சந்தைப் பெருங்குழப்பம்
சந்தைப் பெருங்குழப்பம்
Market Chaos
பங்குச்சந்தை, chaos என்று சொல்லத்தக்க வகையில் ஏன் எப்போதும் குழப்பத்தின் ஒரு கூடாரமாக இருக்கிறது?
சந்தை, பொதுவாக அதன் பங்கேற்பாளர்களின் கூட்டு மதியின் (wisdom of crowds) காரணமாக எப்போதும் பொருளாதாரத்திற்கு ஒரு அடி முன்னதாகச் செல்லும்.
அந்த வகையில் பொருளாதாரம் ஒரு உச்சநிலையை எட்டியிருக்கும் போது தவிர்க்க முடியாமல் அதன் பின்னர் வரவிருக்கும் பொருளாதார மந்தம் மற்றும் வீழ்ச்சியை இனங்கண்டு சந்தை சரியும்.
அதே மாதிரி பொருளாதாரம் தரை தட்டும் போது சந்தை அதனை இனங்கண்டு பின்னர் வரவிருக்கும் முன்னேற்றங்களுக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்ளும்.
ஒட்டுமொத்த சந்தைக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட பங்குகளுக்கும் இது பொருந்தும்.
ஆனால், இது கடிகாரச்சுற்று கணக்காக எப்போதும் நிகழும் என்று கூறமுடியாது.
சந்தை இதனை உணருங் காலையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் எழுந்தால் அது இந்த உணர்தலைப் பாதிப்பதாக அமையும்.
சில சமயம் நல்ல செய்தி வரும் போது சந்தை அதனை ஏற்கெனவே தள்ளுபடி (discount) செய்திருக்கும். அதாவது சந்தையில் அது ஏற்கெனவே ஒரு நேர்மமான பாதிப்பை நிகழ்த்தியிருக்கும்.
அதே மாதிரி கெட்ட செய்தி வரும் போதும் சந்தை அதனை உணர்ந்து ஏற்கெனவே சரிந்திருப்பதால் மீண்டும் அது சரியாது.
உலகப் பொருளாதாரம் இப்போது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதால் எங்கு நிகழும் எந்த செயலும் நம் சந்தையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.
இந்த சந்தையில் அடிப்படைப் பகுப்பாய்வாளர்களின் அணி ஒரு பக்கம்.
தொழில்நுட்பப் பகுப்பாய்வாளர்களின் அணி மறு பக்கம்.
தினசரி மற்றும் குறுகிய கால வணிகர்கள் ஒருபுறம்.
நீண்டகால முதலீட்டாளர்கள் மறுபுறம்.
வளர்ச்சி மற்றும் மதிப்பு முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் எதிரெதிர் புறம்.
முதலீட்டாளர்களின் தனிப்பட்ட மனப்பாங்கும் அது சந்தையில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் ஒரு திசையில் ...
இந்த உலகில் எந்தப் பயிற்சியும் மேற்கொள்ளாமல் மாந்தர்கள் இறங்கி விளையாடும் ஒரே ஆடுகளம் பங்குச்சந்தை என்றால் அது மிகையாகாது. இவர்களின் ஆட்டங்கள் ஒரு திசையில் ...
இவை போக leverage என்று சொல்லப்படும் derivative நிலைப்பாடுகள் சந்தை இரைச்சலை அதிகப்படுத்தும்.
இன்னொரு பக்கம் Short sellers தங்கள் கையில் இல்லாத பங்குகளை விற்று வைப்பார்கள்.
சிற்சில நிறுவனங்களின் கற்பனையான கணக்குகள் ஒருபுறம் ...
சில நிறுவனங்களின் உண்மையான கணக்கைக் கூட சந்தை சரிவர புரிந்து கொள்ளாததால் வரும் குழப்பங்கள் மறுபுறம் ...
நிறுவனங்களுக்கே அவற்றின் உண்மையான மதிப்பு தெரிய வராததால் ஏற்படும் பாதிப்புகள் ...
அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள் வழியிலான தலையீடுகள் ...
மேலும், மிக முக்கியமாக, இவையனைத்தும் விளிம்பு நிலையில் நடைபெறும் ஒரு இடமே சந்தை என்பதையும் நினைவில் கொள்ளவும்.
விளிம்பு நிலை வர்த்தகத்தில் பங்கு ஒன்றின் விலையை அந்தக் கணத்தில் அதனை விற்கும் ஒருவர் மட்டுமே தீர்மானிக்கிறார்.
ரிலையன்ஸ் பங்குகளின் விலையை முகேஷ் அம்பானி முடிவு செய்வதில்லை.
ரிலையன்ஸ் பங்கு சந்தையில் வர்த்தகமாகும் ஒவ்வொரு கணமும் அதன் தேவை மற்றும் அளிப்பு என்ற அளவுருக்களைக் கொண்டு அதன் விலை தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு கணத்தில் நிகழும் இந்த சிறுபான்மை (ஒருபான்மை?) வர்த்தகம் மட்டும் அதன் ஒட்டுமொத்தப் பங்குகளின் மதிப்பையும் முடிவு செய்கிறது.
Self fulfilling prophecy என்று கூறப்படும் சுய நிறைவேற்ற தீர்க்கதரிசனமும் தினசரி மற்றும் குறுகிய கால அளவில் பங்குகளின் விலையைத் தீர்மானிக்கிறது. பங்குத்தரகு நிறுவனம் ஒன்று பங்கு ஒன்றுக்கான இலக்கு விலையை உயர்த்தினால் (குறைத்தால்) உடனே அதன் பங்குகளின் விலை அந்த உயர் (குறை) அளவில் நிலை பெறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
பங்குச்சந்தை, விளிம்பு நிலையில் நடைபெறும் வர்த்தகம் என்பதால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆகச்சிறிய பங்கேற்பாளர்களின் செயல்பாடுகள் கூட ஆகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.
ஆனால் - இது ஒரு மிகப்பெரிய ஆனால் - நீண்டகால அளவில் சந்தையின் இந்த அனைத்து முரண்பாடுகளும் சமன் செய்யப்பட்டு சந்தையின் விலை அதன் மதிப்பை நோக்கி நகரும்.
இந்த விலை-மதிப்பு இணக்கம் என்பதை உலகின் முதலீட்டாளர்களின் முதலீட்டாளர் பெஞ்சமின் கிரகாம் ஒரு மாயப்புதிர் என்கிறார்.
ஆக, குறுகிய கால அளவிலான சந்தை இரைச்சல்கள் நீண்ட கால அளவில் சமன் செய்யப்பட்டு அது குறியீடாக மாறுகிறது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி போன்ற சந்தைக் குறியீடுகளையும் அது உயர்த்திச் செல்கிறது.
Comments
Post a Comment