கதை சொல்லல் மொழிகளும் அதற்கான கதைகளும்- 2
கதை சொல்லல் மொழிகளும் அதற்கான கதைகளும்- 2
6. If history were taught in the form of stories, it would never be forgotten- Rudyard Kipling
வரலாறு கதைகளாகக் கற்பிக்கப்பட்டால், அது ஒருபோதும் மறக்கப்படாது.
அலெக்ஸாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்.
மாவீரன் அலெக்ஸாண்டர் மரணப் படுக்கையில் இருந்தபோது, இப்பூவுலகிற்கு மிக முக்கியமான தத்துவங்களை உணர்த்துவதற்காகத் தன் படைத்தளபதிகளிடம் மூன்று இறுதி ஆசைகளைக் கூறினார். அவையாவன:
முதல் ஆசை: தனது இறுதி ஊர்வலத்தில், சவப்பெட்டியை அந்த நாட்டின் ஆகச்சிறந்த மற்றும் முதன்மையான மருத்துவர்கள் மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும்.
இதற்கான விளக்கம்: மரணம் என்ற ஒன்று வந்துவிட்டால், இந்த உலகத்தில் உள்ள எவ்வளவு பெரிய சிறந்த மருத்துவர்களாலும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாது என்பதை மாந்தர் புரிந்து கொள்ள.
இரண்டாம் ஆசை: சவப்பெட்டி கொண்டு செல்லப்படும் பாதை முழுவதும் தான் போரிட்டுக் கைப்பற்றிய தங்கம், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற செல்வங்களை வாரி இறைக்க வேண்டும்.
இதற்கான விளக்கம்: வாழ்நாள் முழுவதும் பேராசையோடு நாம் சேர்க்கும் எந்தவொரு செல்வமும், நாம் இறந்த பிறகு நம்மோடு வரப்போவதில்லை; பூமியில் சேர்த்தது பூமியிலேயே தான் தங்கிவிடும் என்பதை உலகிற்கு உணர்த்த.
மூன்றாம் ஆசை: சவப்பெட்டியின் இருபுறமும் தனது இரண்டு கைகளும் காலியாக, வெளிப்பக்கமாகத் தொங்கியபடி இருக்க வேண்டும்.
இதற்கான விளக்கம்: உலகையே வென்ற மாவீரனாக இருந்தாலும், பிறக்கும் போது எப்படி வெறுங்கையோடு வந்தோமோ, அதேபோல இறக்கும் போதும் வெறுங்கையுடன் தான் போகிறோம் என்பதை இந்த உலகிற்கு உணர்த்துவதற்காக.
7. The human species thinks in metaphors and learns through stories- Mary Catherine Bateson
மானிடம் உருவகங்கள் வாயிலாகச் சிந்திக்கிறது; கதைகள் மூலமாகக் கற்றுக்கொள்கிறது.
பயன்படுத்தக்கூடிய நீர்
உலகில் உள்ள நீரில் 97.5% உப்பு நீர் ஆகும். மீதமுள்ள 2.5% நன்னீரில், 99%-க்கும் அதிகமான நீர் பனிப்பாறைகளிலும், பனிப்புலங்களிலும் உறைந்து கிடக்கிறது. மொத்தத்தில், இந்த பூமியில் உள்ள நீரில் வெறும் 0.025% மட்டுமே மனிதர்களும் விலங்குகளும் குடிப்பதற்கு உகந்ததாக உள்ளது.
இதை எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு கற்பனை:
ஒரு கேலன் (3.785 லிட்டர்) அளவுள்ள ஒரு குவளை நிறைய தண்ணீர் மற்றும் அதனருகே மூன்று பனிக்கட்டிகள் (ice cubes) இருப்பதாக உருவகித்துக் கொள்ளுங்கள். அந்த குவளையில் இருக்கும் தண்ணீர் முழுவதுமே உப்பு நீர். அந்த மூன்று பனிக்கட்டிகள் மட்டும்தான் நன்னீர். மனிதர்களால் அதில் உருகி வழியும் ஒரு சில துளிகளை மட்டுமே குடிக்க முடியும்.
8. Listen, and you will realize that we are made not from cells or from atoms. We are made from stories- Mia Couto
செவிமடுங்கள்; அப்போது நாம் செல்களாலோ அல்லது அணுக்களாலோ ஆனவர்கள் அல்ல என்பதை உணர்வீர்கள். நாம் கதைகளால் ஆகப் பெற்றவர்கள்.
சுவை கூட்டிய அன்பு
வயதான பாட்டி தன் பேரனுக்குக் காய்கறிச்சாறு செய்யக் கற்றுக் கொடுக்கிறார். பேரன், அளவுகளைத் துல்லியமாகக் குறித்துக் கொள்வதைப் பார்த்து அவர் புன்னகைக்கிறார். "சமையல் குறிப்பு என்பது வெறும் வேதியியல் மட்டுமல்ல. அது வயிற்றை மட்டுமே நிரப்பும், ஆன்மாவை அல்ல" என்று கூறி, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்.
அப்போது பாட்டியின் குடும்பம் ஏதுமற்ற அகதிகளாக ஒரு புதிய நாட்டிற்கு வந்து, கடும் குளிரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தது. அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்ந்தன. யாருக்கும் பொதுவான மொழி தெரியாததால், பயத்தின் காரணமாக அனைவரும் தங்கள் கதவுகளைப் பூட்டிக்கொண்டே வாழ்ந்தனர்.
ஒரு நாள் இரவு, பாட்டி, அவர்களின் கடைசி மூன்று உருளைக்கிழங்குகளைப் பொதுவான சமையலறையில் வேகவைத்தார். அதன் வாசனை பரவியதும், ஒரு அண்டை வீட்டார் வெங்காயத்தையும், மற்றொருவர் பீன்ஸ் முதலான காய்கறிகளையும், மூன்றாமவர் சில மசாலாப் பொருட்களையும் கொண்டு வந்து அந்தக் காய்கறிச்சாறில் சேர்த்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அனைவரும் ஒன்றாக அமர்ந்து அந்தப் பெரிய பாத்திரத்தில் இருந்த காய்கறிச்சாற்றைப் பகிர்ந்து குடித்தனர். அந்த ஒரு தருணம், அவர்களை அச்சம் கொண்ட அந்நியர்களாக அல்லாமல், ஒன்றாக வாழப் போராடும் ஒரு குடும்பமாக மாற்றியது. சிறிது காலம் சென்று பாட்டி இறந்துவிட, பேரனுக்கு அந்தப் பழைய காய்கறிச்சாறு பாத்திரம் கிடைக்கிறது. இப்போது அவன் தன் குழந்தைகளுக்குக் காய்கறிச்சாறு செய்யும் போது எந்த அளவுகோலையும் பயன்படுத்துவதில்லை; கைகளால் அள்ளிப்போட்டு, சுவை பார்த்துச் சமைக்கிறான். தன் குழந்தைகள் அந்தக் காய்கறிச்சாற்றை அருந்தும் போது, பேரன் அவர்களுக்கு அந்த வாடகை வீட்டைப் பற்றியும், ஒரு பாத்திரத் தண்ணீர் எவ்வாறு அந்நியர்களைக் குடும்பமாக மாற்றியது என்ற பாட்டியின் கதையையும் அன்போடு விவரிக்கிறான்.
9. The best arguments in the world won't change a single person's mind. The only thing that can do that is a good story- Richard Powers
உலகின் மிகச்சிறந்த வாதங்களாலும் ஒருவரின் மனதைக்கூட மாற்ற முடியாது; அதைச் செய்யக்கூடிய ஒரே விஷயம் ஒரு நல்ல கதைதான்.
உடைந்த கருவூலம்
ஒரு சமயம் சிறிய ஊர் ஒன்றில் கூட்டுக்குழும சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) என்ற வகையில் கிடைக்கப்பெற்ற பணத்தை எவ்விதம் செலவழிப்பது என்பது சம்பந்தமாக ஒரு பிரச்னை எழுந்தது. ஒரு சாரார் குற்றவாளிகளுக்கான கூர்நோக்கு இல்லம் ஒன்றைக் கட்டலாம் என்றும் மற்றொரு சாரார் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு உடற்பயிற்சிக்கூடம் கட்டலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். பிரபலமான வழக்கறிஞர் ஒருவர் கூர்நோக்கு இல்லத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். புள்ளி விவரங்களின் படி கூர்நோக்கு இல்லங்கள் 30 சதவீதம் என்ற அளவில் குற்றச் செயல்களைத் தடுக்கின்றன. ஆக, இளைஞர்களிடம் முதலீடு செய்வது ஒரு நம்பிக்கை சார்ந்த பொறுப்பு என்று அவர் வாதிட்டார். வெறும் குற்றங்களைத் தண்டிப்பதை விட, ஒரு பாதுகாப்பான சமுதாயத்திற்கு அதன் அடிப்படைக் காரணங்களைக் களைவது அவசியம் போன்ற அசைக்க முடியாத தர்க்கவாதங்களை அவர் எடுத்துரைத்தார்.
வணிகர் ஒருவர் அவர் கருத்தை எடுத்துரைக்க எழுந்தார். அவருடைய கடை கடந்த ஓராண்டில் மூன்று முறை உடைக்கப்பட்டு பொருட்கள் களவு போயிருந்தன. வழக்கறிஞரின் வாதங்கள் இளைஞர்களின் தவறான நடத்தைகளை நியாயப்படுத்துவதான ஒரு சாக்குப்போக்கு போலவே தோன்றின. சொத்துரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய தனது எதிர்வாதத்தை முன்வைக்க வணிகர் எழுந்து நின்றார்.
அப்போது வயோதிகர் ஒருவரும் எழுந்து நின்றார்.
"நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு பதின்ம வயது சிறுவன் எனது அடுமனையின் (bakery) முன் ஜன்னலை உடைத்தான். போதைப்பொருள் வாங்குவதற்காகப் பணப்பெட்டியிலிருந்த பத்தாயிரம் ரூபாயைத் திருடினான். அடுத்த தெருவிலேயே, மூச்சிரைக்க மிரண்டு போய் நின்றிருந்த அவனை நானே கையும் களவுமாகப் பிடித்தேன்"
அறை முழுவதும் அமைதி நிலவியது. முதியவர் கடுமையான தண்டனைகளைக் கேட்பார் என்று எதிர்பார்த்து வணிகர் உற்றுக் கவனித்தார்.
"எனக்குக் கடுமையான கோபம் வந்தது" முதியவர் தொடர்ந்தார். "நான் அவனை மீண்டும் கடைக்கு அழைத்து வந்து
உட்கார வைத்தேன். நான் அவன் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்திருக்கலாம். அவனைச் சிறையில் அடைக்க எனக்கு எல்லா சட்டப்பூர்வ உரிமைகளும் இருந்தன. ஆனால் அதற்குப் பதிலாக, ஒவ்வொரு வாரமும் எனது கடையின் தரையைத் துடைத்து, அந்தப் பத்தாயிரம் ரூபாய்க்கான வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்று அவனிடம் கூறினேன். ஆறு மாதங்களாக அவன் தவறாமல் வந்தான். ரொட்டி சுடுவது எப்படி என்று கற்றுக் கொண்டான். இருப்புப் பொருட்களை எண்ணுவதைக் கற்றுக் கொண்டான். தன் செயல்களால் மற்ற மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அவன் புரிந்து கொண்டான்"
முதியவர் வணிகரை நேருக்கு நேர் பார்த்தார்.
"அந்தப் பையன் வளர்ந்து பெரியவனானதும் மேலும் பல கடைகளை உடைக்கவில்லை. அவன் வளர்ந்து, கல்லூரிக்குச் சென்று, இறுதியில் இதே ஊரில் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கினான்"
அந்த வணிகர் அப்படியே உறைந்து போனார்.
முதியவர் குறிப்பிட்ட அந்தப் பதின்ம வயது சிறுவன் வேறு யாருமல்ல, அவரேதான். அவர் தனது கடந்த காலத்தைப் பற்றி இந்த ஊரில் யாரிடமும் சொன்னதே இல்லை, முதியவரும் அதை ஒருபோதும் அவர் முகத்திற்கு நேரே சுட்டிக்காட்டி அவமானப்படுத்தியதில்லை. வணிகர் அமர்ந்தார். அவர் தனது உரையை நிகழ்த்தவில்லை. அதற்குப் பதிலாக, தன் கையை உயர்த்தி அந்த கூர்நோக்கு இல்லத்தை அங்கீகரிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தார்.
10. There is no greater agony than bearing an untold story inside you- Maya Angelou
சொல்லப்படாத கதையைத் தன்னுள் சுமந்து கொண்டிருப்பதை விடப் பெரிய வேதனை வேறெதுவும் இல்லை.
மாயாவின் மௌனமும் ... சொல்லப்படாத ஒரு கதையும் ...
அமெரிக்காவில் பிறந்த மாயா ஏஞ்சலோ, தன் 7 வயதில் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதைச் செய்தது அவரது தாயின் கள்ளக்காதலன்.
பயந்துபோன சிறுமி மாயா, சில நாட்கள் கழித்துத் தன் அண்ணனிடம் மட்டும் அந்த இரகசியத்தைக் கூறினார். விஷயம் காவல் துறைக்குச் சென்று, அந்த மனிதன் கைது செய்யப்பட்டான். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு வந்த சில நாட்களிலேயே, அந்த நபர் தெருவில் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான். அவரை மாயாவின் குடும்பத்தினர் பழிவாங்கியதாகக் கூறப்பட்டது.
தன் சொல்லப்படாத இரகசியம், ஒரு மனிதனின் கொலைக்குக் காரணமாகிவிட்டதே என்று நினைத்த ஏழு வயது சிறுமி மாயா, "என் வார்த்தைகளுக்குக் கொலை செய்யும் சக்தி இருக்கிறது. நான் பேசியதால் தான் அவன் இறந்தான்" என்று குற்ற உணர்ச்சியில் உறைந்து போனாள்.
அந்த விநாடியே அவள் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். அடுத்த 5 வருடங்கள் மாயா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முற்றிலும் மௌனமானாள்.
உள்ளுக்குள் நடந்த அந்தப் பெருங்கொடுமை, அந்த பயம், அந்த அநீதி என அனைத்தையும் தன் நெஞ்சுக்குள் பூட்டி வைத்தார். அந்தச் சொல்லப்படாத கதை, அவளை உள்ளுக்குள் அணு அணுவாகச் சிதைத்தது. அந்த வேதனை அவளை ஒரு நடைப்பிணமாக மாற்றியது.
மாயாவின் 12வது வயதில், திருமதி ஃப்ளவர்ஸ் என்ற ஒரு அன்பான ஆசிரியர் மாயாவின் வாழ்க்கையில் வந்தார். மாயாவின் மனதில் இருக்கும் பாரத்தைப் புரிந்துகொண்ட அவர், மாயாவிடம் புத்தகங்களைக் கொடுத்து, "உன் மனப் பாரத்தை நீ வார்த்தைகளாக வெளியே கொண்டு வராவிட்டால், அது உன்னை உள்ளிருந்தே அழித்துவிடும்" என்று கூறினார். அவர் கொடுத்த தைரியத்தில், 5 வருடங்களுக்குப் பிறகு மாயா தன் மௌனத்தை உடைத்து முதன்முதலாகப் பேசினார். பல வருடங்கள் கழித்து, தன் நெஞ்சில் சுமந்த அந்தச் சொல்லப்படாத இரகசியங்களையும், துயரங்களையும் "I Know Why the Caged Bird Sings" என்ற உலகப் புகழ்பெற்ற சுயசரிதை நூலாக எழுதினார். அந்தப் புத்தகத்தில்தான் இந்த உலகப்புகழ் பெற்ற வரிகளை அவர் எழுதினார்.
'சொல்லப்படாத கதையைத் தன்னுள் சுமந்து கொண்டிருப்பதை விடப் பெரிய வேதனை வேறெதுவும் இல்லை'
தன் துயரத்தை வெளியே சொல்ல முடியாமல் 5 வருடங்கள் மௌனச் சிறையில் மாயா அனுபவித்த வேதனையே, இந்த வரிகள் பிறப்பதற்குக் காரணமாக இருந்தது. தன் கதையை அவர் புத்தகமாக எழுதிய பிறகுதான், உலகமே போற்றும் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், மனித உரிமைப் போராளியாகவும் அவரால் மிளிர முடிந்தது.
Comments
Post a Comment