கதை சொல்லல் மொழிகளும் அதற்கான கதைகளும்- 1
கதை சொல்லல் மொழிகளும் அதற்கான கதைகளும்- 1
1. Stories are memory aids, instruction manuals and moral compasses- Aleks Krotoski
கதைகள் என்பவை நினைவாற்றலுக்கு உதவும் கருவிகள், வழிகாட்டும் கையேடுகள் மற்றும் அறநெறி சார்ந்த திசைகாட்டிகள் ஆகும்.
ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?
விவசாயி ஒருவனுக்கு சிறிய அளவிலான நிலம் மட்டுமே சொந்தமாக இருந்தது. கூடுதல் நிலம் கிடைக்கப்பெற்றால் யாருக்கும் அடிமை வாழ்க்கை வாழத் தேவையில்லை என்பதாக அவனது எண்ணப்போக்கு ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஒரு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப்பெறுகிறது. போட்டி இது தான். அதாவது சூரியன் உதிப்பதில் தொடங்கி அவன் ஓடத் தொடங்கலாம். சூரியன் மறைவதற்குள் அவன் ஓடத் தொடங்கிய இடத்தை மீண்டும் அடைந்து விட வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஓடிய நிலம் அனைத்தும் அவனுக்கே சொந்தம். விவசாயி, இந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஓடத் துவங்குகிறான். நண்பகல் நேரம். இப்போது திரும்பினால் தான் சரியாக இருக்கும் என்று அறிவு எச்சரித்தும் மனது கேட்கவில்லை. மதிய உணவு கூட உண்ணாமல், தாகம் தணிக்காமல் தொடர்ந்து அவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் அறிவு விழித்துக் கொள்கிறது. மீண்டும் புறப்பட்ட இடத்திற்குத் திரும்ப ஓடத் துவங்குகிறான். ஒருவாறு புறப்பட்ட இடத்திற்குத் திரும்ப வந்தும் களைப்பாலும், பசியாலும், தாகத்தாலும் உயிரை விடுகிறான். அங்கேயே அவன் புதைக்கவும் படுகிறான். அதற்கு வெறும் ஆறடி நிலமே தேவைப்படுகிறது.
2. Sometimes reality is too complex. Stories give it form- Jean Luc Godard
சில சமயங்களில் யதார்த்தம் மிகவும் சிக்கலானது. கதைகள் அதற்கு ஒரு வடிவத்தை அளிக்கின்றன.
திறமையான சந்தை கருத்தாக்கம்
பொருளாதாரத்தில் புலியான ஒரு பேராசிரியரும் அவருடைய மாணவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். திடீரென்று அந்த மாணவர், சாலையில் ஒரு 500 ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தார். மாணவர் உற்சாகமடைந்து, "பேராசிரியரே, அங்கே பாருங்கள்! தரையில் ஒரு 500 ரூபாய் நோட்டு கிடக்கிறது! நாம் அதை எடுத்துக்கொள்ளலாம்!" என்றார். ஆனால் அந்தப் பேராசிரியர் தன் நடையை நிறுத்தாமல் அமைதியாகப் பதிலளித்தார். "அதைத் தொடாதே, விட்டுவிடு. அது கள்ள நோட்டு. உண்மையான நோட்டாக இருந்திருந்தால் யாராவது இந்நேரம் அதை எடுத்திருப்பார்கள். சந்தை அவ்வளவு திறமையானது!" பேராசிரியர் தன் கோட்பாட்டின் மீதுள்ள நம்பிக்கையில் அப்படியே நடந்து சென்றார். ஆனால் மாணவர் பின்னால் திரும்பி, அங்கே கிடந்த அந்த உண்மை நோட்டை எடுத்துத் தன் பையில் போட்டுக்கொண்டு பேராசிரியரைப் பின்தொடர்ந்தார்.
பொருளாதார வல்லுநர்கள் இக்கோட்பாட்டை நியாயப்படுத்த இந்தக் கதைக்கு மற்றொரு சுவாரசியமான முடிவையும் கூறுவதுண்டு:
மாணவர் தரையில் கிடக்கும் பணத்தைப் பார்த்துவிட்டு, "அங்கே பாருங்கள், பணம்!" என்று கூறுவதற்குள், சுற்றியிருந்த நூறு பேர் ஓடிவந்து, அந்தப் பணத்தை எடுப்பதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு அடித்துக்கொண்டு, அடுத்த நொடியே அந்தப் பணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்று விடுகிறார்கள். இப்போது பேராசிரியர் மாணவரைப் பார்த்துச் சொல்கிறார்: "பார்த்தாயா? சந்தை திறமையானது, வேகமாக அந்த வாய்ப்பைச் சரி செய்து விடும் என்று நான் கூறினேன் அல்லவா!"
3. Authors do not choose a story to write, the story chooses us- Richard P. Denney
எழுத்தாளர்கள் எழுதுவதற்கு ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில்லை; கதை தான் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கிறது.
தன்னைத்தானே எழுதிக்கொண்ட கதை
நல்ல கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும். One hundred years of solitude புத்தகத்தை எழுதிய Gabriel Garcia Marquez கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக தன்னைத்தானே ஒரு அறையில் தனிமைப்படுத்திக் கொண்டு அந்த நாவலை எழுதினார். அதுவரை வீட்டுப் பொறுப்புகள் அனைத்தையும் அவருடைய மனைவி கவனித்துக் கொண்டார். ஒன்றரை ஆண்டுகளின் முடிவில் எழுதி முடிக்கப்பட்ட அந்த நாவலை பதிப்பாளருக்கு அனுப்பத் தபால்தலைகள் வாங்கக் கூடக் கையில் போதிய பணம் இல்லாத அளவுக்கு அவ்வளவு வறுமை. அந்த நாவல் உலகப்புகழ் பெற்றதும் அப்புறம் நடந்ததும் வரலாறு. தமிழ் மொழிபெயர்ப்பு 'ஒரு நூறு வருடத்துத் தனிமை' என்ற பெயரில் வெளி வந்திருக்கிறது. நல்ல கதை தன்னைத்தானே எழுதிக் கொள்ளும். இவ்வாறு எழுதுவதற்கான எழுத்தாளரை அதுவே தேர்ந்தெடுக்கும்.
4. To hell with facts! We need stories!- Ken Kese
உண்மைகள் தொலைந்து போகட்டும்! நமக்குக் கதைகள் மட்டுமே தேவை!
மில்லியனுக்கும் பில்லியனுக்கும் என்ன வித்தியாசம்?
இதற்கான பதில்: மில்லியன் என்பது ஒன்று போட்டு ஆறு பூஜ்யங்கள். பில்லியன் என்பது ஒன்று போட்டு ஒன்பது பூஜ்யங்கள்.
இந்த பதில் நமக்கு எதனையும் தெரிவிக்கவில்லை.
கீழ்க்கண்ட பதிலைப் பாருங்கள்.
தினம் 50000 ரூபாய் செலவழித்தால் ஒரு மில்லியன் பணம் 20 நாட்களுக்கு வரும்.
தினம் 50000 ரூபாய் செலவழித்தால் ஒரு பில்லியன் என்பது 55 ஆண்டுகளுக்கு வரும்.
இந்த பதில் மில்லியனுக்கும் பில்லியனுக்கும் உள்ள வித்தியாசத்தை அதன் உண்மையான வெளிச்சத்தில் காட்டுகிறது.
இதனை வேறு மாதிரியாகவும் சொல்லலாம். ஒரு மில்லியன் வினாடிகள் என்பது 11.5 நாட்களால் ஆகப்பெற்றது. ஒரு பில்லியன் வினாடிகள் என்பது 31.7 ஆண்டுகளால் ஆகப்பெற்றது.
5. Stories are a communal currency of humanity- Tahir Shah
கதைகள் என்பவை மனிதகுலத்தின் பொதுவான நாணயங்கள்.
இரண்டின் அறுபத்து நான்காவது அடுக்கு.
ஒரு சமயம் சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தவருக்கு அந்த நாட்டின் அரசர் பரிசளிக்க விரும்பினார். சதரங்கக் கண்டுபிடிப்பாளரின் விருப்பமோ எளிய ஒன்றாக இருந்தது. சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்திற்கு ஒரெயொரு நெல்மணி அவருக்கு வேண்டும். இரண்டாவது கட்டத்திற்கு இரண்டு நெல்மணிகள், மூன்றாவதற்கு நான்கு, நான்காவதற்கு எட்டு ... என்பதாக 64 கட்டங்களுக்குமான நெல்மணி மட்டுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. இந்தக் கர்ணபரம்பரைக்கதை, அரசர் சரியான கஞ்சர் என்பதாகத் தெரிவிக்கிறது. சிறிய இந்தப் பரிசு குறித்து அரசர் உள்ளூர மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். அன்று மாலைக்குள் அவர் கேட்ட எளிய பரிசு அவருக்கு வழங்கப்படும் என்பதாக அரசர் அறிவித்தார். இரவு வரை அரசவைக் கணக்கர்கள் கண்டுபிடிப்பாளருக்குத் தரவேண்டிய நெல்மணிகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். அரசர் அந்த அற்பப் பரிசைக் கணக்கிட ஏன் இவ்வளவு தாமதம் என்பதாகக் கணக்கர்களைக் கடிந்து கொண்டார். நள்ளிரவு தலைமைக் கணக்கர் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து அரசரைச் சந்தித்தார். "மன்னர் மன்னா! சதுரங்கக் கண்டுபிடிப்பாளருக்குக் கொடுக்க வேண்டிய நெல்மணிகளைக் கணக்கிட்டு விட்டோம். அந்த எண்ணிக்கை மீமிகை அளவிலானது. இந்தப் பூவுலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் முழுமையையும் இரைத்து அதனை நிலப்பரப்பாக்கி நெல் பயிரிட்டு விளைவித்தாலும் அவ்வளவு நெல் மணிகள் கிடைக்கப்பெறாது. நிலாவில் ஒருவேளை நெல் பயிரிட முடிந்தால் அப்போது வேண்டுமானால் கொடுக்க இயலலாம்"
மன்னரின் இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது. "அந்த எண்ணிக்கை தான் என்ன?"
"மன்னா, அந்த எண் 18446744073079551616"
18 trillion, 446,744 billion, 73,709 million, 551,616
இவ்வாறாக மன்னர் எண்களின் கூட்டுப் பெருக்கத்தைக் குறித்த மிக முக்கியமான பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டார்.
(பங்குச்சந்தை ஆர்வலர்களுக்கு ஒரு சிறிய தகவல். HDFC வங்கிப்பங்கு தற்போது சதுரங்கப் பலகையின் 11 வது கட்டத்தில் இருக்கிறது. Berkshire Hathaway 16 வது கட்டத்தில் ... Wipro 20 வது கட்டத்தில் ... 33 வது கட்டத்தில் Bitcoin)
Comments
Post a Comment