சமீப கால சாய்வு
சமீப கால சாய்வு
Recency Bias
நடத்தை நிதியியல் (Behavioural Finance) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . உளவியல் (Psychology) மற்றும் பொருளியல் (Economics) இந்த இரண்டின் கூடுகை (Intersection) நடத்தை நிதியியல் என்று அழைக்கப்படுகிறது . அதன் ஒரு அங்கமான சமீப கால சாய்வு குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம் .
சில காலம் முன்பு வரை பங்குச்சந்தை முன் கணிப்பாளர்கள் (Forecasters) சந்தை புதிய உச்சங்களை எட்டும் என்பதாகக் கணித்த வண்ணம் இருந்தார்கள் . அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. 2008 ல் அமெரிக்க sub prime crisis க்குப் பின்னர் சந்தை நெட்டுவாக்கில் உயர்ந்த வண்ணம் இருந்தது . Trend is your Friend என்று ஒரு பங்குச்சந்தை சொலவடை உண்டு . சந்தை உயர்ந்து கொண்டே இருந்தால் இன்னும் கொஞ்சம் உயரும் என்று கணிப்பது தானே ஒரு சிறந்த கணிப்பாக இருக்க முடியும் ?! 2008 க்குப் பின்னர் சந்தைக்கு வந்த புதிய முதலீட்டாளர்கள் கரடிச்சந்தை என்பதை அறிந்திருக்க மாட்டார்கள் . கரடியைக் குறித்து அறிந்து வைத்திருப்பது வேறு . சந்தையில் கரடியிடம் கடிபடுவது வேறு . ஆக , சந்தைக்கு வானமே எல்லையாக இருந்தது .
இந்தியப் பங்குச்சந்தையில் மட்டுமல்ல உலகம் முழுக்க இதே கதை தான் . அமெரிக்க Dow Jones குறியீடு 2000 ஆம் ஆண்டு முதன்முதலாக 10000 புள்ளிகள் என்ற அளவை எட்டியது . உடனை Dow 36000 என்று புத்தகங்கள் எல்லாம் வெளியிடப்பட்டன . Dow Jones 30000 என்ற புள்ளிகளை இருபது ஆண்டுகள் கழித்தே கடந்தது . Dow இப்போது 35000 என்ற அளவீடுகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது . Being human is actually a problem when it comes to investing . மனித உணர்ச்சிகள் முதலீட்டிற்குப் பெரும் தடையாக உள்ளது .
தனிப்பட்ட பங்குகளுக்கும் இதே கதை வசனம் தான் . IRCTC பங்கு கூடினால் கூடிக் கொண்டே இருக்கும் . நிறுவனம் தற்போது 268 என்ற விலை வருவாய் விகிதத்தில் (PE Multiple) வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது . ஒரு நிறுவனத்தை 268 என்ற PE மதிப்பீட்டில் வாங்கினால் அந்த நிறுவனம் இப்போது வருடத்திற்கு சம்பாதிக்கும் ஒரு பங்குச் சம்பாத்தியத்தைப் (Earnings Per Share) போல் 268 மடங்கு கொடுத்து வாங்குவதாக அர்த்தம் . வேறு மாதிரி சொல்வதானால் எதிர்வரும் 268 வருட 'ஒரு வருட சம்பாத்தியத்தையும்' இப்போதே கொடுத்து வாங்குவதாக அர்த்தம் . நிறுவனம் தற்போது நன்கு வளர்ந்து வந்தாலும் 268 மடங்கு என்பதெல்லாம் ஸாரி கொஞ்சம் ஓவர் . Balmer Lawrie Investments பங்குகள் IRCTC பங்குகளின் கண்ணாடி பிம்பமாக (mirror image) உள்ளது. நிறுவனம் 8.88 என்ற PE அளவுகளில் ஊசலாடிய வண்ணம் உள்ளது.
2019 ல் திடுக்கிடும் திருப்பமாக கிருமி வடிவில் கரடி வந்ததும் முன் கணிப்பாளர்களும் தங்கள் கணிப்பின் திசையை மாற்றிக் கொண்டு விட்டார்கள். வானமே எல்லை என்று ஆனந்தக் கும்மி அடித்தவர்கள் இப்போது வானம் இடிந்து விழுந்து விட்டதாகவும் சந்தை புதிய பள்ளங்களில் விழும் என்றும் கணித்தார்கள் . இது recency bias என்று அழைக்கப்படுகிறது . தமிழில் சமீபத்திய சாய்வு என்பதாகச் சொல்லலாம் . அதாவது சமீபத்தில் நடக்கும் விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து அதைக்கொண்டு சந்தையின் போக்கைக் கணிப்பது . 'கிருமி 19' பாதிப்பு இவ்வளவு நாட்களில் இவ்வளவு கூடியிருக்கிறது என்ற புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு இன்னும் இவ்வளவு நாட்களில் இவ்வளவு கூடும் என்று கணக்கிடுவது சமீபத்திய சாய்வு . பங்குச்சந்தை மாதிரியே கொள்ளை நோயிலும் நகரும் பகுதிகள் (moving parts) நிறைய உள்ளன . ஒரு பிரச்னை வாசல் வரை வந்து விட்டது. அந்தப் பிரச்னைக்கு நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதில் தான் அதற்கான தீர்வு அடங்கியிருக்கிறது . Once faintest stirring of hope became possible, the domination of plaque was ended என்று Albert Camus கூறியிருக்கிறார் . ஒரு சிறிய நம்பிக்கையை (தடுப்பூசி) உயிர்ப்பிக்க முடிந்தால் கொள்ளை நோயின் ஆதிக்கத்திற்கு அது ஒரு முடிவாக அமையும் .
இப்போது மீண்டும் காளையின் ஆதிக்கம் ! எங்கே செல்லும் இந்தப் பாதை ?
அது ஒரு பக்கம் இருக்கட்டும் , சமீபத்திய சாய்வின் பக்கம் சாயாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? You just stand there . காளைகள் திமிறிக்கொண்டு செல்லட்டும் . கரடிகள் பெருங்குரலெடுத்து ஊளையிடட்டும் . நீங்கள் தரையில் கால் பதித்து நின்றால் போதுமானது . அப்புறம் நிறையப் படிக்க வேண்டும் . எவ்வளவுக்கு எவ்வளவு பின்பக்கம் பார்க்கிறோமோ (படிக்கிறோமோ) அவ்வளவுக்கு அவ்வளவு முன்பக்கம் பார்க்கலாம் . History doesn't repeat but it rhymes . வரலாற்றின் பாடல் வரிகள் மாறிய படியே இருக்கும் . 2000 ல் டாட் காம் குமிழி . அப்புறம் உலக வர்த்தக மையத் தாக்குதல் . 2008 ல் சப் ப்ரைம் . பின்னர் கிருமி-19. ஆனால் பாங்கோசை மாறாது . மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு வடிவில் கரடிச்சந்தை வந்த வண்ணமாகவே இருக்கும் . அதே மாதிரி காளைச் சந்தையும் . இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் காளையும் கரடியும் முட்டி மோதும் தளம் உயர்ந்த வண்ணமாகவே உள்ளது . டாட் காம் குமிழி வெடித்த போது சென்செக்ஸ் 6000 என்ற புள்ளிகளில் இருந்தது . 9/11 வெடிப்பின் போதும் கிட்டத்தட்ட அதே அளவு தான் . சப் ப்ரைம் குமிழி வெடிப்பின் போது சந்தை 8000 புள்ளிகள் வரை வந்தது . தற்போதைய கிருமி வெடிப்பில் சந்தை மிகவும் குறுகிய கால அளவில் 23000 என்ற புள்ளிகளில் ...
இன்னொரு அளவீடையும் பார்க்கலாம். 1978 ல் சென்செக்ஸ் புள்ளிகள் 100. தற்போதைய புள்ளி 61000. இந்த இடைப்பட்ட 41 ஆண்டுகளுக்கான CAGR 16 சதவீதம் .
இந்தப் பதிவை ஆப்ரகாம் லிங்கனின் கணிப்பு மொழி ஒன்றுடன் முடிக்க உத்தேசம்.
The most reliable way to predict the future is to create it .
எதிர்காலத்தைக் கணிப்பதற்கான நம்பகமான வழி அதை உருவாக்குவது தான் .
Comments
Post a Comment