தரமான வளர்ச்சி
தரமான வளர்ச்சி
Quality Growth
பங்குச் சலிப்பானின் ஆறு அளவுருக்கள்:
1. மிகை முதல் நீர்க்காமை
2. மிகை கடன் இல்லாமை
3. நிறுவனர் பங்கு
4. தரமான வளர்ச்சி
5. அகழி
6. அறம்
இவற்றில் தரமான வளர்ச்சி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நிறுவனங்கள், நீண்ட கால அளவில், தத்தமது நிகர இலாபத்தை, குறைந்த பட்சமாக 20 சதவீத கூட்டுப்பெருக்கம் என்ற அளவில் வளர்த்துச் செல்ல வேண்டும். 100 ரூபாய் நிகர இலாபம் ஈட்டும் நிறுவனம், அடுத்த ஆண்டு 120 ரூபாய் ஈட்ட வேண்டும். அதற்கடுத்த ஆண்டில் 144 ரூபாய் ... என்றவாறு அதனை எடுத்துச் செல்ல வேண்டும். இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இலாபத்தின் மேல் இலாபம் ஈட்டுவதற்கான தளத்தை அது கொண்டிருக்க வேண்டும். பொதுவாக நிறுவனங்கள் சிறிய அளவில் தொடங்கி வளர்ந்து வருகையில் இது எட்டப்படக்கூடிய ஒரு உயரமாக இருக்கும். ஒரு கட்டத்தில் நிறுவன இலாபம் இலட்சங்களில் கோடிகளில் செல்கையில் சராசரியை நோக்கிய பின்னடைவு (Reversion to the mean) செயல்படத் தொடங்கும். மேலும், முடிவுறு உலகில் முடிவுறாத வளர்ச்சி என்பதாக ஏதுமில்லை. எனில், இந்தத் தரமான வளர்ச்சியை, அதாவது இலாபத்தின் மேலான இலாபத்தை ஈட்டும் இந்தக் கலையைச் சிற்சில நிறுவனங்கள் மட்டும் எவ்வாறு தேர்ந்து தெளிந்திருக்கின்றன? வாருங்கள், பார்க்கலாம்.
Info Edge நிறுவனம் வேலை வாய்ப்பு இணையதளமாகத் தொடங்கப்பட்டது. நாளடைவில் திருமணம், வீடு & மனை மற்றும் கல்வி இணையதள சேவையில் கால் பதித்தது. முதன்முதலில் தொடங்கப்பட்ட வேலை வாய்ப்பு இணையதளம் என்ற அடிப்படையில் அதற்கு ஆரம்ப அனுகூலம் கிடைக்கப்பெற்றது. நாளடைவில் இது வலுவான வலைப்பின்னலாக மாறியது. வேலை வாய்ப்பு தேடுவோர் நிறையப்பேர் பதியும் இணையத்தளமாக அது இருப்பதால் வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறைய நிறுவனங்கள் அதனை நாடி வந்தன. நிறைய வேலை வாய்ப்பு நிறுவனங்கள் இவ்வாறு வந்ததால் நிறைய வேலை வாய்ப்பு தேடுவோர் Naukri ஐ தேடி வந்தனர். இது தான் network effect என்று சொல்லப்படும் வலைப்பின்னல் விளைவு. ஒரு முறை வலைப்பின்னல் ஒன்று உருவாகி விட்டால் அதனை உடைப்பது மிகவும் கடினம். இதன் மூலமாகக் கிடைக்கப்பெற்ற இலாபத்தை நாளை இலாபகரமாக ஆகக்கூடிய இணையத்தளங்களை இனங்கண்டு அவற்றில் அது முதலீடு செய்கிறது. Policy Bazaar மற்றும் Zomato அதன் கடந்த கால வெற்றிக் கதைகள். Info Edge நிறுவனம் பற்பல பணமாக்கங்களுக்குப் பின்னர் நாளது தேதியில் 12.38 சதவீத zomato நிறுவனப் பங்குகளையும், 12.43 சதவீத PB fintech நிறுவனப் பங்குகளையும் தன் வசம் கொண்டுள்ளது. Zomato நிறுவனத்தின் 12.38 சதவீதப் பங்குகளின் இன்றைய மதிப்பு ரூபாய் 32579 கோடியாக உள்ளது. PB Fintech நிறுவனத்தின் 12.43 சதவீதப் பங்குகளின் இன்றைய மதிப்பு ரூபாய் 8924 கோடியாக உள்ளது. இந்த மாதிரி online நிறுவனங்களால் ஆகப்பெற்ற ஒரு பங்குத்தொகுப்பை அது பராமரித்து வருகிறது. 2007 முதல் 2026 வரையிலான கால கட்டத்தில் இந்தப் பங்குத் தொகுப்பு 33 சதவீத CAGR என்ற அளவில் வளர்ந்து வருகிறது. ஆக, Info Edge நிறுவனம், naukri.com இணையத்தளம் மூலமாகக் கிடைக்கப்பெற்ற பணத்தை நாளை Naukri மாதிரி ஆகக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாக அதற்கான இலாபப் பாதையை வடிவமைத்துக் கொண்டது. Info Edge நிறுவனம் இன்றைய தேதியில் 75 bagger. அதன் CAGR, முதல் பொது வெளியீட்டிலிருந்து 24.11 சதவீதம்.
Motital Oswal Financial Services நிறுவனம், 8000 கோடி மதிப்புள்ள, இரண்டு வருடத்தில் இரட்டிப்பாகக் கூடிய கருவூல இயந்திரத்தை (Treasury engine) கட்டமைத்திருக்கிறது. இந்தக் கருவூல இயந்திரம் அதன் முதல் பொது வெளியீட்டிலிருந்து 55 மடங்கு கூடியிருக்கிறது. இதன் காரணமாக அதன் IPO விலிருந்து 31 சதவீத கூட்டுப் பெருக்கத்தினால் ஆன செயல்பாட்டு இலாபத்தை (Operating profit) அது எட்டியிருக்கிறது. இந்த செயல்பாட்டு இலாபமும் நிறுவனத்தின் மூன்று buyback மற்றும் அதன் செயல்பாட்டு இலாபத்தின் 20 சதவீதத்தை ஆண்டுப் பங்காதாயமாகக் கொடுத்த பின்னர் அடையப் பெற்றிருக்கிறது. மேலும், நிறுவனம், வெளி மூலதனம் எதனையும் இதற்காகத் திரட்டவில்லை. பொதுவாக நிறுவனங்கள் தத்தமது செயல்பாட்டு மூலதனத்தை fixed income என்று சொல்லப்படும் நிலையான வருமான முதலீடுகளில் வைத்திருக்கும். இது 4 முதல் 5 சதவீத வருமானத்தையே கொடுக்கும். ஆனால், Motilal Oswal அதன் செயல்பாட்டு மூலதனத்தைப் பங்குகளில் முதலீடு செய்கிறது. இதன் மூலம் அதற்கு 19 சதவீத வருமானம் கிடைக்கிறது. இந்த மிகை வருமானத்தின் காரணமாக நிறுவனம் அதன் பங்கு முதல் நீர்த்தலை (equity dilution) அறவே தவிர்த்திருக்கிறது. மேலும், பங்குதாரர்களுக்குப் பங்காதாயங்களை வழங்கவும், அதன் புத்தக மதிப்பை (networth) அதிகரித்துக் கொள்ளவும் மற்றும் அதிக மதிப்பிலான கடன் மதிப்பீட்டிற்கும் (credit rating) இது வழிவகை செய்கிறது. நிறுவனம் தற்போது நிர்வகிக்கும் பரஸ்பர மற்றும் இதர நிதிகள் 20 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளன. இவற்றின் 5 சதவீதம் அதாவது, ஒரு பில்லியன் டாலர்கள் அதன் சொந்தப் பணமாகும். அதன் செயல்பாட்டு இலாபத்தின் 90 சதவீதப் பணம் இவ்வாறு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதி 10 சதவீதம் நேரடி பங்கு முதலீடாக உள்ளது. அதன் முக்கியமான இரண்டு பன்மடங்காளர்கள் AU Small Finance Bank மற்றும் NSE. Motilal Oswal Financial Services இன்றைய தேதியில் 24 bagger. அதன் CAGR 18.14 சதவீதம்.
Motilal Oswal - Networth (Book value) Journey
1987 - Rs.1 lakh
1995 - 10 crore
2006 - 107 crore
2007 - 333 crore
2010 - 946 cr
2014 - 1170 cr
2018 - 2886 cr
2024 - 8732 cr
2025 - 11079 cr
2026 (9 months) - 13632 cr
From 1987 to 2026 - 43.65 CAGR
Piramal குழுமம், 1998 ஆம் ஆண்டு ஜவுளித்துறையை விட்டு முற்றிலுமாக விலகி மருந்துத் துறையில் இறங்கியது. Nicholas Lab, Roche Products, Boehringer Mannheins, Hoechest Research Centre, Roune Poulenc, ICI Pharma போன்ற மருந்து நிறுவனங்களை மதிப்பு முதலீடாக வாங்கி அவற்றை அதிக விலையில் விற்பதான உத்தியைக் கடைப்பிடித்துத் தனக்கான செல்வ வளத்தை உருவாக்கிக் கொண்டது. மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை அது அவற்றின் வருமானத்தைப் போன்று 3 மடங்குகளில் வாங்கி, அந்த நிறுவனங்களை வளர்த்தெடுத்து, பின்னர் அவற்றை Abbott Laboratories நிறுவனத்திற்கு அவற்றின் வருமானத்தைப் போன்று 9 மடங்குகளில் விற்றது. தற்போது நிறுவனப்பிரிப்பு என்ற வகையில் மருந்து மற்றும் நிதித் துறையில் கால் பதித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு 6 கோடி என்ற அளவில் இருந்த அதன் சந்தை மதிப்பு தற்போது 60501 கோடி (Piramal Pharma மற்றும் Piramal Finance) என்ற மதிப்பை எட்டியுள்ளது. இடைப்பட்ட இந்த 38 ஆண்டுகளில் அதன் சந்தை மதிப்பு 27.46 சதவீத CAGR என்ற கணக்கில் வளர்ந்திருக்கிறது. பத்து மடங்காளர், நூறு மடங்காளர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், நிறுவனம், இந்தக் கால கட்டத்தில் 10083 bagger.
Samvardhana Motherson International (Formerly Motherson Sumi Systems) நாளது தேதி வரை Peguform மற்றும் Visiocorp உள்ளி்ட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கையகப்படுத்தியிருக்கிறது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தையும் அவை அறுவை சிகிச்சை அரங்கில் இருக்கும் போது மதிப்பு முதலீடாக வாங்கி அவற்றை இலாபப் பாதைக்குத் திருப்பியிருக்கிறது. இந்தக் கையகப்படுத்தல்கள் மூலம் நிறுவனம் அதன் இலாபத்திற்கான ஓடுபாதையை அதிகரித்துக் கொண்டது. பொதுவாக 90 சதவீதக் கையகப்படுத்தல்கள் கை விடுதலில் முடியப் பெற்றுள்ளன. இந்தப் பின்புலத்தில் பார்க்கும் போது நிறுவனத்தின் சாதனை ஒப்புயர்வற்றதாகும். Samvardhana Motherson International இன்றைய தேதியில் 6426 bagger. IPO விலிருந்து அது கொடுத்த CAGR 29.18 சதவீதம்.
மேற்குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களும் இந்த வளர்ச்சியின் மீதான வளர்ச்சியை ஒரே நேர் கோட்டிலும் குறுகிய கால அளவிலும் அடையவில்லை. Info Edge நிறுவனத்தைப் பொறுத்தவரை Naukri மூலமாகக் கிடைக்கப்பெற்ற அதன் இலாபத்தைப் பிற இணையதள நிறுவனங்களில் சிறிய அளவில் முதலீடு செய்து இப்போது இந்த முதலீடுகளுக்காகவே தனிப்பட்ட நிதியத்தை அமைக்கும் வகையில் ஏற்றம் பெற்றுள்ளது. மேலும் இது பல்லாண்டுகளின் கணக்கில் கைவரப் பெற்றுள்ளது.
Motilal Oswal Financial Services ஐ பொறுத்தவரை அது தனது networth என்று சொல்லப்படும் புத்தக மதிப்பை (book value) ஒரே சீராக 43.65 சதவீத கூட்டுப்பெருக்கத்தில் எட்டவில்லை. மேற்குறிப்பிட்ட Motilal Oswal நிறுவன புத்தக மதிப்பு அட்டவணை ஆண்டுகளின் ஏறுமுகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால அளவில் அதன் புத்தக மதிப்பு ஒருவேளை குறைந்து கூட இருக்கலாம். அதை விட நிச்சயமாக அதன் பங்குகளின் விலை முதலீட்டாளர்களின் உணர்வு மேலீட்டின் காரணமாக அதீத ஏற்ற இறக்கங்களுடன் மட்டுமே இருந்திருக்கும்.
Piramal Enterprises (தற்போதைய Piramal Finance) நிறுவனமும் இந்த ஐந்து இலக்க பன்மடங்காளர் பயணத்தைக் கரடுமுரடான பாதையில் பயணித்தே எட்டியிருக்கிறது. Abbott நிறுவனத்திற்கு அதன் formulation பிரிவை விற்று நிதித் துறையில் இறங்குவதான கால கட்டத்தில் சந்தை அதன் பங்குகளை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றது. Piramal Enterprises இந்த நூற்றாண்டின் மகத்தான cash bargain என்று எனது முதலீட்டு குருக்களில் ஒருவரான Sanjay Bakshi எழுதியிருந்த போது அதன் பங்குகளை வாங்கியது நினைவில் உள்ளது.
நிறுவன இணைப்பு என்பது வெறுமனே இரண்டு நிறுவனங்களின் இணைப்பு மட்டுமல்ல. அது இரண்டு கலாச்சாரங்களின் பிணைப்பு. அந்த வகையில் Samvardhana Motherson International நிறுவன செல்வ உருவாக்கப் பயணமும் முதல் மூன்று நிறுவனங்களைப் போன்ற சிக்கலான ஒரு பாதை தான் என்பது தெளிவு. முன்பே குறிப்பிட்டது மாதிரி நிறுவனங்களின் பயணத்தை விட முதலீட்டாளர்களின் உணர்வின் காரணமாக அவற்றின் பங்குகளின் பயணம் இன்னும் அதீத ஏற்ற இறக்கங்களுடன் இருந்திருக்கும்.
ஆக, தரமான வளர்ச்சி என்பது நீண்ட நெடுங்கால அளவின் சராசரியில் மட்டுமே எட்டப்படக்கூடியதான ஒன்று என்பதும் இந்த இடைப்பட்ட காலத்தைப் பொறுமை கொண்டு கடக்க வேண்டும் என்பதும் இங்கே கவனம் பெறுகிறது.
Comments
Post a Comment