வாழ்க்கை பதில்கள் - 1
வாழ்க்கை பதில்கள் - 1
கேள்வி : வேலை-வாழ்க்கை சமநிலையை எப்படி அடைவது?
பதில் : நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதனைப் பிடித்துச் செய்தால் அல்லது பிடித்த வேலையைச் செய்தால் இந்த வேலை-வாழ்க்கை சமநிலை என்பதே உங்களுக்குத் தேவைப்படாது. வேலையே உங்கள் வாழ்க்கையாகி விடும்.
கேள்வி : எல்லாவற்றையும் பொருளாதாரக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டுமா?
பதில் : அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு பொருளாதாரம் இருக்கிறது. இளமையில் கருகருவென்று அடர்த்தியாக இருக்கும் முடி வயதானதன் பின்னர் நரைத்தும் கொட்டியும் விடுகிறது. இது ஏனென்றால் இளமையாக இருக்கும் போது எதிர் பாலினத்தைக் கவரும் பொருட்டு இயற்கை தன் பொருள் ஆதாரத்தை இந்த மாதிரியான அழகுபடுத்தும் செயல்களில் செலவிடுகிறது. வயதானதும் இத்தகைய தேவைகள் குறைகின்றன. இதயம் போன்ற பிற முக்கியத் தேவைகளுக்கு இந்த ஆதாரம் செலவிடப்படுகிறது. எல்லாவற்றுக்கும் பொருளாதாரம் தான் ஆதாரம். அதனைப் பணத்தை மட்டும் கொண்டு பார்க்காமல், அதனினும் மேலான ஒரு பார்வையைக் கொண்டு நோக்க வேண்டும்.
கேள்வி : மற்றவர்களைப் பார்த்து ஏதோ ஒரு வகையில் பொறாமைப்படுகிறேன். இதிலிருந்து எப்படி விடுபடுவது?
பதில் : நான் வாழ்க்கையில் யாரைப் பார்த்தும் எப்போதும் பொறாமை கொண்டதில்லை என்று கண்டிப்பாகச் சொல்ல மாட்டேன். எனக்கும் இந்தப் பொறாமை கொள்ளும் பழக்கம் இருக்கிறது. எனது குருமார்களில் ஒருவரான Naval Ravikant சொன்ன உத்தியைக் கையாண்டு இந்தப் பழக்கத்தைக் களைய முயன்று வருகிறேன்.
எனது இன்னொரு குருவான Sanjay Bakshi கூறுகிறார் : ' ஏழு கொடிய பாவங்கள் - பெருமை, பெருந்தீனி, காமம், கோபம், பேராசை, சோம்பல் மற்றும் பொறாமை - இதில் ஒவ்வொரு பாவத்திலும் ஒரு சிறு நன்மை, ஒரு சிறு உயர்வு நிலை உள்ளது. ஒரே ஒரு பாவம் மட்டும் தீமையை மட்டும் கொண்டுள்ளது, அது எது? பெருமையா? இல்லை. அதீத பெருமிதமுள்ள நபர் தனது நடத்தையிலிருந்து சில ஆதாயங்களைப் பெறுகிறார். அதே போல பெருந்தீனி. ஒரு பெருந்தீனி தனது பெருந்தீனியான நடத்தைக்குப் பிறகு நோய்வாய்ப்படலாம், ஆனால் சாப்பிடும் தருணத்தில், அவர் உண்மையில் அதை விரும்புகிறார். காமம்? நிச்சயமாக இல்லை - இங்கே விளக்கங்கள் தேவையில்லை! கோபமா? மீண்டும் இல்லை. எப்போதாவது ஒருவரின் கோபத்தை வெளிப்படுத்துவது எவ்வளவு நன்றாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பேராசையா? மீண்டும் இல்லை, பேராசை நல்லது. Greed is good. சோம்பலா? சோம்பேறி நன்கு தூங்கி வாழ்க்கையை அனுபவிக்கிறார். ஆனால் பொறாமை ... அதில் எந்த உயர்வு நிலையும் இல்லை. வெறும் கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது '
சரி, Naval Ravikant கூறும் உத்தி என்னவென்று பார்க்கலாம். நீங்கள் யாரையாவது பார்த்துப் பொறாமைப்படுவதாகக் கொள்ளலாம். உதாரணமாக வாரன் பஃபெட்டை அவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பார்த்து நீங்கள் பொறாமை கொள்கிறீர்கள். நீங்கள் பஃபெட்டின் பணத்தையும் உங்கள் வசம் இருக்கும் பணத்தையும் கைமாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. இந்தப் பணத்தை மட்டும் சில்லறை விற்பனை என்ற முறையில் நீங்கள் மாற்ற முடியாது. மொத்த விற்பனை என்ற வகையில் வாரனின் வயது (94) உட்பட அனைத்தையும் நீங்கள் வாங்க வேண்டும். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ தினம் மூன்று வேளை நீங்கள் கோககோலா குடிக்க வேண்டும். இன்னும் பஃபெட் செய்யும் எல்லா வேலைகளையும் நீங்களும் செய்ய வேண்டும். அவரை மாதிரி சிக்கனத்தைக் கைக்கொள்ள வேண்டும். அவரை மாதிரி பெரும்பாலான நேரம் படிக்க வேண்டும். மிகவும் முக்கியமாகச் சிந்திக்க வேண்டும். அவருக்கும் ஏதாவது உடல் உபாதைகள் இருக்கும். மனக்கிலேசங்கள் இருக்கும். அதுவும் இனி உங்களைச் சார்ந்தது. சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் யாரைப் பார்த்துப் பொறாமை கொள்கிறீர்களோ அவராகவே ஆகி விட வேண்டும்.
சின்ன வயதில் கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அந்த ஊரில் ஒரு பிச்சைக்காரனும் இருந்தான். பிச்சைக்காரனுக்கு ராஜாவின் மேல் பொறாமையான பொறாமை. நம் வாழ்க்கை இப்படிப் பாலைவனமாக ஆகி விட்டதே என்று ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்தவாறு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அரைகுறைத் தூக்கத்தில் தேவதை ஒன்று அவன் கனவில் தோன்றி ஒரு மணி நேரம் உன்னை ராஜாவாக ஆக்கி விடுகிறேன், நீ அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து பார் என்று சொல்லி விட்டு மறைந்தது. அடுத்த கணம் பிச்சைக்காரன் ராஜாவின் மலர் மஞ்சத்தில் படுத்தவாறு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். பக்கத்து நாட்டு ராஜா படையெடுத்து வரப் போவதாக ஒரு செய்தி வந்திருந்தது. மகன் வேறு எப்போது பார்த்தாலும் அந்தப்புரமே கதியென்று கிடக்கிறான். சேனாதிபதி, உள்நாட்டுக் கலகம் ஒன்றில் ஈடுபடப் போவதாக ஒரு செய்தி உலா வந்த வண்ணம் இருந்தது. பிச்சைக்காரன் திடுதிப்பென்று விழித்துக் கொண்டான். அப்பாடா என்றிருந்தது. கெட்ட கனவைக் கண்டு விழித்ததும் தற்போதைய வாழ்க்கை ஒரு பத்திர உணர்வைக் கொடுத்து விடுகிறது.
ஆண்டி முதல் அரசர் வரை அனைவருக்கும் பிரச்னைகள் இருக்கும். அரசருக்குக் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.
Comments
Post a Comment