அரிய வளம்

அரிய வளம்

(Scarce Resource)

நான் ...

அதைப்பற்றி அப்புறம் ... 

நீங்கள் பிறந்த நாளிலிருந்து உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு துவங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ? அது மட்டுமல்ல , இந்தக் கணக்கில்  தினந்தோறும் 86400 ரூபாய் மதிப்புள்ள பணம் வரவு வைக்கப்படுகிறது.  நீங்கள் ஏழை பணக்காரன் என்பது முக்கியமில்லை. உங்கள் நிறம் கருப்பு சிவப்பு என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மதம் மொழி இனம் என்ற எந்தப் பாகுபாடும் காட்டப் படுவதில்லை. விடிந்து எழுந்தால் உங்கள் வங்கிக்கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் ஒரேயொரு சின்னப் பிரச்னை. இந்தப் பணத்தை அன்றன்றைய தினம் நீங்கள் செலவழித்து விட வேண்டும். நீங்கள் இந்தப் பணத்தைச் செலவழித்தாலும் சரி செலவழிக்காவிட்டாலும் சரி அன்றைய இரவில் இது பூஜ்யமாகி விடும்.  இந்தப் பணத்தைச் செலவழிக்காமல் வைத்திருந்து வட்டி வருமானங்களை எதிர்பார்க்க முடியாது. Overdraft வசதியெல்லாம் கிடையாது. இந்தப் பணம் கொஞ்சம் மர்மமானது. இந்தப் பணத்தைப் புரிந்து தெளிந்து பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் அடையப் பெறும் உயரங்கள் அளவிட முடியாத அளவுகளில் இருக்கும். இந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தாவிட்டால்  வாழ்க்கையில் உங்களை வளர விடாமல் இது தடுத்து விடும். 

இந்தப் பணத்தின் வேறு சில குணாதிசயங்கள் குறித்துச் சற்றே பார்க்கலாம். 

இந்தப் பணத்தை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்களில் செலவழிப்பதன் மூலமாக முதலீடு செய்யலாம். உதாரணமாக ஒருவர் இள வயதில் பள்ளிக்குச் செல்லாமல் பாடங்களைப் படிக்காமல் வெறுமனே ஊர் சுற்றி இந்த அரிதான வளத்தை வீணடிப்பதாகக் கொள்ளலாம். அவர் வளர்ந்து வாழ்க்கையில் பணம் ஈட்டும் நிலையை அடையும் போது மிகவும் குறை அளவிலான பணத்தை மட்டுமே ஈட்ட இயலும். இன்னொருவர் சராசரியான கல்வியறிவைக் கொண்டிருந்தால் அவருடைய வளங்களும் சராசரி என்ற அளவில் மட்டுமே இருக்கும். படிக்கிற காலத்தில் ஒழுங்காகப் படித்தால் அதாவது இந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தினால் அவருடைய உயரம் அண்ணாந்து பார்க்கக்கூடியதான அளவுகளில் இருக்கும்.  மேலும் இந்தக் கல்வி என்பதும் இந்தப் பணத்தைப் போலவே மர்மமான ஒன்று. கல்வி கல்லூரிப் படிப்புடன் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் கல்வி என்பது வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் வரை படிக்க வேண்டிய ஒரு பாடமாகும். இவ்வாறு தொடர்ந்து படிப்பவர்கள் செல்லக்கூடிய உயரம் ஒன்றுக்கு ஒன்று இரண்டுக்கு இரண்டு என்ற விகிதங்களைக் கடந்து ஒன்றுக்குப் பத்து சமயங்களில் ஒன்றுக்கு நூறு என்ற விகிதங்களில் வளர்ச்சியின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதாக இருக்கும் .

இந்தப் பணத்தின் இன்னொரு குறிப்பிடத் தகுந்த அம்சம் இது இதனை முறையாகப் பயன்படுத்துபவர்களிடம் நீண்ட நேரம் தங்கியிருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு முறையாகப் பயன்படுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ஷ்டமும் கிடைக்கப்பெறும். Serendipity என்று அழைக்கப்படும் இனிய திருப்பங்கள் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.

இதனை முறையாகப் பயன்படுத்தாதவர்கள்  கால நேரம் கூடி வரவில்லை என்று கூறிக் கொள்வார்கள்.

உலகமே இந்தப் பணத்தால் தான் ஆனது. மேலும் உலகம் முழுமையும் செலாவணியாகக் கூடிய ஒரேயொரு பணம் இது மட்டும் தான் . இந்தப் பணத்தை மற்ற பணம் மாதிரி அரசாங்க அச்சகங்களில் அடித்துத் தள்ள முடியாது . அதனால் பணவீக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கள்ள நோட்டு ? மூச் ! அதனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளும் தேவைப்படாது . ஆனால் இந்தப் பணம் கட்புலனாகாத ஒன்று.

மனிதன் செலவழிக்கக்கூடிய பணங்களில் அதிக மதிப்பைக் கொண்டது இது தான்.

இந்தப் பணத்தை எப்படி செலவழிக்கிறோம் என்பதை விட எப்படி முதலீடு செய்கிறோம் என்பதில் தான் விடுதலைக்கான சாவி இருக்கிறது.

இந்தப் பணம் காற்றைப் போல இலவசமானது ,  அதே சமயம் விலை மதிப்பற்றது. இதனை நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது , ஆனால் பயன்படுத்த முடியும். இதனைப் பெட்டியில் வைத்துப் பூட்ட முடியாது , ஆனால் செலவழிக்க முடியும். இந்தப் பணத்தை வீணடித்தால் மீண்டும் திரும்பப் பெற முடியாது.

உங்கள் நண்பர்கள் யார் என்று கூறுங்கள், நீங்கள் யார் என்று நான் கூறுகிறேன் என்பதாக ஒரு பழமொழி உண்டு. அதே மாதிரி இந்தப் பணத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள் என்று கூறினால் நீங்கள் யார் என்று யாராலும் கூற முடியும்.

இந்தப் பணத்தின் ஒவ்வொரு சிறிய அளவுகளையும் முறையாகப் பயன்படுத்தினால் பெரிய அளவுகள் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.

ஒரே இரவில் பணக்காரரான ஒருவரைச் சற்று நெருங்கிப் பார்த்தால் அவர் பல்லாண்டுகள் இந்தப் பணத்தை முதலீடு செய்து வந்திருப்பது தெரிய வரும்.

முதலீட்டுச் சமன்பாட்டில் வழக்கமான பணத்தை விட இந்தப் பணத்தின் மதிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் பணத்தைக் காலத்தே முதலீடு செய்தால் வழக்கமான பணத்தைச் சிறிய அளவுகளில் முதலீடு செய்தால் மட்டும் போதுமானது. நீண்ட கால முதலீட்டில் உண்மையில் முதலீடு செய்யப்படுவது இந்தப் பணம் மட்டுமே .

ஒருமுறை மீன் குஞ்சு ஒன்று தன் அன்னையிடம் இந்த தண்ணீர் தண்ணீர் என்று சொல்கிறார்களே அது எங்கே இருக்கிறது என்பதாகக் கேட்டதாம். அன்னை சொன்னது : அது எல்லாவற்றின் வெளியேயும் உள்ளது . எல்லாவற்றின் உள்ளேயும் உள்ளது. அது மாதிரி உலகமே இதில் நீந்திய வண்ணம் உள்ளது . இந்த உலகத்தில் உள்ள சகல ஜுவராசிகளும் இதனை ஏதோவொரு விதத்தில் உணர்ந்த வண்ணம் இருக்கும் ,  ஒளியின் வேகத்தில் பயணிப்பவர்களைத் தவிர ... 

நான் ...

நான் காலம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்