அடிப்படை விகித மாயை
அடிப்படை விகித மாயை
Base Rate Fallacy
அடிப்படை விகித மாயை (Base rate fallacy) என்பது அடிப்படை விகிதத்தைப் புறக்கணித்து பிற தற்காலிகமான விகிதங்களில் கவனத்தைச் செலுத்தும் ஒரு சார்பு நிலையாகும்.
உலக வர்த்தக மையக்கட்டிடம் விமானங்களைக் கொண்டு தகர்க்கப்பட்ட சமயம் அது. தொலைக்காட்சி நிலையங்கள் அல்லும் பகலும் இந்த மோதல் காட்சிகளை ஒளிபரப்பிய வண்ணமாக இருந்தன. மக்கள், விமானப்பயணத்தை அறவே ஒதுக்கிக் கார்களில் சாலை மார்க்கமான பயணத்தை மேற்கொண்டனர். உலக வர்த்தக மையக் கட்டிட விமான மோதலில் இறந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள், அதாவது 1595 பேர் இந்தத் தரைவழிப் பயணத்தில் இறந்தனர். விமானப்பயணத்தில், ஓராண்டில், சராசரியாக இறப்பவர்களை விட தரை மார்க்கப் பயணத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் மிக அதிகமாகும்.
விமானப்பயணம் என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு பயண வழிமுறையாகும். பல்லாண்டுகளின் அனுபவத்தில், சரிபார்ப்பு பட்டியல் (checklist) வழிமுறையின் படி அது செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்போதாவது விமானமொன்று விபத்தில் சிக்கினால் அது அதி கவனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. தரைவழி விபத்துக்களில் அங்கொன்று இங்கொன்றாக ஆயிரக்கணக்கான விபத்துகள் நடக்கின்றன. அவை பெரும்பாலும் கவனம் பெறுவதில்லை. ஆனால் எப்போதாவது நாலைந்து கார்கள் சங்கிலித்தொடராக மோதிக் கொண்டால் அது செய்தியாகிறது.
பங்குச்சந்தையில் இந்த அடிப்படை விகித மாயையின் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?
தகவல் தொழில்நுட்பக் குமிழி வெடிப்பின் முன்னர் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆண்டாண்டு 50 சதவீத CAGR என்ற அளவில் வளர்ந்த வண்ணமாக இருந்தது. முதலீட்டாளர்கள் இந்த வளர்ச்சி ஆண்டாண்டு காலம் தொடரும் என்ற கணக்கில் இவற்றின் பங்குகளை உயர் மதிப்பில் வாங்கியவாறு இருந்தனர். 2000 ஆவது ஆண்டில் இன்போசிஸ் நிறுவன விலை-வருவாய் விகிதம் (PE) 500 என்ற அளவீட்டில் இருந்தது.
ஆனால் உயர் அளவுகளில் இவ்வாறு எந்த நிறுவனமும் வளர்ந்து வர முடியாது. அவ்வாறு வளர்ந்து வந்தால் ஒரு கட்டத்தில் நாடு ஒன்றின் பங்குச்சந்தையின் மொத்த மதிப்பில் பேர்பாதியை அது பெற்று விடும். ஆனால், உண்மையில் சராசரியை நோக்கிய பின்னடைவு (Reversion to the mean) என்ற அடிப்படையில் இந்த வளர்ச்சி குறைந்து விடும். உலகின் முதல் நிலை முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவன வருமானம் அதன் ஆரம்ப காலத்தில் 30 சதவீத CAGR க்கும் மேலாக இருந்தது. தற்போதைய அதன் நீண்ட கால முதலீட்டு வருமானம் 20 சதவீதம் என்ற அளவில் நிலை பெற்றுள்ளது.
சென்செக்ஸ் குறியீடு, காளையின் காலத்தில் 30 சதவீதம் என்றெல்லாம் வளர்ந்து வரும். ஆனால் அதன் நீண்ட கால சராசரி 15 சதவீதம் மட்டுமே.
தனிப்பட்ட பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் சமயங்களில் முதலீட்டு வெளிச்சத்தில் மின்னும். ஆனால் அவற்றின் அடிப்படை விகித வளர்ச்சி முறையே 25 மற்றும் 20 சதவீதம் மட்டுமே.
அதே மாதிரி தங்கம் மற்றும் நில முதலீடுகள் அவ்வப்போது அவைகளின் அடிப்படை விகிதத்தை மீறிய வருமானத்தைக் கொடுப்பதாக இருந்தாலும் அவற்றின் அடிப்படை வருமானம் பணவீக்கத்தை ஒட்டியே இருக்கும்.
இவ்வாறு அடிப்படை விகிதத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஏமாற்று முதலீட்டுத் திட்டங்களைக் கண்டறிய முடியும். Madoff, உலகத்தின் ஆகப்பெரிய Ponzi திட்டத்தை நடத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றியது வரலாறு. இந்தத் திட்டத்தின் படி, Madoff, முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 18 முதல் 20 சதவீத வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதாகக் கூறி பில்லியன் டாலர்களிலான ஏமாற்றுத் திட்டத்தைப் பல்லாண்டுகள் நடத்தினார். எந்தப் பங்குச்சந்தை முதலீடுகளும் ஆண்டாண்டு, கடிகாரச்சுற்று கணக்காக இவ்வளவு வருமானத்தைத் தராது. நீண்ட கால சராசரி என்ற அளவில் இதை ஏற்றுக்கொண்டாலும் ஓராண்டு நேர்ம வருமானம், அடுத்த ஆண்டு எதிர்ம வருமானம், பல்லாண்டுகள் பூஜ்ய வருமானம் என்று தான் சந்தை வருமானம் இருக்கும். பங்குச்சந்தை போன்ற மாறும் நிலை முதலீடுகளில் மாறாத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. இந்த அடிப்படை விகிதத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளத் தவறியதால் முதலீட்டாளர்கள் 68 பில்லியன் டாலர் பணத்தை Madoff ன் Ponzi திட்டத்தில் இழந்தனர்.
அடுத்த முறை யாராவது அபரிமிதமான வருமானத்தைக் கொடுக்கவல்ல முதலீடு என்று கடை விரித்தால் அதன் அடிப்படை விகித வருமானம் எவ்வளவு என்று கேட்க வேண்டுகிறேன்.
நீங்கள் மதிப்பு முதலீட்டு உத்திகளைக் கடைப்பிடிப்பவராக இருந்தால் இந்த அடிப்படை விகிதம் பற்றிய ஒரு புரிந்துணர்வு உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.
அடிப்படை விகித மாயை குறித்த நகைச்சுவை ஒன்றுடன் இந்தப் பதிவை நிறைவு செய்யலாம்.
கணிதவியலாளர் ஒருவர் பயங்கரவாதத் தாக்குதலின் சிறிய ஆபத்து காரணமாக விமானத்தில் பறக்க அச்சம் கொள்கிறார். இதற்கான தீர்வாக அவர் செல்லும் ஒவ்வொரு விமானத்திலும் அவரது கைப்பையில் ஒரு வெடிகுண்டை எடுத்துச் செல்கிறார். விமானத்தில் ஒரு வெடிகுண்டு இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு, இரண்டு வெடிகுண்டுகள் இருப்பதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை என்பது அவரது கணக்கு.
மீண்டும் அடுத்த வாரம்.
Comments
Post a Comment