உறுதிப்பாடு சாய்வு
உறுதிப்பாடு சாய்வு
Confirmation bias
நண்பர் ஒருவர் கார் ஒன்றை வாங்குவதாக முடிவு செய்திருக்கிறார் . அதன் பின்னர் எங்கு பார்த்தாலும் அந்தக் குறிப்பிட்ட ரக கார்கள் ரொம்பவும் தென்படுவதாகக் கூறிக் கொண்டார் . தவிர்க்க இயலாமல் நடத்தை நிதியியலின் ஒரு அங்கமான உறுதிப்பாடு சாய்வு ஞாபகத்திற்கு வந்தது .
உறுதிப்பாடு சாய்வு என்பது என்ன ? பொதுவாக வாழ்க்கையிலும் குறிப்பாக முதலீடுகளிலும் இதனுடைய பாதிப்பு என்னவாக இருக்கும் என்று சுருக்கமாகப் பார்க்கலாம் .
மருத்துவர் , நோயாளி ஒருவரை ஆராயும் போது ஏதாவது வியாதி ஒன்றின் மீது கொண்ட சாய்வின் காரணமாக என்ன வியாதி என்பதைத் தவறாகக் கணிக்கலாம் . நீதிபதி, குற்றவாளி ஒருவர் குறித்து கெட்டதாகவோ அல்லது நல்லதாகவோ முன் முடிவு ஏதேனும் கொண்டால் அவர் கொடுக்கும் தீர்ப்பை அது பாதிக்கும் . மனித உறவுகளிலும் இது வெவ்வேறு விதமாக வெளிப்படும் . உங்கள் அப்பாவுக்கு அவரின் அப்பாவைப் பிடிக்காது என்றால் உங்களுக்கும் தாத்தாவைப் பிடிக்காது . அவர் செய்வதெல்லாம் தவறாகவே தெரியும் . உறுதிப்பாடு சாய்வுக்கு உள்ளாகாமல் இருந்தால் தான் அவர் பக்க நியாயம் உங்களுக்குப் புலப்படும் .
காப்பீடு ஒரு சிறந்த முதலீடு என்று ஒருவர் நினைப்பதாகக் கொள்ளலாம் . அவர் காப்பீடுகளில் முதலீடு செய்வதைப் பார்த்து வளர்ந்த அவரின் மகனும் காப்பீடுகளில் கேள்வி கேட்காமல் முதலீட்டை மேற்கொள்வார் . IRR என்பதான ஒரு நிதி விகிதம் இருக்கிறது . அதாவது Internal Rate of Return . அது எந்த வகையான காப்பீடாக இருந்தாலும் சரி இந்த IRR என்பது 6 சதவீதத்தைத் தாண்டவே தாண்டாது . பணவீக்கம் 6 சதவீதம் என்றால் காப்பீடுகளுக்கான IRR பூஜ்யமாகி விடும் .
அதே மாதிரி தங்கம் என்பது ஒரு தங்கமான முதலீடு என்று தந்தை நினைப்பதைப் பார்த்து வளர்ந்த தனயனும் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்பவராக மட்டும் இருப்பார் . தங்கம் நீண்ட நெடுங்கால அளவில் பணவீக்கத்தை ஒட்டிய வருமானத்தை மட்டுமே தரும் . கடந்த இரண்டு மற்றும் ஐந்து வருடங்களில் தங்கம் பணவீக்கத்தை விஞ்சிய வருமானத்தைக் கொடுத்திருக்கிறது என்று பார்ப்பது உறுதிப்பாடு சாய்வின் ஒரு அங்கமே . அதாவது தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்ற நம் எண்ணத்தை உறுதிப்படுத்தும் தரவுகளின் பக்கம் மட்டும் சாய்வது . 1980 ல் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி மீண்டும் சரியத் தொடங்கியது . 1980 ன் உச்சத்தைத் தங்கம் மீண்டும் அடைய 28 ஆண்டுகள் ஆனது .
பங்குச்சந்தைக்கு வருவோம் . சந்தை முதலீடுகள் அபாயகரமானவை என்பதான எண்ணப்போக்கு கொண்டவர்கள் சந்தையைச் சந்தேகக் கண் கொண்டு மட்டுமே பார்த்த வண்ணம் இருப்பார்கள் . இன்னமும் ஹர்ஷத் மேத்தா ஊழல் குறித்துப் பேசி சந்தைப் பக்கம் எட்டிப் பார்க்காதவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள் . ஹர்ஷத் மேத்தா ஊழலின் பின்னர் சந்தையின் சட்ட திட்டங்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டு விட்டன . மேலும் காப்பான் பெரியவனா அல்லது கள்ளன் பெரியவனா என்றவாக்கில் இருவருக்கும் இடையில் நடக்கும் இந்தப் போட்டி என்றென்றைக்கும் முற்றுப் பெறாது . நம்மை விட சட்ட திட்டங்களில் பெயர் கண்ட அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் இதே நிலை தான் .
ஹர்ஷத் மேத்தா ஊழல் முடிந்ததும் இந்தியச் சந்தையில் தகவல் தொழில் நுட்பக் குமிழி வெடித்தது . பின்னர் உலக வர்த்தக மையக் குண்டு ... சப் ப்ரைம் குண்டு ... கோவிட் 19 ... ஆனால் இத்தனைக்கும் இடையிலும் இந்தியப் பங்குச்சந்தையின் முதன்மைக் குறியீடான சென்செக்ஸ் 6000 லிருந்து 60000 வரையிலான தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்திருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் உறுதிப்பாடு சாய்வுக்கு நீங்கள் ஆட்பட்டிருப்பதாக அர்த்தம் . அவைகள் குருடாக இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் கண்கள் பார்ப்பதில்லை .
தனிப்பட்ட இந்த விருப்பு வெறுப்புகளை ஊதிப் பெரிதாக்கும் வேலையை சமூக வலைதளங்கள் செவ்வனே செய்கின்றன . பங்குச்சந்தை மீதான எதிர்மறைக் கருத்துக்களை மட்டும் நீங்கள் தொடர்ந்து இணையத்தில் படித்து வந்தால் அது சம்பந்தமான கருத்துக்கள் மட்டுமே ஊட்டமாக (feeds) உங்களுக்குக் காட்டப்படும் .
சரி , இந்த உறுதிப்பாடு சாய்விலிருந்து எப்படி விடுதலை பெறுவது ?
எதனையும் திறந்த மனதுடன் அணுகுவது , எந்த ஒரு கருத்துக்கும் மாற்றுக் கருத்து என்ன என்று ஆராய்வது , எதிரெதிர் கருத்துக்களில் கவனம் கொண்டு அதிலிருந்து புதிய தீர்வுகளை நோக்கி முன்னேறிச் செல்வது இதற்கான சில தீர்வுகளாகும் .
Comments
Post a Comment