விலை வேற்றுமை வாணிபம்

விலை வேற்றுமை வாணிபம்

Arbitrage

ஒரு பங்கு தேசிய பங்குச்சந்தையில் 100 ரூபாய்க்கு வர்த்தகமாவதாகவும் அதே பங்கு மும்பை பங்குச்சந்தையில் 90 ரூபாய்க்கு வர்த்தகமாவதாகவும் வைத்துக்கொள்வோம். மும்பை பங்குச்சந்தையில் அந்தப் பங்கை 90 ரூபாய்க்கு வாங்கி தேசிய பங்குச்சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பது விலை வேற்றுமை வாணிபம் (Arbitrage) என்று அழைக்கப்படுகிறது. கேட்பதற்கு, எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழி போல் தோன்றினாலும் நடைமுறையில் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். முதலாவதும் முக்கியமானதுமான பிரச்னை என்னவென்றால் மும்பை பங்குச்சந்தையில் நாம் பங்குகளை வாங்கத் தொடங்கியதும், அந்தப் பங்குகளுக்கான தேவைப்பாடு (demand) அதிகரித்து பங்கின் விலை உயர்ந்து விடும். அதே மாதிரி தேசிய பங்குச்சந்தையில் நாம் பங்குகளை விற்கத் தொடங்கியதும், அந்தப் பங்குகளின் அளிப்பு (supply) அதிகரித்து பங்கின் விலை குறைந்து விடும். ஒரு கட்டத்தில் பங்கின் விலை இரண்டு சந்தைகளிலும் சமநிலையை அடைந்து விலை வேற்றுமை வாணிப வாய்ப்பு மறைந்து விடும். பங்குகளை 90 ரூபாய்க்கு வாங்கி 100க்கு விற்கையில், வாங்கும் போதும் விற்கும் போதும் தரகர் தரகு, பங்குப் பரிவர்த்தனை வரி முதலானவைகளைக் கட்ட வேண்டி வரும். மேலும் குறுகிய கால மூலதன ஆதாய வரியையும் கணக்கில் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் கணினியே இந்த மாதிரி விலை வேற்றுமை வாணிப வாய்ப்புகளைக் கண்டறிந்து அதைக் களைந்து விடுவதால் விலை வேற்றுமை வாணிப வாய்ப்பு என்பது அரிதினும் அரிதாகி விட்டது. ஆனால் சில விலை வேற்றுமை வாணிப வாய்ப்புகள் இன்னமும் யாராலும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

1. மதிப்பு முதலீடு
(Value Arbitrage)

பங்குச்சந்தையில் ஒரு கருத்தாக்கம் (concept) அனைவருக்கும் தெரிந்து, அதை அனைவரும் பின்பற்றத் தொடங்கினால், மேலே குறிப்பிட்ட விலை வேற்றுமை வாணிப வாய்ப்பு மாதிரி அது மங்கி மறைந்து விடும். ஆனால் ஒரே ஒரு கருத்தாக்கம் மட்டும் நிறையப் பேருக்கு நன்கு தெரிந்தும், அதை யாரும் பின்பற்றாததால் இன்னமும் திறந்த நிலையில் (open ended) உள்ளது. அது தான் மதிப்பு முதலீடு. மதிப்பு முதலீட்டைச் சுருக்கமாக விளக்க வேண்டுமென்றால் ஒரு ரூபாய் உள்ளார்ந்த மதிப்பு ( intrinsic value) உள்ள பங்கை ஐம்பது காசுக்கு வாங்குவது என்பதாகச் சொல்லலாம் . சந்தை அந்தப் பங்கின் உள்ளார்ந்த மதிப்பை உணர்ந்து அதை அடைய நெடுங்காலம் எடுத்துக் கொள்ளலாம். அது வரை பொறுமை காக்கும் மனோநிலை சந்தைக்கு இல்லாததால் அந்த வாணிப வாய்ப்பு இன்னமும் பிரகாசமாக உள்ளது.

2. அறிவுசார் முதலீடு
(Knowledge Arbitrage)

தரத்திற்கான உலகின் மிக உயரிய விருதான டெமிங் விருதை (Deming Award) ஒரு இந்திய நிறுவனம் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதான ஒரு தகவல், வாரன் பபெட் திருகு, மரை போன்ற இணைப்பு கொடுக்கும் மிகச் சாதாரணமான (mundane) நிறுவனங்களில் முதலீடு செய்வார் என்பதான ஒரு கருத்தோட்டம், தரத்திற்கான Six Sigma என்பதான ஒரு கருத்தாக்கம் ஆகிய மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்த கோலம் தான் Sundram Fasteners மதிப்பு முதலீட்டு வாய்ப்பாக 2008 மீமிகை (extreme) கரடிச்சந்தையில் வெளிப்பட்டது. அன்று பங்குச்சந்தை போட்ட இந்தக் கோலத்தை யாராவது இனங்கண்டு முதலீடு செய்திருந்தால் இந்த இடைப்பட்ட 13 ஆண்டுகளில் அவரது முதலீடு 25 மடங்கு பெருகியிருக்கும். CAGR 28 சதவீதம். கடந்த ஆண்டுக்கான பங்கு ஈட்டு விகிதம் 14.68 சதவீதம். அறிவில் முதலீடு செய்வது அளவற்ற செல்வத்தைத் தரும் என்று பெஞ்சமின் பிராங்கிளின் ஏற்கெனவே கூறியிருக்கிறார்.

3. சோர்வு முதலீடு
(Boredom Arbitrage)

இந்தப் பதிவைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் சில கருத்தாக்கங்களான பொறுமை, தாமதமான மனநிறைவு, நீண்ட கால முதலீடு, தீராக்காதல், பயணமே பரிசு போன்றவை கூறியது கூறல் என்ற அடிப்படையில் சோர்வைத் தரலாம். இதில் ஒரு விலை வேற்றுமை வாணிப வாய்ப்பு ஒளிந்திருக்கிறது. வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனமான Berkshire Hathaway ன் AGM க்கு மூன்றாவது முறையாகச் சென்றவர், பஃபெட் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதாகச் சலித்துக் கொண்டாராம். அது தான் ஐயா அவருடைய தனிப்பட்ட திறமை (competitive moat) வருடத்திற்கு வருடம் மாறும் பங்குச்சந்தை மாயப்பித்தில் (fad) பஃபெட்டின் மாறாத தன்மை தான் அவருடைய விலை வேற்றுமை வாணிபம்.

4. பொறுமை முதலீடு
(Patience Arbitrage)

ஒரேயோரு முறை மட்டும் 6700 ரூபாய் முதலீடு செய்து ஒரு கோடி பெற நீங்கள் தயாரா? ஒரேயொரு நிபந்தனை மட்டும். நீங்கள் 26 வருடங்கள் காத்திருக்க வேண்டும். பங்குச்சந்தையில் 26 வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்னுமொரு சின்ன இடர்ப்பாடு. அந்த வாய்ப்பு ஒரு பனிமூட்டத்தின் ஊடாக இருந்தது. HDFC வங்கிப் பங்கில் 1995 ல் நீங்கள் 6700 ரூபாய் முதலீடு செய்து நாளது தேதி வரை 'பொறுமை'யாக வைத்திருந்தால் நீங்கள் கோடீஸ்வரர். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல 26 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அப்புறம் ஒரே இரவில் (overnight) நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.

5. நேர முதலீடு
(Time Arbitrage)

பங்குச்சந்தையில் எல்லோரும் தின வணிகராக (day traders)ஆக இருக்கும் போது நாம்  தசாப்த வணிகராக (decade traders) ஆக இருப்பது time arbitrage. மார்வாடிகள் இன்னமும் பிறக்காத தங்களின் பேரனுக்குச் சொத்து சேர்க்க ஆரம்பித்து விடுவார்களாம். தலைமுறைகளைக் கடந்து யோசிக்கும் அவர்களுடைய தீர்க்க தரிசனத்தைக் கைக்கொள்ளலாம்‌. மேலும் கூட்டு வட்டியின் மாய மந்திரங்கள் முதலீட்டுக் காலத்தின் மிகவும் பிற்பகுதியில் தான் நிகழும் என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சாவி நேரத்தைச் செலவழிப்பதில் இல்லை , நேரத்தை முதலீடு செய்வதில் இருக்கிறது என்று Stephen R Covey ஏற்கெனவே கூறியிருக்கிறார்.

Inspiration from the book Invest like a deal maker by Christopher W Mayer

Comments

Popular posts from this blog

Daniel Crosby - மணி மொழிகள்

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14