காலத்தை வாங்க முடியுமா ?
காலத்தை வாங்க முடியுமா ?
அமீபா போன்ற நுண்ணுயிரிகள் ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. ஒரு காகிதத்திற்கு இரட்டைப் பரிமாணங்கள். நீளம் மற்றும் அகலம். தடிமனைப் புறக்கணித்து விடலாம். நாம் முப்பரிமாண உலகில் வாழ்கிறோம். நீளம், அகலம் மற்றும் உயரம். நான்காவது பரிமாணம் என்பது காலம் . மூன்று பரிமாணவாசிகள் மூன்றாவது, இரண்டாவது மற்றும் ஒற்றைப் பரிமாணங்களை உணர வல்லவை. அதே மாதிரி இரண்டு பரிமாணவாசிகள் இரண்டு மற்றும் ஒற்றைப் பரிமாணங்களை உணரவல்லவை. அதாவது, நம் பரிமாணத்தையும், நமக்குக் கீழே உள்ள பரிமாணங்களையும் மட்டுமே நம்மால் உணர முடியும். இரண்டு பரிமாணக் காகித உலகில் சில உயிரினங்கள் வாழ்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு பென்சிலைக் கொண்டு அந்தக் காகிதத்தில் துளையிட்டால் அந்தக் காகித ஊரின் உயிரினங்களால் அந்தப் பென்சிலைப் பார்க்க முடியாது. மூன்றாவது பரிமாணமான பென்சிலின் உயரம் அவர்கள் அறிந்திராதது. அவர்களைப் பொறுத்தவரையில் அந்தக் காகித ஊரில் திடுதிப்பென்று ஒரு துளை விழுந்ததாக மட்டுமே உணர முடியும். நான்காம் பரிமாணமான காலம் என்ற ஒன்று இருப்பதை நம்மால் உணர முடியுமே தவிர அதில் நம்மால் முன் பின்னாகப் பயணிக்க முடியாது. ஐந்தாம் பரிமாணவாசிகள் நான்காம் பரிமாணமான காலத்தில் முன் பின்னாகப் பயணிக்க வல்லவர்கள்.
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் (Theory of relativity) பற்றிக் கொஞ்சம் விளக்க முயற்சிக்கிறேன். ஐன்ஸ்டீனுக்கு முந்தைய அறிவியலாளர்கள் காலம் மற்றும் தூரம் என்ற இரண்டு அளவீடுகளையும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத தனிப்பட்ட இரண்டு நிரந்தரங்களாகத் தான் பார்த்தார்கள். உங்கள் இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட தூரம் பத்து கி.மீ என்பதாக வைத்துக் கொள்வோம். பொடி நடையாக உங்கள் இல்லத்திலிருந்து நடந்தே சென்று உங்கள் அலுவலகத்தை அடைய ஒன்றரை மணி நேரம் ஆகலாம். இரு சக்கர வாகனத்தில் சென்றால் அரைமணி நேரம் ஆகலாம். உங்கள் இல்லத்தையும் அலுவலகத்தையும் தூரம் மட்டும் பிரிக்கவில்லை. காலமும் பிரிக்கிறது. அதாவது பத்து கி.மீ என்பதை காலக்கணக்கிலும், நீங்கள் செல்லும் வேகத்திற்கு ஏற்ப, ஒன்றரை மணி நேரம் அல்லது அரைமணி நேரம் என்பதாகவும் சொல்லலாம். உலகிலேயே மிகவும் வேகமாகப் பயணிப்பது ஒளி. ஒளியின் வேகத்தில் சென்றால் காலம் மறைந்து விடும். அதாவது காலம் ( நீங்கள் செல்லும் வேகத்திற்கு ஏற்ப) சார்பானது. இது தான் சார்பியல் தத்துவம். காலமும் தூரமும் தனிப்பட்ட நிரந்தரங்கள் அல்ல. இரண்டும் ஒன்றுக்கொன்று சார்பானவை. ஒளியின் வேகத்தில் பயணித்தால் அங்கே காலம் பூஜ்யமாகி விடுகிறது. அதாவது அங்கு காலம் என்பதே கிடையாது. காலம் எப்படி வேகமாகப் பயணிக்கும் என்பதை ஐன்ஸ்டீன் விளையாட்டாக விளக்குகிறார். நீங்கள் எரிந்து கொண்டிருக்கும் அடுப்பின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாகச் செல்லும். உங்கள் காதலியுடன் பேசிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு யுகமும் ஒரு வினாடியாகப் பறக்கும்.
பங்குச்சந்தை குறித்த பதிவில் பரிமாணத்திற்கும், சார்பியல் தத்துவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள்.
முதலீட்டுச் சமன்பாட்டில் நீங்கள் எவ்வளவு ஆரம்ப முதலீடு இடுகிறீர்கள், எவ்வளவு வட்டி வருமானம் மற்றும் எவ்வளவு காலம் என்பதான மூன்று உட்கூறுகள் இருக்கின்றன. இதில் முதலீட்டைக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இடுவது நம் கையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முதலீட்டின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம். வட்டி வருமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தரமான பங்குகளில் மதிப்பு முதலீடு செய்வதின் மூலமாக ஈவுத்தொகை ( Dividend) மற்றும் பன்மடங்கு முதலீட்டுப் பெருக்கத்தை (Capital Appreciation) அடையக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் இந்தக் காலம் என்பது மட்டும் நம் கையில் இல்லை. காலத்தை இழந்தால் இழந்தது தான். வாரன் பஃபெட் தன்னுடைய பதினோராம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கி விட்டார். மனுஷன், அதுவே ரொம்பவும் தாமதம் என்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். முதலீட்டுத் திட்டங்களைச் சீக்கிரமே தொடங்கி விடுவது ஒரு சாதகமான கட்டமைப்பைக் கொடுக்கிறது. கூட்டு வட்டியின் அதிவேகமான வளர்ச்சியை (exponential growth) முதலீட்டுத் திட்டங்களின் பிற்பகுதியில் தான் உணர முடியும் . பருவத்தே பயிர் செய் என்பது மாதிரி முதலீட்டுத் திட்டங்களைச் சின்ன வயதிலேயே தொடங்கி விட்டால் கூட்டு வட்டியின் மாய மந்திரங்களை நம் வாழ்நாளிலேயே காண முடியும். காலம் போனால் போனது தான். உண்மையிலேயே அது அப்படித்தானா? காலம் போனால் போனது தானா?
ஒரு கோடி ரூபாய் என்ற மந்திர இலக்கை அடைவது உங்கள் நீண்ட கால இலக்காக இருக்கலாம். உங்கள் முதலீட்டுத் தொகுப்பில் (Investment portfolio) இப்போது பத்து இலட்சம் ரூபாய் இருப்பதாகக் கொள்ளலாம். உங்களையும் உங்கள் இலக்கையும் 90 இலட்சம் ரூபாய் பிரிக்கிறது. இந்தப் பிரிவைக் காலக் கணக்கிலும் சொல்லலாம். கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் நீங்கள் உங்கள் இலக்கை அடைய பன்னெடுங்காலம் பிடிக்கும். பன்மடங்காகக் கூடிய பங்குகளை இனங்கண்டு முதலீடு செய்தால் வெகுவிரைவில் உங்கள் இலக்கை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதையே வேறு விதமாகக் கால இயந்திரத்தில் வெகு வேகமாகப் பயணிப்பதாகவும் சொல்லலாம். வங்கி சேமிப்புக் கணக்கிலோ அல்லது உங்கள் வீட்டுக் கடுகு டப்பாவிலோ பணத்தைப் போட்டு வைத்திருந்தால் பணவீக்க எலி உங்கள் பணத்தைக் கடித்துக் குதறி விடும். கால இயந்திரத்தில் பின்னோக்கி ஓடுவதாகப் பொருள். தங்கம் பணவீக்கத்தை சமன் செய்ய வல்லது. தங்கத்தில் முதலீடு செய்தால் ஓடுபொறியில் (Treadmill) ஓடிக்கொண்டிருப்பது போல. நீங்கள் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருப்பீர்கள். கடன் பத்திரங்கள் பணவீக்கத்தை விஞ்சி ஓரளவு தான் உண்மையான வருமானம் கொடுக்க வல்லவை. கட்டை வண்டியில் ஊர்ந்து நகர்வது போல. பன்மடங்காகக் கூடிய பங்குகளை இனம் கண்டு முதலீடு செய்வது காலப்பொறியில் விர்ர்ர்ரென்று றெக்க கட்டிப் பறப்பது போல. HDFC வங்கியில் 1995 ல் ரூ.10000 முதலீடு செய்து அதை நாளது தேதி வரை வைத்திருந்தால் அதன் மதிப்பு ரூ. 1.47 கோடி. அதாவது 26 வருடங்களில் பத்தாயிரம் என்பது கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் (32 % CAGR) என்ற மதிப்பை அடைந்திருக்கிறது. வங்கி நிரந்தர வைப்பு முதலீட்டில் இந்த பத்தாயிரம் என்பது ஒன்றரைக் கோடி என்ற மதிப்பை அடைய 95 வருடங்கள் (8% CAGR) ஆகும். HDFC என்ற வங்கியை இனம் கண்டு முதலீடு செய்ததன் மூலமாக நாம் 69 வருடங்களை வாங்கியதாகவும் கொள்ளலாம். ஐயா, எனக்குப் பங்குகளை இனம் கண்டு வாங்கத்தெரியாது என்பவர்கள் sensex ஐ வாங்கலாம். Sensex என்பது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டெண். Sensitive index என்பதன் சுருக்கம். Reliance, TCS, HDFC Bank, HUL, ITC ... முதலான முப்பது முக்கிய பங்குகளின் தொகுப்பு. Sensex ல் முதலீடு செய்வது, வைக்கோல் போரில் HDFC வங்கி என்ற தங்க ஊசியைத் தேடுவதற்குப் பதிலாக வைக்கோல் போரையே வாங்குவதற்கு ஒப்பானது. சென்செக்ஸிலான பத்தாயிரம் முதலீடு 52 வருடங்களில் (15% CAGR) ஒன்றரைக் கோடி என்ற இலக்கை எட்டி விடும். இவ்விதமாக அதிகப்படியான வருமானம் ஈட்டக்கூடிய பங்குகளில் முதலீடு செய்வதன் மூலமாகக் காலத்தை வாங்கலாம்.
உலக மாயை குறித்த சின்னக் கதை ஒன்றுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன். கவனமாகப் படிப்பவர்கள் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் இந்தக் கதையின் அடிநாதமாக இருப்பதை உணரலாம்.
ஒரு சமயம் ஆற்றங்கரையோரம் நடந்து செல்கையில் நாரதர், பகவான் கிருஷ்ணரிடம் உலக மாயை என்று சொல்கிறார்களே அது என்ன என்பதாகக் கேட்டாராம். பகவான் அதற்குப் பதில் எதுவும் கூறாமல் தாகமாக இருப்பதாகவும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டார். நாரதர் தண்ணீர் கொண்டு வரச் செல்லும் போது அங்கே பார்த்த ஒரு பெண்ணிடம் மயங்கியவராக அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். பத்து வருடங்கள் உருண்டோடுகிறது. நாரதருக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு சமயம் ஆற்றில் ஊழிப் பெருங்காலம் என்று சொல்லத்தக்க அளவில் பெரும் வெள்ளம். நாரதரின் மூன்று குழந்தைகளும், மனைவியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறார்கள். நாரதர் ஆற்றங்கரையோரம் அமர்ந்து ஓவென்று அழுது கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் அவரை நெருங்கி வந்து தண்ணீர் கேட்டுப் பத்து நிமிஷம் ஆகி விட்டது. இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதாகக் கேட்டாராம். நாரதர், பகவான் காலில் விழுந்து வணங்கினார்.
Comments
Post a Comment