பங்கு கேள்வி பதில் - 2
பங்கு கேள்வி பதில் - 2
கேள்வி : Sundaram Finance பங்குகளை வாங்கலாமா ? அல்லது அதன் நிரந்தர வைப்புத் திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாமா ?
பதில் : Sundaram Finance பங்குகளை வாங்கினால் நீங்கள் அதன் owner . சரி , பகுதி owner . சுந்தரம் பைனான்ஸ் நிரந்தர வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் நீங்கள் அதன் Loaner . Owner தான் அதிக அதிக அளவிலான அபாயங்களை ஏற்றுக் கொள்கிறார் . எனவே அபாய வெகுமதி (Risk - Reward ) owner க்கு மட்டுமே உரித்தானது .
கேள்வி : Balmer Lawrie Investments பங்கின் விலை குறைந்து கொண்டே வருகிறதே ?
பதில் : அதன் பங்கு ஈட்டு விகிதம் ( Dividend Yield ) கூடிக் கொண்டே வருகிறதே !
கேள்வி : Info Edge நிறுவனப் பங்கு மட்டும் ஏன் தொடர்ந்த வாக்கில் அபரிமிதமான PE அளவுகளில் வர்த்தகமாகிறது ?
பதில் : Info Edge நிறுவனம் வளரக்கூடிய நிறுவனங்களை இனங்கண்டு அவைகளில் முதலீட்டை மேற்கொள்கிறது . இந்த நிறுவனங்கள் வளர்ந்து அவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது மதிப்புத் திறப்பு (value unlocking) என்ற வகையில் பெரும் பணம் பெறக்கூடிய வாய்ப்பு கிட்டுகிறது . சமீபத்தில் Zomato நிறுவனம் பட்டியலிடப்பட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் . அந்த வகையில் Info Edge நிறுவனம் ஒரு துணிகர முதலீட்டு நிறுவனமாகவும் (Venture capital) செயல்படுகிறது . இந்த உட்கிடக்கை மதிப்பையும் (embedded value) சேர்த்து நிறுவனம் அதிக PE அளவுகளில் வர்த்தகமாகிறது . ( தற்போது நிறுவனத்தின் PE விகிதம் 3.94 என்பது ஒரு தோற்றப்பிழை . Zomato நிறுவனப் பங்குகளை விற்றதன் மூலமாக நிறுவனத்தின் EPS அதிகரித்து PE குறைந்திருக்கிறது . இது அவ்வப்போது கிடைக்கும் ஒரு முறை இலாபம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும் . அடுத்த வருடம் EPS அதன் சராசரியை எட்டி விடும் . பங்கின் PE மதிப்பும் உயர்ந்து விடும் )
கேள்வி : மதிப்பு முதலீடாக வர்த்தகமாகும் தரமான பங்கு சார்ந்த பரஸ்பர நிதி ஒன்றைப் பரிந்துரையுங்கள் ?
பதில் : மதிப்பு முதலீட்டு உத்திகளைக் கைக்கொள்ளும் பரஸ்பர நிதிகள் ஏராளம் இருக்கின்றன . ICICI Prudential Value Discovery Fund ஐ குறிப்பாகச் சொல்லலாம் . ஒரு நிறுவனப் பங்கு மூடிய நிலை பரஸ்பர நிதி (Closed End Mutual Fund) மாதிரி செயல்படுவது உங்களுக்குத் தெரியுமா ? அது சந்தை மதிப்பிலிருந்து பாதிக்கும் கீழாக மதிப்பு முதலீடாக வர்த்தகமாகிறது . மேலும் இந்தப் பரஸ்பர நிதிக்கு மேலாண்மைச் செலவுகள் என்று எதுவும் கிடையாது . அது சந்தையில் பட்டியலிடப்பட்ட டாடா குழும நிறுவனப்பங்குகள் , இதர பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் இன்னும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத Tata Sons போன்ற வைரங்களைத் தன்வசம் வைத்திருக்கிறது . அது Tata Investment Corporation . இந்தப் பங்கு Tata நிறுவனத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை அதன் நிறுவனர் பங்கின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் . Tata Investment Corporation ல் Tata வின் பங்கு 73.4 சதவீதம் . நிறுவனத்தில் நிறுவனர் பங்கு அதிகபட்சமாக 75 சதவீதம் மட்டுமே இருக்க முடியும் என்ற SEBI ன் விதி இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லி வைக்கிறேன் . Tata Investment நிறுவனம் holding company discount என்ற அடிப்படையில் எப்போதுமே அதன் சந்தை மதிப்பிலிருந்து பாதி என்ற அளவில் மட்டுமே வர்த்தகமாகும் . ஆனால் நிறுவன முதலீடுகளின் சந்தை மதிப்பு உயரும் போது பங்கின் விலையும் உயரும் . இதன் தற்போதைய பங்கு ஈட்டு விகிதம் 3.81 சதவீதம் . Side car investment என்ற வகையில் இந்தப் பங்கு கவனம் பெறுகிறது .
கேள்வி : Powergrid நிறுவனப் பங்கு எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒரு குறிப்பிட்ட விலைப் பட்டையில் மட்டுமே வர்த்தகமாகிறது ? அதே மாதிரி PTC India பங்கும் அதன் IPO விலையிலிருந்து பெரிதாக ஒன்றும் கூடவில்லை ?
பதில் : ஒரு நிறுவனப் பங்கிலிருந்து இரண்டு வழிகளில் வருமானம் கிடைக்கப்பெறும் . ஒன்று capital appreciation என்று சொல்லப்படும் முதலீட்டுப் பெருக்கம் . இரண்டாவது நிறுவனம் அவ்வப்போது வழங்கும் பங்காதாயம் . முதலீட்டுப் பெருக்கம் கண்ணிற்குத் தெரிவதான வளர்ச்சி . பங்காதாயம் கண்ணிற்குத் தெரியாது . இந்த இரண்டையும் இணைத்துப் பார்ப்பது தான் ஒரு சரியான பார்வையாக இருக்க முடியும் . Powergrid நிறுவனம் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் சமீபத்தில் வழங்கிய இலவசப் பங்களிப்பையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் . அவ்வப்போது கிடைக்கப்பெறும் பங்காதாயங்களை இந்த நிறுவனங்களில் மறு முதலீடு செய்வதன் மூலமாகக் காலப் பன்மயமாக்கம் செய்திருந்தால் இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெற்றிருக்கும் . ஒரு பங்குத் தொகுப்புக்கு இந்த மாதிரி low beta stocks ( வன்மையாக ஏறி இறங்காத பங்குகள் ) அஸ்திவாரம் மாதிரி செயல்படும் .
கேள்வி : Hatsun Agro Products நிறுவனத்தின் நிகர இலாப வரம்பு (net profit margin) குறைவாக இருக்கிறது . ஆனால் அதன் ROCE அதிகமாக இருக்கிறது . இது எப்படி சாத்தியமாகும் ?
பதில் : நிறுவனத்தின் நிகர இலாப வரம்பு குறைவாக இருந்தாலும் இதனை ஈடுகட்டும் விதமாக அதன் turnover அதிகமாக இருக்கிறது . பலசரக்குக் கடை ஒன்று பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி இரண்டு சதவீத நிகர இலாப வரம்பில் விற்பதாகக் கொள்ளலாம் . இதில் பெரிய இலாபம் இல்லை . ஆனால் அந்தக் கடை ஒரே நாளில் பத்து முறை பொருட்களை வாங்கி விற்பதாகக் கொள்ளலாம் . இப்போது நிகர இலாப வரம்பு 2 × 10 = 20 என்று உயர்ந்து விடும் . இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லி வைக்கிறேன் . Hatsun Agro Products அதன் IPO விலிருந்து இன்றைய தேதியில் 800 bagger .
கேள்வி : HDFC - HDFC Bank இணைப்பு குறித்து ?
பதில் : இந்த இணைப்பின் சாதக பாதகங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் . இணைப்பு குறித்த தகவல் வெளியானதும் உயர் விலைத் திறப்பு (Gap up opening) என்ற வகையில் இவ்விரு நிறுவனங்களின் சந்தை விலை 8 சதவீதம் கூடியது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . இந்த உயர் விலைத் திறப்பைப் பணமாக்கம் செய்ய நீங்கள் ஏற்கனவே இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து அந்த முதலீட்டை நீண்ட கால அளவில் வைத்திருக்க வேண்டும் . தற்போது இந்த இரண்டு நிறுவனப் பங்குகளும் சிலபல காரணங்களால் விலை குறைந்திருப்பது வேறு கதை .
கேள்வி : ITC நிறுவனம் FMCG மற்றும் இதர துறைகள் தவிர்த்து சிகரெட் தயாரிக்கும் நிறுவனமாக மட்டும் இருந்தால் அதன் இலாப வரம்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் அல்லவா ?
பதில் : ஆம் . சிகரெட் மட்டும் தயாரித்து விற்கும் இன்னொரு இலாபகரமான நிறுவனம் சந்தையில் பட்டியல் இடப்பட்டிருக்கிறது . அது , VST Industries .
கேள்வி : LIC பங்குகளின் 1.2 இலட்சம் கோடி இழப்பு குறித்து ?
பதில் : LIC பங்குகள் 96.5 சதவீதம் அரசாங்கத்திடம் உள்ளது . வெறும் 3.5 சதவீதப் பங்குகள் மட்டுமே சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது . 12000000 கோடி என்பது 100 சதவீதப் பங்குகளுக்கான இழப்புக் கணக்கு . 3.5 சதவீதப் பங்குகளுக்கான இழப்பைக் கணக்கிட்டால் வெறும் 420000 கோடி மட்டுமே வருகிறது . மேலும் இந்த 420000 கோடி இழப்பும் மெய்யல்லாத இழப்பு ( notional loss) உண்மையான இழப்பைக் கணக்கிட்டால் மிக மிகக் குறைவாகவே வரும் . உண்மையான இழப்பு யாருக்கென்றால் IPO ல் பங்குகளை வாங்கி அச்ச விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு ... இவ்வாறு விற்கும் ஒவ்வொருவருக்கும் வாங்குபவர் ஒருவர் இருக்கிறார் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது . விற்பவரும் வாங்குபவரும் இருந்தால் தான் ஒரு வர்த்தகம் நிறைவு பெறும் .
கேள்வி : Suprajit Engineering நிறுவனப்பங்கு கடந்த 5 வருடங்களாக நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது ?
பதில் : சந்தையில் இதெல்லாம் சர்வ சாதாரணம் . கடந்த 10 வருடங்களில் அதே நிறுவனம் 30 சதவீத CAGR என்ற வருமானத்தைக் கொடுத்திருக்கிறது . ஒரு மலையை அதன் அருகிலிருந்து பார்க்க முடியாது என்பதாக ஒரு பொன்மொழி உண்டு . அதே மாதிரி சந்தையையும் அருகிலிருந்து ( குறுகிய காலம்) பார்க்க முடியாது . அதனைத் தொலைவிலிருந்து (நீண்ட காலம்) மட்டுமே பார்க்க முடியும் .
Comments
Post a Comment