியில் போட வேண்டும். கிட்டத்தட்ட ஓட்டு போடுவது மாதிரி இதுவொரு இரகசியமான செயல்முறையாகும். ஒருவரின் யூகக்கணக்கு அடுத்தவருக்குத் தெரியாது. கூட்டத்தின் ஞானம் செயல்பட இதுவொரு அத்தியாவசியமான தேவையாகும். அந்தப் போட்டியில் மொத்தம் 787 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் கசாப்புக் கடைக்காரர் மற்றும் விவசாயிகள் போன்ற விற்பன்னர்களும் சாதாரண பொது மக்களும் அடங்குவர். எருதின் உண்மையான எடையான 1198 பவுண்டும் கூட்டத்தின் சராசரி எடையான 1197 பவுண்டும் கிட்டத்தட்ட சமமாக இருந்தது.


கூகுள் தேடுபொறி மற்றும் விக்கிப்பீடியா போன்ற அமைப்புகள் கூட்டத்தின் ஞானத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. கூகுள் தேடுபொறி இணையத்தளங்களின் பின்னோக்கிய இணைப்புகளை (backward links) தரவரிசைக்கு உட்படுத்தும் செயல்முறையில் இயங்குகிறது. இந்தப் பின்னோக்கிய இணைப்புகள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்திராமல் இருப்பது இங்கே கவனம் பெறுகிறது. அதே மாதிரி விக்கிப்பீடியா நிறுவனமும் மனிதத்தின் தனிப்பட்ட கூர்மதியை (human ingenuity) பயனாக்கம் செய்கிறது. விக்கிப்பீடியாவில் ஒரு விஷயம் எழுதப்பட்ட பின்னர் அது பலரால் திருத்தப்பட்டு செம்மை பெறுகிறது. இதுவொரு முடிவேயில்லாத நேர் பின்னூட்ட வளையமாக (positive feedback loop) செயல்படுகிறது.


பங்குச்சந்தையில் இந்தக் கூட்ட மனப்பான்மை நேர்மமாகச் செயல்படாமைக்கு முக்கியமான காரணம், முடிவுகள் இங்கு தனிப்பட்டு எடுக்கப்படாமல் மந்தை மனப்பான்மையில் எடுக்கப்படுகின்றன. பஃபெட் போன்ற தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் முதலீட்டாளர்கள் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். பஃபெட் தசாப்தங்களில் (decades) சிந்தித்து தனியொரு கணத்தில் செயலாற்றுவார்.


Man is a social animal. மனிதன் அடிப்படையில் ஒரு சமூகப் பிராணி. கூட்டத்தின் கதகதப்பு அவனுக்குத் தேவைப்படுகிறது. 


இந்த மந்தை மனப்பான்மையின் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி? 


சுய மதிப்பை (self worth) வளர்த்தெடுங்கள். திறன்மிகு சிந்தனைகளை (critical thinking) மேற்கொள்ளுங்கள். வித்தியாசமான கோணங்களில் (diverse perspective) பாருங்கள். நிச்சயமின்மையை (uncertainty) ஆரத்தழுவிக் கொள்ளுங்கள். உள்முக மதிப்பீட்டாளராக (inner scorecard) மாறுங்கள். தனிப்பட்டு சிந்திக்கத் தயங்காதீர்கள்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்