ஞாபக சாபம் மறதி வரம்
ஞாபக சாபம் மறதி வரம்
Zomato நிறுவன IPO விற்கு விண்ணப்பிக்க மறந்து விட்டதாக நண்பர் ஒருவர் வருத்தப்பட்டுக் கொண்டார் . 100 பங்குகளுக்கு விண்ணப்பம் செய்து அது கிடைக்கப் பெற்றிருந்தால் எவ்வளவு பட்டியல் இலாபம் (listing gain) கிடைக்கப் பெற்றிருக்கும் ? அது நஷ்டமாகி விட்டதாம் . நீங்கள் முதலீடு செய்யாத பங்குகளில் உங்களுக்கான நஷ்டம் பூஜ்யம் என்பதான பொன்மொழி ஞாபகத்திற்கு வந்தது . நான் சொல்ல வந்ததை மறந்து விட்டு எங்கோ சென்று விட்டேன் ! இந்த மறதி குறித்துக் கொஞ்சம் கிட்டே சென்று ஆராயலாம் .
முதலீட்டாளர்களின் ஒட்டு மொத்த மறதி தான் அடுத்தடுத்த மீமிகைக் காளைச் சந்தைகளாக உருவெடுக்கிறது . ஒவ்வொரு மீமிகைக் காளைச் சந்தையும் வெடிக்கக் காத்துக் கொண்டிருப்பதான ஒரு நீர்க்குமிழி என்பதை முதலீட்டாளர்கள் மறந்ததால் தானே இத்தகைய சந்தைகள் உருவாகின்றன ? கரடிச் சந்தைகளும் இந்த மறதியினால் தான் பிறக்கின்றன . பன்மடங்காளர் பங்குகளின் பிறப்பிடம் கரடிச்சந்தைகள் என்பதனை முதலீட்டாளர்கள் மறந்ததால் தானே கரடிகள் அவ்வப்போது ஆட்டம் போடுகின்றன ?
ஆனால் முதலீட்டாளர்களின் மறதியினால் இவ்வாறு காளைச் சந்தையும் கரடிச் சந்தையும் மாறி மாறி வராவிட்டால் இலாப வாய்ப்புகளும் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகளும் கிடைக்கப்பெறாது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் .
1920 ஆம் ஆண்டு . ரஷ்ய நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் தனது நிருபர்களுக்கு அன்றைய வேலையைக் குறித்த விளக்கங்களை அளிக்கிறார் . யார் எந்த இடங்களுக்குப் போக வேண்டும் ... யார் யாரைச் சந்திக்க வேண்டும் ... இத்யாதி ... இத்யாதி ... புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு நிருபர் எந்தக் குறிப்பையும் எடுக்காமல் தேமேனென்று இருப்பதை ஆசிரியர் பார்க்க நேரிடுகிறது . ஆசிரியர் கோபத்தில் கொப்புளிக்கையில் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக அந்த நிருபர் , ஆசிரியர் வழங்கிய விளக்கங்களை வரி பிசகாமல் திருப்பிச் சொல்கிறார் . அந்த நிருபரின் பெயர் Shereshevsky .
ரஷ்ய உளவியலாளர் A.R.Luria அந்த நிருபரின் ஆசிர்வதிக்கப்பட்ட நினைவாற்றலை ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறார் . உளவியலாளர் , முப்பது வெவ்வேறு எண்களைச் சொல்லி அதனை மறுபடி சொல்லச் சொல்கிறார் . சராசரியாக மனிதர்கள் ஏழு (+ அல்லது - இரண்டு) என்ற அளவில் தான் இவைகளைத் திருப்பிச் சொல்ல முடியும் . நிருபர் , முப்பதையும் திரும்பவும் சொல்கிறார் . உளவியலாளர் இந்த எண்களை ஐம்பது , எழுபது என்ற வாக்கில் உயர்த்திய போதும் நிருபர் அதனை அட்சரம் பிசகாமல் திரும்பவும் சொல்கிறார் . அது மட்டுமல்ல , கடைசியில் சொன்னதை முதலாவது என்ற வரிசையில் இவைகளைத் தலைகீழாகவும் சொல்கிறார் . எண்களை மட்டுமல்ல வெவ்வேறு எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளையும் அவரால் திரும்பவும் சொல்ல முடிகிறது . மூன்று தசாப்தங்களாக (decades) உளவியலாளர் அந்த நிருபரின் ஞாபக சக்திக்கு எல்லை ஏதாவது இருக்கிறதா என்பதாகத் தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொள்கிறார் . நிருபரின் ஞாபக சக்தி எள்ளளவும் குறைவதாக இல்லை . பதினைந்து வருடங்கள் கழித்து ஒரு நாள் உளவியலாளர் , நிருபரைத் தான் முதன்முதலில் சந்தித்த போது கேட்ட எண்கள் , எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள் குறித்துக் கேட்டபோது நிருபர் அதனை மறுபடியும் பிழையின்றிச் சொல்கிறார் . இவ்வாறு மீமிகை ஞாபக சக்தி உள்ளவர்கள் Mnemonist என்று அழைக்கப்படுகிறார்கள் . உங்களுக்கும் எனக்கும் இத்தகைய நினைவாற்றல் ஏன் இல்லை ? இத்தகைய நினைவாற்றல் இருந்தால் நண்பர் , Zomato IPO வில் பங்கு பெற்றிருப்பார் அல்லவா ? இயற்கை அன்னை ஒரு சிலருக்கு மட்டும் ஏன் இவ்வாறு மிதமிஞ்சிய நினைவாற்றலை அருளியிருக்கிறது ? இது வரமா அல்லது சாபமா ? தொடர்ந்து படியுங்கள் .
Shereshevsky க்கு ஒரேயொரு பிரச்னை . அவரால் சிறு வயது ஞாபகங்களில் தொடங்கி எதனையும் மறக்க இயலாது . மனிதர்களின் முகங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது அவருக்குச் சிக்கலான ஒரு விஷயமாக இருந்தது . மனிதர்களின் முகங்கள் தின அளவில் மாறுகின்றன என்பது அவருடைய குற்றச்சாட்டு . கதை ஒன்றை வார்த்தைக்கு வார்த்தை ஞாபகம் வைத்திருக்கும் அவரால் சுருக்கமாக அதன் சாராம்சத்தைச் சொல்ல இயலாது . சொற்களின் அர்த்தம் , உருவகம் போன்றவை அவருக்குப் புரியாது . கரடிச்சந்தை என்பதை அவருக்கு விளக்க முடியாது . கவிதைகளை அவரால் ரசிக்க இயலாது . வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலாளரின் வார்த்தைகள் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது . If we remembered everything , we should on most occasions be as ill of if we remembered nothing . நாம் எல்லா விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தால் நாம் எல்லா விஷயங்களையும் மறந்து விட்டதாக அர்த்தம் .
சில சமயங்களில் மறதி நன்மை தருவதாக இருக்கும் . பன்மடங்காகக் கூடிய பங்கு ஒன்றை இரட்டிப்பானதும் விற்று விடுகிறீர்கள் . அதையே நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த பன்மடங்காளரை எப்படிக் கைப்பற்ற முடியும் ?
Zomato நிறுவன IPO வில் பங்கு பெற்று , பங்கு ஒதுக்கீடு பெற்று அதனைப் பட்டியல் இலாபத்திற்கு விற்றிருந்தால் குறுகிய கால அளவில் நண்பரின் பணம் இரட்டிப்பாகி இருக்கும் . அதன் பொருட்டு வருத்தப்பட்ட நண்பருக்கு ஒரு சிறிய புள்ளி விவரத்தைக் குறிப்பிட விரும்புகிறேன் . ஒரு நிறுவனர் , தனது நிறுவனம் ஒன்றின் பங்குகளை அச்ச விற்பனையில் (panic selling) விற்று விடுகிறார் . அவர் விற்ற பின்னர் அந்த நிறுவனம் நன்கு வளர்ந்து அதன் சந்தை மதிப்பு மீமீமிகைப் (பதிவுப்பிழை அல்ல) பெருக்கத்திற்கு உள்ளாகிறது . அச்ச விற்பனையின் மூலமான அவருக்கான இன்றைய நஷ்டம் எவ்வளவு தெரியுமா ? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் . அது ரூபாய் 1795800 கோடி . நீங்கள் படித்தது சரி தான் . அது பதினேழு இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரத்து எண்ணூறு கோடி . நண்பரின் இழப்பு மெய்யல்லாத இழப்பு (notional loss) ஆனால் இந்தக் கோடிகளின் மெய்யான இழப்பைக் குறித்து இன்னொரு பதிவில் பார்க்கலாம் .
பணத்தை விடுங்கள் . நிறைவேறாத ஒரு காதல் ... வேண்டிய ஒருவரின் இழப்பு ... இவைகளை மறத்தல் ஒரு வரம் தானே ?
இன்னமும் மறக்க முடியாத முதல் காதலைப் பற்றிச் சொல்லும் இந்திரனின் கவிதை வரிகளுடன் இந்தப் பதிவை முடிக்கலாம் .
'ஆற்றில் மிதக்கும்
அநாதைப் பிணமாய்
என் முதல் காதல் .
நினைவு நீரோட்டத்தில்
ஊறி , ஊதிப்போய் , பளபளப்பாய்
சற்றே அழுகிப் போன
அதனை எடுத்து
சிதையில் வைத்தேன் .
சாம்பலாகி விட்ட சதைக்குள்ளிருந்து
வெள்ளை வெளேரென எலும்புகள்
பளிச்செனச் சிரிக்கும்
இன்னமும் என்னைப் பார்த்து '
மீண்டும் சந்திப்போம் .
குறிப்புதவிய நூல் : Gut Feelings by Gerd Gizerenzer
Comments
Post a Comment