உலகப் பணக்காரர் ஆவது எப்படி ?
உலகப் பணக்காரர் ஆவது எப்படி ?
கேள்வியே தவறானது. உலகப் பணக்காரர்கள் எவரும், உலகப் பணக்காரர் ஆகவேண்டும் என்பதைத் தங்கள் குறிக்கோளாகக் கொள்ளவில்லை . அவர்கள் நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறார்கள் . இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் மனித குலத்தின் பிரச்னை ஒன்றுக்கான தீர்வைக் கண்டடைய முனைகிறார்கள் . அதனுடைய துணை விளைபொருளாக (by product) அவர்கள் உலகப் பணக்காரர்கள் ஆகின்றனர் . எல்லா நிறுவனங்களின் கதை வசனமும் இதே பாணியில் தான் இருக்கும் .
Henry Ford அவரது நிறுவனத்தைத் தொடங்கும் போது அவருடைய வயது 40 . Model T காரை வடிவமைக்கையில் அவருடைய வயது 45 (நீண்ட கால நோக்கு) குறுகிய கால அளவில் அதிக எண்ணிக்கையிலான கார்களைத் தயாரிப்பதற்கான Assembly Line உத்தி தற்செயலாக அவருக்குத் தோன்றுகிறது . ஒருநாள் , தொழிலாளர்கள் கார்களைத் தயாரிப்பதை Ford பார்வையிடுகிறார் . தொழிலாளர்கள் அங்குமிங்கும் ஓடி உபகரணங்களை எடுத்துக் கார்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர் . அப்போது அவருக்கு மின்னலாக ஒரு யோசனை ... தொழிலாளர்களை ஓரிடத்தில் நிலை நிறுத்தி விட்டு வடிவமைக்கவுள்ள கார்களை நகர்த்தினால் என்ன ? அது தான் Assembly Line உத்தி . இந்த உத்தியின் வாயிலாக Ford நிறுவனத்தால் குறுகிய கால அளவில் மிக அதிக அளவிலான கார்களைத் தயாரிக்க முடிந்தது . தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் தொடர்ந்து செய்வதால் அவர்கள் அதில் நிபுணத்துவம் அடையப்பெறும் வாய்ப்பு கிட்டுகிறது . இந்த உத்தியைக் கூர்ந்து கவனித்தால் Adam Smith ன் division of labour பின்புலத்தில் இயங்குவது புலப்படும் . மேலும் Ford தனது கார்களை கட்டுப்படியாகக் கூடிய விலையில் தயாரித்ததால் அதன் விற்பனை விண்ணை முட்டியது . இந்த வாகனப் புரட்சியினால் நகரத்தின் எல்லைகள் விரிவடைந்து சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. Ford ன் புரட்சிகள் இதனுடன் நிற்கவில்லை . இந்தத் தொடர்ந்த வாக்கிலான ஒரே வேலையினால் தொழிலாளர்கள் சோர்வடைந்து வேலையை விட்டு நின்று விடுதல் மற்றும் திறமையான தொழிலாளர்கள் கிடைக்கப்பெறாமை போன்ற பிரச்னைகள் எழுந்தன . புதிதாகச் சேரும் தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் செலவு மற்றும் அவர்கள் தொழிலை இலாவகமாகக் கையாள்வதற்கான காலம் போன்றவைகளைக் கணக்கிட்டு Ford ஒரு புதிய முடிவை எடுத்தார் . தொழிலாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கினார். இதனால் திறமையான தொழிலாளர்கள் வேலையை விடுவது அறவே நின்றது . இவ்வாறாக தொழிலாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கியதன் மூலமாக Ford தனது நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்துக் கொண்டார் (Opposable Mind என்று சொல்லப்படும் எதிரெதிர் சிந்தனை) இதன் துணை விளைபொருளாக கார் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கார் வாங்கக்கூடிய நுகர்வோராகவும் (Prosumer - Producers as well as Consumers) ஏற்றம் பெற்றனர் .
வாரன் பஃபெட்டை எடுத்துக் கொள்ளுங்கள் . வாரனுக்கு முதலீடு செய்வதில் தீராக் காதல் . அவருடைய சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்துவாசிகளின் முதலீடுகளை நிர்வகித்து வருகிறார் . ஒரு கட்டத்தில் பங்குச்சந்தை மிதமிஞ்சிய விலை - வருவாய் விகிதங்களில் தொடர்ந்து வர்த்தகமாகும் போது இந்த முதலீட்டுத் திட்டங்களை அவர் தொடரவில்லை . முதலீட்டாளர்களுக்கு அவரவர் பங்கை பிரித்துக் கொடுத்து விட்டு அவர் அப்போது வாங்கிய Berkshire Hathaway ஜவுளி ஆலையைத் தொடர்ந்து நிர்வகித்து வருகிறார் . ஒரு கட்டத்தில் அந்த ஆலையை வாங்கியது தவறு என்று புலப்படுகிறது . தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிய அந்த ஆலையைப் பின்னர் தனது முதலீட்டு நிறுவனமாக மாற்றுகிறார் . அப்புறம் நடந்தது வரலாறு. பஃபெட் முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று ஜவுளி ஆலையை வாங்கவில்லை . அது serendipity என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தற்செயலாக நடந்த ஒரு இனிய விபத்து . இன்னொரு இனிய திருப்பமாக Float என்ற கருத்தாக்கம் ... Float என்றால் இலவசப்பணம் மாதிரி , ஆனால் இலவசப்பணம் அல்ல . வாரன் பஃபெட் தனது முதலீட்டு நிறுவனம் மூலமாகக் வாழ்க்கைக் காப்பீடு அல்லாத காப்பீட்டு நிறுவனங்கள் (Non life insurance) பலவற்றைக் கையகப்படுத்துகிறார் . இந்தக் காப்பீட்டு நிறுவனங்கள் premium என்று அழைக்கப்படும் முனைமத்தொகையை முதலில் பெறும் . இந்தக் காப்பீடுகளுக்கு முதிர்வுத் தொகை என்று எதுவும் கிடையாது . காப்பீட்டுக் காலத்தில் ஏதாவது பிரச்னை என்றால் அப்போது மட்டும் இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும் . வாரன் இவ்வாறு பெற்ற முனைமத்தொகையை (float) பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார் . முதலீடு செய்வது வாரனுக்குக் கை வந்த கலை . கரும்பு தின்னக் கூலி . மேலும் வாரனின் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தக் காப்பீடுகளைக் கவனமாகக் கையாள்வதால் இழப்பீடு மிகக் குறைவாகவே வழங்கப்படும் . காப்பீட்டு மொழியில் இது underwriting profit என்பதாக அழைக்கப்படும் . இவ்வாறு பெற்ற float பணம் தான் வாரனின் முதலீட்டு நிறுவனத்திற்கான எரிபொருள் .
Google நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தின அளவில் பெருகிச் செல்லும் இணையப் பக்கங்களை ஒழுங்குபடுத்தி, தகவல்களைத் தேடுபவர்களுக்கு சரியான விடையை அளிக்கும் விதமாக அதனை ஆராயும் போது மிகவும் தற்செயலான ஒரு இனிய திருப்பமாக (இது மீண்டும் மீண்டும் வரும்) தேடுபொறியைக் கண்டடைகிறார்கள் . அவர்கள் தேடுபொறியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இணையப் பக்கங்களை ஆராயவில்லை . தேடுபொறி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதனைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு உலகப் பணக்காரர் ஆகவேண்டும் என்று கனவிலும் கருதவில்லை . தேடுபொறியைக் கண்டடைதல் அதன் தொடர்ச்சியான நிறுவன உருவாக்கம் பின்னர் அதனைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுதல் எதுவும் முன்னதாகத் திட்டமிடப்படவில்லை .
கடைசியாக Amazon நிறுவனத்தையும் பார்த்து விடலாம் . Jeff Bezos பங்குச்சந்தை சார்ந்த நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் . அப்போது தான் இணையத்தளங்கள் அறிமுகமாகி வளர்ந்த வண்ணம் உள்ளன . ஒருநாள் தற்செயலாக இணையத்தளங்கள் தின அளவில் மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகும் வரைபடம் ஒன்று அவருக்குப் பார்க்கக் கிடைக்கிறது . ஒரு யோசனை, பொறி தட்டுகிறது . நாமும் இணையத்தள வியாபாரம் ஒன்றைத் தொடங்கி இந்த மீமிகைப் பெருக்கத்தில் பங்கேற்றால் என்ன ? இப்போது இருக்கும் இந்த இனிய வாழ்க்கையைத் துறந்து பனிமூட்டமான எதிர்காலத்தைக் கைக்கொள்வதா வேண்டாமா என்று ஒரே யோசனை . அப்போது Regret Minimization Framework என்ற mental model அவருக்கு உதவுகிறது . அது என்ன RMF ? இப்போது இந்த இணையத்தள வியாபாரத்தில் பங்கு பெறாவிட்டால் என்னுடைய 80 வது வயதில் இதற்காக நான் வருத்தப்படுவேனா இல்லையா ? கண்டிப்பாக வருத்தப்படுவேன் . மறுநாளே தனது வேலையைத் துறந்து அமேசான் இணையத்தளத்தைத் தொடங்கி விடுகிறார் . புத்தகத்திலிருந்து தொடங்கப்பெற்று இப்போது அமேசானில் கிடைக்காத பொருட்களே இல்லை என்பதான அசுர வளர்ச்சி .இதில் இனிய விபத்தாக Long Tail பணமாக்கம் , வாடிக்கையாளர்கள் , போட்டி இணையத்தளத்திற்குச் சென்று விடாமல் அவர்களைக் கட்டிப்போடும் Amazon Prime மற்றும் Cloud computing மூலமான குறைந்த விலை Amazon Web Services போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் . Jeff Bezos உலகப் பணக்காரர் ஆகவேண்டும் என்று அமேசான் நிறுவனத்தைத் தொடங்கவில்லை . Regret Minimization Framework என்ற அடிப்படையில் மட்டுமே அதனைத் தொடங்கினார் .
நீங்கள் எதில் தீராக்காதல் (passion) கொண்டுள்ளீர்களோ அதில் ஈடுபடுங்கள் . Serendipity என்று அழைக்கப்படும் இனிய திருப்பங்கள் உங்கள் வாழ்விலும் நிகழும் . அதன் மூலமாக நீங்கள் உலகப் பணக்காரர் ஆகலாம் . அவ்வாறு இல்லாவிட்டாலும் விரும்பிய செயலைச் செய்த திருப்தியாவது கிடைக்கும் .
இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லி வைக்கிறேன் . வெறுமனே சேமித்து அதனைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலமாக மட்டும் யாரும் உலகப் பணக்காரர் ஆகமுடியாது . நீங்கள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதனை வளர்த்து பங்குச்சந்தையில் பட்டியலிட்டு அந்தப் பட்டியலிடுதல் மூலமான PE உருவாக்கம் மற்றும் விரிவாக்கம் மூலமாக மட்டுமே உலகப் பணக்காரர் ஆகமுடியும்.
Comments
Post a Comment