பணமாக்கம் பாவமல்ல
பணமாக்கம் பாவமல்ல
பங்குச்சந்தையில் பணமாக்கம் (profit booking) செய்வது பாவமல்ல. முதலீடு செய்வதின் முக்கிய நோக்கமே பின்னாட்களின் பணத்தேவைக்காக ஒரு பணப்பாய்ச்சலை (cash flow) உருவாக்கிக் கொள்வது தான். ஆனால் பணமாக்கம் என்பதை ஒரு சடங்கு மாதிரி செய்யக்கூடாது.
தேவைக்கு விற்பது என்பது வேறு. பங்கு இரண்டு மடங்கானதும் விற்று வைப்பது என்பது வேறு. இரண்டு மடங்கானதும் பங்குகளை விற்று விட்டால் நூறு மடங்காளர்களை எவ்விதம் கைப்பற்ற முடியும்? குறைந்த பட்சம் பத்தாண்டுகள் தேவைப்படாத பணத்தை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்னரே ஒரு அவசரத்தேவை. வேறு வழியில்லாமல் பங்குகளைப் பணமாக்கம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை. அப்போது என்ன செய்யலாம்?
பங்குகளில் முதலீடு செய்வது ஒரு கலை. அவ்வாறு முதலீடு செய்த பங்குகளைப் பணமாக்கம் செய்வது மற்றுமொரு கலை. பணமாக்கம் செய்யும் போது உங்கள் பங்குத் தொகுப்பிலிருந்து அடிச் செங்கல்லை உருவுவது மாதிரியான செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. பங்குத் தொகுப்பின் ஒருங்கமைவிற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உங்கள் செயல்பாடு அமையவேண்டும்.
பங்குத்தொகுப்பை ஒரு தோட்டமாகக் கொண்டால் அவ்வப்போது சில களைகள் முளைத்த வண்ணமாகவே இருக்கும். முதலில் இந்தக் களைகளை, அதாவது நஷ்டத்தில் இருக்கக்கூடிய பங்குகளை விற்று விட வேண்டும். அடுத்ததாக SENSEX மற்றும் NIFTY முதலான குறியீடுகளை விட குறைச் செயலாக்கம் (underperform) ஆகவுள்ள பங்குகளை விற்கலாம். பங்குச்சந்தை குறியீடுகளையும் அதன் தொடர்ச்சியாக பணவீக்கத்தையும் பல மடங்கு விஞ்சிய HDFC வங்கிப் பங்கு மாதிரியான பரம்பரை நகைகளை (family silver) கடைசியாக வேறு வழியில்லாமல் விற்று வைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் ஒரு அவசரத்தேவைக்கு தங்க நகைகளை அடகு வைத்தாலும் வைக்கலாமே அன்றி இந்த மாதிரியான பங்கு அணிகலன்களை விற்கும் பேச்சிற்கே இடமில்லை. Diamonds are forever . என்றென்றைக்குமாக இந்த வைரங்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும்.
இதற்கு மாறாக சிலர் நல்ல இலாபத்தில் உள்ள பங்குகளை விற்று வைப்பார்கள். நஷ்டத்தைத் தவிர்க்கிறேன் பேர்வழி என்று இவ்வாறு தொடர்ந்து செய்தால் ஒரு கட்டத்தில் உங்கள் பங்குத் தொகுப்பில் வெறும் குப்பைப் பங்குகள் மட்டும் குடி கொண்டிருக்கும்.
உங்கள் பங்குத்தொகுப்பு ஒருங்கமைவில் இருந்தால் பங்காதாய வடிவில் ஒரு பணப்பாய்ச்சல் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். அதையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். மீண்டும் HDFC வங்கியையே உதாரணமாகக் கொள்ளலாம். அதன் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டில் இருந்து இது 26 ஆம் ஆண்டு. 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் 650 சதவீதம். ஒரு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் பங்காதாயம். IPO வில் பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்குகளை ஒருவர் 5000 ரூபாய்க்கு 500 பங்குகள் என்று வாங்கியிருந்தால் அவரிடம் இப்போது ஒரு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 5000 பங்குகள் இருக்கும் . அவருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் 32500 ரூபாய். அவருடைய ஆரம்ப முதலீட்டைப் போல ஆறரை மடங்கு வருமானம். அதுவும் 2021 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் மூலமாக மட்டும். அதையும் மறு முதலீடு செய்தால் நல்லது என்று சொன்னால் உதைக்க வருவீர்கள். அதற்குள் விடைபெறுகிறேன்.
Comments
Post a Comment