பரஸ்பர நிதி கேள்வி பதில்- 2
பரஸ்பர நிதி கேள்வி பதில்- 2
கேள்வி: பரஸ்பர நிதி முதலீடுகள் ஆறிய கஞ்சியைக் குடிப்பது போல உள்ளது?
பதில்: முதலீடுகள் என்பவை கேளிக்கைகளோ அல்லது சாகச நடவடிக்கைகளோ அல்ல. அது புல் முளைப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது பூச்சு உலர்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பது போன்றதாகும். ஆக, ஆறிய கஞ்சி நல்லது.
கேள்வி: பங்கு முதலீடுகளுக்கு எங்கு பயிற்சி எடுக்கலாம்?
பதில்: பங்கு முதலீடுகளுக்கான Net practice என்ற வகையில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம்.
கேள்வி: Rupee cost averaging, Value averaging என்ன வேறுபாடு?
பதில்: பண சராசரி என்பது குறிப்பிட்ட அளவு பணத்தைக் குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்வது. மதிப்பு சராசரி என்பது சந்தையின் போக்கிற்கு ஏற்ப, சந்தை காளைத்தனமாக இருந்தால் குறைந்த அளவிலான பணம், சந்தை கரடித்தனமாக இருந்தால் அதிக அளவிலான பணம் என்ற வகையில் குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்வது. பண சராசரியை விட மதிப்பு சராசரி கொஞ்சம் கூடுதல் வருமானத்தைத் தருவதாக இருக்கும். அதற்காகக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.
கேள்வி: பரஸ்பர நிதிகள் பன்மடங்காளர் ஆகுமா?
பதில்: எத்தனையோ பரஸ்பர நிதித் திட்டங்களின் NAVக்கள் ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக உள்ளன. பரஸ்பர நிதி ஒன்றின் NAV ஆயிரம் ரூபாய் என்றால் அது 100 மடங்காளர் என்று அர்த்தம். ஆனால் இந்த நிலையை அடைய நீங்கள் அதன் வளர்ச்சித் தேர்வை (Growth option) எடுத்திருக்க வேண்டும். அதனினும் முக்கியமாக அதன் NAV ஆயிரம் ரூபாயை எட்டும் வரை பொறுமை காக்க வேண்டும்.
கேள்வி: பத்து ரூபாய் முக மதிப்புள்ள பரஸ்பர நிதி அலகுகளை அதன் முக மதிப்பில் வாங்கினால் 5000 ரூபாய்க்கு 500 கிடைக்கப்பெறும் . அதனையே சந்தையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 1000 ரூபாய் நிகர சொத்து மதிப்பைக் கொண்ட நிதிகளில் முதலீடு செய்தால் வெறும் 5 மட்டும் தானே கிடைக்கப்பெறும்?
பதில்: பரஸ்பர நிதி அலகுகளைப் பார்க்காதீர்கள். பரஸ்பர நிதியில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பதை மட்டும் பாருங்கள். 5000 ரூபாய் முதலீடு எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கிறது என்பதை மட்டும் கணக்கிடுங்கள். ஒரேயொரு Berkshire Hathaway பங்கின் மதிப்பு ஓராயிரம் பங்குகளின் மதிப்புக்குச் சமமானது. BRK நிறுவன A பங்குகளின் தற்போதைய விலை 704700 டாலர். இந்திய மதிப்பில் ஆறு கோடியே பதினேழு இலட்சத்து பதினேழு ஆயிரத்து ... மூச்சு முட்டுகிறது.
கேள்வி: வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனம் வெறும் 20 சதவீத CAGR மட்டுமே கொடுத்திருக்கிறது. அதனை விடக் கூடுதலாக பரஸ்பர நிதி மேலாளர் பீட்டர் லிஞ்ச் 27 சதவீத CAGR கொடுத்திருக்கிறார்?
பதில்: நீங்கள் குறிப்பிடுவது உண்மை தான். பீட்டர் லிஞ்ச் 13 வருடங்கள் என்ற கால அளவில் இந்த 27 சதவீத வருமானத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் பஃபெட் 60 ஆண்டுகளாக இந்த 20 சதவீத வருமானத்தைக் கொடுத்திருக்கிறார்.
கேள்வி: அதென்ன DRIP?
பதில்: Dividend Reinvestment Plan என்பது சுருக்கமாக DRIP என்று அழைக்கப்படுகிறது. இது, நிறுவனம் ஒன்றின் மூலமாகக் கிடைக்கப்பெறும் பங்காதாயம் (பங்கு ஈட்டு விகிதம்) பணமாக வழங்கப்படாமல் பங்குகளாக வழங்கப்படுவதான ஒரு வழிமுறையாகும். பொதுவாகப் பங்குகளின் விலையுடன் ஒப்பிடும் போது அவை மூலமாகக் கிடைக்கும் பங்காதாயம் ஒரு சதவீதம் அரை சதவீதம் என்ற குறை அளவுகளில் மட்டுமே இருக்கும். இந்தக் குறை அளவிலான பணத்தைக் கொண்டு பங்குகளை தசமங்களில் (fractional) மட்டுமே வாங்க முடியும். அதாவது ஒரு பங்கிற்கும் குறைவாக அரைப் பங்கு, கால் பங்கு, சமயங்களில் அதற்கும் குறைவாக ... ஆனால் நமது பங்குச்சந்தையில் தசம அளவுகளிலான பங்குகள் என்ற கருத்தாக்கம் இன்னமும் அறிமுகம் செய்யப்படவில்லை.
கேள்வி: துறை சார் நிதிகளில் எந்த முதலீட்டு உத்தியைக் கொண்டு வெற்றி பெறுவது?
பதில்: அவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பதன் மூலமாக ...
கேள்வி: பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய எந்தெந்தத் தகவல்களை முக்கியமாகப் பார்க்க வேண்டும்?
பதில்: நீண்ட கால அளவில் காளைச்சந்தையையும் கரடிச்சந்தையையும் அது எவ்விதம் கையாண்டிருக்கிறது, சந்தைக்குறியீட்டை விட அது எவ்வளவு அதிகம் சம்பாதித்திருக்கிறது என்பதான alpha போன்ற தரவுகளைப் பார்க்க வேண்டும். அதனினும் முக்கியமாக அதனுடைய மேலாண்மைச் செலவுகளைப் பார்க்க வேண்டும். சந்தை செயல்பாடு வரும் போகும். சந்தை செலவுகள் வந்தால் போகாது.
கேள்வி: நான்கு வெவ்வேறு SIP களில் முதலீடு செய்து வருகிறேன். அவைகளை ஒரே தேதியில் முதலீடு செய்வது நல்லதா? அல்லது வெவ்வேறு தேதிகளில் முதலீடு செய்வது நல்லதா?
பதில்: SIP களின் அடிப்படையே time diversification என்று சொல்லப்படும் காலப் பன்மயமாக்கம் தான். அதாவது வெவ்வேறு காலங்களில் முதலீட்டை மேற்கொள்வது. அந்த வகையில் நான்கு SIP க்களை வாரம் ஒன்றாக முதலீடு செய்வது சாலச் சிறந்தது. அதனினும் சிறந்தது ஒரேயொரு தரமான பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது. எளிமையே இறுதியான அதிநுட்பம்.
Comments
Post a Comment