பங்குச்சந்தை பதில்கள் - 6

பங்குச்சந்தை பதில்கள் - 6


கேள்வி : இப்போது தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறேன் . ஆனால் சந்தை போக்குக் காட்டிய வண்ணம் இருக்கிறது ?

பதில் : உங்களை அறிய ஒரு அரிய வாய்ப்பு .


கேள்வி : சந்தை எப்போது சாதகம் ஆகும் ?

பதில் : சந்தை எப்போது சாதகம் என்பதான காலக்கணிப்பில் ஈடுபடாமல் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்வதான காலப் பன்மயமாக்கத்தை மேற்கொள்ளுங்கள் . 


கேள்வி : சந்தை சரிந்து கொண்டே வருகிறதே ?

பதில் : ஆம் . ஆனால் ஒவ்வொரு விற்பவருக்கும் ஒவ்வொரு வாங்குபவர் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் . 


கேள்வி : ஏற்கெனவே வாங்கிய பங்குகள் பங்கமாகி விட்டன . இந்த நிலையில் தொடர்ந்த வாக்கிலான முதலீட்டை எங்ஙனம் மேற்கொள்வது ?

பதில் : ங்குகளின் விலை என்பது வேறு . பங்குகளின் ( உள்ளார்ந்த ) மதிப்பு என்பது வேறு . விலையில் கவனத்தைச் சிதற விடாமல் மதிப்பில் கவனத்தைக் குவியுங்கள் . 


கேள்வி : எதற்கெடுத்தாலும் சந்தை ஏன் சரிய வேண்டும் ?

பதில் : சந்தை ஒரே சீராக 45 டிகிரி என்ற பாகையில் பயணிப்பதால் கிடைக்கப்பெறும் வருமானத்தை விட இறங்கி பின் ஏறிச் சென்றால் கூடுதல் வருமானம் கிடைக்க ஏதுவாகும் . ஆனால் இந்தக் கூடுதல் வருமானத்தைப் பெற சந்தை சரியும் போது தொடர்ந்து முதலீடு செய்து வரவேண்டும் . 


கேள்வி : இந்தச் சரியும் சந்தையில் எந்தப் பங்கை வாங்குவது என்று குழப்பமாக இருக்கிறது ?

பதில் : சந்தை குறைந்தால் வாங்க வேண்டிய பங்குகளின் ஒரு பட்டியலை எப்போதும் தயார் நிலையில் வைப்பது ஒரு உத்தி . ஏற்கெனவே வாங்கிய தரமான பங்குகளைத் தள்ளுபடி விலையில் தற்போது வாங்கலாம் . சந்தையில் என்ன பங்குகளை வாங்குவது என்று இன்னும் குழப்பமாக இருந்தால் சந்தையையே ( Sensex மற்றும் Nifty ETF ) வாங்கி விடுங்கள் .


கேள்வி : சந்தையில் காலப் பன்மயமாக்கம் செய்வதற்குக் கையில் பணமில்லை . கடன் வாங்கி முதலீட்டை மேற்கொள்ளலாமா ?

பதில் : கூடாது . மாறாக , தேறவே தேறாது என்பதான பங்குகளை விற்றுப் பணத்தைத் திரட்டலாம் . அவ்வப்போது கிடைக்கப்பெறும் பங்காதாயங்களை மறு முதலீடு செய்யலாம் . எப்போதுமே முழுவதுமாக முதலீடு செய்யாமல் கொஞ்சம் பணத்தைக் கையில் வைத்திருப்பது நல்லது . என்ன செய்தும் பணத்தைத் திரட்ட முடியவில்லை என்றால் மின்னணு பங்குப் பட்டியலை ( Demat Holding Statement ) பார்க்காமல் இருப்பது இன்னும் நல்லது . 


கேள்வி : கையில் இருக்கும் பங்குகள் அனைத்தையும் இப்போது விற்று விட்டு மீண்டும் சந்தை உயரத் தொடங்கியதும் வாங்கலாமா ?

பதில் : தற்காலிக மதிப்பிழப்பை ( quotational loss ) நிரந்தர மதிப்பிழப்பாக ( permanent capital loss ) மாற்றி விடாதீர்கள் . 


கேள்வி : சந்தையின் ஏற்ற இறக்கங்கள் தாங்கவியலாத ஒன்றாக இருக்கிறது . ஒரே நாளில் சந்தை காலையில் கரைந்து மதியம் உயர்ந்து மாலையில் மங்குகிறது ?

பதில் : நீண்ட கால அளவில் சந்தை கொடுக்கும் வருமானத்திற்கான விலை அது .


கேள்வி : சந்தை முதலீடுகளை நிலையான வைப்பு முதலீடுகளுக்கு மாற்றி விடலாம் என்று நினைக்கிறேன் ?

பதில் : நிலையான வைப்பு முதலீடுகளும் நிலையானவை அல்ல . நிலையான வைப்பு முதலீடுகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் நீங்கள் பெறும் பணம் கூடுதலாக இருந்தாலும் அதன் மதிப்பு கூடுவதில்லை . உபயம் : பணவீக்கம்

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்