கூகுள் கேட்ட கேள்விகள் - 3
கூகுள் கேட்ட கேள்விகள் - 3
Questions by Google - 3
(Ideas Panel Questions)
1. How to earn money in this volatile market ?
இந்த ஏறியிறங்கும் சந்தையில் எவ்வாறு பணம் ஈட்டுவது ?
அது ஏறும் சந்தையாக இருந்தாலும் சரி அல்லது இறங்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட பட்டையில் உழலும் சந்தையாக இருந்தாலும் சரி மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் அவ்வப்போது எழுந்த வண்ணமே இருக்கும் . இந்த வாய்ப்புகளை இனங்கண்டு முதலீடு செய்து அடங்கி அமர்வது தான் ஒரேயொரு சரியான வழி .
2. What happens when 50 percent of Indian population started investing in stock market ?
இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் ?
தற்போது இந்திய மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . இந்த 3 சதவீதம் 6 சதவீதம் என்று இரட்டிப்பானாலே அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் .
3. Past pandemics and their effect in stock market ?
பழைய பெருந்தொற்றுகள் பங்குச்சந்தையை எங்ஙனம் பாதித்தன ?
பெருந்தொற்றுக் காலங்களில் சந்தை பின்னோக்கிப் பயணிக்கும் . நமது பங்குத் தொகுப்பும் பின்னோக்கை அடையும் . அதைப் புறக்கணித்து முன்னோக்குடன் பங்குகளை வாங்கிக் குவித்தால் பின்னர் விடியும் . வெளிச்சம் வரும் .
4. I wants to invest in somany ceramics . What would be the return in 3 years ?
Somany Ceramics நிறுவனப் பங்கில் முதலீடு செய்ய விரும்புகிறேன் . மூன்றாண்டுகளில் எனக்கான வருமானம் என்னவாக இருக்கும் ?
மூன்று ஆண்டுகளில் இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்றெல்லாம் உத்தரவாதமாகச் சொல்ல இயலாது . நிறுவனம் வழங்கவிருக்கும் பங்காதாயங்களை வேண்டுமானால் கணக்கிடலாம் . மூன்று ஆண்டு இடைவெளியில் கரடி தலைகாட்டினால் முதலீட்டுச் சுருக்கம் காரணமாக அதுவும் காணாமல் போய் விடும் . மாறாக தசாப்தங்களைக் (decade) கொண்டு கணக்கிடுவது சரியான ஒரு வழிமுறையாக இருக்கும் .
5. Rupee depreciation effect in stock market ?
பண மதிப்பு வீழ்ச்சி அடைவது பங்குச்சந்தையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் ?
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான அடிப்படையே இந்தப் பண மதிப்பு வீழ்ச்சியைத் தடுத்து பணத்தின் வாங்கு திறனைத் (purchasing power of money) தக்க வைப்பது தான் . இது ஒரு பக்கம் . இன்னொன்று , டாலர்களில் முதலீடு செய்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு பங்குகளின் விலையேற்றம் மூலமான வருமானம் மட்டுமின்றி டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தால் அதன் மூலமாகவும் வருமானம் கிடைக்கப்பெறும் . இலாப நோக்கம் கருதி அவர்கள் பங்குகளை விற்றால் அதன் மூலமாக பங்குகளின் விலை குறைவதோடு மட்டுமின்றி டாலருக்கான தேவை அதிகரிப்பதால் ரூபாய் மதிப்பு இன்னும் குறையும் . இதைத் தவிர்க்க நாம் நேரடியாகவோ அல்லது பரஸ்பர நிதிகள் மூலமாகவோ அந்நிய நிறுவனப் பங்குகளில் டாலர்களில் முதலீடு செய்யலாம் .
6. PPF - Equity mutual funds - Compare ?
PPF - பங்கு சார் பரஸ்பர நிதிகள் - ஒப்பிடுக ?
PPF முதலீடுகள் 8 சதவீத கூட்டுப் பெருக்கத்தைக் கொடுக்கவல்லவை . பங்கு சார் பரஸ்பர நிதிகள் 16 சதவீத கூட்டுப் பெருக்கத்தைக் கொடுப்பதாக வைத்துக் கொண்டால் இதைப்போல் இரண்டு மடங்கு வருமானம் கிடைக்க ஏதுவாகும் . சரியா ? தவறு ! நீண்ட கால அளவில் இந்த இரட்டிப்பு கூட்டுப் பெருக்கம் பன்மடங்கு வருமானத்தைத் தருவதாக இருக்கும் .
7. Need of additional and higher education in share market ?
பங்கு சார்ந்த படிப்புகளின் தேவை குறித்து ?
பங்கு சார்ந்த வருமானங்களின் கூட்டுப் பெருக்கத்திற்கு பங்கு சார்ந்த படிப்புகளின் கூட்டுப் பெருக்கமே ஆதாரம் . எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வருமானம் கிடைக்கும் .
8. I have a job with a great skill in stock market . How can I manage both ?
நான் ஒரு வேலை பார்க்கிறேன் . சந்தை சார்ந்த திறமையும் இருக்கிறது . இரண்டையும் எவ்விதம் மேலாண்மை செய்வது ?
இந்த இரண்டையும் பேணிப் பாதுகாத்து வாருங்கள் . வேலை மூலமாகக் கிடைக்கும் பணத்தின் உபரியை சந்தையில் தொடர்ந்த வாக்கில் முதலீடு செய்து பங்குகளின் ஒரு தொகுப்பைக் கட்டுங்கள் . ஒரு கட்டத்தில் பங்காதாய வழி பணப்பாய்ச்சல் ஒன்று கிடைக்கத் தொடங்கும் . நாட்பட இந்தப் பணப்பாய்ச்சல் நிரந்தர இயக்கமாக மாறி புதிய முதலீடுகளை இடுவதற்கான தேவையின்றி அதுவாகவே தன்னளவில் சுற்றத் தொடங்கி விடும் .
9. Depositories and depository participants role in the smooth functioning of Stock market ?
பங்குச்சந்தையின் சுமுகமான பயன்பாட்டிற்கு முதலீட்டு வைப்பகம் மற்றும் முதலீட்டு வைப்பகப் பங்கேற்பாளர்களின் பங்கு என்ன ?
எது ஒன்றின் மதிப்பையும் முழுமையாக உணர அவற்றை இழந்து பாருங்கள் என்பதாக ஒரு பொன்மொழி உண்டு . முதலீட்டு வைப்பகங்கள் அவற்றில் ஒன்று . பங்குப் பத்திரம் ஒன்று தபாலில் வர தாமதமாகும் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள் . மன உளைச்சலில் நீங்கள் இருக்கும் போது அந்தப் பத்திரம் சேதமடைந்த நிலையில் வருகிறது . நிறுவனத்திற்கு எழுதிக் கேட்கையில் அது போலி என்று தெரிய வருகிறது . இது வெறும் கற்பனை அல்ல . முதலீட்டு வைப்பகங்களின் காலத்திற்கு முன்னர் இது அவ்வப்போது நடைபெறும் ஒரு நிகழ்வாக இருந்தது . முதலீட்டு வைப்பகங்கள் சந்தைக்கு ஒரு நம்பகத்தன்மையைக் கொடுத்தன . நீங்கள் வாங்கிய பங்கு போலியானது அல்ல . அவை நீராலோ நெருப்பாலோ சேதமடையாது . பங்கு விற்பனையின் போது விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான தடையற்ற பரிமாற்றத்திற்கு இவை வழிவகை செய்கின்றன . பங்குச்சந்தை நம்பிக்கையின் மேல் நிற்கிறது . இந்த நம்பிக்கையைக் கட்டமைத்ததில் முதலீட்டு வைப்பகங்களின் பங்கு அளப்பரியது . என்ன ஒரேயொரு வருத்தம் ? பொருள் வடிவில் பங்குப் பத்திரங்களைப் பார்க்க முடியாது , அவற்றின் வாசத்தை நுகர முடியாது .
10.How a beginner investor should look at the share market in the present scenario ?
தற்போதைய சூழலில் பங்குச்சந்தையில் முதன்முதலாக முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர் சந்தையைப் பார்க்கும் பார்வை எவ்வாறு இருக்க வேண்டும் ?
புதிய முதலீட்டாளர்கள் மட்டுமல்ல அனைத்து முதலீட்டாளர்களுமே சந்தையைப் பார்க்கும் பார்வை தூரப் பார்வையாக (long term) மட்டுமே இருக்க வேண்டும் .
Comments
Post a Comment