பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது எப்படி ?
பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது எப்படி ?
(பதில் சொல்வதற்கு முன் ஒரு சிறிய முன் குறிப்பு : கூறியது கூறல் என்பதாக இந்தப் பதிவை எடுத்துக் கொள்ள வேண்டாம் . ஏற்கெனவே படித்த பாடங்களை ஒருமுறை திருப்பிப் பார்த்ததாகக் கொள்ளவும்)
மாதம் உங்களால் எவ்வளவு பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும் என்பதை முதலில் தீர்மானிக்கவும் . அது 5000 ரூபாயாகவும் இருக்கலாம் . 50000 ரூபாயாகவும் இருக்கலாம் . ஆனால் இந்தப் பணத்தை நீங்கள் தொடர்ந்த வாக்கில் முதலீடு செய்ய வேண்டும் . முதலில் 50000 என்று தொடங்கி விட்டு நாளடைவில் அதனை 5000 என்று குறைக்காமல் மாதம் 3000 என்ற வாக்கில் தொடர்ந்து முதலீடு செய்வது இன்னும் நல்லது . மாதம் 20000 ரூபாய் முதலீடு செய்ய முடியுமென்றால் அதனை 5000 என்று வாரக்கணக்கில் நான்கு முறையாக முதலீடு செய்வது இன்னும் நல்லது . பங்குச்சந்தையின் ஆதார குணம் என்னவென்றால் அது ஏறி இறங்கும் தன்மை படைத்தது . இந்த ஏறி இறங்கும் தன்மையை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரு உத்தியே time diversification என்று சொல்லப்படும் இந்தத் தொடர்ந்த வாக்கிலான முதலீடு . இவ்வாறு முதலீடு செய்தால் பங்கின் விலைகள் அதிகமாக இருக்கும் போது குறைந்த எண்ணிக்கையிலான பங்குகளை வாங்கவும், பங்கின் விலைகள் குறைவாக இருக்கும் போது அதிக எண்ணிக்கையிலான பங்குகளை வாங்கவும் இயலும் (Rupee Cost Averaging)
நீண்ட காலத்திற்கு விட்டு வைக்கக்கூடிய பணத்தை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் . குறுகிய காலத்திற்கு நம்மிடம் இருக்கப் பெறும் பணத்தைச் சந்தையில் முதலீடு செய்து சம்பாதிக்க முயல்வது அபாயத்தை விலை கொடுத்து வாங்குவதாகும் . வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று சுலபமாகச் சொல்லி விடலாம் . சந்தையில் அவ்விதம் கணிக்க முடியாது . வாழ்க்கையில் பத்து வருடங்கள் கழித்து என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது . சந்தையில் இதனைச் சுலபமாகக் கணித்து விடலாம் . அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக (ஒரு ரூபாய் பெறுமானமுள்ள பங்கை ஐம்பது காசுக்கு வாங்குவது) வாங்கிய பங்குகள் கட்டாயம் உயர் விலையில் வர்த்தகமாகும் . எவ்வளவு தான் மதிப்பு முதலீடாகப் பங்குகளைப் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் அது குறுகிய கால அளவில் நீங்கள் வாங்கிய விலைக்கும் குறைவாக (வாங்கிய மதிப்பிற்கு அல்ல . விலை வேறு . மதிப்பு வேறு) வர்த்தகமாவது அன்றாட நடைமுறை . Quotational loss என்று சொல்லப்படும் சந்தையின் இந்தத் தற்காலிக மதிப்பிழப்பை நீங்கள் கடந்து செல்லப் பழக வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும் .
இவ்வாறு வாங்கிய பங்குகள் வருடாவருடம் பங்காதாயங்களை (dividend) வழங்கும் . முதல் சில வருடங்களில் இந்தப் பங்காதாயங்கள் ஒரு சதவீதம் என்ற குறைந்த அளவுகளில் மட்டுமே கிடைக்கப்பெறும் . வங்கி நிரந்தர வைப்புத் திட்டங்களில் கிடைக்கும் 6 சதவீத வட்டியுடன் இதனை ஒப்பிடக்கூடாது . அந்த ஆட்டத்தின் விதிமுறைகள் வேறு . இந்த ஆட்டத்தின் விதிமுறைகள் வேறு . வங்கி நிரந்தர வைப்புத் திட்டங்களில் மொத்தப் பணத்தையும் ஒரே தடவையாக முதலீடு செய்து விடலாம் . ஏனெனில் நீங்கள் முதலீடு செய்த நாளிலிருந்து வட்டி வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும் . வங்கி நிரந்தர வைப்புத் திட்டங்களில் தற்போது ஆண்டாண்டு ஆறு சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கிறது . ஆனால் உங்கள் ஆரம்ப முதலீடு 50000 என்றால் முடிவில் கிடைக்கும் தொகையும் அதே 50000 மட்டுமே . பங்குகளில் இது சற்று சுவாரஸ்யமாக மாறுகிறது . வருடாவருடம் கிடைக்கும் பங்காதாயங்கள் கூடிய வண்ணமாக இருக்கும் . ஒரு கட்டத்தில் வங்கி வைப்புத் திட்டங்களை விட அதிக வருமானம் கிடைக்கும் . இன்னும் சில வருடங்கள் உங்கள் முதலீட்டைத் தொடர்ந்தால் 20 சதவீத பங்கு ஈட்டு விகிதங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாகக் கிடைக்கப்பெறும் . இந்த உயர்ந்த அளவிலான பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய பங்கின் விலைகளும் அதிகரித்த வண்ணமாக இருக்கும் . வேறு மாதிரி சொல்வதானால் நீங்கள் முதலீடு செய்த ஐயாயிரமோ அல்லது ஐம்பதினாயிரமோ அதுவும் கூடத் தொடங்கும் . பங்கு முதலீட்டிற்கும் வங்கி வைப்பு முதலீட்டிற்குமான மிக முக்கியமான வேறுபாடு இது . இந்த உயர்ந்து வரும் பங்காதாயங்களுக்கு வானமே எல்லையாகும் . இந்தப் பங்காதாயங்களைத் தொடரும் பங்கு விலைகளும் விண்ணை முட்டிச் செல்லும் .
1946 ல் ... இந்த 1946 கதையெல்லாம் வேண்டாம் . 1946 ல் நாங்களெல்லாம் பிறக்கவேயில்லை என்று சொல்பவர்களுக்காக என் கதையையே சொல்கிறேன் . ஆனால் இது கதையல்ல , நிஜம். V Guard நிறுவனப் பங்கை 2008 ஆம் ஆண்டு நான் வாங்கிய போது எனக்கான பங்காதாயம் 3 சதவீதத்திற்கும் குறைவாகக் கிடைத்ததாக ஞாபகம் . தற்போதைய பங்காதாயம் 43 சதவீதம் . பங்கின் விலை 85 மடங்கு கூடியிருக்கிறது . 1946 ல் பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்கை அதன் முதல் பொது வெளியீட்டில் (Initial Public Offer) 1000 ரூபாய்க்கு வாங்கி இன்றளவும் வைத்திருப்பவர்களுக்கு ஆறு இலக்கப் பங்காதாயங்கள் (517104 %) கிடைத்த வண்ணம் உள்ளன . இந்த ஆறு இலக்கப் பங்காதாயங்களைக் கொடுக்க வல்ல பங்குகளின் விலையும் 350231 மடங்கு கூடியிருக்கிறது . (பங்காதாயம் மற்றும் முதலீட்டுப்பெருக்கம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்ட பஜாஜ் பின்செர்வ் மற்றும் பஜாஜ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குமானது) பஜாஜ் ஆட்டோ மட்டுமல்ல , தரமான நிறுவனங்கள் அனைத்தும் இம்மாதிரி பங்காதாயங்களை வழங்குவதிலும் அதன் வாயிலான முதலீட்டுப் பெருக்கத்தை அடைவதிலும் வல்லமை பெற்றவைகளாக உள்ளன . கீழ்க்கண்ட பட்டியலைப் பார்க்கவும் .
ITC
IPO வெளிவந்த ஆண்டு
1976
பங்காதாயம் (2022 ஆம் வருடத்திற்கானது)
31671 %
முதலீட்டுப் பெருக்கம் (நாளது தேதி வரையானது)
9060 மடங்கு
CAGR 21.89 % (முதலீட்டுப் பெருக்கத்திற்கு மட்டும்)
HDFC
IPO வெளிவந்த ஆண்டு
1977
பங்காதாயம்
3000 %
முதலீட்டுப் பெருக்கம்
2607 மடங்கு
CAGR 19.09 %
Infosys Technologies
IPO வெளிவந்த ஆண்டு
1993
பங்காதாயம்
32336 %
முதலீட்டுப் பெருக்கம்
15898 மடங்கு
CAGR 39.06 %
HDFC Bank
IPO வெளிவந்த ஆண்டு
1995
பங்காதாயம்
1550 %
முதலீட்டுப் பெருக்கம்
1550 மடங்கு
CAGR 31.11 %
இந்தத் தகவல்களை வேறு மாதிரி சொன்னால் இன்னும் உள் உயிர்ப்பாக (inspiring) இருக்கும் என்று தோன்றுகிறது .
1976 ஆம் ஆண்டு ITC பங்கின் மீதான IPO முதலீடு 1500 ரூபாய். இந்த 1500 ரூபாய்க்கான
2022 ஆம் ஆண்டு பங்காதாயம் 4.75 இலட்சம் . இந்த 1500 ரூபாயின் இன்றைய மதிப்பு 1.35 கோடி .
1977 ஆம் ஆண்டு HDFC பங்கின் மீதான IPO முதலீடு 1000 ரூபாய் . இந்த 1000 ரூபாய்க்கான 2022 ஆம் ஆண்டு பங்காதாயம் 30000 ரூபாய் . இந்த 1000 ரூபாயின் இன்றைய மதிப்பு 26 இலட்சம் .
1993 ஆம் ஆண்டு Infosys பங்கின் மீதான IPO முதலீடு 9500 ரூபாய் . இந்த 9500 ரூபாய்க்கான 2022 ஆம் ஆண்டு பங்காதாயம் 31 இலட்சம் . இந்த 9500 ரூபாயின் இன்றைய மதிப்பு 15.1 கோடி .
1995 ஆம் ஆண்டு HDFC வங்கியின் மீதான IPO முதலீடு 10000 ரூபாய் . இந்த 10000 ரூபாய்க்கான 2022 ஆம் ஆண்டு பங்காதாயம் 1.55 இலட்சம் . இந்த 10000 ரூபாயின் இன்றைய மதிப்பு 1.5 கோடி .
ஆறு இலக்க பங்காதாயங்களைப் பெற 76 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா என்பவர்களுக்கு , கூட்டு வட்டியின் உருப்பெருக்கம் அதன் பின்னாட்களில் தான் தெரிய வரும் . முதலீட்டுத் திட்டங்களை இளம் வயதிலேயே தொடங்க வேண்டும் என்பதற்கான அடிப்படையே இது தான் . ஒருவேளை தாமதமாகத் தொடங்கினாலும் அதற்காகக் கவலை கொள்ள வேண்டாம் . உங்கள் முதலீட்டுத் திட்டங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதன் மூலமாக இதனை நீங்கள் ஈடு செய்யலாம் . மனித வாழ்க்கை ஒரு அளவுக்கு உட்பட்டது . நிறுவனங்களுக்கு இந்த மாதிரி அளவீடுகள் எதுவும் கிடையாது . Britannia Industries போன்ற நிறுவனங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் இளமையாக இருக்கின்றன . பங்குச்சந்தை ஒரு சிக்கலான தகவமைப்பு அமைப்பு (complex adaptive system) சிக்கலை சிக்கலால் வெல்ல முடியாது . அதனை எளிமையால் மட்டுமே வெல்ல முடியும் . அதனால் தான் நீண்ட கால நோக்கிலான கூடுதல் பங்காதாயம் - கூடுதல் பங்கு விலைகள் போன்ற எளிய உத்திகள் வெற்றி பெறுவதாக அமைகின்றன .
சரி , இவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணத்தை எப்போது எடுப்பது ? நீண்ட கால நோக்கில் இந்தப் பணத்தை சந்தையில் விட்டு வைத்த பின்னர் எப்போது தேவையோ எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம் . அது போக வருடாவருடம் அதிகரித்து வரும் பங்காதாயங்களும் தொடர்ந்து கிடைத்த வண்ணமாக இருக்கும் . இந்தப் பங்காதாயங்களையும் நிறுவனப் பங்குகளில் மறு முதலீடு செய்வது இன்னும் ஒரு தேர்ந்த உத்தியாகும் .
Comments
Post a Comment