ஜென் கதைகள் - 3

ஜென் கதைகள் - 3

1. நிறைகுடம்

ஒரு சமயம் ஜென் குரு நடத்தும் மதிப்பு முதலீட்டுத் தேர்வு எழுத மூன்று முதலீட்டாளர்கள் சென்றனர் . செல்லும் வழியில் அடுமனை (bakery) ஒன்று இருந்தது . மூவரும் கேக் உண்ணும் பொருட்டு அந்த அடுமனை வாசலில் நின்று கொண்டிருக்கும் போது இருவர் பாடங்களைக் குறித்துக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர் . ஒருவர் அமைதியின் வடிவாக இருந்தார் . அந்த அடுமனை ஆயா மூவரும் எங்கு செல்கிறீர்கள் என்பதாகக் கேட்டார் . நண்பர்கள் இந்த மாதிரி தேர்வு எழுதச் செல்வதாகக் கூறினர் . ஆயா , அமைதியாக அமர்ந்திருப்பவரைச் சுட்டிக் காட்டி அவர் மட்டும் தான் தேர்வில் வெற்றி பெறுவார் என்று சொன்னதை நண்பர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் , அவர்கள் ஆச்சரியப்படும் விதமாக ஆயா குறிப்பிட்டவர் மட்டும் தேர்வில் வெற்றியடைந்தார் . நண்பர்கள் திரும்பி வரும் போது ஆயாவிடம் உனக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதைக் கூறும் திறன் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டனர் ‌. அடுமனை ஆயா சொன்னது : கேக் பதமாவதற்கு முன்னர் சத்தம் போடும் . பதமாகி விட்டால் சத்தம் போடாது .

2. அப்பன் போனான் ...

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற வெற்றிகரமான தொழிலதிபர் ஒருவர் ஜென் குருவைச் சந்தித்துப் பரம்பரைக்கும் பயன்படும் படியான அறிவுரை ஒன்றை வழங்கும் படியாகக் கேட்டுக் கொண்டார் . ஜென் குரு , " அப்பா இறக்கிறார் , மகன் இறக்கிறார் , பேரன் இறக்கிறார் " என்று எழுதிக் கொடுத்தார் . பணக்காரருக்குப் பழியாகக் கோபம் வந்தது . கொஞ்சம் மன வருத்தமாகவும் இருந்தது . அவருடைய மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட ஜென் குரு பின்வருமாறு விளக்கம் ஒன்றை அளித்தார் . நீ முதலில் இறக்காமல் மகன் இறந்து விட்டால் உன் தொழிலை யார் தொடர்ந்து கொண்டு செல்ல முடியும் ? அதே மாதிரி உன் மகன் இறக்காமல் பேரன் முதலில் இறந்து விட்டாலும் பிரச்னை . நான் எழுதிக் கொடுத்த வரிசையில் நீங்கள் காலமானால் உன் தலைமுறை விருத்தியும் செழிப்புமாகும் .

3. நான் யார் ?

ஜென் குருவிடம் நீண்ட கால (மதிப்பு) முதலீட்டு அடிப்படைகளைக் கற்றுத் தேர்ந்த ஒரு சிஷ்யர் இருந்தார் . ஆனாலும் அவரிடம் ஒரு விசித்திரமான குணாதிசயம் இருந்தது . சந்தை அவ்வப்போது சரியும் போது அச்சமடைந்து தன் கையில் உள்ள பங்குகளை விற்று விடுவது அவருடைய வழக்கமாக இருந்தது . அதே மாதிரி சந்தை முன்னேறிச் செல்லும் போது இரண்டு மடங்கான பங்குகளை விற்று விடுவதும் அவருடைய வா( வே)டிக்கை .  இவ்விதம் தொடர்ந்து செய்வது பன்மடங்காளர்களைக் (Multibaggers) கைக்கொள்ள முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதையும் அவர் உள்ளுணர்வில் உணர்ந்திருந்தார் . ஆனாலும் இந்தக் கொடிய வழக்கத்திலிருந்து விடுபட என்ன வழி என்று அவருக்குத் தெரியவில்லை . ஒரு நாள் ஜென் குருவிடம் இதைப்பற்றி விவாதிக்கும் போது அவர் சொன்னது : " நீ தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்து வா . ஒரு கட்டத்தில் இந்த வழக்கத்திலிருந்து நீ விடுபட்டுக் காலத்தின் கூட்டுப் பெருக்கத்தை உணர்ந்து கொள்வாய் " சிஷ்யர் , " ஒரு வேளை நான் இதை உணராமல் தொடர்ந்து இந்த அச்ச உணர்விலேயே இருக்கப் பெற்றால்?" குரு , " அதுவும் நல்லது தான் . உண்மையில் நீ யார் என்பதை உணர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக அமையும் . நீ யார் என்பதை பங்குச்சந்தையின் மூலமாக உணர்ந்து கொள்ள முயல்வது விலையுயர்ந்த ஒரு செயலாகும் . அதனால் வெகு சீக்கிரம் அதனை உணர்ந்து கொள்வது உனக்கும் நல்லது . உன் பணப் பைக்கும் நல்லது "

4. குவியம்

ஒரு ஊரில் மதிப்பு முதலீட்டு ஜென் குரு ஒருவர் இருந்தார் . உயர்ந்து வரும் பங்காதாயம் - அதை அடியொற்றி உயரும் பங்கு விலைகள் - பங்காதாய மறு முதலீடு என்ற மூன்றிலுமாக அவருடைய முதலீட்டு உத்தி அடங்கி விடுவதாக இருந்தது . அவருக்கு எதிர்த்த வீட்டில் அஷ்டாவதானி குரு ஒருவர் இருந்தார் . ஒரே நேரத்தில் எட்டு முதலீட்டு உத்திகளைக் கடைப்பிடிப்பவர் அவர் என்று ஜனங்கள் கூறிக் கொண்டார்கள் . அவர் நீண்ட கால முதலீட்டுக்கென்று சில பங்குகளை வாங்குவார் . குறுகிய காலத்திற்கு என்று சில பங்குகள் , தினசரி வியாபாரத்திற்கென்று சில ... இது போக ரூபாய் பங்குகள் என்று கொஞ்சம் ... விற்று வாங்குதல் ... Straddles முதலான சிக்கலான F & O க்களில் சில நிலைப்பாடுகள் ... மதிப்பு முதலீட்டு குருவின் சீடர் ஒருவர் ஒரு முறை தன் குருவிடம் ஒரே உத்தியைப் பல்லாண்டுகள் கடைப்பிடிப்பது உங்களுக்கு அலுப்பைத் தரவில்லையா என்பதாகக் கேட்டார் . மதிப்பு முதலீட்டு குரு சொன்னது : முன்பொரு காலத்தில் என் குருவிற்கெல்லாம் குரு ஒருவர் இருந்தார் . அவர் காலத்திலும் இந்த மாதிரியான அஷ்ட வக்கிரக் குருக்கள் சிலர் இருந்தனர் . அதில் ஒருவர் காற்றில் தூரிகையைக் கொண்டு ஓவியம் வரையும் கலையைக் கற்றிருந்தார் . இன்னொருவர் நின்ற இடத்தில் நின்று கொண்டே நூறு அடிக்கு அப்பால் இருக்கும் படுதாவில் படம் வரைந்து விடுவார் . அப்போதே உன்னை மாதிரி சில சிஷ்யர்கள் அவர்களை வியந்தும் என் மூதாதையர்களை எள்ளி நகையாடியும் இருப்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம் . என் குருவின் குரு சொல்லும் ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது . When you eat , you eat . When you sleep , you sleep . உண்ணும் போது உண்ணு . உறங்கும் போது உறங்கு .

5. நூற்றாண்டு மரம்

பங்குகளிலிருந்து பணம் ஈட்ட பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டுமா என்பதாக சிஷ்யன் ஒரு முறை குருவிடம் சலித்துக் கொண்டான் . குரு சொன்னது : முதலீட்டுத் திட்டங்களை முன்னதாகவே தொடங்கி விடவேண்டும் என்பதற்கான அடிப்படையே இது தான் . என் சின்ன வயது ஞாபகம் ஒன்றைச் சொல்கிறேன் . ஒருமுறை என் குரு மரக்கன்று ஒன்றைத் தோட்டக்காரனிடம் கொடுத்து அதை நட்டு வைக்குமாறு கேட்டுக் கொண்டார் . தோட்டக்காரன் அது மிகவும் மெதுவாக வளரக்கூடிய மரம் என்றும் அது வளர்ந்து பலன் தர நூறு ஆண்டுகள் ஆகி விடும் என்று தயங்கிய போது என் குரு சொன்னது : அப்படியென்றால் இப்போதே தாமதமாகி விட்டது . உடனே நட்டு விடு .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்