நிலைப்பாடு அளவீடு
நிலைப்பாடு அளவீடு
Position Sizing
ஒரு பங்கின் மூலமாக நீங்கள் பெறும் வருமானத்தில் அதன் position sizing, அதாவது, அந்தப் பங்குகளை எவ்வளவு அதிக எண்ணிக்கையில் வாங்குகிறீர்கள் என்ற நிலைப்பாடு அளவு மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
வானத்திலிருந்து தங்கமாக மழை பெய்கிறது. அந்த மழையை எப்படி நீங்கள் பிடிப்பீர்கள்? ஒரு சிறிய குவளையிலா? அல்லது பெரிய ஒரு பாத்திரத்திலா?
கரடிச்சந்தையில் பங்கு மழை தங்கமாகப் பொழியும் போது அத்தகைய பங்குகளைப் பெரிய பெரிய அளவுகளில் வாங்குவது நிலைப்பாடு அளவீடு (Postion Sizing) என்பதாக அழைக்கப்படுகிறது.
அது 2008 ஆம் ஆண்டு. Sub prime crisis காரணமாக உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகள் தலைகுப்புற விழுந்து கிடந்த காலம். அப்போது அடியேன் 2100 ரூபாய்க்கு வாங்கிய ஐம்பது V Guard பங்குகளை உதாரணமாகக் கொண்டு இதனைப் புரிந்து கொள்ள முயலலாம்.
2008 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 50 பங்குகள் அதன் பங்குப்பிரிப்பு மற்றும் இலவசப் பங்களிப்பின் காரணமாகத் தற்போது 700 பங்குகள் ஆகியிருக்கிறது. நான் வாங்கிய 2100 ரூபாயைக் கொண்டு கணக்கிட்டால் 2024 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் 46.66 சதவீதம் வருகிறது. அதன் முதலீட்டுப் பெருக்கம் 125 மடங்கு.
இது வரை சரி. ஆனால், இந்தப் பங்குகளை ஐம்பது என்ற எண்ணிக்கையில் வாங்காமல் ஆயிரக்கணக்கில் நான் வாங்கியிருந்தால் அதன் மதிப்புப் பெருக்க சாத்தியக்கூறுகளைச் சற்றே யோசித்துப் பாருங்கள். அது எனது பங்குத்தொகுப்பில் ஆகப்பெரிய நேர்ம விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.
கிரிக்கெட்டில் ஆறு ஓட்டங்கள் அடிப்பதற்கு வாய்ப்பிருந்தும் ஒரு ஓட்டத்துடன் நின்று விடுவது போன்றது இது. கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஒரு பந்தில் ஆறு ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடியும். ஆனால் பங்குகளை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.
2008 ல் கரடியிடம் கடிபட்டு எனது பங்குத்தொகுப்பு சின்னாபின்னம் ஆகியிருந்தது. அந்த சூழலில் எதிர் நீச்சல் போட்டுப் பங்குகளை வாங்க பணத்தடை இல்லாவிட்டாலும் மனத்தடையாக இருந்தது.
V Guard பங்கின் விலை 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதிப்பு முதலீடாக வர்த்தகம் ஆகவேயில்லை. தங்கமழை மீண்டும் பொழியவேயில்லை.
நிலைப்பாடு அளவைக் கணிசமான அளவில் எடுக்காவிட்டாலும் அதனை இன்னொரு வகையில் அதிகரித்துக் கொள்ளலாம். V Guard போன்ற நிறுவனங்கள் வளர்ச்சியின் மீதான வளர்ச்சி காண்பதால் அவற்றின் பங்குகள் இந்த நிலையை எட்டியுள்ளன. வளர்ந்து வரும் இத்தகைய நிறுவனப்பங்குகளைத் தொடர்ந்து பேணிப் பாதுகாத்து வந்தால் பங்குத்தொகுப்பில் அவை இன்னமும் கூட ஒரு நேர்ம விளைவை ஏற்படுத்த முடியும். அந்த வகையில் பங்கு ஒன்றின் பன்மடங்காளர் பயணத்தில் பங்கு பெறுவது மறைமுகமாக அந்தப் பங்கின் நிலைப்பாடு அளவீட்டை அதிகரிக்க உதவுகிறது.
பொதுவாக ஒரு பங்குத்தொகுப்பில் ஐந்து சதவீதத்திற்கும் மேலாக ஒரு பங்கு வளர்ந்து வந்ததென்றால் அதனை விற்று ஐந்து சதவீதத்திற்குள்ளாக மறுசமன் செய்ய வேண்டும் என்ற விதிமுறையில் எனக்கு உடன்பாடில்லை. இந்த விதிமுறை பரஸ்பர நிதித்தொகுப்பின் பொருட்டு வரையறுக்கப்பட்டதாகும். வாரன் பஃபெட்டின் குருவான பெஞ்சமின் கிரகாமின் பங்குத்தொகுப்பின் மூலமான மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேலாக Geico பங்குகள் மூலமாக மட்டும் கிடைக்கப்பெற்றது இங்கு கவனம் பெறுகிறது. Too much of a good thing is a good thing. அளவற்ற நன்மை அதிக அளவீட்டிலும் ஆசிர்வாதத்தைத் தரும்.
ஆக, பங்குகளை இனங்கண்டு வாங்குவது ஒரு பக்கம். அவற்றைக் கணிசமான அளவுகளில் வாங்குவது மிகவும் முக்கியமான இன்னொரு பக்கம். இதுவே நிலைப்பாடு அளவீடு என்று அழைக்கப்படுகிறது.
அடுத்த முறை பங்குச்சந்தையில் தங்க மழை பொழியும் போது உங்கள் பங்குத்தொகுப்பின் தற்காலிக மதிப்பிழப்பைப் புறக்கணித்து மனம் நிறைய பங்குகளை வாங்க வேண்டுகிறேன்.
Comments
Post a Comment