ஆத்தும குணம் - 3
ஆத்தும குணம் - 3
(Basic Instinct - 3)
( முன் குறிப்பு : இந்தப் பதிவைத் தனியாகப் படித்தாலும் புரியும் . ஆனால் இது ஆத்தும குணம் பதிவுகளின் மூன்றாவது மற்றும் கடைசிப் பகுதி .
முதலிரண்டு பதிவுகளைப் படித்து விட்டு இதனைப் படித்தால் சுவை பெருகும் )
ராஜா ராமன் ஒரு பங்குச்சந்தை ஊக வணிகன் . அவன் பங்குச்சந்தையில் செய்யாத வணிகம் எதுவும் இல்லை . ஆனால் அவன் தான் செயலாக இல்லை . அவன் IPO வில் ஒதுக்கீடு பெற்று இரண்டு மடங்கு விற்ற பங்குகளெல்லாம் இப்போது நூறு மடங்கு என்ற அளவுகளில் வர்த்தமாகிக் கொண்டிருக்கின்றன . F & O வில் பத்து நிலைப்பாடுகளில் பெற்ற இலாபம் பதினோராவது நிலைப்பாட்டில் முற்றிலுமாகக் கரைந்து விடுகிறது . Short ல் அவ்வப்போது கிடைக்கப்பெறும் இலாபம் short squeeze ல் மறைந்து விடுகிறது . ராஜா ராமன் Strangle மற்றும் Straddles என்று சிக்கலான F & O வகைகளையும் முயன்று பார்த்து விட்டான் . வாழ்க்கை சிக்கலானது தான் மிச்சம் . இவ்விதமான வர்த்தகங்களின் உராய்வுச் செலவுகளில் அவன் இழந்ததே இலட்சங்களில் இருக்கும் . இந்தச் சந்தை வணிகங்களில் தோற்றதை விடக் கடவுள் கொடுத்த இரண்டு சந்தர்ப்பங்களைத் தவற விட்டது தான் அவனுக்கு மிகப்பெரிய மனக்குறையாக இருந்தது . முதன்முறை கால இயந்திரத்தில் பயணித்து பத்தாண்டுகள் பின் சென்று முன் செய்த தவறுகளையே மீண்டும் செய்தது மற்றும் அடுத்த முறை கால இயந்திரத்தில் முன் செல்வதற்குப் பதிலாகப் பின் சென்றது முதலான இந்த இரண்டு தவறுகளும் அவன் மனதில் ஆறாத காயங்களாகி விட்டன .
இதற்கிடையில் இறைவனுக்கும் இறைவிக்கும் ஒரு வாக்குவாதம் எழுந்தது . ராஜா ராமனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் என்ன என்பது இறைவியின் கருத்து . ஏற்கனவே இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன , அதனை அவன் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பது கடவுளின் கருத்து . காளமேகம் கூடப் பாடவில்லையா ? என்று தேவி குரலை உயர்த்தினாள் . காளமேகமாவது கோவில் வாசலில் படுத்திருந்தான் , இவன் சரியான தண்டம் என்று கடவுளும் பிரதிவாதம் செய்தார் . தேவி உம்மென்று இருக்கவும் கடவுளுக்குத் தாங்கவில்லை . ராஜா ராமனுக்கு மீண்டும் உதவி செய்யத் தீர்மானித்தார் . ராஜா ராமன் முன் கால இயந்திரமும் கையுமாகப் பிரசன்னமானார் .
ராஜா ராமனுக்கு ஒரே ஆச்சரியம் . இந்த முறை அழைக்காமலே வந்து விட்டாரே ? கடவுள் அவன் மனதைப் படித்தவராக வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் என்றார் .
கடவுளுக்கே நிர்ப்பந்தமா என்று ராஜா ராமனுக்குக் குழப்பமாக இருந்தது . சென்ற முறை செய்த தவறுகளை இந்த முறை செய்யக்கூடாது . கால இயந்திரத்தை வாங்க வேண்டியது . இருபது ஆண்டுகள் முன் செல்ல வேண்டியது . ஏதாவது ஒரு பெட்டிக்கடையில் பிஸினஸ் லைன் பத்திரிகையை வாங்க வேண்டியது . கால இயந்திரத்தில் மீண்டும் திரும்ப வேண்டியது . பின்னர் ஆற அமர பிஸினஸ் லைன் பத்திரிகையை ஆராய்ந்து இருபது ஆண்டுகளில் மல்டி பேக்கர் ஆகியிருக்கும் பங்குகளை ஆகப்பெரிய அளவுகளில் வாங்கி வைத்து விட வேண்டியது . இந்த முறையும் கோட்டை விட்டு விடக் கூடாது . அரிதினும் அரிதாகக் கிடைக்கப்பெற்ற கண்ணின் மணியான இந்த வாய்ப்பை முழுவதும் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . கடவுள் முகமே சரியில்லை . நிர்ப்பந்தம் என்று வேறு சொல்கிறார் . மீண்டும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கப்பெறும் என்று சொல்வதற்கில்லை .
கடவுளும் அவர் பங்குக்குக் கவனம் என்று சொல்லிக் கால இயந்திரத்தைக் கொடுத்தார் .
ராஜா ராமன் 20 என்ற எண்ணையும் கூட்டல் குறியையும் அழுத்தினான் .
2042 ல் ராஜா ராமனுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருந்தன ...
2042 லும் மக்கள் முகமூடியுடன் அலைந்த வண்ணம் இருந்தார்கள் . ஓரிடத்தில் முகமூடி அணியாதவர்களைப் போலீஸ் பிடித்து உடனடி அபராதம் விதித்தவாறு இருந்தது . ராஜா ராமன் நல்லவேளையாக முகமூடி அணிந்து வந்திருந்தான் . உருமாறிய கொரோனாவா அல்லது வேறு புது வகைக் கிருமியா ? பெட்டிக்கடையில் நூறு ரூபாய் கொடுத்து ஒரு பிஸினஸ் லைன் பத்திரிகையைக் கேட்டதும் கடைக்காரர் அவனை ஏற இறங்கப் பார்த்தார் . இது பழைய நோட்டு . செல்லாது . Demonetisation ஆகி விட்டது . புது நோட்டு இருந்தா கொடுங்க ?
ராஜா ராமன் சட்டைப்பையைத் துழாவி 2022 ஞாபகத்தில் பத்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தான் . கடைக்காரர் சாவுக்கிராக்கி என்றெல்லாம் திட்டாமல் பொறுமையாக பிஸினஸ் லைன் 50 ரூபாய் என்றார் . ராஜா ராமன் கவனம் கவனம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு ஐம்பது ரூபாய் சில்லரையாகக் கொடுத்தான் . பணவீக்கம் தனது வேலையைக் காட்டி விட்டது . பிஸினஸ் லைன் பத்திரிகையைக் கவனமாகக் கையில் சுருட்டி வைத்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்று கடையை ஆராய்ந்தான் . புது வகைக் குளிர் பானங்களாக ஆளுயர ஃப்ரிட்ஜில் அடுக்கி வைத்திருந்தார்கள் . Coca Cola நடுநாயகமாக வீற்றிருந்தது . வாரன் பஃபெட்டின் கணக்கு தப்பவில்லை . இன்னொரு தட்டு முழுவதும் ஆரோக்யா பால் பாக்கெட்டுகள் தென்பட்டன . ஒருவர் பாராசூட் ஒன்றின் சிறிய சாஷே ஒன்றை இருபது ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார் . ராஜா ராமன் Marico நிறுவனத்தை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டான் . இன்னொருவர் ஒரு உஜாலா கொடுங்க என்றதும் ராஜா ராமன் Jyothy lab என்று முணுமுணுத்தான் . Fevikwik ஐ மாலை மாலையாகத் தொங்க விட்டிருந்தார்கள் . Colgateன் புது வகைப் பற்பசைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன . அவன் மதிப்பு முதலீட்டு நண்பரின் நீண்ட காலப் பார்வை மிகச் சரியானது தான் . கடையின் ஒரு பக்கம் டிவியில் CNBC ஓடிக் கொண்டிருந்தது . சென்செக்ஸ் 200000 என்ற அளவுகளில் இருந்தது . அடேங்கப்பா !
ராஜா ராமன் கையிலிருந்த பிஸினஸ் லைன் பத்திரிகையைப் புரட்டினான் . HDFC நிறுவனம் ஒரு பக்கத்திற்கு விளம்பரம் கொடுத்திருந்தார்கள் . சுந்தரம் பைனான்ஸின் தலைமுறைகளைத் தாண்டிய நம்பிக்கை என்பதான இன்னொரு விளம்பரம் சிறிய அளவில் தட்டுப்பட்டது . மற்ற விளம்பரங்கள் அவ்வளவு பரிச்சயமானதாக இல்லை . 2022 க்குச் சென்று நிதானமாகப் பார்க்கலாம் . ராஜா ராமன் நின்ற இடத்திலிருந்தவாறே சுற்றுமுற்றும் நோட்டம் விட்டான் . எதிர்த்தார்ப் போல விசாலம் காபியில் எப்போதும் போல் ஒரே கூட்டமாக இருந்தது . காபி 100 ரூபாய் . பக்கத்து கடையில் இங்கு சுத்தமான காற்று கிடைக்கும் என்று ஃப்ளெக்ஸ் போர்டு தொங்கிய வண்ணம் இருந்தது . ராஜா ராமன் 2042 ஐ சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொண்டான் . போன முறை பட்ட அனுபவம் அவன் மனதில் பசுமையாக இருந்தது . கால இயந்திரத்தை இழந்து விட்டால் பின்னர் நிரந்தரமாக இங்கேயே இருக்க வேண்டியதாகி விடும் . ராஜா ராமன் கால இயந்திரத்தின் தற்காலத்தை அழுத்தினான் .
கடவுள் வழக்கம் போல் பயணம் சுகமாக இருந்ததா என்று விசாரித்தார் . ராஜா ராமன் கடவுளுக்குப் பெரிய பெரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டான் .
பிஸினஸ் லைன் பத்திரிகையைப் படித்த ராஜா ராமனுக்குச் சற்று ஏமாற்றமாகவே இருந்தது . ITC பங்கு இன்னமும் 200 என்ற விலையிலேயே வர்த்தகமாகிக் கொண்டிருந்தது . பங்குச்சந்தை நிபுணர்கள் ITC பங்கு value trap என்று சொன்னது உண்மை தானா ? HDFC பங்கு இன்னமும் 2000 என்ற விலையில் மட்டுமே இருந்தது . Pidilite பங்கு இன்னும் மோசம் . 1300 ரூபாய் என்ற அளவில் 2022 விலைகளின் பாதியில் இருந்தது . Piramal Pharma ன் கதையும் அது தான் . நிறையப் புதிய நிறுவனங்கள் தென்பட்டன . அவைகளின் ரிஷிமூலம் நதிமூலம் தெரியவில்லை .
ஒரு பத்திரிகையின் செய்திகளைப் படிப்பது என்பது வேறு . அதனை முறையாகப் புரிந்து கொள்வது என்பது வேறு . அதுவும் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை இந்த வேறுபாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது . ஆயிரம் வெவ்வேறு நபர்களால் வாசிக்கப்படும் ஒரு புத்தகம் ஆயிரம் புத்தகங்களாகிறது , தீர்க்கமான கற்பனை கொண்ட ஒரு வாசகன் ஆசிரியர் எழுதியதற்கு அப்பால் வெகு அப்பால் சென்று ஆசிரியர் எதிர்பார்ப்பதை விடவும் விளக்கமாகப் புரிந்து கொள்கிறான் என்று தார்க்கோவ்ஸ்கி சொன்னது ராஜா ராமன் விஷயத்தில் எதிர்மறை உண்மையாகி விட்டது .
ராஜா ராமன் ITC பங்கை மட்டும் பார்த்தான் . அதற்கு அடுத்ததாக உள்ள ITC FMCG பங்கை பார்த்திருந்தால் அவனுக்கு உண்மை தெரிந்திருக்கும் . மேலும் ITC நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இலவசப்பங்குகளை வழங்கிய வண்ணம் உள்ளது ராஜா ராமன் அறியாதது . HDFC பங்கின் முக மதிப்பு ஒரு ரூபாய் . மேலும் அது ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வழங்கிய இலவசப்பங்குகளையும் கணக்கிட்டால் அதன் விலை 8000 வந்து விடும் . Pidilite பங்கு ஒன்றுக்கு மூன்று என்ற அடிப்படையில் இலவசப்பங்குகளை இரண்டு முறை வாரி வழங்கியிருக்கிறது . மேலும் இந்த நிறுவனங்கள் வருடாவருடம் தரும் அதிகரித்து வரும் பங்காதாயங்களையும் சேர்த்துக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் . Piramal Pharma க்கு முன்னதாக அதிலிருந்து பிரிக்கப்பட்ட Piramal Financial நிறுவனப் பங்கை ராஜா ராமன் பார்க்கவில்லை . அவைகள் குருடாக இருக்கவேண்டும் என்று மனது நினைத்து விட்டால் கண்கள் பார்ப்பதில்லை .
வேறு ஒரு சிறிய கணக்கையும் ராஜா ராமன் மறந்து விட்டான் . சென்செக்ஸ் இரண்டு இலட்சம் புள்ளிகளை எட்டியிருக்கிறது . அப்போது சென்செக்ஸ் நிறுவனப்பங்குகளின் மதிப்பும் கூடியிருக்க வேண்டும் என்பது ஒரு சிறிய தர்க்க முறை . சென்செக்ஸ் குறியீட்டில் நிறைய அறிமுகமில்லாத நிறுவனங்கள் புதிதாக இடம் பெற்றிருந்தது என்னவோ உண்மை தான் . அந்த நிறுவனங்களைக் குறித்து வைத்துக் கொண்டு வரவிருக்கும் காலங்களில் அவைகளின் தடங்களைத் தொடர்ந்தாலே போதுமானது . ஆனால் அத்தகைய பொறுமை அவனுக்கு இல்லை .
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ராஜா ராமன் கையில் வைத்திருந்த அந்த 2042 வது வருட வணிக நாளிதழ் சொத்து உருவாக்கவல்ல ஒரு ஆகப்பெரிய ஆவணமாகும் . துரதிர்ஷ்டவசமாக அதனை எப்படிப் பணமாக்கம் செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை .
ராஜா ராமன் கடைசியாக Futures & Options பகுதியை வந்தடைந்தான் . இதென்ன Long Term Futures ? ராஜா ராமன் நிமிர்ந்து உட்கார்ந்தான் .
கடவுள் லேசாக சிரித்துக் கொண்டார் .
/ முற்றியது /
Comments
Post a Comment