வேதாளம் சொன்ன கதை - 3
வேதாளம் சொன்ன கதை - 3
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி , 'மன்னா ! விடாமுயற்சி உடனான உன் நீடிப்புத்திறனை நான் பாராட்டுகிறேன் . பங்குச்சந்தையில் வெற்றி பெற இந்த நீடிப்புத்திறன் தலையாயது . ஒரு ஊரில் வடிகட்டிய முட்டாள் ஒருவன் இருந்தான் . கல்விக்கும் அவனுக்கும் காத தூரம் . ஒரு நாள் காட்டு வழியாக அவன் நடந்து சென்று கொண்டிருக்கையில் தேவதை ஒன்று அவன் முன்னால் தோன்றி அவனுக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாகக் கூறியது . அவன் உடனே எனக்கு ஒரு கோப்பை மது வேண்டும் என்று கூறினான் . மதுக் கோப்பையை அளித்த தேவதை இது மிகவும் அபூர்வமான கோப்பையாகும் . நீ நினைக்கும் போதெல்லாம் இந்தக் கோப்பை மதுவைத் தரவல்லது . இன்னொரு வரத்தையும் கேட்டு வாங்கிக்கொள் என்றது . அந்த முட்டாள் கேட்டது : எனக்கு இதே போல இன்னொரு மதுக் கோப்பை வேண்டும். கல்வியறிவற்றவன் தனக்குக் கிடைக்கப்பெறும் வரங்களைக் கூட இவ்வாறு சாபங்களாக மாற்றிக் கொள்வான் . பங்குச்சந்தையில் வெற்றி பெற பகுத்தறிவு மிகவும் முக்கியமானது .
பங்குச்சந்தையில் வெற்றி பெற கல்வி மாதிரி செல்வமும் தேவை . நீ வாரன் பஃபெட்டை உனது குருவாகக் கொண்டவன் என்று எனக்குத் தெரியும் . பஃபெட் அவருடைய 11 வயதிலேயே முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கிய கதையெல்லாம் உனக்குத் தெரியும் . மேலும் அந்த இளம் வயதிலேயே அவர் பணம் என்கின்ற செல்வத்தைச் சேகரித்துப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ததையும் நீ அறிந்திருப்பாய் . ஆக , பங்குச்சந்தையில் வெற்றி பெற பணம் என்கின்ற செல்வமும் தேவை .
பங்குச்சந்தையில் வெற்றி பெற பயம் என்பதும் இருக்கக்கூடாது . ஒரு சமயம் ராஜா ஒருவர் தன் குடிமக்களுக்கு வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தார் . அது என்னவென்றால் போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு ராஜா , ஆடு ஒன்றை வழங்குவார் . போட்டியாளர்கள் ஓராண்டு அந்த ஆட்டை வளர்த்து வரவேண்டும் . ஓராண்டு முடிவில் , வழங்கும் போது ஆடு என்ன எடை இருந்ததோ அதே எடையில் இருக்க வேண்டும் . எடை கூடவோ குறையவோ கூடாது . ஆட்டைக் கொழுக்க வைக்க வேண்டும் என்றால் அதற்குப் பிடித்தமான உணவு வகைகளை அதிகமாகக் கொடுத்துக் கொழுக்க வைத்து விடலாம் . ஆட்டை மெலிய வைக்க வேண்டும் என்றால் பட்டினி போட்டு மெலிய வைத்து விடலாம் . ஆனால் அதே எடையை எப்படிப் பேணுவது ? ஒரேயொருவர் மட்டும் போட்டியில் வெற்றி பெற்றார் . ராஜாவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம் . இது எங்ஙனம் சாத்தியம் என்று அவரை வினவினார் . அவர் சொன்னது : ஆட்டைக் கட்டிப்போட்டு அதற்கு எதிரில் கூண்டில் புலி ஒன்றை வைத்து விட்டேன் . ஆட்டுக்கு உணவை அளித்தாலும் அது பயத்திலேயே வாழ்ந்து வந்ததால் அதன் எடை கூடவில்லை . வீரம் இன்றி அனுதினமும் பயத்தில் வாழ்பவர்களால் பங்குச்சந்தையில் மட்டுமல்ல வாழ்க்கைச் சந்தையிலும் வெற்றி பெற முடியாது .
இப்போது என்னுடைய கேள்வி இது தான் . பங்குச்சந்தையில் வெற்றி பெற எது தேவை ? கல்வியா ? செல்வமா ? வீரமா ? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லாமல் இருந்தால் உன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறி விடும் என்றும் எச்சரித்தது .
பங்குச்சந்தை வெற்றிக்குக் கல்வி , செல்வம் , வீரம் என்ற இந்த மூன்றும் தேவை . ஓரளவு செல்வம் இருந்தால் ஆரம்ப ஆதாயம் என்ற அளவில் அந்தச் செல்வத்தைக் கொண்டு செல்வத்தைச் சேர்க்கலாம் . வீரம் என்பதும் கட்டாயம் தேவை . பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களையும் அவ்வப்போது தலை காட்டும் கரடிச்சந்தையையும் எதிர்கொள்ள பயம் கொள்ளாது வீரம் கொள்ள வேண்டும் . ஆனால் இந்த இரண்டும் இருந்து கல்வி இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை . எத்தனையோ செல்வ வளங்கள் அறிவின்மையால் அழியப் பெற்றிருக்கின்றன . முரட்டு வீரம் கொண்டு F & O வில் நீயா நானா விளையாடி அழியப் பெற்ற செல்வங்கள் அளவில் அடங்காதது . பணத்தின் கூட்டுப் பெருக்கத்திற்கு அறிவின் கூட்டுப் பெருக்கம் தான் அடிப்படை . நீங்கள் யார் உங்கள் குணம் எத்தகையது என்பதை உணராது அதனைப் பங்குச்சந்தையின் மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று முயன்றால் அதற்குப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் . தன்னைத் தான் அறிவதற்கு அழியாத செல்வமாகிய கல்வி மிக முக்கியமானது .
விக்கிரமாதித்தனின் பதிலால் அவனுடைய மௌனம் கலைந்தது . வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது .
Comments
Post a Comment