வேதாளம் சொன்ன கதை - 1
வேதாளம் சொன்ன கதை - 1
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான்.
பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கி, ' மன்னா! முதலீடு சம்பந்தமான புதிர்களை நிறையக் கேட்டு விட்டேன். மதிப்பு முதலீடு, நீண்ட கால நோக்கு, தொடர் முதலீடு, பங்காதாயம் என்று நிறையத் தெரிந்து தெளிந்திருக்கிறாய். மகாபாரதத்தில் ஒரு கிளைக் கதை உண்டு. ஒரு சமயம் பாண்டவர்கள் காட்டில் வழி தவறி விடுகிறார்கள். தண்ணீரைத் தேடி அலையும் போது ஒரு சுனை காணக் கிடைக்கிறது. அந்த சுனையை ஒரு யட்சிணி காவல் காக்கிறது. முதலில் சகாதேவன் தண்ணீர் அருந்தச் செல்கையில் அந்த யட்சிணி அவனை நிறுத்தி அதன் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு தண்ணீர் அருந்தச் சொல்கிறது. சகாதேவன் அதனைப் பொருட்படுத்தாமல் தண்ணீர் அருந்தச் செல்கையில் மயங்கி விழுந்து விடுகிறான். இவ்வாறே நகுலன், அர்ச்சுனன் மற்றும் பீமன் ஆகியோரும் யட்சிணியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மயங்கி விழுந்து விடுகிறார்கள். கடைசியாகத் தருமன் வருகிறான். யட்சிணியின் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் அளிக்கிறான். கடைசியாக யட்சிணி கேட்ட கேள்வி: இந்த உலகில் நீ எதனை வேடிக்கையாக நினைக்கிறாய்? அதற்குத் தருமன் பதில் அளிக்கிறான். நாளும் 'இறப்பு' என்பது இப்பூவுலகில் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. தன் பாட்டன், பூட்டன், முப்பாட்டன் முதலான அனைவரும் இவ்வுலகை விட்டு மறைந்ததை உணர்ந்தும் உணராதவனாக, இறப்பு என்பது அடுத்தவருக்கு நிகழக்கூடியது, எனக்கு நிகழாது என்னும் வண்ணம் மானிடர்கள் நடந்து கொள்வது ஒரு வினோதமான வேடிக்கை. யட்சிணி தருமனுடைய பதிலால் திருப்தியடைந்து பாண்டவர்கள் நால்வரையும் விடுவித்ததாகக் கதை முடிகிறது. நீ இந்தப் பங்குச்சந்தை வாழ்க்கையில் பல்வேறு வினோதங்களைப் பார்த்திருப்பாய். பங்குச்சந்தையின் வன்மையான ஏறி இறங்கும் தன்மைக்கு அடிநாதமாக இருப்பதே இந்த மனிதர்களின் வேடிக்கை வினோதங்கள் தான். நீ பங்குச்சந்தையில் எதனை வேடிக்கையிலும் வேடிக்கையாக நினைக்கிறாய் என்று கேட்டது. இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தும் நீ சொல்லாமல் இருந்தால் உன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறும் என்றும் எச்சரித்தது.
நீ சொல்வது உண்மை தான். பங்குச்சந்தையைப் பலர், சொத்துக்களை உருவாக்கும் ஒரு தளமாகப் பார்க்காமல் வேடிக்கை நடக்கும் ஒரு கூடாரமாகத் தான் பார்க்கிறார்கள். இந்த வேடிக்கை விளையாட்டுக்களின் சிகரமாக நான் பார்ப்பது இதைத் தான். பணவீக்கம் என்பதை அனுதினமும் பல்வேறு வழிகளில் உணர்ந்தும் உணராமல் இருக்கிறார்கள். நாம் செய்யும் முதலீடு பணவீக்கத்தை விஞ்சியதாக இருக்க வேண்டும். இல்லையேல் முதலீட்டுக் காலத்தின் முடிவில் நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கும். பண மதிப்பிழப்பு (demonitisation) நடவடிக்கை எடுத்தால் கூப்பாடு போடுபவர்கள் நாளும் பணம் தன் மதிப்பை இழந்து வருவதை உணர்ந்தும், முதலீட்டுச் சமன்பாட்டில் அதனைப் புறந்தள்ளுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. விக்கிரமாதித்தனின் பதிலால் அவனுடைய மௌனம் கலைந்தது. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது.
Comments
Post a Comment