அறம்
அறம்
Ethics
பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்:
1. மிகை முதல் நீர்க்காமை
2. மிகை கடன் இல்லாமை
3. நிறுவனர் பங்கு
4. தரமான வளர்ச்சி
5. அகழி
6. அறம்
இவற்றில் அறம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அறம் என்பது சலிப்பானின் பிற அளவுருக்கள் மாதிரி இருக்கப் பெறாது. மிகை முதல் நீர்க்காமை என்ற கணக்கில் அதனைக் குறைவாகக் கூட நீர்க்க முடியாது. அதனை அடமானம் வைத்துக் கடன் வாங்க முடியாது. SEBI விதிகளின் படி அதனை 75 சதவீதம் மட்டும் வைத்துக் கொள்ள முடியாது. தரமான வளர்ச்சிக்கு அறம் 100 சதவீதம் அவசியம். நீண்ட கால அடிப்படையில் 20 சதவீத அறப் பெருக்கத்தில் நிறுவனம் வளர்ந்து வருகிறது என்று கூற முடியாது. அறமே அகழியாகவும் செயல்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அறம் என்பது ஒரு வாழ்க்கை முறை.
நாளும் தரமாக உயர்ந்து வரும் நிறுவனம் ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS) இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்தைப் பின்தொடரும் அதன் விலை-வருவாய் விகிதம் (PE) இவற்றின் பெருக்கமே பங்குச்சந்தை. ஆதாரமாக அது அறத்தின் மேல் நிலை கொண்டுள்ளது. அறம் போனால் அனைத்தும் போனதாக அர்த்தம். Satyam Computers ன் கற்பனைக் கணக்கு விவகாரம் வெடித்த பின்னர் அதன் பங்குகளின் விலை வினாடிகளில் தரையைத் தட்டியது இங்கு கவனம் பெறுகிறது.
கெட்ட மனிதர்களுடன் நல்ல ஒப்பந்தம் ஒன்றைப் போட முடியாது. ஆனால், நல்ல மனிதர்களுடன் நல்ல ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக் கொள்ளலாம். KPR Mill, The Ramco Cements, Shriram Finance மற்றும் Sundaram Finance போன்ற நிறுவனங்கள் இந்த வகையின் கீழ் வருகின்றன. இத்தகைய நிறுவனங்களை நீங்கள் அடித்தொடர (tracking) தேவையில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
KPR Mill, பூஜ்யக் கழிவு நீர் சுத்திகரிப்பு, 61.92 மெகாவாட் காற்றாலை மின்சாரம் மற்றும் 40 மெகாவாட் சூரிய மின்சாரம் போன்ற பசுமை முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. நிறுவனம் சமூகப் பொறுப்பில் கவனம் கொண்டு, 10000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. 41,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களின் உயர்கல்விக்கு உதவியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோனோர் நிறுவனத்தை விட்டு விலகி வேறு உயர் தொழில்களுக்குச் சென்றாலும் அதனை ஒரு சமூகக் கடமையாகத் தொடர்ந்து செய்து வருகிறது.
The Ramco Cements நிறுவனம் முதல் செறிவுள்ள (capital intensive) துறையில் செயல்படுகிறது. ஆனால், முதல் பொது வெளியீட்டின் மூலமாகப் பங்கு முதலைத் திரட்டிய பின்னர் அது அடிக்கடி சந்தைக்கு வராமல் உள்முகமான வளர்ச்சியை (internal growth) கைக்கொண்டது.
NBFC குமிழி வெடிப்பின் போது பாதிப்புக்கு உள்ளாகாத மிகச்சில நிறுவனங்களின் வரிசையில் Shriram Finance மற்றும் Sundaram Finance நிறுவனங்கள் இடம் பெறுகின்றன.
Shriram Finance இரண்டாம் தர (sub prime) வாகனக் கடன்களை வழங்கும் நிறுவனமாகும். பெயர் தான் இரண்டாம் தரமே தவிர அவை முதல் தரமான கடன்கள். நிறுவனம், Alignment of Incentive என்ற அடிப்படையில் இயங்குகிறது. பெரும்பாலான நிறுவனங்களின் கடன் முகவர்களின் வேலை வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுத்த கணத்துடன் முடிந்து விடுகிறது. Shriram Finance ஐ பொறுத்தவரை முகவர்களின் வேலை அவர்கள் கடன் கொடுத்த பின்னர் தான் தொடங்குகிறது. கடன் கட்டி முடிக்கப்படும் வரை அந்தக் கடன்களுக்கு முகவர்கள் தான் பொறுப்பு. இதனையும் அமெரிக்க sub prime கடன் வழங்குதலையும் ஒப்பிட வேண்டுகிறேன். கடனைக் கட்ட இயலாதவர்களுக்குக் கடன் வழங்கியதையும் இவ்வாறு வழங்கப்பட்ட கடன்களை பத்திர முதலீட்டு (bond issues) வடிவில் மறு சுழற்சி செய்து இந்த அபாயத்தைப் பரவலாக்கம் செய்ததையும் நினைவு கூர வேண்டுகிறேன்.
Sundaram Finance நிறுவனம் 1972 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட ஆண்டிலிருந்து உயர்ந்து வரும் பங்காதாயங்களைத் தொடர்ந்து அது வழங்கி வருகிறது. The Ramco Cements நிறுவனம் மாதிரி இந்நிறுவனமும் உள்முகமாகவே வளர்ந்து வருகிறது. முதல் பொது வெளியீட்டின் மூலமாக நிதி திரட்டிய பின்னர் அது பங்கு முதல் நீர்த்தலை மேற்கொள்ளவில்லை. வங்கி சாரா நிதி நிறுவனமாக இருப்பதால் பணம் தான் நிறுவனத்திற்கான மூலப்பொருள். இந்த நிலையில் அது பங்கு முதல் நீர்த்தலை மேற்கொள்ளாமல் உள்முகமாக அதாவது சேமிப்பு வருமானம் (retained earnings) மூலமாகவும் கடன் முதல் (debt capital) மூலமாகவும் இந்த இரண்டு முதல்களையும் சமன் செய்வதன் மூலமாகவும் வளர்ந்து வருவது ஒப்புயர்வற்ற ஒரு சாதனையாகும்.
அறவழி நிறுவனங்களில் முதலீடு செய்வது மறைமுகமாக இன்னும் சில அனுகூலங்களை அளிக்கவல்லது. முன்னரே குறிப்பிட்ட மாதிரி அறவழி நிறுவனங்களை அடிக்கடி கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், அறவழி நிறுவனங்கள் அதி மதிப்பில் வர்த்தகமாவது உலகெங்கும் உள்ள ஒரு நடைமுறையாக உள்ளது.
Custodian of wealth அதாவது செல்வக் காப்பாளர்கள் என்ற வகையில் சமூகத்தின் முன்னேற்றத்தில் இத்தகைய நிறுவனங்கள் ஆகப்பெரிய பங்கை ஆற்றுகின்றன.
இவ்வாறு நாம் பங்குச் சலிப்பான்களை சில வரையறைகளுக்கு உட்பட்டு அமைத்துக் கொண்டாலும் அவற்றை இறுக்கமாகக் கடைப்பிடிக்காமல் சற்றே நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ஒவ்வொரு நிறுவனத்தின் தனிப்பட்ட சூழ்நிலையையும் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு நிறுவனம் இந்த ஆறு அளவுருக்களையும் எப்போதும் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அறத்தில் சமரசத்திற்கு இடமில்லை.
இந்த சலிப்பான்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால் ஒரு நிறுவனப்பங்கு அதன் செல்வ உருவாக்கப் பயணத்தில் எவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணிக்கலாம். நமது ஆறு அளவுருக்களையும் அது பூர்த்தி செய்கிறதா, இலவசப் பங்களிப்பு மற்றும் பங்குப்பிரிப்பிற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா, அதன் பங்காதாயம் எவ்வளவு, சேமிப்பு வருமானம் எவ்வளவு போன்ற தரவுகளை ஆராய்ந்தறியலாம். அதன் மூலமாக முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.
சலிப்பான் குறித்த சில எச்சரிக்கைகள்:
பங்குச் சலிப்பான்கள் வெறும் கருவிகள் மட்டுமே என்பதில் கவனம் கொள்ளவும். அவை ஒரு ஆரம்பம் மட்டுமே. அவைகளை ஆழமாக ஆராய வேண்டியது அவசியம்.
மேலும், சலிப்பான்களை விட இந்தச் சலிப்பான்களுக்கு இடையிலான தொடர்பே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பங்கு ஒன்றின் பங்காதாயத்தை (dividend) அதன் பங்காதாய வழங்கல் விகிதத்துடன் (dividend payout ratio) இணைத்துப் பார்க்க வேண்டும். நிறுவனத்தின் கடன் முதல் (debt capital) அதனை அதிகப்படியான EPS க்கு இட்டுச் சென்றாலும் கடன் முதலுக்கான வட்டி விகிதத்தை விட அது அதிகமாக இலாபமீட்டுகிறதா என்பதையும் கணக்கில் கொண்டாக வேண்டும். நிறுவனம் ஒன்றின் குறைவான ROE கூட அதன் அதிகப்படியான விற்றுமுதலுடன் (turnover) இணையும் போது மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகும். இவ்வாறு எண்களை விட இந்த எண்களுக்குப் பின்னதாக உள்ள காரணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த ஆறு அளவுருக்களைக் கொண்டு பங்குகளை இனங்கண்ட பின்னர் அதனை மதிப்புச் சலிப்பான் வழி மட்டுமே வாங்க வேண்டும். அல்லது time diversification என்று சொல்லப்படும் காலப் பன்மயமாக்கம் வழி அவ்வப்போது சிறிய எண்ணிக்கையில் வாங்கலாம். இவ்வாறு வாங்கப்பட்ட பங்குகளைக் காலத்திற்கும் கைக்கொள்ள வேண்டும் என்று தனியே சொல்லத் தேவையில்லை.
Comments
Post a Comment