பெரிதினும் பெரிது கேள்
பெரிதினும் பெரிது கேள்
இந்த சதுரங்கக் கதை குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் . சில கதைகள் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பைத் தராது . அந்த வகையில் அந்தக் கதையை என்னுடைய பாணியில் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் .
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் . சதுரங்க விளையாட்டு அவருக்கு ரொம்பவும் பிடித்தமானது . மணிக்கணக்காக அவர் அதனை விளையாடுவது வழக்கம் . அவர் மூளையைக் கூர் தீட்ட இந்த சதுரங்க விளையாட்டு மிகவும் உதவிகரமாக இருந்தது . ராஜிய பிரச்னையாக இருந்தாலும் சரி அல்லது சொந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி அந்தப் பிரச்னைகளின் தீர்வுகளுக்கு இந்த விளையாட்டில் பதில் கிடைத்தது . பங்குச்சந்தை அப்போது இருந்திருந்தால் ராஜா அதில் முதலீடு செய்திருப்பார் என்பதாகத் தோன்றுகிறது . பங்குச்சந்தை முதலீடு என்பது பல்லாயிரம் மனிதர்களுடன் ஒரே சமயத்தில் சதுரங்கம் விளையாடுவதேயன்றி வேறென்ன ? இந்த சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தவர் தனது நாட்டுக் குடிமகன் என்று ஒரு நாள் ராஜாவுக்குத் தெரிய வந்ததும் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி . அவருக்கு மரியாதை செய்யும் முகமாக அரண்மனை சேவகர்களை விட்டு அந்த மேதையை அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார் .
'மாட்சிமை பொருந்திய மகாராஜாவுக்கு அநேக வந்தனங்கள்'
'வந்தனம் . உங்கள் சதுரங்க விளையாட்டு என்னைக் கிறங்கடித்து விட்டது . உங்களுக்கு மரியாதை செய்ய விரும்புகிறேன் . பொன் பொருள் என்ன வேண்டுமோ கேளுங்கள்'
'உங்கள் ஈகைக்கு நான் தலை வணங்குகிறேன் மன்னர் மன்னா ! நான் முதியவன் . எனக்கு ரொம்பவும் வயதாகி விட்டது . வாழ்க்கையை ஒரு சதுரங்கப் பலகையாகக் கொண்டால் நாம் அனைவருமே பிறந்ததிலிருந்து தினமும் இறப்பை நோக்கி ஒரு கட்டம் எடுத்து வைப்பவர்களாக இருக்கிறோம் . எனக்கு இன்னும் கொஞ்சம் கட்டங்கள் தான் பாக்கியிருக்கிறது . எனக்கு எதுவும் தேவையில்லை மன்னா ! என்னை மன்னித்தருளுங்கள்'
ஆனால் மன்னர் விடாமல் அவரை வற்புறுத்தியதன் பேரில் அந்த சதுரங்கக் கண்டுபிடிப்பாளர் ஒரு 'சிறிய' பரிசு பெற ஒத்துக் கொண்டார் . அது என்னவென்றால் சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்திற்கு ஒரேயொரு நெல் மணி ... இரண்டாம் கட்டத்திற்கு இரண்டு ... மூன்றாம் கட்டத்திற்கு நான்கு ... இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திற்கும் முந்தைய கட்டத்தின் இரட்டிப்பு என்ற அளவில் 64 கட்டத்திற்கும் கொடுக்க வேண்டும் . மன்னருக்கு அவருடைய ஈகையைக் 'குறைத்து' மதிப்பிட்டு விட்டதாகக் கோபமான கோபம் . அரசவையை விட்டு விருட்டென்று வெளியேறி விட்டார் . மாலை மீண்டும் அரசவை கூடியதும் அந்த முதியவர் கேட்ட 'அற்பப்'பரிசு கொடுக்கப்பட்டு விட்டதா என்று வினவினார் . அரசவைக் கணக்கர்கள் அதனைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதாக பதில் வந்தது . இந்த 'எளிய' கணக்கிற்கு இவ்வளவு நேரமா என்று கணக்கர்களை ராஜா கடிந்து கொண்டார் . இரவு அரசவை முடியும் நேரத்தில் தலைமைக் கணக்கர் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார் .
'மன்னர் மன்னா ! அவர் கேட்ட நெல் மணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு விட்டோம் . அந்த எண்ணிக்கை பெரிதினும் பெரிது . இந்தப் பூவுலகத்தின் நிலப்பரப்பு முழுமைக்கும் நெல் பயிரிட்டு விளைவித்தாலும் அவ்வளவு நெல் மணிகள் கிடைக்கப்பெறாது . அவ்வளவேன் , இந்த பூலோகத்தில் உள்ள கடல்கள் அனைத்தையும் இரைத்து நிலமாக்கி அதில் நெல்லைப் பயிரிட்டாலும் கூட அவர் கேட்ட பரிசை நம்மால் கொடுக்க முடியாது . நிலாவில் ஒருவேளை நெல் பயிரிட முடிந்தால் அப்போது வேண்டுமானால் கொடுக்க இயலலாம்'
மன்னரின் தலை தட்டாமாலை கணக்காகச் சுற்றியது . 'அந்த எண்ணிக்கை தான் என்ன ? '
'மன்னா, அந்த எண் 18446744073079551616'
இவ்வாறாக மன்னர் எண்களின் கூட்டுப் பெருக்கத்தைக் குறித்து மிக முக்கியமான பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டார் .
கூட்டுப் பெருக்கத்தின் மாண்பு அதன் பிந்தைய காலகட்டத்தில் தான் தெரியவரும் . நீண்ட கால முதலீடு என்பதன் அடிப்படையே இது தான் . முதல் 32 கட்டங்களுக்கான நெல்மணிகள் நம் மடியில் அடங்கி விடும் . ஆனால் அடுத்த 32 கட்டங்களின் பெருக்கம் அளவிட முடியாதது . The other side of chess board என்று சொல்லப்படும் இந்த சதுரங்கப் பலகையின் மறுபாதியில் தான் ஆட்டத்தின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது . முதலீட்டுத் திட்டங்களின் மறுபாதி கட்டங்களை அடைய மூன்று வழிகள் உள்ளன . முதலாவது முதலீடுகளை இளம் வயதிலேயே தொடங்கி விடவேண்டும் . வாரன் பஃபெட்டின் முதலீட்டு வாழ்க்கை அவருடைய பதினோராம் வயதிலேயே தொடங்கி விடுகிறது . இரண்டாவது வெயிலோ மழையோ காளையோ கரடியோ நீண்ட காலம் முதலீட்டுத் திட்டங்களைத் தொடர வேண்டும் . வாரன் பஃபெட்டின் வெற்றிக்கு இந்த இரண்டு காரணங்கள் தான் முதலும் முடிவுமானவை . மூன்றாவதாக ஒரு வழி இருக்கிறது . நம் தலைமுறைக்கு இந்த சூட்சுமங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் மூலமாக முதலீட்டைத் தொடர்வது . மூன்றாவது தலைமுறையும் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்தால் அதன் கூட்டுப் பெருக்க சாத்தியக்கூறுகளைச் சற்றே யோசித்துப் பாருங்கள் .
மன்னர் அந்த முதியவரின் அறிவுக்கு மீண்டும் ஒருமுறை தலை வணங்கி அவருக்கு ஒரு மிகப்பெரிய செல்வத்தைக் கொடுத்ததாக இந்தக் கர்ண பரம்பரைக்கதை முடிவடைகிறது . சுபம்.
Comments
Post a Comment