பங்கு தன் வரலாறு கூறுதல் - 1

பங்கு தன் வரலாறு கூறுதல் - 1

நதி தன் வரலாறு கூறுதல் , மலை தன் வரலாறு கூறுதல் என்று பள்ளிப்பருவத்தில் படித்திருப்பீர்கள் . நான் ஒரு நிறுவனப்பங்கு . கூடிய மட்டும் என் வரலாற்றைச் சுவை படக் கூற முயற்சிக்கிறேன் .

நாங்கள் மொத்தம் முப்பது இலட்சம் பேர் . எங்கள் அனைவரின் மதிப்பும் சமமானது . அதை முகமதிப்பு என்று கூறுவார்கள் . எங்கள் முகமதிப்பு பத்து ரூபாய் . நாங்கள் ஒன்றாகவே பிறந்தோம் . ஒன்றாகவே வளர்ந்தோம் . ஆனால் , இப்போது எங்கள் முதலாளி IPO , value unlocking என்று புரியாத ஆங்கிலத்தில் ஏதேதோ பேசுகிறார் . எனக்கென்னவோ எங்களைப் பிரிக்கப் போகிறார்கள் என்பது மட்டிலும் புரிந்தது .

நாங்கள் அது வரை பொருள் வடிவில் (physical format) தான் இருந்தோம் . இப்போது எங்களை மின்னணு (demat) வடிவில் மாற்றி விட்டார்கள் . பொருள் வடிவை விட இது பல்வேறு வழிகளில் பயனுள்ளதாம் . நாங்கள் இனி வெந்தணலில் வேக மாட்டோம் . நீரால் நாங்கள் நனைய மாட்டோம் . போலியாக எங்களை யாரும் உருவாக்க முடியாது . தபாலில் தவறிப் போகும் பிரச்னை இனி இல்லை . முக்கியமாக எங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிட மின்னணு வடிவம் மிக அவசியமாம் .

எங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நாளை எங்களால் மறக்க முடியாது . எப்படி மறக்க முடியும் ? அது பட்டியலிட்ட நாள் மட்டுமல்ல , ஒன்றாகவே பிறந்து ஒன்றாகவே வளர்ந்த எங்கள் முப்பது இலட்சம் பேரையும் பிரித்த நாளும் அல்லவா ?

நாங்கள் மொத்தம் ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் பட்டியலிடப்பட்டோம் . ஒரு சிலர் எல்ஐசி முதலான நிறுவன முதலீட்டாளர்களிடம் ஐக்கியமாகி விட்டார்கள் . எங்கள் முதலாளியிடம் நாங்கள் இருந்த போது எங்கள் மதிப்பு பத்து ரூபாய் என்ற மாறாத அளவில் தான் இருந்தது . ஆனால், எங்கள் உள்ளார்ந்த (intrinsic) மதிப்பு இந்தப் பத்து ரூபாயை விடக் கூடுதலாம் .

IPO வில் எங்களை ரூபாய் 80 - 85 என்ற விலைப்பட்டை (price band)யில் வெளியிட்டார்கள் .

எனக்கு இது எல்லாமே மாயமந்திரம் போல் இருந்தது . உண்மையில் எங்கள் மதிப்பு இவ்வளவா ? முதலாளி முன்பு சொன்ன value unlocking என்பது இப்போது கொஞ்சம் புரிவது மாதிரி இருந்தது .

துர(அ)திர்ஷ்டவசமாக நாங்கள் நல்ல ஒரு கரடிச்சந்தையில் பட்டியலிடப்பட்டோம் .

IPO வில் என்னை வாங்கியவருக்குப் பங்குச்சந்தையைக் குறித்து எதுவும் தெரியாது . மேலும் அவர் பயந்த சுபாவம் கொண்டவர் . 2008 ல் அமெரிக்காவில் sub prime crisis என்பதான ஒரு பிரச்னை எழுந்தது . தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது பங்குச்சந்தைக்கு மிகவும் பொருந்தும் . என் விலை IPO வெளியீட்டு விலையிலிருந்து பாதியாகச் சரிந்து விட்டது . IPO வில்  என்னை வாங்கியவர் நஷ்டத்திற்கு  விற்று விட்டார் .

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் . என்னை வாங்குபவர்களின் இலாபத்திற்கும் நஷ்டத்திற்கும் தனிப்பட்ட முறையில் நான் காரணமல்ல . நிறுவனம் நன்கு செயல்படும் வரை உள்ளார்ந்த மதிப்பு  என்பது எப்போதும் என்னிடம் உள்ளது . என்னை வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் உணர்ச்சிகள் தான் அவர்களின் இலாபத்திற்கும் நஷ்டத்திற்கும் காரணமாகிறது . நான் ஒரு வகையில் கண்ணாடி மாதிரி . உங்கள் உணர்வுகளை நான் அப்படியே பிரதிபலிப்பேன் . நீங்கள் சிரித்தால் நானும் சிரிப்பேன் . நீங்கள் கலங்கினால் நானும் கலங்குவேன் . நீண்ட கால நோக்கில் என்னை அணுகிப் பாராட்டிச் சீராட்டிப் பார்த்துக் கொண்டால் நான் உங்களுக்கு வற்றாத ஜீவநதியாவேன் . குறுகிய காலத்தில் என்னைத் தூக்கியெறிந்தால் நஷ்டம் உங்களுக்குத் தான் .

எங்கள் நிறுவனப் பங்குகளை வாங்காமலேயே எங்கள் நிறுவனப்பங்குகளால் நஷ்டமடைந்ததாக ஒரு சிலர் சொல்லக் கேட்டு எனக்குத் தலை சுற்றியது . அது என்னவோ F & O என்று சொல்கிறார்கள் . அதாவது எங்கள் நிறுவனப்பங்கு கூடும் (call option) அல்லது குறையும் (put option) என்று பந்தயம் கட்டி விளையாடுவது . முட்டாள்களின் முட்டாள்தனத்தைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் என்று எங்கள் முதலாளி சொல்வது ஞாபகத்திற்கு வருகிறது .

என்னை 2008 ல் வாங்கியவர் ஒரு மதிப்பு முதலீட்டாளர் . வாரன் பஃபெட்டைத் தனது குருவாகக் கொண்டவர் . அவர் எப்போது பார்த்தாலும் உள்ளார்ந்த மதிப்பு , நீண்ட கால நோக்கு என்று தான் பேசிக் கொண்டிருப்பார் . எல்லோரும் பங்குச்சந்தையில் மங்காத்தா விளையாடிக் கொண்டிருக்கும் போது இவர் பங்காதாயம் பற்றிக் கணக்கிட்டுக் கொண்டிருப்பார் . மன்னித்துக் கொள்ளுங்கள் , மனிதர்களுடன் பழகிப் பழகி எனக்கும் பஞ்ச் டயலாக் வந்து விட்டது .

இவர் என்னைக் கண்டடைந்த விதமே அலாதியானது . எங்கள் நிறுவனம் முதலில் ஒரே ஒரு பொருள் தயாரிக்கும் நிறுவனமாகத் தான் இருந்தது . அந்தப் பொருளைக் குறித்த இவரின் புகார் ஒன்றே ஒன்று தான் . அந்தப் பொருள் பழுதே அடைவதில்லை என்பது தான் அது .

இப்போது எங்கள் நிறுவனம் பல்வேறு வகையான பொருட்களைத் தயாரிக்கிறது . ஆனால் எங்கள் நிறுவனம் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை . அது தான் எங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரம் .

என்னை வாங்கிய மதிப்பு முதலீட்டாளர் எங்கள் நிறுவனப் பங்குகளையும் சேர்த்து நிறைய நிறுவனப்பங்குகளை வைத்திருக்கிறார் . ஆனால் இவரிடம் ஒரே ஒரு குறை இருக்கிறது. 2008 ல் நாங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் போது 50 பங்குகளுக்குப் பதிலாக 500 பங்குகளை இவர் வாங்கியிருக்கலாம் . பங்குச்சந்தையில் அபூர்வமாக மதிப்பு முதலீட்டுத் தங்க மழை பொழியும் போது அதைப் பெரிய வாளியில் பிடித்து வைத்து விடவேண்டும் என்று அவர் மானசீக குரு சொன்னதைப் படித்தால் மட்டும் போதுமா ?

நாங்கள் மொத்தம் 50 பேர் இவரிடம் அடைக்கலமானோம் . நிறுவனம் நன்கு வளர்ந்ததால் எங்கள் விலை பங்குச்சந்தையில் கிடுகிடுவென்று உயர்ந்தது . காளைச்சந்தையும் கொஞ்சம் கை கொடுத்தது . சிறு முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு ஏதுவாக எங்கள் நிறுவனம் ஒரு  பங்குப்பிரிப்பை மேற்கொண்டது . மேலும் ஒரு முறை இலவசப்பங்கும் வழங்கியது . இப்போது நாங்கள் மொத்தம் 700 பேர் இருக்கிறோம் .

அவர் எங்களை வாங்கியது வெறும் 2100 ரூபாய்க்கு மட்டுமே . இன்றைய எங்கள் விலை 186900 ரூபாய் . 89 bagger என்பதாக ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது அவரது ஆரம்ப முதலீடு 89 மடங்கு கூடியிருக்கிறது. அவர் 500 பங்குகளை வாங்கியிருந்தால் அவருடைய பங்குத்தொகுப்பில் (portfolio) எங்களால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் . பங்கு ஈட்டு விகிதம் மூலமாக மட்டும் அவருக்கான 2021 ஆம் வருடத்திற்கான இலாபம் 40 சதவீதம். அதாவது அவருடைய ஆரம்ப முதலீடான 2100 ரூபாய்க்கு 840 ரூபாய் 2021 ஆம் வருடத்திற்கான இலாபம் . இது வருடாவருடம் கூடிக்கொண்டே செல்லும் . இந்தக் கூடுதலான பங்கு ஈட்டு விகிதத்தைக் கொடுக்கக்கூடிய எங்கள் மதிப்பும் கூடிய வண்ணமாக இருக்கும் . விரைவில் நாங்கள் 100 bagger என்ற மந்திர இலக்கை எட்ட உள்ளோம் .

எங்கள் நிறுவனம் தென்னிந்தியாவின் ஒரு கோடியில் தொடங்கப்பட்டு இன்று அகில இந்திய அளவில் கோலோச்சுகிறது . நிறுவனம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது .

கடைசியாக ஒன்று ... தீதும் நன்றும் பிறர் தர வாரா .

பின் குறிப்பு: V Guard நிறுவனப்பங்கை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்