சந்தை (வாழ்க்கை) மொழிகள்
சந்தை (வாழ்க்கை) மொழிகள்
1.Those who cannot remember the past are condemned to repeat it .
கடந்த காலத் தவறுகளை நினைவு கூராதவர்கள் அதனை மீண்டும் செய்யும் படி தண்டிக்கப்படுவார்கள் .
பங்குச்சந்தையில் அவ்வப்போது குமிழிகள் [bubbles] தோன்றி மறைந்த வண்ணமாகவே இருக்கும் . Tulip bubble, South sea bubble, Mississippi bubble, Railway bubble, The Florida real estate bubble, Dot com bubble, Sub prime bubble என்று பங்குச்சந்தைக் குமிழிகளின் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது . இந்த வரலாறு குறித்த ஒரு தெளிவு நம்மிடம் இருந்தால் இனிமேல் பங்குச்சந்தையில் வரவிருக்கும் குமிழிகளில் நாம் பங்கு பெறாமலும் மேலும் அந்தக் குமிழி வெடிப்பை நமக்குச் சாதகமாக எவ்விதம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறியப் பெறலாம் . இவ்வாறு மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வது நாம் தவறு செய்து கற்றுக் கொள்வதை விட விலை மலிவான மதிப்பு முதலீடாகும் . எல்லாம் சரி , பங்குச்சந்தையில் அடிக்கடி ஏன் குமிழிகள் உண்டாவதும் வெடித்துச் சிதறுவதுமாக இருக்கின்றன ? பங்குச்சந்தை மட்டுமல்ல , எல்லாச் சந்தைகளும் மனித உணர்வுகளால் நெய்யப்பட்டவை . மனித உணர்வுகள் இருக்கும் வரை எல்லாச் சந்தைகளிலும் குமிழிகள் வெடித்துச் சிதறிய வண்ணமாகவே இருக்கும் . இந்த மாதிரி ஒவ்வொன்றின் காரண காரியத்தையும் தெரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் செய்வதை நாம் நகல் எடுக்கக்கூடாது . பகவான் ஓஷோ சொன்ன ஒரு கதையை என்னுடைய பாணியில் பகிர்ந்து கொள்கிறேன் . ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார் . அவர் அவ்வப்போது ஆன்மிக சொற்பொழிவாற்றுவது வழக்கம் . அந்த சொற்பொழிவு நடைபெறுவதற்கு முன்னர் அங்கிருந்த தூண் ஒன்றில் பூனை ஒன்று கட்டப்படுவது வழக்கமாக இருந்தது . சமயங்களில் பூனை கிடைக்காவிட்டால் சொற்பொழிவு தாமதமாகக் கூடத் தொடங்கப்பெறும் . அந்த அளவுக்கு இந்தப் பூனை கட்டும் சடங்கு மிகவும் முக்கியமாக ஒன்றாக இருந்தது . ஒரு சமயம் இந்தச் சொற்பொழிவுக்குச் சென்ற மதிப்பு முதலீட்டாளர் (Value Investor) ஒருவருக்கு இந்தப் பூனை கட்டும் சடங்கு கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டது . மதிப்பு முதலீட்டாளர்கள் எதனையும் அடிப்படைப் பகுப்பாய்வு செய்து பழக்கப்பட்டவர்கள் அல்லவா ? இந்தப் பூனை கட்டுதலின் அடிப்படை என்ன என்று நமது மதிப்பு முதலீட்டாளர் தோண்டித் துருவத் தொடங்கினார் . அந்தத் துறவியின் குரு பக்கத்து ஊரில் இருப்பதாகச் சொன்னார்கள் . அவரிடம் இந்தப் பூனை குறித்து மியாவினார் . அவருக்கும் எதுவும் தெரியவில்லை . தொன்றுதொட்டு இந்தச் சடங்கு நடைபெற்று வருவதாகக் கூறி முடித்துக் கொண்டார் . நம்மவர் விடவில்லை . யாரிடம் கேட்டால் இந்தப் புதிருக்கு விடை கிடைக்கும் ? பத்து வருடங்களுக்கு முன்னர் இமயமலை சென்ற தலைமைக்குரு அடுத்த வாரம் வரவிருப்பதாகவும் அவரிடம் கேட்டால் ஒருவேளை விடை கிடைக்கலாம் என்றும் பதில் கிடைத்தது . தலைமைக் குரு சொன்னது . ' நான் குட்டிக் குருவாக இருந்த போது ஒரு பூனையை வளர்த்து வந்தேன் . நான் சொற்பொழிவாற்றும் போது அது குறுக்கும் நெடுக்குமாக ஓடி தொந்தரவு செய்ததால் அதைத் தூணில் கட்டுவது வழக்கம் ' ஆக தேவையில்லாத பூனைகளை வாழ்க்கை என்னும் தூணில் கட்டாதீர்கள் .
2.You cannot be anything if you want to be everything .
எல்லாமாகவும் ஆக வேண்டுமென்றால் எதுவாகவும் ஆக முடியாது .
உங்களுடைய திறமை வளையத்தைக் (circle of competence) கண்டறியுங்கள் . அதில் முதலீடு செய்யுங்கள் . அந்தத் திறமை வளையத்தின் எல்லைகள் மிகவும் முக்கியமானவை . அதை எக்காரணம் முன்னிட்டும் தாண்டக்கூடாது . மற்றபடி அந்த எல்லைகளை நாட்பட விரிவுபடுத்தலாம் . நீங்கள் மதிப்பு முதலீட்டாளராக இருக்கும் பட்சத்தில் அந்த உத்தியையே கைக்கொள்ளுங்கள் . அது சம்பந்தமாகப் படியுங்கள் . அதன் எல்லைகளை அகலப்படுத்துங்கள் . மதிப்பு முதலீடு சம்பந்தமாக மட்டும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன . மதிப்பு முதலீட்டின் ஒரு அங்கமாகிய பங்கு ஈட்டு விகித முதலீடு (dividend yield investing) குறித்துக் கூட ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன . இத்தகைய நூல்களைப் படிப்பதன் மூலம் ஒரு துறை சார்ந்த உங்கள் பாண்டித்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் . மாறாக வேக முதலீட்டாளராக (Momentum Investor) மாற வேகம் கொள்ளாதீர்கள் . வேக முதலீட்டில் நீங்கள் தோற்றால் நஷ்டம் . வென்றால் அதை விட நஷ்டம் .
3.I wasn't interested in making lot of money , but I was interested in making a lot of living .
நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நான் ஆர்வம் கொள்ளவில்லை . நிறைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று மட்டுமே ஆர்வம் கொள்கிறேன் .
நிதி விடுதலை (financial independence) என்பதன் அர்த்தம் பணம் சம்பாதிப்பது என்பதல்ல . அவ்வாறு சம்பாதிப்பதன் மூலமாக நமக்குப் பிடித்த வாழ்க்கையை வாழலாம் என்பது தான் அதன் பொருள் . நிதி விடுதலை ஒரு நாளின் 24 மணி நேரத்தையும் நமக்கு வழங்குகிறது . ஒருவர் , நிறுவனம் ஒன்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்ப்பதாக வைத்துக் கொள்வோம் . மாதச் சம்பளம் 10000 ரூபாய் என்று கொண்டால் ஞாயிறு விடுமுறை நீங்கலாக அவருடைய ஒரு நாள் சம்பளம் 383 ரூபாய் வருகிறது . வேறு மாதிரி சொல்வதானால் அவருடைய ஒரு நாளை 383 ரூபாய்க்கு விற்கிறார் . மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுபவர் அவருடைய ஒரு நாளை 3833 ரூபாய்க்கு விற்கிறார் . அலுவலகம் செல்பவர்களுக்கு மட்டுமல்ல , மருத்துவர் , பொறியாளர் மற்றும் வழக்கறிஞர் முதலானோருக்கும் இது பொருந்தும் . ஒரு நாள் வேலைக்கோ தொழிலுக்கோ செல்லவில்லை என்றால் இந்த வருமானம் கிடைக்கப்பெறாது . மேலும் அலுவலக வேலைக்குச் செல்பவர்களும் சரி அல்லது தனித்தொழில் புரிபவர்களும் சரி அவர்கள் தத்தமது வேலையிலோ அல்லது தொழிலிலோ தீராக்காதல் கொண்டிருப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது . நிதி விடுதலை இந்த 10 - 5 மற்றும் பிடிக்காத வேலை / தொழிலிருந்து உங்களுக்கு விடுதலை அளிக்கிறது . நிதி விடுதலை பெற்ற பின்னர் உங்களுக்குப் பிடித்த வேலையை உங்களுக்குப் பிடித்த பாணியில் பார்க்கலாம் . வேலைகளை விரும்பிச் செய்யும் போது அதன் ROI (Return on Investment) பன்மடங்கு கூடும் . நிதி விடுதலை என்பது நேர விடுதலை .
4. It's not my speed that counts ... It's my sense of purpose .
என்னுடைய வேகத்தைக் கணக்கில் கொள்ள வேண்டாம் . என்னுடைய நோக்கத்தின் ஞானமே முக்கியமானது .
பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கவும் விற்கவும் அவசரம் காட்டாதீர்கள் . நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கு பெற பங்குச்சந்தை ஒரு வழி . அவ்வளவு மட்டுமே . கரடிச்சந்தையில் பங்குகள் அவற்றின் உள்ளார்ந்த மதிப்பிற்கும் கீழாக வர்த்தகமாகும் போது வாங்குங்கள் . அவ்வாறு வாங்கிய பங்குகளை விற்கவும் அவசரம் கொள்ள வேண்டாம் . பங்குச்சந்தையில் 100 மடங்காளர்கள் (100 baggers) 500 மடங்காளர்கள் , 1000 மடங்காளர்கள் ஆகிய பங்குகள் எல்லாம் வர்த்தமாகிக் கொண்டிருக்கின்றன . பங்குகளை இரண்டு மடங்கானதும் விற்று விட்டால் ஆயிரம் மடங்காளர்களை எவ்விதம் கைப்பற்ற முடியும் ? கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் , ஒவ்வொரு பந்தையும் கணித்து விளையாடுவதில் தான் என் கவனம் இருக்கும் , மற்றபடி நான் ஸ்கோர் போர்டைப் பார்க்க மாட்டேன் என்று சொன்னது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . ஒவ்வொரு பந்தையும் , மன்னிக்கவும் , பங்கையும் கணித்து வாங்குங்கள் . கவாஸ்கரை ஆட்டமிழக்கச் செய்ய ஒரு பத்து பேர் முனைந்த வண்ணம் இருப்பார்கள் . இந்தப் பங்கு ஆட்டத்தில் நீங்கள் தான் உங்கள் எதிர் அணி . நீங்கள் என்றால் உங்கள் உணர்வுகள் . சந்தையை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பது மட்டுமே உங்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் .
5.In buyer's market , the best is still in the seller's market .
சிறந்தது , வாங்குபவர்களின் சந்தையில் இல்லை . அது எப்போதும் விற்பவர்களின் சந்தையிலேயே உள்ளது .
2000 ல் பங்குச்சந்தையில் தகவல் தொழில்நுட்பக் குமிழி (IT Bubble) வெடித்துச் சிதறியது . 1999 ல் buyers market என்று அழைக்கப்படும் வாங்குபவர்களுக்கான சந்தையில் தகவல் தொழில்நுட்பத் துறைப் பங்குகள் உச்சபட்ச PE அளவுகளில் வர்த்தமாகிக் கொண்டிருந்தன . அதே சமயம் sellers market என்று அழைக்கப்படும் விற்பவர்களுக்கான சந்தையில் old economy stocks என்று அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை சாராத தரமான பங்குகள் வாங்குவார் யாருமின்றி அடிமாட்டு PE அளவுகளில் விற்பனையாகிக் கொண்டிருந்தன . மதிப்பு எப்போதும் விற்பவர்களின் சந்தையிலேயே உள்ளது .
Comments
Post a Comment