அதிர்ஷ்டத் தேர்வு
அதிர்ஷ்டத் தேர்வு
Luck Selection
நெடுஞ்சாலை ஒன்றில் நண்பர்களுடன் தொலைதூரப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறீர்கள். ஒரு திருப்பத்தில் தவறாகத் திரும்பியது சிறிது நேரத்தில் உங்களுக்குப் புலப்படுகிறது. நீங்கள் உடனே வந்த வழியில் திரும்பி சரியான பாதையில் பயணிப்பீர்களா? அல்லது, உங்கள் தவறை ஏற்றுக்கொள்ள மனமின்றி தொடர்ந்து பயணிப்பீர்களா? ஒரு சிலர் பாதையை மாற்றாமல் பயணிப்பதாகவும், அதிலும் பெண்களை விட ஆண்கள் இந்த மனச்சாய்வுக்கு அதிகம் ஆட்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Stop loss என்பது பங்குச்சந்தை வர்த்தக விதிகளில் தலையாய ஒன்றாகும். பங்குச்சந்தையில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சந்தையிலும் இந்த விதி, விதியான ஒரு விதியாகும்.
அது பங்கு முதலீடாக இருந்தாலும் சரி அல்லது அது ஒரு வேலையாக இருந்தாலும் சரி அல்லது அது ஒரு காதல் உறவாக இருந்தாலும் சரி அது எப்படி மலர்ந்து மணம் பரப்பும், அதில், அதிர்ஷ்டத்தின் பங்கு என்னவாக இருக்கும் என்று யாராலும் எப்போதும் தீர்மானமாகக் கூறவியலாது. ஒரு பங்கில் செய்யப்பட்ட முதலீடு ஆழம் காண முடியாத அதல பாதாளத்திற்குச் செல்லாது என்று எப்படி உறுதியாகக் கூற முடியும்? ஒரு வேலையின் மூலமான வளர்ச்சி வாய்ப்புகள் நாம் நினைத்தபடி இருக்குமா? காதல் உறவு கசந்து போகாது என்பதற்கு யாரால் உத்தரவாதம் தர முடியும்?
அதிர்ஷ்டம் உள்ளவர்கள் நஷ்டம் தவிர்க்கும் உத்தியைக் கைக்கொள்வார்கள். பங்கு ஒன்றின் விலை பாதை மாறிச் செல்கையில் அவர்கள் பங்குகளை விற்று வேறு ஒரு பங்கில் முதலீடு செய்வதான அதிர்ஷ்டத் தேர்வை மேற்கொள்வார்கள். அதிர்ஷ்டத்தைத் தருவதான அடுத்த வேலைக்கு முயற்சி செய்வார்கள். வாழ்க்கைத் துணையிலும் அடுத்த அதிர்ஷ்ட தேவதையைக் கண்டடைய முனைவார்கள்.
அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் அந்தப் பங்கு ரூபாய் பங்காகும் வரையிலான அதன் பயணத்தைத் தொடர்ந்தும், அதே வேலையில் தளர்ந்தும், அதே உறவில் உழன்றும் வாழ்க்கையைத் தொலைத்து விடுவார்கள்.
இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது sunk cost fallacy என்று சொல்லப்படும் மூழ்கு செலவு மாயை. நான் இந்தப் பங்கில் இவ்வளவு ரூபாயை முதலீடு செய்திருக்கிறேன்; இந்தப் பங்கை இவ்வளவு காலத்திற்கு வைத்திருக்கிறேன்; இதனை இழந்து விட்டு என்னால் எப்படி வரமுடியும் என்பதான எண்ணப்போக்கு அந்தப் பங்குகளை விற்பதற்குத் தடையாக இருக்கும். நீங்கள் பல்லாண்டுகள் பார்த்த வேலையிலும், பல்லாண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையிலும் இதே கதை தான் வெளிப்படும். பங்குகளிலும், வேலையிலும் உங்கள் நஷ்டத்தை நீங்கள் அளந்து விடலாம். நீங்கள் வாங்கிய பங்கு 50 சதவீத நஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறது,உங்களுக்கான சம்பளம் வாய்க்கும் கைக்குமாக இருக்கிறது என்ற வகையில் அதனை அளவைக்கு உட்படுத்தலாம். வாழ்க்கையில் இதனை எவ்வாறு அளவீடு செய்ய முடியும்? என் திருமண வாழ்க்கை 50 சதவீதம் நஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறது என்று எவ்விதம் கூறவியலும்?
நம் தவறை ஒப்புக்கொள்ள நமக்கிருக்கும் மனத்தடையே நஷ்டம் உவர்ப்புக்கு ஆதாரமான காரணமாக அமைகிறது.
நெடுஞ்சாலைப் பயணத்தில் எளிதாகத் திரும்பி விடலாம். பங்குகளை சுட்டியின் ஒரு சொடுக்கில் விற்று விடலாம். சட்டையை மாற்றுவது போல் வேலையை மாற்றி விடலாம். ஆனால் வாழ்க்கைப் பயணத்தை மாற்றுவது கடினம். அது கடினமென்றாலும் இனி வேலைக்கு ஆகாது என்ற வாழ்க்கையை விட்டு வெளியேறித் தான் ஆக வேண்டும்.
சில சமயங்களில் நாம் இவ்வாறு விற்ற பங்கு பின்னர் பன்மடங்காளர் ஆவதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. நீங்கள் உதறித் தள்ளிய வேலை பின்னர் ஒருவேளை பிரகாசம் அடையவும் செய்யலாம். ஆனால் இவை அடிக்கடி நடப்பதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிது. இதனைக் கொண்டு முடிவுகளை எடுக்கக்கூடாது.
எவ்வளவு தான் ஒரு பங்கை அலசி ஆராய்ந்து வாங்கினாலும் சில சமயங்களில் நம் கணக்குகள் பிழைக்கு உள்ளாவது இயற்கையான ஒன்று தான். இதனை எனது இரண்டு பங்கு உதாரணங்கள் வழியாகப் பார்க்கலாம்.
Fino Payments Bank முதல் பொது வெளியீடு 2021 ஆம் ஆண்டு 577 ரூபாய் என்ற விலையில் வெளி வந்தது. சமீபத்தில் அதன் வருவாய் அதிகரித்து விலை-வருவாய் விகிதம் குறைந்த ஒரு கட்டத்தில் அதன் பங்குகளை 211 ரூபாய்க்கு மதிப்பு முதலீடாக நான் வாங்கியது வரை சரி. நிறுவனத்தின் நிதி விகிதங்கள் சிறப்பாக இருக்கிறது. நிறுவனத்தில் நிறுவனர் பங்கு அதன் உச்சபட்ச அளவான 75 சதவீதம் உள்ளது இன்னும் சிறப்பு. வங்கி, இந்தியாவின் இதயமாய் விளங்கும் கிராமங்களிலிருந்து அதன் அடிப்படையை வலுவாகக் கட்டமைத்திருக்கிறது. RBI, இதனை அங்கீகரிக்கும் விதமாக Fino Payments Bank அதன் அடுத்த படிநிலையான Small Finance Bank என்பதற்குச் செல்ல பச்சைக்கொடி காட்டி விட்டது. எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. திடுதிப்பென்று ஒருநாள் அதன் CEO, GST வரி ஏய்ப்பின் பொருட்டு கைது செய்யப்படுகிறார். ஒவ்வொரு வங்கியும் பணத்தின் மேல் கட்டப்படவில்லை. அது நம்பிக்கையின் மேல் கட்டப்பட்டுள்ளது. நம்பிக்கை போனால் எல்லாமே போய் விட்டதாக அர்த்தம். அதன் 100 பங்குகளை பங்கு ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற இழப்புடன் விற்று விட்டது எனது கதையின் அதிர்ஷ்ட முடிவு.
எனது துரதிர்ஷ்டக் கதை ஒன்றையும் பாரத்து விடுவோம். Cox and Kings பயண நிறுவனம் 1758 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இந்தியாவில் அது 1939 ஆம் ஆண்டு தன் சேவையைத் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதன் 50 பங்குகளை நான் வாங்கியது நினைவில் உள்ளது. நிறுவனம் ஒரு கட்டத்தில் அதன் நிதி சேவையைத் தனியாகப் பிரித்து Cox and Kings Financial Services என்ற பெயரில் பட்டியலிடப்போவதாகத் தெரிவித்தது. அதற்கான நிறுவனப்பிரிப்பு 1:3 என்ற விகிதத்தையும் அது அறிவித்தது. அதாவது மூன்று தாய் நிறுவனப்பங்கிற்கு ஒரு சேய் நிறுவனப்பங்கு. நான் கூடுதலாக அதன் 25 பங்குகளை வாங்கியதும் நினைவில் நிற்கிறது. 75 பயண நிறுவனப் பங்குகளுக்கு 25 நிதி நிறுவனப்பங்குகள் எனக்குக் கிடைக்கவிருந்தது. பங்கு ஒன்றுக்கான எனது சராசரி விலை 245 ரூபாய். திடுதிப்பென்று அதன் பங்கின் விலை சரியத் தொடங்கி ஒரு சமயம் 100 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. நிறுவனம் பற்பல மோசடி வேலைகளில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. 1758 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற வரலாறு நிறுவனத்துக்கு உள்ளது. இந்த பிரச்னையிலிருந்து அது வெளி வந்து விடும் என்பதாக எனது எண்ணப்போக்கு இருந்தது. நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரி (reserves and surplus) கணிசமாக இருந்தது. ஆனால் நிறுவனம் 20000 கோடி என்ற அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகப் பின்னர் தெரிய வந்தது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி அதனைத் திசை மாற்றம் (loan diversion) செய்தது, கற்பனையான வாடிக்கையாளர்களைக் கணக்குக் காட்டியது, கடன் அட்டை மோசடி என்று அதன் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதற்கிடையில் பங்கின் விலை 38 ரூபாய்க்கு வந்து விட்டது. அப்போதாவது அதன் பங்குகளை நான் விற்றிருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது? ஒரு கட்டத்தில் அதன் பங்குகள் பங்குச்சந்தையிலிருந்து பட்டியல் நீக்கம் (delisting) செய்யப்பட்டன. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று அதன் பங்குகள் (நிறுவனப்பிரிப்பையும் சேர்த்து இரண்டு நிறுவனப்பங்குகள்) இன்னமும் என் demat கணக்கில் உள்ளன. காலத்தால் அழியாத பிழையாக அது எனது demat கணக்கில் நிலைபேறு பெற்று விட்டது.
எனது சராசரி பங்கு விலை 245 ரூபாய் என்று பார்த்தோம். 75 பங்குகளுக்கு நான் முதலீடு செய்தது ரூபாய் 18375. இன்றைய பங்கின் விலை பூஜ்யம். எனில் எனக்கான நஷ்டம் 18375 ரூபாய். அது அவ்வாறு தானா? அதற்கான வாய்ப்பு விலை (opportunity cost) என்னவாக இருக்கும்? நஷ்டம் உவர்ப்பு சாய்விற்கு உள்ளாகாமல் அதன் பங்குகளைப் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்று அதனை liquid bees ல் போட்டிருந்தால் கூட இழந்த பணத்தை விடக் கூடுதல் வருமானத்தை ஈட்டியிருக்கலாம்.
தரமான பங்குகள் சந்தையின் மனமாச்சரியங்களின் காரணமாக விலை குறையும் போது அதன் மதிப்பு கூடுவது வேறு கதை. அது அத்தகைய பங்குகளை வாங்குவதற்கான ஒரு உகந்த தருணமாகும். அப்போது Stop loss போட்டுக் கொண்டிருக்கக்கூடாது.
பங்குகளை விடுங்கள். பிடிக்காத ஒரு மண வாழ்க்கையிலிருந்து விலக ஒருவர் எப்போது முடிவெடுப்பது? அதற்கான மனத்துணிவு எத்தனை பேருக்கு இருக்கும்?
பிடிக்காத மணவாழ்க்கையில் உழல்வதான எண்ணக்கரு கதாசிரியர்களுக்கு வற்றாத ஒரு ஜீவ நதியாகப் பயன்படுகிறது. Tolstoy ன் கதாநாயகி Anna karenina மனதிற்கு ஒவ்வாத ஒரு மணவாழ்க்கையில் உழன்று கடைசியில் இரயில் முன் பாய்ந்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதை யாராலும் மறக்க முடியுமா?
(Inspiration from the book, How to get lucky by Max Gunther)
Comments
Post a Comment